சிவாஜியிடம் லேட்டஸ்ட்டாக வராமல் லேட்டாக வந்த ஜெயலலிதா - ச சுந்தரதாஸ்

 தமிழ் திரையுலகில் இயக்குனர் ஸ்ரீதர் மூலம் கதாநாயகியாக


அறிமுகமாகி, எம் ஜி ஆரின் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்து நட்சத்திர நடிகையாகி பின்னர் தமிழ்நாட்டின் முதல்வர் ஆக பதவி வகித்தவர் ஜெயலலிதா. இவர் எம் ஜி ஆர் படத்துக்கு முன், ஸ்ரீதர் படத்துக்கும் முன்னர் சிவாஜி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் திரைக்கு அறிமுகமாக வேண்டியவர் என்பது பலரும் அறியாத விஷயம் ஆகும்!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி படத் தயாரிப்பாளராகவும்,

டைரக்ட்டராகவும் திகழ்ந்தவர் பி ஆர் பந்துலு. தெலுங்கை தாய்மொழியாக கொண்ட இவர் கடந்த நூற்றாண்டின் நாற்பதாம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் குணச்சித்திர நடிகராக திரையுலகில் நுழைந்தார். ஏ வி எம்மின் நாம் இருவர் படம் இவரை பிரபலமாக்கியது. அதன் பின் பிரபல நடிகர் டி ஆர் மகாலிங்கத்தின் நிர்வாகியாக பணிபுரிந்து விட்டு 50ஆண்டுகளின் ஆரம்பத்தில் படத் தயாரிப்பாளராக மாறினார். பத்மினி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை ஆரம்பித்து அன்று உச்சத்தில் இருந்த நகைச்சுவை நடிகரான டி ஆர் ராமச்சந்திரனையும், இளம் நடிகராக விளங்கிய சிவாஜி கணேசனையும், இணைத்து கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி படத்தை தயாரித்து வெளியிட்டார். தொடர்ந்து சிவாஜி நடிப்பில் முதல் தேதி படத்தையும் தயாரித்தார். இவ்விரண்டு படங்களையும் ப நீலகண்டன் இயக்கினார்.

அதன் பின்னர் இயக்குனராக அவதாரம் எடுத்த பந்துலு சிவாஜியின் நடிப்பில் தயாரித்த தங்கமலை ரகசியம் வெற்றி படமானது. தொடர்ந்து தன்னுடைய நண்பர் ஏ எல் ஸ்ரீனிவாசன் தயாரிப்பில் இவர் இயக்கிய சபாஷ் மீனா சக்கை போடு போட்டது. இந்தப் படங்களின் வெற்றி பந்துலு மீதான நட்பையும், நம்பிக்கையையையும் சிவாஜிக்கு ஏற்படுத்தியது. தனது நீண்ட கால கனவை சிவாஜி துணிந்து பந்துலுவிடம் வெளிப்படுத்தினார். வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தை கலரில் தயாரிக்கும் திட்டம்தான் அது. சிவாஜியின் ஆசையை குறையின்றி நிறைவேற்றினார் பந்துலு. தமிழ் படவுலகிலும், சிவாஜியின் சினிமா பயணத்திலும் கட்டபொம்மன் தடம் பதித்தது.


சிவாஜியின் உள் நட்பு வட்டாரத்தில் இடம் பிடித்து விட்ட பந்துலு அவர் நடித்த படங்களை மட்டுமே தமிழில் தயாரித்து இயக்கலானார். அந்த வகையில் செக்கிழுத்த செம்மல் வா உ சிதம்பரம் பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை கப்பலோட்டியத் தமிழன் என்ற பெயரில் சிவாஜி உள்ளிட்ட பலருடைய நடிப்பில் தயாரித்து இயக்கினார். தான் நடித்த படங்களில் தனக்கு பிடித்த படம் என்று சிவாஜி குறிப்பிடும் இந்த படம் வசூலில் தோல்வியைத் தழுவியது. 1961ம் ஆண்டில் ஏழு இலட்சம் ரூபாய் நட்டம் காட்டியது. கலங்கி நின்ற பந்துலுவுக்கு ஆதரவுக்கு கரம் நீட்டினார் நடிகர் திலகம். மிக குறுகிய கால தயாரிப்பாக மூன்று வேடங்களில் சிவாஜி நடிக்க, இரட்டை வேடங்களில் எம் ஆர் ராதா நடிக்க பலே பாண்டியா படம் பதினொரு நாட்களில் தயாராகி திரைக்கு வந்து வெற்றி கண்டது. தமிழனுக்கு கிடைக்காத தமிழனின் ஆதரவு பாண்டியனுக்கு கிடைத்தது !

இதனைத் தொடர்ந்து மீண்டும் அகல கால் வைக்க முன் வந்தார் பந்துலு. புராணங்களில் பெரிதும் வியந்து பேசப்பட்ட கொடைவள்ளல் கர்ணனின் வரலாற்றை பிரம்மாண்டமான முறையில் அதிக பொருட் செலவில் , சிவாஜியின் நிதி அனுசரணையோடு படமாக்கினார் பந்துலு. படத்தை பார்த்தவர்கள் வியந்தார்கள், பாராட்டினார்கள். ஆனால் பொருளாதார ரீதியில் படம் பின்னடைவையே சந்தித்தது. அள்ளி அள்ளி கொடுத்த கர்ணனை ரசிப்பதற்கு ரசிகர்கள் தங்கள் மணிப்பர்சுகளை தாராளமாக எனோ திறக்கவில்லை.

இப்போதும் கலியுக கர்ணனாக பந்துலுவுக்கு உதவ சிவாஜி முன் வந்தார். பலே பாண்டியாவைப் போல் குறைந்த பட்ஜெட்டில் படம் ஒன்றை எடுங்கள் , நான் நடித்து தருகிறேன் என்ற சிவாஜியின் வாக்கு அருள் வாக்காக பந்துலுவுக்கு கேட்டது. அப்படி தொடங்கிய படம்தான் முரடன் முத்து!

1960 ஆண்டு மே மாதம் , பன்னிரண்டு வயது நிரம்பிய பெண்ணின்

நடன அரங்கேற்றம் மிக விமரிசையாக சென்னையில் மேடையேறியது. நடனமாடிய சிறுமியை பலருக்கு தெரியாது. ஆனால் அவரின் தாயாரை தெரியும். குறிப்பாக திரையுலகத்துக்கு தெரியும். சிவாஜியுடன் பல படங்களில் நடித்த சந்தியா தான் அவர். அதிலும் பந்துலு எடுத்த பலே பாண்டியாவில் மூன்று சிவாஜிகளில் ஒரு சிவாஜியின் ஜோடியாக நடித்தவர் அவர். கர்ணனின் சிவாஜியின் அத்தையாக நடித்தார். அவரின் மகளான அம்மு என்றழைக்கப்பட்ட ஜெயலலிதாவின் அரங்கேற்றம் தான் அது.

அரங்கேற்றத்துக்கு தலைமை தாங்க சந்தியா அழைத்து சிவாஜியைத்தான். நடனத்தை பார்த்த சிவாஜி மகிழ்ந்தார். வாழ்த்தினார். ஜெயலலிதாவை தங்கச் சிலை என்று வர்ணித்தார். ஆக திரையுலக பிரமுகர்களுள் முதல் அங்கீகாரத்தை ஜெயலலிதாவுக்கு வழங்கியவர் சிவாஜி தான். அப்படி என்றால் ஜெயலலிதாவின் தமிழ்த் திரைப் பயணம் சிவாஜியின் படத்தில் அல்லவா ஆரம்பித்திருக்க வேண்டும் . இங்குதான் முரடன் முத்து தன் கைவரிசையை காட்டினான்!

சிவாஜியின் ஆதரவோடு முரடன் முத்துவை 64ம் ஆண்டு தயாரிக்கத் தொடங்கிய பந்துலு ஏக காலத்தில் அதே படத்தை கன்னடத்திலும் எடுக்க ஆரம்பித்தார். கன்னடப் படத்தின் பெயர் சின்னதே கொம்பே . தமிழில் சிவாஜிக்கு ஜோடி தேவிகா. ஏற்கனவே பலேபாண்டியா, கர்ணன் இரண்டிலும் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தவர். பந்துலுவின் குட் புக்சில் இடம் பிடித்தவர். ஆனால் கன்னடப் படத்தில் கதாநாயகன் கல்யாணகுமாருக்கு ஜோடியாக நடித்தவர் ஜெயலலிதா.

முரடன் முத்து படத்தின் மூலம் ஜெயலலிதாவை தமிழுக்கு முதன் முதலில் அறிமுகப் படுத்தி சிவஜிக்கு ஜோடியாக நடிக்க வைக்க பந்துலுவும் , சந்தியாவும் விரும்பிய போதும் சிவாஜி அதனை விரும்பவில்லை. தன்னுடன் பதினாறு வயது நிரம்பிய ஜெயலலிதா ஜோடி சேர்ந்தால் சரியாக அமையுமா என்ற ஐயம் அவருக்கு இருந்ததது. அது மட்டுமன்று முரடன் முத்துவுக்கு அடங்கி கட்டுப்படும் வேடம் சிறு பெண்ணான ஜெயலலிதாவுக்கு பொருந்துமா என்று அவர் நினைத்தார். இதன் காரணமாக தமிழ் திரையில் முதல் தடவையாக கதாநாயகியாக சிவாஜிக்கு ஜோடி சேரும் அதிர்ஷ்டம் ஜெயலலிதாவுக்கு கிட்டவில்லை. அதே போல் தமிழுக்கு ஜெயலலிதாவை அறிமுகப் படுத்தும் வாய்ப்பும் சிவாஜியின் கை நழுவிப் போனது. அதன் பின் மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தில் சிவாஜியின் மகளாக ஜெயலலிதா நடித்தார்.!

அதனை தொடர்ந்து சிவாஜி நடித்த கந்தன் கருணை படத்தில் வள்ளியாக சிவகுமாருக்கு இணையாக நடித்தார். அதன் பின் ஸ்ரீதரின் ஊட்டி வரை உறவு படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக ஜெயலலிதா நடிக்க ஒப்பந்தம் ஆனார். அதுவும் நிறைவேறவில்லை.

சிவாஜியின் சில படங்களுக்கு கதை வசனம் எழுதி இயக்கிக் கொண்டிருந்த ஏ பி நாகராஜன் தான் சொந்தமாக தொடங்கிய விஜயலக்ஷ்மி பிச்சர்ஸ் சார்பில் தயாரிக்கும் முதல் படத்தில் சிவாஜிதான் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்பதில் திடமாக இருந்தார். நவரசங்களையும் வெளிப்படுத்தும் அற்புதமான வேடம், ஒன்பது கெட் அப்புகளில் தோன்றி ஒரே படத்தில் ரசிகர்களை கவரும் சந்தர்ப்பம் சிவாஜி ஓகே சொல்லி விட்டார்.

சிவாஜி முதன் முதலாக சொந்தத்தில் தயாரிக்கும் வர்ணப் படமான புதிய பறவை, ஒன்பது வேடங்களில் நடிக்கும் நாராத்திரி , நட்டத்தில் இருந்து மீள்வதற்காக எடுக்கப்படும் முரடன் முத்து மூன்று படங்களும் ஏறத் தாழ ஒரே சமயத்தில் தயாராகிக் கொண்டிருந்தன. சிவாஜியின் மனசாட்சியாக செயற்பட்டுக் கொண்டிருந்த சிவாஜியின் தம்பி சண்முகத்துக்கு சொந்தப் படம், கலர் படம் , சரோஜாதேவியுடன் ஜோடி சேர்ந்த படம் புதிய பறவை நூறாவது படமாக வெளிவர வேண்டும் என்ற அவா . ரசிகர்களின் ஆசையும் அதுதான் . அதுவே நிறைவேறி இருந்தால் பிரச்னை வந்திருக்காது.ஆனால் மற்றைய இரண்டு படங்களுக்கு முன்பே புதிய பறவை தயாராகி பறக்கத் தொடங்கி விட்டது. சிவாஜியின் தொண்ணுற்று எட்டாவது படம் என்ற இடத்தையும் பெற்று விட்டது.

இப்போது மீதம் இருக்கும் இரண்டு படங்களில் எது சிவாஜியின் நூறாவது படம் என்ற பிரச்னை தலை தூக்கியது. சிவாஜியுடன் இருக்கும் நட்பு, நெருக்கம், உரிமை இவற்றினால் தன்னுடைய படமான முரடன் முத்து நூறாவது படமாக வெளிவர வேண்டும் என்பது பந்துலுவின் எதிர்ப்பார்ப்பு. கதை, நடிப்பு , ஒன்பது வேடங்கள் என்ற வகையில் நவராத்திரி தான் நூறாவதாக வர வேண்டும் என்பது சிவாஜியின் முகாமில் ஒலிக்கும் ஓசை.

1964ம் ஆண்டு நவம்பர் மாதம் 3ம் தேதி தீபாவளி வெளியீடாக இரண்டு படங்களும் கோதாவில் குதித்தன. இரண்டு படங்களும் சிவாஜியின் நூறாவது படம் என்று சில இடங்களில் விளம்பரம் செய்யப்பட்டன. சிவாஜி படத்துக்கு சிவாஜி படமே போட்டி . இந்த இரண்டு படங்களுக்கும் எம் ஜி ஆர் நடித்த கலர் படமான படகோட்டி போட்டி . அதனை தயாரித்தவர் நேற்று வரை சிவாஜியின் தயாரிப்பாளராக இருந்து விட்டு , எம் ஜி ஆரிடம் சென்று பணத்தோட்டம் கண்டு விட்டு படகோட்டி எடுத்த ஜி என் வேலுமணி. அவருடைய வரிசையில் அடுத்து பந்துலுவும் இணைந்தார்.

சிவாஜியின் தொண்ணுற்று ஒன்பதாவது படம் முரடன் முத்து என்று உத்தியோகப்பூர்வமாக பிரகடனப் படுத்தப் பட்டவுடனேயே பந்துலு எம் ஜி ஆரிடம் சென்று விட்டார். தன்னை அரவணைத்த எம் ஜி ஆர் ஆயிரத்தில் ஒருவன் என்பதையும் உணர்ந்து விட்டார். அதன் பிறகு அவர் சிவாஜி பக்கம் திரும்பவே இல்லை. எந்த முரடன் முத்துவின் ஜெயலலிதாவை சிவாஜிக்கு ஜோடியாக்கி தமிழ் திரையுலகிற்கு அறிமுகப் படுத்த பந்துலு தவறினாரோ அதே ஜெயலலிதாவை ஆயிரத்தில் ஒருவன் படம் மூலம் எம் ஜி ஆருக்கு ஜோடியாகி , அதன் மூலம் அவர்களுக்குள் நெருங்கிய நட்பை உருவாக்கி, பின்னர் சினிமாவிலும் அரசியலிலும் அது தொடர , ஜெயலலிதா தமிழக முதல்வராக அச்சாணியாக திகழ்ந்தவர் பந்துலு. அவர் எடுத்த சரித்திர படங்களை விட அவர் படைத்த இந்த சரித்திரம் சுவாரசியமானது.

ஜெயலலிதாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்க சிவாஜிக்கு மேலும் நான்கு ஆண்டுகள் எடுத்தன. அதுவும் 1968ம் ஆண்டு அவரின் சொந்தப் படமான கலாட்டா கல்யாணம் படத்தில் தான் அது சாத்தியமானது. லேட்டஸ்ட்டாக வராமல் தன்னிடம் லேட்டாக வந்த ஜெயலலிதாவை நல்ல இடம் நீ வந்த இடம் வர வேண்டும் காதல் மகாராணி என்று படத்தின் ஆரம்பத்தில் வரவேற்று பாடி திருப்தி அடைந்தார் சிவாஜி!


No comments: