குரு டவீனா வேந்தன் சிஷ்யை உமா மகேஸ்வரி சிவலிங்க குமார் இசை அரங்கேற்றம் க. அமிழ்தன்


  குரு டவீனா வேந்தன் சிஷ்யை உமா மகேஸ்வரியின் இசை


அரங்கேற்றம் 16-09-23 மெல்பேனில் நடந்தேறியது. குருவின் வழிநடத்தல், சிஷ்யையின் திறமை இரண்டுமே மிளிர்வதுதான் அரங்கேற்றம். இளம் கலைஞர் ஒருவரை உருவாக்கி இரசிகர் முன் அரங்கேற்றுகிறார் குரு. சிஷ்யையோ தனது திறமையை, தான் கற்ற கலை மூலம் வெளிப்படுத்தி, இரசிகரின் பாராட்டைப் பெற்று, கற்பித்த குருவிற்கும் தனக்கும் பெருமை சேர்ப்பதாக அன்றைய இசை அமைந்தது.

  மகேஸ்வரி குரு அஞ்சலியாக “குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ


மகேஸ்வரகா” என நிகழ்வை ஆரம்பித்தார். அவர் முதல் உருப்படியான வர்ணமே வீணை குப்பையரின் நவ ராகமாலிகா வர்ணம். டவீனாவிற்கு தன் சிஷ்யையின் மேல் இருந்த நம்பிக்கையை அவர் இந்த வர்ணத்தைத் தெரிவு செய்ததன் மூலம் வெளிப்படுத்தினார். இந்த வர்ணத்தின் முதல் 5 இராகங்களும் பஞ்சரத்தின கிருதியில் அமைந்தவை. நாட்டை, கௌளை, ஆரபி, வராளி, ஸ்ரீ ராகம், நாராயண கௌளை, ரீதி கௌளை, காந்தாரம், பௌளை. ஒரு இராகத்தில் இருந்து அடுத்த இராகத்தைத் தொடர்வது மிக லாவண்யமாக கலை அழகு குன்றாது இசைத்தமை அவர் ஒரு திறமையான கலைஞர் என்பதை எடுத்துக் காட்டியது.

  அடுத்த உருப்படியான “வாதாபி கணபதி” என அவர் உச்ச ஸ்தாயில் பாடும்பொழுது இராகத்தின் அழகு மிளிர்ந்தது. பாடலின் பாவம் குன்றாது, தகுந்த உணர்வை வெளிப்படுத்தி பார்வையாளரைத் தன்னுடன் இணைத்தார். நிரவல் சுரம் அற்புதமாக அமைய, “பிரணவ சொரூப வக்ரதுண்ட” நிரவல் கற்பனா சுரங்களுடன் வளைந்தும் நெளிந்தும் குதித்தும் ஓடும் அருவியாகப் பிரவாகித்தது. சிறந்த தேர்ந்த வயலின் வித்துவான் ஸ்ரீசுரேஷ் பாடி ரசித்துப் பல தடவைகள் சபாஷ், சபாஷ் என ரசிக்க, ஆங்காங்கே பார்வையாளர்களும் தம்மை இசையில் இணைத்து சபாஷ், சபாஷ் என ரசித்தனர்.

  தொடர்ந்து ஸ்ரீ பாபநாசம் சிவனின் “மாதயானி” என ஆரம்பிக்கும் வசந்தாவில் அமைந்த சவுக்க காலத்திலான தமிழ் கீர்த்தனை. உமா மகேஸ்வரி பாவம் பொலிய இசைத்தார்.

  கச்சேரியின் முக்கிய உருப்படியாக அமைந்தது, 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரிகளின் கல்யாண “கிமகிரி சுதா” கல்யாணி இராகத்தின் நளினங்களை எல்லாம் மகேஸ்வரி அனுபவித்து இசைக்க, கச்சேரியில் என்னை மறந்து இசை இன்பத்திலே மூழ்கினேன். இராக ஆலாபனை மேலும் தொடராதா என என்னை ஏங்க வைத்தது. இதுவே உமா மகேஸ்வரியின் திறமைக்கு எடுத்துக்காட்டு. தொடர்ந்து வயலின் வித்துவான் சுரேஷ் பாபு, ராக பாவ சுவையை மேலும் பொழிந்து இது ஒரு கச்சேரி, வெறும் முதல் அரங்கேற்றம் அல்ல, ஒரு தேர்ந்த இசை விருந்து என எம்மை உணர வைத்தார். நாமும் தலை அசைத்து ஆனந்த வெள்ளத்தில் மிதந்தோம். M.S. அம்மாவால் பிரபலப்படுத்தப்பட்ட “சோபிலு சப்த சுர” என்ற தியாகராஜ சுவாமிகள் கீர்த்தனை இசையில் 7 சுரங்களின் தெய்வீகத் தன்மையை அழகாக உணர வைத்தார் மகேஸ்வரி.

  கச்சேரியில் உச்சக்கட்டமாகவும், ஒரு கலைஞரின் திறமையை


எல்லாம் சேர வெளிக்கொணர்வதும் ராகம் தானம் பல்லவி. “வாணி மதுர வாணி என்னைக் காக்க வா வீணா வாணி கீரவாணி” என தேர்ந்த கலைஞராக தானத்தை விரிவாக வளமையான கச்சேரிகளிலும் நீண்டதாக அமைந்திருந்தார். கண்ட திரிபுட தாளத்தில் பல்லவியை திறமையாகக் கையாண்டார்.

  கர்னாடக இசையின் உன்னத அழகை எல்லாம் திறமையுடன் அள்ளி வழங்கிய உமா மகேஸ்வரி இடைவேளையின் பின், இரசிகரிடம் மிக பிரபலமான பாடல்களைப் பாடினார்.

  தன் குரு டவீனாவின் உள்ளம் கவர்ந்த பாடலை அவருக்கு சமர்ப்பிக்கிறேன் எனக் கூறி M.S.அம்மாவின் காற்றினிலே வரும் கீதத்தை இசைத்தார்.

  பிருந்தாவனி சாரங்காவில் அமைந்த மராட்டிய மொழி பஜனையை


ஹிந்துஸ்தானி பாணியில் இசைத்தார். இதை குருவின் வழிநடத்தலுடன் உமா மகேஸ்வரி அமைத்திருந்தார். ஹிந்துஸ்தானி பாணியிலான ஆலாபனையை அற்புதமாகக் கையாண்டு என்றும் எம் மனதில் நிலைக்க வைத்துவிட்டார்.

  ‘சின்னஞ்சிறு கிளியே’ உள்ளத்தை நெகிழ வைக்கும் பாரதி பாடல். தாய்மையின் உணர்வுகளை எல்லாம் உணர்ந்து மனமுருக இசைத்தார்.

  கிராமிய இசையின் கலகலப்பு ஊட்டும் ‘காவடி சிந்து’ கச்சேரியின் இறுதியில் பாடுவது மரபு. முருகன் மேல் பெரியசாமி தூரன் பாடிய பாடல் இடம்பெற்றது.

  லால்குடி ஜெயராமனின் ‘கானடா’ ராகத்திலான தில்லானாவை


இசைத்து ஒரு தேர்ந்த கலைஞரின் சிறந்த கச்சேரியை ரசித்த உள்ளத்து நிறைவை எமக்கு வழங்கினார் மகேஸ்வரி.

  மங்களமோ ‘இராமனைப் பாடும் வாயால் உன்னைப் பாடுவேனோ’ என்ற இறுமாப்புடன் மன்னன் கொடுத்து அனுப்பிய பொன், மணி, பல்லக்கு அத்தனையையும் திருப்பி அவனிடமே அனுப்பி, ‘நிதி சால சுகமா’ என உன் செல்வம் எதுவும் எனக்கு இன்பம் தரா எனப் பாடி, இசையையே உயிர் மூச்சாக வாழ்ந்து, இசைக்கு உயிர் ஊட்டி, எண்ணற்ற சிறந்த நன் முத்துக்களை இசை உலகுக்குக் வழங்கிய தியாக பிரம்மத்தின் புகழ் பாடுவதாக அமைந்தது.

  “எந்தரோ மகாணு பாவுலு அந்தரிக்கு வந்தனம்” என தியாக பிரம்மம் கூறிய “யார் எல்லாம் மகா பெரியவர்களோ அவர்களை வணங்குகிறேன்” என இசையில் மாபெரும் கலைஞரின் உருப்படிகளை உள்ளத் தூய்மையுடன் எடுத்து சிஷ்யைக்குக் கற்பித்த குரு டவீனா வேந்தனையும், குரு பாதம் பணிந்து உன்னத சிஷ்யையாக விளங்கி, தனது கன்னி முயற்சியால் இசை ரசிகரின் உள்ளத்தில் இடம் கொண்ட உமா மகேஸ்வரி சிவலிங்க குமாரையும் வாழ்த்துகிறேன்.

  கச்சேரியின் அணிசெய் கலைஞர்களாக இசைக்கு மேலும் மெருகூட்டிய கலைஞர்கள் பாராட்டுக்குரியவர்கள். வயலின் இசை மீட்டி எம்மை எல்லாம் ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்தியவர் V.சுரேஷ் பாபு. மிருதங்கம், கட வாத்தியங்களை வாசித்தவர்கள் இளம் கலைஞர்கள். சதீபன் இளம்குமரன் ஆடற்கலைஞராக மட்டுமல்லாது, மிருதங்கத்திலும் தன் திறமையால் கச்சேரிக்கு மெருகூட்டினார்.

  அனிருத் சிவராம கிறிஷ்ணமூர்த்தி கட வித்துவான் மட்டுமல்ல, பரத


நாட்டியக் கலையில் ஆர்வமுடன் ஈடுபடுகிறார். இவரும் அன்று இசைக்கு மெருகூட்டி வாசித்தார். பிரதம விருந்தினராக வருகை தந்த ஸ்ரீமதி உஷாநந்தினி பத்மநாபன் உரையில் டவீனா இசைப் பரம்பரையில் நான்காவது வாரிசு என்றார். டவீனாவின் முப்பாட்டனார் வட இலங்கை சங்கீத சபை ஸ்தாபகர் சிவசிதம்பரம். அவர் அன்று ஆர்வமுடன் ஸ்தாபித்த வட இலங்கை சங்கீத சபை உலகளாவப் பரந்து இசை நாடகக் கலையைப் பரப்பிவருகிறது. சிவசிதம்பரத்தின் மகன் ‘பரம்’ தில்லைறாஜா தேர்ந்த இசைக் கலைஞர். இவர் டவீனாவின் தாயார் வனஜாவின் சிறிய தந்தை. தாயார் வனஜாவோ இலங்கை அரசின் அங்கீகாரம் பெற்ற இசைக் கலைஞர் ‘கலாஜோதி’ வனஜா ஸ்ரீனிவாசன். டவீனாவை இசைக் கலைஞராக உருவாக்கிய, இன்றும் அவர் இசை வாழ்வுக்கு உரமூட்டுபவர் கலாபூஷணம் யாழ்ப்பாணம் ஸ்ரீ பத்மலிங்கம். விதை இன்றி விருட்சம் உருவாவது இல்லை. இன்றோ டவீனா மூத்த இசை விருட்சம் இசை மணம் வீசும் சோலையாக மாற பல இசைக் கலைஞர்களை உருவாக்கக் கடுமையாக உழைக்கும் இளம் கலைஞர். அவர் எம் உன்னதக் கலைச் செல்வத்தைப் போஷித்து வளர்த்து பலருக்கும் வழங்கவேண்டும் என இறைவனைப் பிரார்த்திப்போம்.  

 

 


No comments: