Kannur Squad (மலையாளம்) 🎬 திரைப்பார்வை - கானா பிரபா

 

 “கல்யாணத் தேனிலா  காய்ச்சாத பால் நிலா”  பாடல் பின்னணியில் இசைக்க படம் தொடங்குகிறது.

 இளையராஜா இசை இல்லாமல் வேற்று இந்திய மொழித் திரைப்படம் ஓடும் திரையரங்கத்தின் வாசப்படி மிதிக்க மாட்டேன் (ஒரு சில விதிவிலக்கு உண்டு) என்று நினைத்து உட்கார்ந்திருந்தால் ராஜாவோடே தொடங்குவது ஒரு இன்ப அதிர்ச்சி.
அதுவும் மம்முட்டி கம்பெனி என்று தயாரிப்பு வேறு மம்முட்டியே தான்.  

கேரளா கடந்து நேபாள எல்லை வரை இந்த Kannur Squad காவல்துறை ஓடுவது போலத்தான் இன்றைய தேதியில் தாறுமாறாக ஓடிக் கொண்டிருக்கும் வெற்றிச் சித்திரன் இது. Kannur Squad என்று நிஜமாகவே இயங்கிக் கொண்டிருக்கும் போலீஸ் உளவுப்படை சந்தித்த அனுபவம் ஒன்று தான் கதைப் பின்னணியை அமைக்கவும் உதவியிருக்கிறது.  

ஆரம்பத்தில் Kannur Squad என்றால் யார் என்பதை ஒரு கொலை விசாரணையில் தொடங்கி அடையாளப்படுத்துவது வெகு சிறப்பு.  பின்னர் ஒரு கொடூரக் கொலை அதைத் தொடர்ந்து எழும் மக்கள் போராட்டம், அரசியல் அழுத்தங்களால் மீண்டும் Kannur Squad க்கு வேலை வந்து விடுகிறது.  கொலைக் களத்திலிருந்து ஒரு சில காட்சிகளிலேயே கொலையாளிகளின் பின்புலத்தை அடையாளப்படுத்தி விடுவதால் அதன் பின் அவர்களைத் தேடிப் போகும் நீஈஈண்ட பயணம் தான் முடியும் வரை.  

ஒரு கட்டத்தில் மனு நீதிச் சோழன் என்ற தமிழ் போலீஸ் அதிகாரியாக வரும் கிஷோர் மம்முட்டியிடம் கேட்பது போல என்ன ஊர் ஊரா சுத்துறீங்களா என்று நம் mind voice சத்தமாக் கேட்டது போல் சொல்லியே விட்டார்.  ஆனாலும் இடைவேளைக்குப் பின் மம்முட்டி போகும் ஜீப் போலவே செம விறுவிறுப்பு.  

இன்றைக்கு தொழில் நுட்பம் வளர்த்ததால் அதை வைத்தே துப்புத் துலங்குவது, ஆழமான தேடல் இன்மை போன்றவை இந்த மர்மப்படத்தில் குறையாகவும், குறித்த சம்பவத்தை மையப்படுத்தியே திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகள் நகர்வது நிறைவாகவும் அமைந்துள்ளது.  

Azees Nedumangad நகைச்சுவையில் பின்னுபவர் இந்தப் படத்தில் குணச்சித்திரமாக மின்னுகிறார். தமிழராக வரும் போலீஸ் மேலதிகாரி கிஷோர் நடிப்பிலும் முத்திரை பதிக்கிறார்.  

மம்முட்டியும் சகாக்களுமாக குற்றவாளி வேட்டை நடத்தும் இந்தப் படத்தில் மாமூலாக அந்தக் கூட்டுக்குள் நிகழும் மோதல், அரசியல் அழுத்தம் என்றும், குற்றவாளியைத் தேட செல்போனின் நகர்வுகளை வைத்து அதிகம் மினக்கெட்டிருப்பதும் Kannur Squad மீது கண் பட்டு விடுகிறது. காட்சிகளில் இருக்கும் குரூரத்தைத் தாங்க முடியாமல் கண்களை மூடிக் கொண்டேன். தணிக்கைக் குழுவும் அதைத்தான் செய்ததோ?

  ஒரு அனுபவப்பட்ட, வயசான கூத்துக்கலைஞர் ராசா வேடம் போட்டால் எப்படி பாதி வயசைத் தொலைத்து மிடுக்காக இருப்பாரோ அது போலவே மம்முட்டி.   என்னவொரு மிடுக்கன் 😍  மம்முட்டி இது போல இயல்பாக வரும் படங்களைத்தான் கொண்டாடிக் கொண்டே இருக்கிறார்கள் இன்னும்.  அறிமுகக் காட்சியில் ஜீப் பக்கம் அவரின் பாதி முகத்தைக் காட்டவே தியேட்டரில் விசில் மழை.  அந்த இயல்பான நடிப்பிலேயே பாதிக் கிணறு தாண்டி விட்டதால் பின்னால் வந்த அதீத நாயகத்தனமான காட்சிகளில் கூட உறுத்தல் இல்லாமல் ரசிக்க முடிகிறது.  

கானா பிரபா

No comments: