உலகச் செய்திகள்

ஹமாஸ் ரொக்கெட் தாக்குதல்; போரை அறிவித்த இஸ்ரேல்

உக்ரைனின் கிராமம் ஒன்றின் மீது தாக்குதல்; 51 பேர் பலி

சிரியாவில் இராணுவ கல்லூரியில் ட்ரோன் தாக்குதல்: 100 பேர் பலி

சிறையிலுள்ள ஈரானியப் பெண்ணுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

மாலைதீவு ஜனாதிபதி தேர்தலில் சீன ஆதரவுடைய முயிசு வெற்றி

உக்ரைனுக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்க பைடன் உறுதி


ஹமாஸ் ரொக்கெட் தாக்குதல்; போரை அறிவித்த இஸ்ரேல்

- இஸ்ரேலை நோக்கி 5,000 ரொக்கெட்டுகளை ஏவியதாக தெரிவிப்பு

October 7, 2023 8:26 pm 

பலஸ்தீன அமைப்பான ஹமாஸ் இஸ்ரேலை நோக்கி ரொக்கெட் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் போருக்குத் தயாராகி இருப்பதாக அறிவித்துள்ளன.

ஹமாஸ் அமைப்பு 5,000 ரொக்கெட்டுகளை ஏவியுள்ளதாகவும், இஸ்ரேல் பதிலுக்கு காசா கரைப் பகுதியில் உள்ள இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு மற்றும் மத்திய இஸ்ரேலில் உள்ள பொதுமக்கள் அபய தலங்களுக்கு அருகில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுவதோடு, 70 வயது பெண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ், செக் குடியரசு, ஜேர்மனி ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளன. நன்றி தினகரன் 






உக்ரைனின் கிராமம் ஒன்றின் மீது தாக்குதல்; 51 பேர் பலி

October 7, 2023 2:56 pm 0 comment

உக்ரைனின் வடகிழக்கு கிராமம் ஒன்றின் மீது ரஷ்ய ஏவுகணை தாக்கியதில் குறைந்தது 51 பேர் கொல்லப்பட்டு மேலும் ஆறு பேர் காயமடைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போர் இடம்பெறும் குப்பியான்ஸ் முன்னரங்கு பகுதியில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் இருக்கும் ஹ்ரோசா என்ற கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை உணவகம் மற்றும் கடை ஒன்றில் மீது ஏவுகணை விழுந்துள்ளது. தாக்குதல் இடம்பெறும்போது பொதுமக்கள் பலரும் அங்கிருந்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் ஆறு வயது சிறுவர் ஒருவரும் இருப்பதாக கார்கிவ் பிராந்திய ஆளுநர் ஒலே சின்ஹுபொவ் தெரிவித்துள்ளார்.

சுமார் 330 பேர் மாத்திரமே உள்ள அந்த கிராமத்தில் தாக்குதல் இடம்பெறும்போது குறித்த உணவக விடுதியில் மக்கள் நினைவஞ்சலி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்ததாக உள்துறை அமைச்சர் இஹோர் கிளிமன்கோ தெரிவித்துள்ளார்.

“ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு வீட்டில் இருந்தும் இந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர். இது ஒரு பெரும் சோகம் நிறைந்த ஒன்றாகும்” என்று கிளிமன்கோ உக்ரைன் தொலைக்காட்சிக்கு தெரிவித்தார்.

தாக்கப்பட்ட பகுதியில் குடியிருப்பாளர்களைத் தவிர இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் எவரும் இல்லை என்று உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.

எனினும் இது தொடர்பில் ரஷ்யா எந்த பதிலும் அளிக்கவில்லை. பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை ரஷ்யா இதற்கு முன்னர் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் தாக்குதல் இடம்பெற்ற கிராமம் அமைந்திருக்கும் குபியன்ஸ்க் மாவட்டத்தில் உக்ரைனிய இலக்குகள் மீது 20 ஏவுகணை மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தியதாக ரஷ்யா நேற்று, வெள்ளிக்கிழமை (06) தெரிவித்தது.

19 மாதங்களுக்கு முன்னர் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தது தொடக்கம் கார்கிவ் பிராந்தியத்தில் அதிக உயிரிழப்புக் கொண்ட தாக்குதலாக இது அமைந்துள்ளது.

குபியன்ஸ்க் மாவட்டம் போர் ஆரம்பித்தபோது ரஷ்ய படைகளுக்கான பிரதான விநியோகப் பாதையாக இருந்த நிலையில் பல மாத போருக்குப் பின் கடந்த ஆண்டு செப்டெம்பரில் உக்ரைனிய படை அந்தப் பகுதியை மீட்டது.   நன்றி தினகரன் 





சிரியாவில் இராணுவ கல்லூரியில் ட்ரோன் தாக்குதல்: 100 பேர் பலி

October 7, 2023 10:48 am 

சிரியாவின் ஹோம்ஸ் நகரில் உள்ள இராணுவ கல்லூரி ஒன்றின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டு பல டஜன் கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

இந்தக் கல்லூரியில் இடம்பெற்ற பட்டமளிப்பு நிகழ்வு ஒன்றை இலக்கு வைத்தே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்களில் பெண்கள் மற்றும் சிறுவர்களும் உள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு “அறியப்பட்ட சர்வதேச படைகளின் ஆதரவு பெற்ற பயங்கரவாதக் குழுக்கள்” மீது சிரியா குற்றம்சாட்டியுள்ளது.

எனினும் சிரிய உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் கிளர்ச்சியாளர்கள் அல்லது ஜிஹாதிக்களைச் சேர்ந்த எந்தத் தரப்பும் இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை. ஹோம்ஸ் நகரின் எதிர்ப்பாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள வட மேற்கு பகுதியில் இருந்தே இந்த ஆளில்லா விமானம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலை தொடர்ந்து அரச எதிர்ப்பாளர்களின் கோட்டையான இத்லிப் மாகாணத்தில் நகரங்கள் மற்றும் கிராமங்கள் மீது அரச படை நடத்திய உக்கிற ஏவுகணை மற்றும் பீரங்கி தாக்குதல்களில் ஐந்து பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ‘வைட் ஹெல்மட்’ அமைப்பு தெரிவத்துள்ளது.

நண்பகலில் பட்டமளிப்பு முடிந்த விரைவில் ஹோம்ஸ் இராணுவ கல்லூரியை இலக்கு வைத்து வெடிபொருட்களை சுமந்த பல ஆளில்லா விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக சிரிய ஆயுதப் படைகளின் பொது கட்டளையகம் அந்நாட்டின் சனா செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலில் 200க்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாகவும் கொல்லப்பட்டவர்களில் ஆறு பெண்கள் மற்றும் ஆறு சிறுவர்கள் இருப்பதாகவும் சுகாதார அமைச்சர் ஹசன் அல் கப்பாஷ் தெரிவித்துள்ளார்.

இந்த பட்டமளிப்பு விழாவை அலங்கரிக்க உதவிய ஆடவர் ஒருவர் கூறியபோது, “விழா நிகழ்ச்சிக்குப் பின்னர் எல்லோரும் கீழே உள்ள முற்றவெளிக்கு சென்றபோது வெடிப்புகள் இடம்பெற்றன. அது எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. தரையில் உடல்கள் சிதறிக் கிடந்தன” என்றார்.

சிரியாவில் 2011 இல் இடம்பெற்ற அமைதியான ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டங்களை ஜனாதிபதி பஷர் அல் அஸாத் அரசு ஒடுக்க முயன்றதை அடுத்தே அங்கு உள்நாட்டு போர் வெடித்தது. இதில் அரை மில்லியனுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 




சிறையிலுள்ள ஈரானியப் பெண்ணுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

October 7, 2023 8:27 am 

ஈரானிய சமூக செயற்பாட்டாளர் நர்கிஸ் முஹம்மதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் பெண்கள் அடக்குமுறைக்கு எதிராக போராடியதற்காகவும், மனித உரிமைகள் மற்றும் அனைவருக்கும் சுதந்திரத்தை மேம்படுத்துவதற்காக அவர் நடத்திய போராட்டத்திற்காகவும் நர்கிஸ் முஹம்மதிக்கு 2023ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்க நோர்வே நோபல் அமைப்பு முடிவு செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் 13 முறை கைது செய்துள்ள நர்கிஸ் ஐந்து முறை குற்றவாளி என்று தண்டனை அளிக்கப்பட்டுள்ளார். இதனால், மொத்தம் 31 ஆண்டுகள் அவர் சிறைத்தண்டனையுடன் 154 கசையடிகளையும் பெற்றுள்ளார். நர்கிஸ் முஹம்மதி தொடர்ந்து சிறை அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெளதீகவியல மாணவியான முஹம்மதி, சமத்துவம் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காக போராடுபவராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார். ஈரானிய பெண்களுக்காகப் போராடி சிறையில் அடைக்கப்பட்ட சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு உதவுவதற்கான முயற்சிகளுக்காக 2011 ஆம் ஆண்டில் முதன்முறையாக கைது செய்யப்பட்டார்.

இந்தக் குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு பல ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

பிணையில் வெளிவந்த முஹம்மதி, ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு எதிரான போராட்டங்களில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

அவரது இந்த போராட்டம், 2015ஆம் ஆண்டு மீண்டும் அவர் கைது செய்யப்பட்டு, கூடுதலாக சில ஆண்டுகள் சிறைக்குப் பின் இருக்கும் நிலையை உருவாக்கியது.

மருத்துவம், பெளதீகவியல், இரசாயனவியல், இலக்கியம் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசுகள் இதுவரை அறிவிக்கப்பட்ட நிலையல் அமைதிக்கான நோபல் பரிசு நேற்று (06) அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்து பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வரும் திங்கள்கிழமை (9) அறிவிக்கப்படவுள்ளது.   நன்றி தினகரன் 





மாலைதீவு ஜனாதிபதி தேர்தலில் சீன ஆதரவுடைய முயிசு வெற்றி

October 2, 2023 6:00 am

மாலைதீவு ஜனாதிபதி தேர்தலில் இந்தியாவுடன் நெருக்கமான உறவை கொண்டிருந்த பதவியில் உள்ள ஜனாதிபதியை தோற்கடித்து சீன ஆதரவு மொஹமது முயிசு வெற்றியீட்டியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை (30) நடைபெற்ற இரண்டாவது சுற்று தேர்தலில் 54 வீத வாக்குளை பெற்று முயிசு வெற்றியீட்டியதை அடுத்து ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமது சோலிஹ் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார்.

தலைநகர் மாலேவின் மேயரான முயிசு, ‘இந்தியாயை வெளியேற்றும்’ கோசத்துடனேயே தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்தார்.

எதிர்வரும் நவம்பர் 17ஆம் திகதி புதிய ஜனாதிபதி பதவி ஏற்கும் வரை சோலிஹ் இடைக்காக ஜனாதிபதியாக பதவியில் நீடிக்கவுள்ளார்.

2018 ஆம் ஆண்டு தொடக்கம் அதிகாரத்தில் இருக்கும் 61 வயதான மாலைதீவு ஜனநாயக கட்சியைச் சேர்ந்த சோலிஹ் தனது பதவிக் காலத்தில் இந்தியாவுடனான உறவு பலப்படுத்தப்பட்டிருந்தது. இந்தியாவை முதன்மைப் படுத்தும் கொள்கையை அவர் பின்பற்றி வந்தார்.

மாலைதீவில் இந்தியாவின் செல்வாக்கு நீடித்து வந்ததோடு இந்திய சமுத்திரத்தின் முக்கிய பகுதி ஒன்றை கண்காணிக்கும் வகையில் மாலைதீவில் இந்தியா நிலைகொண்டிருந்தது. எனினும் முற்போக்கு கூட்டமைப்பின் கூட்டணியைச் சேர்ந்த 45 வயதான முயிசு, சீனாவுடன் நல்ல உறவை ஏற்படுத்துவதற்கு ஆதரவாக உள்ளார்.

சீனா தனது கடற்படையை விரிவுபடுத்துவதில் அவதானம் செலுத்தும் நிலையில் இந்தியா தடுக்க விரும்பு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் தனது இருப்பை நிலைநிறுத்த விரும்புகிறது. அதேபோன்று இந்தப் பகுதி ஊடாக வளைகுடாவில் இருந்து வரும் தனது வலுசக்தி விநியோகத்தையும் பாதுகாக்க சீனா எதிர்பார்க்கிறது.

கடந்த தசாப்தத்தில், மாலைதீவுக்கு இந்தியா இரு ஹெலிகொப்டர்களை வழங்கியதோடு 2021இல் சிறிய விமானம் ஒன்றையும் வழங்கியது. இந்நிலையில் இந்திய விமானங்களை செயற்படுத்துவது மற்றும் பராமரிப்பதற்கே மாலைதீவில் இந்தியாவின் 75 இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பதாக இந்திய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. எனினும் இந்தியாவை வெளியேறும்படி கோரும் பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து மாலைதீவில் நிலைகொண்டிருக்கும் இந்திய படையினரை வெளியேறும் கோரிக்கை வலுவடைந்தது.

சோலிஹ்க்கு முன்னர் 2013 தொடக்கம் 2018 வரை மாலைதீவு ஜனாதிபதியாக இருந்த முற்போக்குக் கட்சின் அப்துல்லாஹ் யாமின் காலத்தில் மாலைதீவு சீனாவுடன் நெருக்கமாக செயற்பட்டதோடு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் பெல்ட் அன்ட் ரோட் முன்முயற்சி திட்டத்திலும் இணைந்தது. யாமின் தற்போது ஊழல் குற்றச்சாட்டில் 11 ஆண்டுகள் சிறை அனுபவிப்பதோடு இந்த ஆண்டு தேர்தலில் போட்டி இடுவதில் இருந்தும் அவர் தடுக்கப்பட்டார். முயிசுவின் வெற்றியை அடுத்து அவரது கூட்டணி அலுவலகத்தில் ஒன்று திரண்ட நூற்றுக்கணக்கானோர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

1978 ஆம் ஆண்டு பிறந்த முயிசு பிரிட்டனின் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் சிவில் பொறியியலில் கலாநிதித்துவ பட்டம் பெற்றுள்ளார். 2012 ஆம் ஆண்டு வீடமைப்பு அமைச்சராக அவர் அரசியலில் நுழைந்தார். 2021இல் அவர் மாலே நகர மேயர் தேர்தலில் வெற்றியீட்டினார்.   நன்றி தினகரன் 





உக்ரைனுக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்க பைடன் உறுதி

October 3, 2023 8:48 am 0 comment

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உக்ரைனுக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்க உறுதியளித்துள்ளார்.

அமெரிக்க அரசாங்கத்தின் முடக்கத்தைத் தவிர்க்கும் தற்காலிக உடன்பாட்டில் உக்ரைனுக்கான ஆறு பில்லியன் டொலர் கூடுதல் உதவி சேர்த்துக் கொள்ளப்படவில்லை. அதை ஒட்டி ஜனாதிபதி பைடன் பேசினார்.

குடியரசுக் கட்சியின் தீவிரப் போக்குடைய உறுப்பினர்கள் சிலர் உக்ரைனுக்குக் கூடுதல் இராணுவ உதவி வழங்குவதை எதிர்க்கின்றனர்.

போர் குறித்த பைடனின் அணுகுமுறையையும் அவர்கள் ஏற்கவில்லை. ஆனால், அமெரிக்காவிடமிருந்து உக்ரைனுக்குத் தொடர்ந்து ஆதரவு கிடைக்கும் என்று பைடன் குறிப்பிட்டார்.

எந்தச் சூழலிலும் உக்ரைனுக்கான உதவி தடைப்படுவதை அனுமதிக்கப் போவதில்லை என்றார் அவர்.
உக்ரைனுக்கு இதுவரை அமெரிக்கா 46 பில்லியன் டொலர் இராணுவ உதவியை வழங்கியுள்ளது.   நன்றி தினகரன் 




No comments: