பொண்ணுக்கு தங்க மனசு - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 சிவாஜியின் பல வெற்றிப் படங்களை இயக்கி புகழ் பெற்ற பி


மாதவன் தனது அருண் பிரசாத் மூவிஸ் சார்பில் 1973ல் படம் ஒன்றை தயாரித்தார். தான் ஏற்கெனவே சிவாஜி நடிப்பில் இயக்கிய ராமன் எத்தனை ராமனடி படத்தில் இடம் பெற்று பிரபலமான அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு என்ற பாடலின் ஆரம்ப வரியை எடுத்து புதுப் படத்துக்கு பொண்ணுக்கு தங்க மனசு என்று அவர் பெயரிட்டார். அப்படி பெயரிட்ட படத்தை தானே டைரக்ட் பண்ணாமல் தன்னிடம் நீண்ட காலம் உதவி இயக்குனர்களாக பணியாற்றிய தேவராஜ், மோகன் என்ற இருவருக்கும் அந்த வாய்ப்பை வழங்கினார் அவர். மாதவனுக்கு தங்க மனசு!


தேவராஜின் தந்தை சோமசுந்தரம் மனிதன் என்ற பிரபல மேடை

நாடகத்தின் கதாசிரியர். மோகன் நடிகர் முத்துராமனின் மைத்துனர், கார்த்திக்கின் மாமன் ஆவார். இவர்கள் இருவரும் இணைந்து படத்தை இயக்கினார்கள். மிக குறைந்த பட்ஜெட்டில் படம் தயாரானது.

சாந்தி, கீதா இருவரும் கல்லுரியில் பயிலும் நெருங்கிய நண்பிகள். கீதா தான் ஒரு பணக்காரப் பெண் என்ற அகந்தையில் வாழ்பவள். கீதாவோ ஏழையாக இருந்த போதும் தன்மானம் கொண்டவள். அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கக் கூடியவள். நண்பிகளான இருவருடைய குணாம்சம் காரணமாக இருவரிடையே பிளவு ஏற்றப்பட்டு அது சவாலாகவும் உருவெடுக்கிறது.

ராமு, சங்கர் இருவரும் கல்லூரியில் பயிலும் நெருங்கிய நண்பர்கள். ஏழை ராமுவுக்கு உதவும் நல்லெண்ணத்துடன் தன் வீட்டிலேயே அவன் தங்கி படிக்க வழி செய்கிறான் சங்கர். ஆனால் வீட்டில் நகைகள் காணாமல் போகவே ராமு மீது அநியாயமாக பழி விழுகிறது. ராமு, சங்கர் இருவரும் பிரிகிறார்கள். கால வெள்ளத்தில் ராமு சாந்தியை மணந்து கலெக்டர் அலுவலகத்தில் பியனாக பணியாற்றுகிறான். சங்கர் கீதாவை மணந்து அதே அலுவலகத்துக்கு கலெக்டராக வருகிறான். நண்பர்கள் நட்பை புதுப்பித்துக் கொள்ள , நண்பிகள் கீரியும், பாம்புமாக மோதுகிறார்கள். இவர்கள் பகை தணிந்ததா என்பதே படத்தின் மீதிக் கதை.

படத்தின் ஹீரோ ராமுவாக சிவகுமார் நடித்தார். சங்கராக புதுமுக நடிகராக விஜயகுமார் மாதவனால் அறிமுகப்படுத்தப் பட்டார். மாதவனுக்கு தங்க மனசு! சாந்தியாக ஜெயசித்ராவும், கீதாவாக புதுமுகம் விதுபாலாவும் நடித்தார்கள். இருவரும் துடிப்புடன் நடித்து படத்தை விறுவிறுப்பாக்கினார்கள். சிவகுமார் , விஜயகுமார் இருவரும் அடக்கமாக நடித்து பேரெடுத்தார்கள். விஜயகுமாருக்கு வேறு எவரோ டப்பிங் குரல் கொடுத்தது இப்போது தான் தெரிகிறது.


இவர்களுடன் கே ஏ தங்கவேலு, சி கே சரஸ்வதி இருவரும் இணைந்து நகைச்சுவையை வழங்கினார்கள். ஒண்டிரண்டு காட்சிகளில் வரும் மனோரமா சிரிக்க வைக்கவில்லை. எம் ஆர் ஆர் வாசு, எஸ் என் லட்சுமி, நடிப்பில் குறை வைக்கவில்லை. சாமிக்கண்ணு, சந்திரன்பாபு, இருவருடைய நடிப்பும் பேஷ் !

படத்துக்கு கதை வசனம் எழுதியவர் பாலமுருகன். ஜெயசித்ரா, விதுபாலா இருவருடைய வசனங்களிலும் பாலமுருகன் கைவண்ணம் தெரிந்தது. படத்தின் கதையும் சீராக அமைந்தது. படத்தின் ஒளிப்பதிவு பி என் சுந்தரம்.

படத்தில் நான்கு பாடல்கள். கண்ணதாசன், பூவை செங்குட்டுவன்

ஆகியோர் மூன்று பாடல்களை எழுதினர். கண்ணதாசனின் தேன் சிந்துதே வானம் பாடல் இனிமையாக அமைந்தது. பாடல் காட்சியும் ரசிக்கும் படி அமைந்தது. இந்தப் படத்தின் மூலம் புதுப் பாடலாசிரியராக முத்துலிங்கம் அறிமுகமானார். பாலமுருகன் சிபாரிசின் மூலம் முத்துலிங்கத்துக்கு இந்த வாய்ப்பு கிட்டியது. பாலமுருகனுக்கு தங்க மனசு!

படத்துக்கு இசையமைத்தவர் ஜி கே வெங்கடேஷ். அவரின் உதவியாளர்களில் ஒருவராக இப் படத்தில் பணியாற்றினார் இளையராஜா. மூன்றாண்டுகள் கழித்து இப் படத்தின்

இயக்குனர்களான தேவராஜ் மோகன் இருவரும் இயக்கிய அன்னக்கிளி படத்தில் இளையராஜா இசையமைப்பாளராக அறிமுகமானார்.

பொண்ணுக்கு தங்க மனசு இரண்டு மாதங்களுக்கு மேல் ஓடி சிவகுமார், விஜயகுமார், ஜெயசித்ரா, தேவராஜ், மோகன் ஆகியோருக்கு திரையுலக வளர்ச்சிக்கு துணை புரிந்தது. இந்தப் படம் பின்னர் மலையாளத்திலும் தயாரானது.

No comments: