October 8, 2023 7:34 am
‘தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொள்வதோடு, கடினமாக உழைத்தால் வெற்றி நம்மைவிட்டு எங்கும் போய்விடாது’ என்று சந்திரயான் 3 திட்டம் வெற்றி குறித்து தமிழ்நாட்டு விண்வெளி விஞ்ஞானிகளுக்கான பாராட்டு விழாவில் உரையாற்றிய இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் குறிப்பிட்டார்.
சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் உயர்கல்வித்துறை சார்பில் ‘ஒளிரும் தமிழ்நாடு, – மிளிரும் தமிழர்கள்’ என்ற பெயரில் சாதனை படைத்த தமிழ்நாட்டு விண்வெளி விஞ்ஞானிகளுக்கான பாராட்டு விழா சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியை நேரலையில் காணும் வகையில், 58 இலட்சம் பாடசாலை, கல்லூரி மாணவர்களுக்கு வட்ஸ்-அப் மூலம் இணைப்பு (லிங்க்) அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.
இதன் மூலம் ஏராளமான மாணவர்கள் அந்நிகழ்ச்சியைப் பார்த்தனர். அனைத்து பாடசாலை மற்றும் கல்லூரிகளில் இந்த நிகழ்ச்சி நேற்று 6 ஆ-ம் திகதி மறுஒளிபரப்பு செய்யப்பட்டது.
அண்ணா நூற்றாண்டு அரங்கில் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இஸ்ரோ(இந்திய விண்வெளி ஆய்வு நிலையம்) முன்னாள் தலைவர் கே.சிவன், சந்திரயான்-1 திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, சூரியனை ஆய்வு செய்ய விண்ணுக்கு ஏவப்பட்டுள்ள ஆதித்யா- எல்1 விண்கலம் திட்ட இயக்குனர் நிகார் ஷாஜி, சந்திரயான்- 3 விண்கலத்தின் திட்ட இயக்குனர் ப. வீரமுத்துவேல் உட்பட 9 இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து, சான்றிதழும், திருவள்ளுவர் சிலையையும் வழங்கி கௌரவித்தார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் உரையாற்றினர்.
சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் உரையாற்றுகையில் கூறியதாவது:-
“நான் அரசு பாடசாலையில்தான் படித்தேன். எந்தப் பாடசாலையில் படிக்கிறோம் என்பது முக்கியமில்லை. எப்படி புரிந்து படிப்பது என்பதுதான் முக்கியம். படிக்கின்ற காலகட்டத்திலேயே சின்ன சின்ன புராஜெக்ட்களை செய்து பாருங்கள். செய்முறை அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் புதுப்புது தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்ள வேண்டும். சந்திரயான்- 2 திட்டத்தில், தோல்வியைப் பார்த்து அச்சப்படக் கூடாது என்பதை நாங்கள் முதலில் கற்றுக் கொண்டோம். தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொள்வதோடு கடினமாக உழைத்தால் வெற்றி நம்மைவிட்டு எங்கும் போய்விடாது.
சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரையும் பிரக்யான் ரோவரையும் நிலவில் தரையிறக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் மட்டுமே நாம் பணியாற்றினோம். இதற்காக நிறைய சோதனைகளை மேற்கொண்டோம். நிலவு போன்ற சூழலை பூமியில் உருவாக்கி நிறைய சோதனைகளைச் செய்தோம். இதுவே எமது வெற்றிக்குக் காரணம். வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். எந்தவொரு பணியைச் செய்தாலும் முழுஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். எந்தத் துறையில் இருந்தாலும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.”
இவ்வாறு சந்திரயான் 3 திட்ட இயக்குனர் விஞ்ஞானி வீரமுத்துவேல் தெரிவித்தார்.
நிலவின் தென்துருவத்திற்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடு இந்தியா என்ற பெருமை என்றும் இந்தியாவுக்கு உள்ளது. கணிக்கப்பட்ட துல்லியத்துடன், நிலவில் தரையிறங்குவது ஒரு முக்கியமான சாதனையாகும். கடினமான சூழ்நிலைகளை கடந்து, நிலவின் தென்துருவம் அருகே தரையிறங்குவது, பல நூற்றாண்டுகளாக மனித அறிவின் எல்லைகளை உயர்த்த முயன்று வரும் இந்திய விஞ்ஞானிகளின் மனப்பான்மைக்கு ஒரு சான்றாகும்.
சந்திரனில் இருந்து ‘பிரக்யான்’ ரோவர் அனுப்பும் தகவல் வளம் அறிவை மேம்படுத்துவதோடு, சந்திரன் மற்றும் அதற்கு அப்பால் உள்ள மர்மங்கள் குறித்த அடிப்படை கண்டுபிடிப்புகளுக்கும் நுண்ணறிவுகளுக்கும் வழிவகுக்கும் என்ற நம்பிக்ைக பிறந்துள்ளது.
உலகளாவிய அறிவியல் சாதனைகளில் இந்திய நாட்டை தொடர்ந்து முன்னணியில் கொண்டு சென்றுள்ளனர் இந்திய விஞ்ஞானிகள். அவர்களின் விடாமுயற்சி, தளராத ஆர்வம், சவால்களை வெல்லும் அசைக்க முடியாத உத்வேகம் ஆகியவை சர்வதேச அரங்கில் அவர்களின் நற்பெயரை உறுதிப்படுத்தியது மட்டுமல்லாமல், எண்ணற்ற மக்களுக்கு பெரிய கனவு காணவும், உலகளாவிய அறிவின் பரந்த கட்டமைப்பிற்கு பங்களிக்கவும் தூண்டியுள்ளன.
இந்தியாவின் விண்வெளித் திட்டத்தின் வெற்றிக்கு ஏராளமான பெண் விஞ்ஞானிகள் பங்களித்துள்ளனர் என்பது பெருமைக்குரிய விடயமாகும். பெண்களுக்கு சமஉரிமை வழங்கும் நாடு இந்தியா என்பது உலக அரங்கில் பொறிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு மற்றும் முன்மாதிரியான தலைமையும் இந்த வெற்றிக்கு மற்றொரு காரணமாகும். மனித நலன் மற்றும் அறிவியல் முன்னேற்றத்திற்கான இந்தியாவின் விண்வெளித் திட்டத்தில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கதாகும். இந்திய விஞ்ஞானிகளின் திறன்கள் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையும், அவரது இடைவிடாத ஊக்கமும் அபாரமானவையாகும்.
ஒரு அரசின் தலைவராக தனது 22 ஆண்டுகளில், முதலில் குஜராத் மாநிலத்திலும் பின்னர் பிரதமராகவும் நரேந்திர மோடி அனைத்து சந்திரயான் திட்டங்களுடனும் உணர்ச்சிபூர்வமான பிணைப்பைக் கொண்டுள்ளார். முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயால் இத்தகைய திட்டத்தின் யோசனை அறிவிக்கப்பட்டபோது நரேந்திர மோடி முதலமைச்சராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
2008- ஆம் ஆண்டு சந்திரயான் -1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டபோது, நரேந்திர மோடி இஸ்ரோவுக்குச் சென்று விஞ்ஞானிகளை நேரில் வாழ்த்தினார்.
பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து வருகிறார். கடந்த 9 ஆண்டுகளில், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை எளிதாக்கும் தொடர்ச்சியான சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. விண்வெளித் துறையைப் பொறுத்தவரை, இந்தியாவில் தனியார் துறை மற்றும் புத்தொழில் நிறுவனங்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைப்பதை பிரதமர் மோடி உறுதி செய்தார்.
சந்திரயான் -3 திட்டத்தின் வெற்றியிலிருந்து கிடைக்கும் அறிவு மனிதசமுதாயத்தின் நன்மை மற்றும் முன்னேற்றத்திற்கு, குறிப்பாக உலகளாவிய தென்பகுதி நாடுகளின் நன்மைக்கும் முன்னேற்றத்திற்கும் பயன்படுத்தப்படும் என்று சந்தேகத்திற்கு இடமின்றி கூறியதன் மூலம், பிரதமர் நரேந்திர மோடி உலகம் ஒரு குடும்பம் என்ற இந்திய காலத்தால் அழியாத நம்பிக்கையின் உணர்வை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார்.
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளின் இந்த சகாப்தத்தில், கல்வி உலகத்துடன் தொடர்புடையவர்கள் அதிக இளைஞர்களை அறிவியலை நோக்கி ஊக்குவிக்க வேண்டும் என்று இந்தியா எதிர்பார்க்கின்றது. சந்திரயான் -3 இன் வெற்றி இந்த துறைகளில் ஆர்வத்தின் தீப்பொறியைத் தூண்டுவதற்கும், இந்திய நாட்டில் உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்துவதற்கும் ஒரு மகத்தான வாய்ப்பை வழங்கியுள்ளது.
பெண்களுக்கு முன்னுரிமை வழங்கி, அவர்களை ஊக்குவித்து, சாதனை வீராங்கனைகளாக்கும் தேசம் பாரதம்! நன்றி தினகரன்
No comments:
Post a Comment