கடந்த அங்கத்தின் தொடக்கத்தில் எங்கள் நீர்கொழும்பூர் விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி பற்றி சொல்லியிருந்தேன்.
இக்கல்லூரியின் பழைய மாணவர் மன்றத்தை 1972
ஆம்
ஆண்டில் நாம் உருவாக்கினோம். அக்காலப்பகுதியில்தான் நான் எழுத்துலகிலும் பிரவேசித்தேன்.
எனது முதல் சிறுகதை ( கனவுகள் ஆயிரம் ) மல்லிகையில் வெளியானதும்
அப்போதுதான். அதே காலப்பகுதியில் வீரகேசரியின் நீர்கொழும்பு பிரதேச நிருபர் பணியும்
எனக்கு கிடைத்திருந்தது.
எமது கல்லூரியின் முன்னேற்றத்திற்காக எமது பழைய மாணவர்
மன்றம் தீவிரமாக உழைத்துக்கொண்டிருந்தமையால், அங்கே அடிக்கடி செல்ல நேர்ந்தது.
அச்சமயம் வடபகுதியிலிருந்து வருகை தந்திருந்த சில ஆசிரியைகள்,
அங்கே கடமையாற்றிக்கொண்டிருந்தனர். அவர்களில்
சிலரின் கணவர்மார் நீர்கொழும்பில் தொழில் நிமித்தம் பணியாற்ற நேர்ந்தது.
அவர்களில் ஒருவர் வேலாயுதபிள்ளை. இவரது துணைவியார்தான்
புவனேஸ்வரி ரீச்சர். இவர்கள் இருவருக்கும் எப்போதும் மலர்ந்த முகம்தான்.
இவர்களின் ஐந்து வயது பெண்குழந்தை துருதுரு என்று ஏதாவது
சொல்லிக்கொண்டு ஓடி விளையாடும். இவர்கள் வீட்டுக்கு அவ்வப்போது சென்றிருக்கின்றேன். இவர்கள் எதிர்க்கட்சித் தலைவராகவிருந்த அ. அமிர்தலிங்கத்திற்கும்
உறவினர்கள்.
புவனேஸ்வரி ரீச்சரின் அண்ணன் சண்முகலிங்கம், அக்காலப்பகுதியில்
பிரதமராகவும் வீடமைப்பு நிருமாணத்துறை அமைச்சராகவுமிருந்த ரணசிங்க பிரேமதாசவின் செயலாளர்களில்
ஒருவர்.
பிரதமர் பிரேமதாச, ஆளுமைமிக்க - செயல்திறனுள்ள செயலாளர்களையே தம்வசம்
வைத்திருந்தார். அவரிடம் ஐந்து “லிங்கங்கள் “ செயலாளராகவிருந்தனர். நாம் அவர்களை
“ பஞ்சலிங்கங்கள் “ என்போம் ! அதில்
ஒருவர் ஆர். பாஸ்கரலிங்கம்.
நிதியமைச்சர் ரொனி டீ. மெல்லுக்கு “ தண்ணி
“ காட்டியவர் ! அதெல்லாம் அரசியல்.
விடுவோம் ,
இங்கு குறிப்பிடும், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் நீர்கொழும்பில்
நான் பார்த்த குழந்தை பூங்கோதையை ஆளுமையுள்ள பெண்ணாக – எழுத்தாளராக – சமூகச்செயற்பாட்டாளராக
– தன்னார்வத் தொண்டராக தாயைப்போன்று ஒரு ஆசிரியையாக லண்டனில் மீண்டும் சந்தித்தேன்.
இவரை மெய்நிகர் நிகழ்வென்றில்தான் சில மாதங்களுக்கு முன்னர் கண்டுபிடித்தேன். இல்லை…
இல்லை… பூங்கோதைதான் என்னைத் தேடிக் கண்டுபிடித்தார் எனச்சொல்லவேண்டும்.
லண்டனில் நடந்த விம்பம்
நிகழ்ச்சிக்கு நவஜோதி ஜோகரட்ணம் என்னை அழைத்துச்சென்றிருந்தார்.
நாம் மண்டபத்திற்குள் பிரவேசிக்கும்போது பூங்கோதை ஒரு நூலைப்பற்றி
தனது வாசிப்பு அனுபவத்தை உரையாக நிகழ்த்திக்கொண்டிருந்தார்.
உரைமுடிந்ததும் சபைக்கு வந்து என்னை அன்போடு, “ எப்படி அங்கிள் இருக்கிறீங்க ..? “ எனக்கேட்டு, அணைத்துக்கொண்டார். நான் உருகிவிட்டேன். கண்களில் துளிர்த்த கண்ணீரை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டேன்.
குழந்தைப் பருவத்தில் துடுக்குத்தனமாக பேசிக்கொண்டு துருதுருவென்று ஓடி விளையாடிக்கொண்டிருந்த பூங்கோதையின் தந்தையார் வேலாயுதம், எமது இந்து இளைஞர் மன்றத்திலும் அங்கம் வகித்தவர். இவரது மைத்துனர் விஸ்வநாதன் செயற்குழுவிலிருந்தவர்.
இவர்களின் வீடுகள் அருகருகே இருந்தன.
அங்கே செல்லும் சந்தர்ப்பங்களில் குழந்தை பூங்கோதையை பார்ப்பேன். இவர் அந்தப்பராயத்திலேயே ஒருநாள் அருமைத் தாயார் புவனேஸ்வரி ரீச்சரை ஒரு வாகன
விபத்தில் பலி ( பறி ) கொடுத்தவர்.
புவனேஸ்வரி ரீச்சர் எங்கள் ஊர் இந்து மகளிர் மன்றத்திலும்
அங்கம் வகித்தவர். அவரது அகால மரணம் எங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
காலம் அனைத்தையும் கடந்து செல்லும்.
அவருடைய செல்வப்புதல்வி பூங்கோதையை எழுத்தாளராக –
பேச்சாளராக நான் மீண்டும் சந்தித்தபோது, அந்த நாட்கள் எல்லாம் நினைவுக்கு வந்தன. தனது நிறமில்லாத மனிதர்கள் கதைத் தொகுப்பினைத் தந்தார்.
இந்த புத்தகத்தை தனது அருமைத்தாயருக்கே ( ஆசிரியை புவனேஸ்வரி
வேலாயுதபிள்ளை ) சமர்ப்பணம் செய்துள்ளார்.
பூங்கோதையின் சித்திரத்தில் ஓர் விமானம் என்ற சிறுகதை, அன்றில் முற்றம் என்ற தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. இந்த நூலில்
இருபது பெண் படைப்பாளிகளின் கதைகளை நாம் பார்க்கலாம். வாசிக்கலாம். நான் இனித்தான்
வாசிக்கவிருக்கின்றேன். இந்த நூலைத் தொகுத்திருப்பவர் ஜெ. பி. ஜோஸ்பின் பாபா.
பூங்கோதையின் தாயார் புவனேஸ்வரி, கச்சாயூர் புலவரின் ஏக புத்திரி
என்பதும் குறிப்பிடத்தகுந்தது.
அந்தத் தென்மராட்சிப்புலவரின் எழுத்துக்கள் குறித்து, வீரமணி ஐயர்,
கவிஞர் முருகையன் ஆகியோரும் விதந்துரைத்துள்ளனர்.
இலக்கியம் மற்றும் கல்விப் பின்புலத்தில் வந்திருக்கும் பூங்கோதை,
தன்னை குழைக்காட்டு இளவரசி என்றே
அழைத்துக்கொள்கிறார்.
சில
வருடங்களுக்கு முன்பு, நண்பர் புதுவை ரத்தினதுரையின் ( இவர் காணாமலாக்கப்படுவதற்கு
முன்னர் ) எழுதிய பூவரசம் வேலியும் புலுனிக்குஞ்சுகளும்
கவிதை நூலுக்கு மெல்பனில் அறிமுக அரங்கு நடந்தபோது, அதில் நான் உரையாற்றினேன்.
எனக்கு புலுனிக்குஞ்சு பற்றி எதுவும் தெரியாது. கவிஞர் அம்பியை
தொடர்புகொண்டு கேட்டேன்.
“ அதடாப்பா…. குழைக்காட்டுப் பிரதேசங்களில் வாழும்
ஒரு வகை சிறிய பறவை இனம். “ என்றார்.
“ அது என்ன குழைக்காட்டு
பிரதேசம் ? “ எனத்திருப்பிக்கேட்டேன்.
“ ஓகோ… உமக்கு அதுவும் தெரிய நியாயம் இல்லை. நீர்…
நீர்கொழும்பான். தென்மராட்சி பிரதேசத்தை அவ்வாறு அழைப்பதுண்டு எனச்சொல்லி, கவிஞர் அம்பி அதற்கு விளக்கமும் தந்தார்.
வட இலங்கை பற்றி நான் தெரிந்துகொள்வதற்கு நிறையவிருக்கிறது.
தற்போது தென்மராட்சி மக்களுக்காகவே தென்மர் என்ற மின்னிதழும்
வெளியாகக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே வெளியான எனது ஆக்கங்களையும் இதில் அவ்வப்போது காண
முடிகிறது.
சமகாலத்தில் Cut and Past – Down Load
Journalism தானே நடக்கிறது !?
சரி… மீண்டும் பூங்கோதைக்கு
வருமுன்னர், லண்டன் விம்பம்
நிகழ்ச்சிக்கு
என்னை அழைத்துச்சென்ற இலக்கியப்படைப்பாளி, வானொலி ஊடகர் நவஜோதி ஜோகரட்ணம் பற்றி சில
விடயங்களை சொல்ல விரும்புகின்றேன். எமது இலக்கிய வட்டத்தில் இவருக்கு அறிமுகம் அவசியமில்லை
எனக்கருதுகின்றேன்.
எங்கள் மூத்த முற்போக்கு எழுத்தாளர் ( அமரர் ) எஸ்.அகஸ்தியரின்
புதல்வி நவஜோதியும் அவரது கணவர் ஜோகரத்தினமும்
லண்டனில் ஹரோவில் நான் தங்கியிருந்த
குடும்ப நண்பரின் வீட்டுக்கு வந்து அழைத்துச்சென்றனர்.
காரில் சென்று, பின்னர் ரயில் மூலம் விம்பம் நடத்திய நிகழ்ச்சிக்கு
சென்றோம்.
உண்மைதான். அன்றைய நிகழ்ச்சியில்
ராஜா என அழைக்கப்படும்
கிருஷ்ணராஜா சுறுசுறுப்புடன் இயங்கிக்கொண்டிருந்தார்.
வந்திருந்தவர்களுக்கு மதியபோசன
விருந்தும் வழங்கி உபசரித்தார். இந்நிகழ்வில்
ராகவன், நிர்மலா, அனஸ் இளைய அப்துல்லா, பத்மநாப ஐயர், பௌசர், புஷ்பராஜன், ராஜேஸ்வரி
பாலசுப்பிரமணியன், ஜெர்மனி ‘ வெற்றிமணி
‘ இதழ் ஆசிரியர் சிவகுமாரன், மாதவி சிவலீலன், ரூபன் சிவராஜா, கவிதாலட்சுமி உட்பட
பலரையும் சந்திக்க முடிந்தது.
இந்நிகழ்வுக்கு என்னை அழைத்துச்சென்ற
நவஜோதியும் தொடர் செயற்பாட்டாளர். நவஜோதி ஜோகரட்னம் தொகுத்திருக்கும் மகரந்தச்சிதறல் (
நேர்காணல் தொகுப்பு ) பற்றி ஆறு ஆண்டுகளுக்கு
முன்னரே எனது வாசிப்பு அனுபவத்தை பதிவுசெய்திருக்கின்றேன்.
அதன் தொடக்கத்தில் இவ்வாறு எழுதியிருந்தேன்.
இங்கிலாந்தில் புகலிடம்பெற்ற
ஈழத் தமிழ்ப்பெண்களின் ஆளுமைப்பண்புகளை பதிவுசெய்திருக்கும் அரிய முயற்சி. நேர்காணல் என்பதும் ஒரு தேர்ந்த கலை. அதிலும் நாம் பயிற்சி பெறவேண்டியவர்களாகவே
இருக்கின்றோம். நேர்காணல்களில் ஈடுபடுபவர்களுக்கு தேடலும், வாசிப்பு அனுபவமும்
முக்கியமானது. தம்முடன் உரையாடவிருப்பவர் பற்றி, ஓரளவும் தெரியாமல் முழுமையான
நேர்காணலை தயாரித்துவிட முடியாது.
நவஜோதி சந்தித்த பெண்கள், தத்தமது கருத்துக்களை சுதந்திரமாக எந்தத்தடையுமின்றி தெரிவித்திருப்பதாக நூலின் முன்னுரையில் பதிவுசெய்துள்ளார். கேள்விகளை தொடுத்திருக்கும் பாங்கில் மற்றவர்களின் கருத்துச் சுதந்திரத்திற்கு இவர் தந்துள்ள மரியாதை முன்னுதாரணமானது என்பதை நூலுக்குள் பிரவேசிக்கும்பொழுது தெரிந்துகொள்கின்றோம்.
நவஜோதியுடன் கடந்த ஒரு வருடத்திற்கும்
மேலாக ஒரு போராட்டத்தில் நான் ஈடுபட நேர்ந்தது.
அதில் நண்பர் மு. நித்தியானந்தனும்
ஜீவநதி ஆசிரியர் க. பரணீதரனும் இணைந்திருந்தனர். நீண்டகாலத்திற்கு முன்னர் நவஜோதியின் தந்தையார்
( அமரர் ) எஸ். அகஸ்தியர் , 1986 இல் பாரிஸில் வாழ்ந்த காலப்பகுதியில் அங்கிருந்து
வெளியான தாயகம் இதழில் சுவடுகள் நவீனத்தை தொடராக எழுதியிருந்தார்.
அதற்கு பல முனைகளிலுமிருந்தும்
தடைகளும் வந்தன. ஆனைக்கோட்டையில் அகஸ்தியர்
வாழ்ந்த காலப்பகுதியில் போர் மேகங்கள் பரவியிருந்தபோது, அவர் எதிர்நோக்கிய சிக்கல்களை சித்திரித்த நவீனம்.
அதனை நூலாக்கும் பணிகளில்
( ஒப்புநோக்குதல் செம்மைப்படுத்துதல் ) நாம் பல மாதங்கள் தொலைபேசி – மின்னஞ்சல்களின்
ஊடாக போராடிக்கொண்டிருந்தோம்.
ஒருவாறு அந்த நவீனம் புத்தக
ரூபத்தில் கடந்த வைகாசி மாதம் இலங்கையில் ஜீவநதி பிரசுரமாக வெளிவந்துவிட்டது.
இந்தப்புத்தகத்திற்கும் நவஜோதி
– ஜேகரட்ணம் தம்பதியரின் செல்வப்புதல்வன் சிம்பா முகப்பு ஓவியம் வரைந்துள்ளார்.
இந்தக்காட்சிகளைப் பார்க்க
அகஸ்தியர்தான் தற்போது உயிரோடு இல்லை.
சரி, மீண்டும் “ எங்கள் பூங்கோதை “ க்கு வருகின்றேன்.
நான் இவ்வாறு “ எங்கள்
“ என்று உரிமையுடன் சொல்வதற்கு முக்கிய காரணம். நான் எழுத்துலகில் பிரவேசித்தபோது
பலரும் எனக்கு முன்னரே இந்தத் துறைக்கு வந்திருந்தனர்.
ஆனால், அக்காலப்பகுதியில்
நான் பார்த்து ரசித்த ஒரு குழந்தையை சுமார் அரை நூற்றாண்டுக்குப்பின்னர் படைப்பாளியாகப் பார்க்கின்றபோது எனக்குள் ஏற்பட்ட
பரவசத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.
நான் லண்டனைவிட்டு புறப்படுவதற்கு
முதல்நாள் என்னைத்தொடர்புகொண்டு, “ அங்கிள்
உங்களை வெளியே அழைத்துச்செல்ல வருகின்றேன். இன்று உங்களுக்கு என்னுடன்தான் மதிய உணவு “ என்றார்.
பூங்கோதையை குழந்தைப்பருவத்தில்
பார்த்திருக்கும் எனது தங்கை ஜெயந்தியும் லண்டன் வந்திருந்தார்.
“வாரும் … உம்மைப்பார்க்க பலரும் இங்கே காத்திருக்கிறார்கள்
“ என்றேன்.
வந்தார். எனது இளைய மகள் பிரியாவும் அவுஸ்திரேலியாவிலிருந்து
குடும்பத்துடன் வந்திருந்தாள். அனைவரையும் பூங்கோதைக்கு அறிமுகப்படுத்தினேன்.
மூன்று தலைமுறைகள் அன்று
அவ்வாறு சந்தித்துக்கொண்ட காட்சியை பார்ப்பதற்கு
எங்கள் புவனேஸ்வரி ரீச்சர் இல்லையே என்று மனதிற்குள் விம்மினேன்.
பூங்கோதையுடன் அன்றைய பகல்
பொழுது முழுவதும் கரைந்தது.
ஒரு பூங்காவுக்கு அழைத்துச்சென்றார். தனக்கு மனக்கவலைகள் வரும்போதெல்லாம் அந்தப்பூங்காவுக்குள்
பிரவேசித்துவிடுவாராம்.
வாழ்க்கையில் தான் கடந்து வந்திருக்கும் பாதையில் பெற்ற அனுபவங்களை
பகிர்ந்துகொண்டார்.
எழுத்தும் தன்னார்வப்பணிகளும்
அவரை எப்பொழுதும் ஆற்றுப்படுத்திக்கொண்டிருக்கும்.
விம்பம் நிகழ்ச்சிக்கு ஊன்றுகோலுடன் வருகை தந்து, என்னை அழைத்துச்சென்ற
மற்றும் ஒரு இலக்கிய சகோதரி ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியன் அவர்கள் பற்றி அடுத்த அங்கத்தில்
சொல்வேன்.
( தொடரும் )
No comments:
Post a Comment