இலங்கைச் செய்திகள்

மர்மமாக மரணித்த சார்ஜெண்ட் ஹனீபா; உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்து

யாழில் சமிந்த வாஸ் கிரிக்கெட் பயிற்சி இன்று ஆரம்பம்

ஒக்டோபர் 11 முதல் டிஜிட்டல் பொருளாதார மாற்றத்தை துரிதப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம்

தலைமன்னார், இராமேஸ்வரம் கப்பல் சேவை விரைவில்

மலையக மக்களின் 200 வருட பூர்த்தி ‘நாம் -200’ நிகழ்வின் அறிமுக விழாவும் சின்னம் வெளியீடும்

வடமாகாண அபிவிருத்திக்கு முழு ஆதரவையும் வழங்குவேன் அமைச்சர் ஜீவன் தொண்டமான் உறுதி

KKS-நாகபட்டிணம் பயணிகள் கப்பல்சேவை ஜனவரி முதல்



மர்மமாக மரணித்த சார்ஜெண்ட் ஹனீபா; உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்து

- ரிஷாட் பதியுதீன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் வேண்டுகோள் விடுப்பு

October 7, 2023 10:18 am

– நீதியை பெற்றுக்கொடுக்குமாறு ஐக்கிய‌ காங்கிர‌ஸ் கோரிக்கை

பொலன்னறுவை, வெலிக்கந்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய ஏறாவூரைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜெண்ட் முஹம்மது மக்பூல் ஹனீபா, பொலிஸ் விடுதியில் இரத்தம் தோய்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான எம்.எஸ்.சுபைர் முன்வைத்த வேண்டுகோள் தொடர்பில், கவனத்தை செலுத்துமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்ரமரத்ன ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வேண்டியுள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்படுள்ளதாவது,

“கடமை செய்யும் தமது பொலிஸ் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள பொலிஸாரின் விடுதியில் வைத்து இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளமையானது, நீதியினை நிலைநாட்டும் பொலிஸாருக்கே இந்த நிலையா? எனக் கேட்கத் தோன்றுகின்றது.

நாட்டின் தற்போதைய நிலையில், காவல்துறையினர் மீது பொதுமக்கள் கொண்டுள்ள சந்தேகங்களுக்கு மத்தியில், விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் இருக்கும் சிறுபான்மை காவல்துறை அதிகாரிகளுக்கு இழைக்கப்படும் இவ்வாறான கொடூரங்கள் நிறுத்தப்படல் வேண்டும் என்பது மட்டுமல்லாது, இப்படிப்பட்ட ஈனச்செயல்களை செய்பவர்கள் எவராக இருந்தாலும் தராதரம் பாராது சட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவது, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராகிய தங்களது கடமையாகும்.”

அதேவேளை, வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி இந்த மரணம் தொடர்பில் கொடுத்துள்ள அறிக்கையானது, கூறிய ஆயுதத்தால் குத்தப்பட்டுள்ளமை தொடர்பில் குறிப்பிட்டுள்ளதால், இது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் இவ்வாறான சம்பவங்களின் பின்னணியில் இருக்கும் திட்டம் தொடர்பில் கவனம் செலுத்துவது அவசியம் என்றும் அவர் இந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மர்ஹூம் மக்பூல் முஹம்மத் ஹனீபா மிகவும் நேர்மையான ஒரு அதிகாரி என்றும் ஊழல், மோசடிகளை வன்மையாக எதிர்க்கும் மனப்பக்குவத்தை கொண்ட ஒருவராகவும் காணப்பட்டதாக பிரதேச மக்கள் சான்றுபகர்ந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர், மக்பூல் ஹனீபா பொலிஸ் நிலையத்தின் அவசர அழைப்பு பிரிவான 119க்கு பொறுப்பாக செயற்பட்டு வந்துள்ளதாகவும் இதனை கவனத்தில்கொள்ளுமாறும் தமது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சிறுபான்மைச் சமூகத்தினருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இவ்வாறான மிலேச்சத்தனமான கொடூரங்கள், இனியும் இடம்பெறாதவாறு சட்ட நடவடிக்கையெடுக்குமாறும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பநிலையினை கவனத்திற்கொண்டு, அவர்களுக்கான நீதியினை உறுதிப்படுத்துமாறும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கும், பொலிஸ் மா அதிபருக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் சார்ஜன்ட் ஹனீபாவின் மரணம் தொடர்பில் நீதியை பெற்றுக் கொடுக்குமாறு ஐக்கிய‌ காங்கிர‌ஸ் கோரிக்கை

பொலிஸ் சார்ஜன்ட் ஹனீபாவின் மரணம் தொடர்பில் நீதியான விசாரணை மேற்கொண்டு நீதியை பெற்றுக்கொடுக்குமாறு ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி பொலிஸ் மாஅதிப‌ர், பாதுகாப்பு அமைச்ச‌ர் ஆகியோரிட‌ம் கோரிக்கை வைத்துள்ள‌து.

மேற்படி விடயமாக, மேல் பெயர் குறிப்பிடப்பட்ட பொலீஸ் உத்தியோகத்தர் பொலிஸ் விடுதியில் கூரிய ஆயுதத்தினால் குத்திக் கொல்லப்பட்டதாக அவரது மரணம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பதிக்கப்பட்ட குடும்பத்தினர் எமது கட்சியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

எனவே இது தொடர்பில் நீதியான விசாரணை செய்யப்பட்டு நீதி கிடைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

பொலநறுவை வெலிக்கந்தைப் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஆக கடமையாற்றி வந்த ஏறாவூரைச் சேர்ந்த மக்பூல் முஹம்மது ஹனீபா (வயது 52) என்பவரின் சடலம் பொலிஸ் விடுதியிலிருந்து இரத்த வெள்ளத்தில் தோய்ந்தவாறு கடந்த சனிக்கிழமை (30) மீட்கப்பட்டிருந்தது.

பொலன்னறுவை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலம் செவ்வாய்க்கிழமை 03.10.2023 சட்ட வைத்திய நிபுணரினால் உடற்கூராய்வு செய்யப்பட்டதன் பின்னர் அன்றைய தினம் இரவு ஏறாவூர் காட்டுப்பள்ளி மையவாடியில் பொலிஸ் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சடலம் இரத்த வெள்ளத்தில் தோய்ந்திருந்ததை வைத்தும் சடலத்தில் காயம் இருந்ததனாலும் இது கொலையாக இருக்கலாம் என உறவினர்கள் சந்தேகம் தெரிவித்திருந்த நிலையில், கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டதில் இரத்தப் போக்கு இடம்பெற்று மரணம் சம்பவித்திருப்பதாக பொலநறுவை சட்ட வைத்திய நிபுணர் யூ.எல்.எம்.எஸ்.பெரேராவின் உடற்கூராய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழுநேர பொலிஸ் பாதுகாப்பிலுள்ள வெலிக்கந்தைப் பொலிஸ் வளாகத்திற்குள்ளேயே அமைந்துள்ள பொலிஸார் தங்கும் விடுதியில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக கரிசனை எடுக்குமாறு ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் தலைவர் முபாரக் அப்துல் மஜீத்
கேட்டுக் கொண்டுள்ளார்.

இது விடையாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும் ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவிசாளருமான S.S.M. சுபைர் B.A இராஜாங்க அமைச்சர் டிரான் அலஸ் உடன் பேசியள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்ததாகவும் தெரிய‌ வ‌ருகிற‌து.   நன்றி தினகரன் 





யாழில் சமிந்த வாஸ் கிரிக்கெட் பயிற்சி இன்று ஆரம்பம்

October 6, 2023 2:23 pm 

JAFFNA STALLIONS CRICKET ACADEMY ஏற்பாட்டில் JAFFNA STALLIONS தலைமை பயிற்றுவிப்பாளர், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் தலைமையில் கிரிக்கெட் பயிற்சி இன்று (06) காலை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது.

அதில், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட கிரிக்கெட் வீர, வீரங்கனைகள் கலந்து கொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.

குறித்த பயிற்சி முகாம் நாளை (07) , யாழ். இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், நாளைய மறுதினம் (08) வவுனியாவில் இடம்பெறவுள்ளது.

வடக்கில் மூன்று தினங்களும் இடம்பெறவுள்ள இந்த பயிற்சி முகாமில் இருந்து 150 வீர, வீராங்கனைகள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களை மேலும் வலுப்படுத்தும் பயிற்சிகளை JAFFNA STALLIONS CRICKET ACADEMY முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ். விசேட நிருபர்  - நன்றி தினகரன் 






ஒக்டோபர் 11 முதல் டிஜிட்டல் பொருளாதார மாற்றத்தை துரிதப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம்

October 6, 2023 6:11 pm 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவுக்கமைய, டிஜிட்டல் பொருளாதார மாற்றத்தைத் துரிதப்படுத்தும் வேலைத்திட்டத்தை ஒக்டோபர் 11ஆம் திகதி முதல் ஆரம்பிக்க தொழில்நுட்ப அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதற்கு இணையாக அரச மற்றும் தனியார் துறையினர் ஒன்றுபட்டு டிஜிட்டல் பொருளாதார திட்டத்தை செயற்படுத்தும் முறைமை ஆரம்பிக்கப்படவுள்ளது.

தற்போது தயாரிக்கப்பட்டிருக்கும் டிஜிட்டல் பொருளாதார முறைமையின் ஊடாக இலங்கையின் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பு கிடைக்கும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் நம்பிக்கை தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

டிஜிட்டல் பொருளாதார கொள்கையினால் சர்வதேச போட்டித்தன்மைிக்க பொருளாதாரத்துடன் போட்டியிடும் வகையில் இலங்கையை தயார்படுத்த முடியும் என்பதால், அதனூடாக அடுத்த தசாப்பத்தில் இலங்கையின் வலுவான பொருளாதாரத்தை கட்டமைப்பதற்கான இயலுமை கிட்டும் என்றும் தெரிவித்தார்.

அதற்காக டிஜிட்டல் பொருளாதார திட்டத்தை சமூகமயப்படுத்தல் மற்றும் அது தொடர்பாக பொதுமக்களை தெளிவூட்டும் செயலமர்வுகளை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்,

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவுக்கமைவாக “DIGIECON 2030” வேலைத்திட்டம் இம்மாதம் 11 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தை டிஜிட்டல் மயமாக்குதற்கான, டிஜிட்டல் பொருளாதார திட்டமிடலொன்றை இதனூடாக தயாரிக்க எதிர்பார்த்திருப்பதோடு, டிஜிட்டல் பொருளாதார கொள்கை தயாரிப்பு பணிகள் பிரதமரின் செயலாளர் அனுர திசாநாயக்கவின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

டிஜிட்டல் பொருளாதார திட்டத்தினால் சர்வதேசத்தின் போட்டித்தன்மை மிக்க சூழலுக்கு ஏற்ப இலங்கையை தயார்படுத்த முடியும். அதனூடாக இலங்கைக்குள் வலுவான பொருளாதார கட்டமைப்பை உருவாக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

டிஜிட்டல் பொருளாதாரத்தினால் மொத்த தேசிய உற்பத்திக்கு 4% பங்களிப்பு கிடைக்கிறது. அதனை 2030 களில் 15 % ஆக அதிகரித்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக மாநாடுகளும், செயலமர்வுகளும் நடத்தப்படவுள்ளன.” என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சின் மேலதிகச் செயலாளர் ”எம்.ஜீ.என்.எம்.விக்ரமசிங்க, DIGIECON 2023 -2030 வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் பிரசாத் சமரவிக்ரம, மென்பொருள் சேவைக்கான இலங்கைச் சங்கத்தின் (SLASSCOM) தலைவர் ஜெஹான் பேரின்பநாயகம், இலங்கை தகவல் தொழில்நுட்ப தொழில்துறை சங்கத்தின் (FITIS) தலைவர் இந்திக்க டி சொய்சா, இலங்கை கணினி சங்கத்தின் தலைவர் அஜந்த அதுகோரல, இலங்கை பொறியியல் நிறுவனத்தின் தலைவர் (IESL) பேராசிரியர் ரஞ்சித் திஸாநாயக்க, NERDC பணிப்பாளர் ஜெனரல் நிலாந்தி பெர்னாண்டோ, பிரித்தானிய கணினிச் சங்கத்தின் தலைவர் அலென்சோ டோல் (Mr.Alenzo Doll) ஆகியோரும் இதன்போது கருத்து தெரிவித்தனர்.   நன்றி தினகரன் 





தலைமன்னார், இராமேஸ்வரம் கப்பல் சேவை விரைவில்

- ரிஷாட்டின் கேள்விக்கு அமைச்சர் நிமல் பதில்

October 6, 2023 12:35 pm 

தலைமன்னார், இராமேஸ்வரத்துக்கிடையிலான கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படுமென துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இச்சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இக்கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்ததாவது,

“தலைமன்னார், இராமேஸ்வரம் கப்பல் சேவைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும். இதற்கான ஏற்பாடுகள் நடந்தவண்ணமுள்ளன. தலைமன்னாரிலிருந்த உபகரணங்கள் பழுதடைந்துள்ளன. இவற்றுக்குப் பதிலாக புதிய உபகரணங்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

பட்ஜெட்டில் 600 மில்லியன் ரூபா இதற்கென ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிதியை பாராளுமன்றம் விடுவித்ததும் விரைவில் சேவைகள் ஆரம்பிக்கப்படும். இது தொடர்பில் பேச்சு நடத்த எதிர்வரும் 16 ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளேன்” என்றார்.

இவ்விடயங்களை ஆராயும் பொருட்டு அமைச்சர் ஏற்கனவே தலைமன்னார் பகுதிக்கு விஜயம் செய்திருந்த வேளையில், மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் அமைச்சரை சந்தித்து பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும், பாராளுமன்றத்திலும் அமைச்சரை அடிக்கடி சந்தித்து, இக்கப்பல் சேவையை ஆரம்பிப்பது பற்றிய பல கலந்துரையாடல்களில் அவர் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 





மலையக மக்களின் 200 வருட பூர்த்தி ‘நாம் -200’ நிகழ்வின் அறிமுக விழாவும் சின்னம் வெளியீடும்

October 6, 2023 8:53 am 0 comment

மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாகியதைத் தொடர்ந்து, அம்மக்கள் இந்நாட்டுக்கு ஆற்றிய சேவைகளை பாராட்டியும் அவர்களை கௌரவித்தும் ‘நாம் -200’ நிகழ்வின் அறிமுக விழாவும் சின்னம் வெளியீடும் பத்தரமுல்லையிலுள்ள நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சில் நேற்று வியாழக்கிழமை (05) நடைபெற்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டிலும் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தலைமையிலும் இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், தவிசாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ராமேஷ்வரன், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் விசேட பிரதிநிதி எல்டோஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, மலையக மக்களின் 200 வருட பூர்த்தியையிட்டு நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சினால் பல்வேறு வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஓரங்கமாக முன்னெடுக்கப்பட்டுள்ள ‘நாம் -200’ திட்டமானது, மலையக மக்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையில் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 





வடமாகாண அபிவிருத்திக்கு முழு ஆதரவையும் வழங்குவேன் அமைச்சர் ஜீவன் தொண்டமான் உறுதி

October 6, 2023 8:30 am 0 comment

வடமாகாணத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பல்வேறு அபிவிருத்தித் திட்ட வேலைகளுக்காக தன்னால் இயன்ற முழுமையான ஆதரவை வழங்கவுள்ளதாக, நீர்வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் உறுதியளித்துள்ளார்.

வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸுக்கும் அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பில் கடந்த செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் ஜீவன் தொண்டமான் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, வடமாகாணத்தின் தற்போதைய நிலைமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் அவர்கள் இருவரும் விரிவாக கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

யாழ். விசேட நிருபர் - நன்றி தினகரன் 




KKS-நாகபட்டிணம் பயணிகள் கப்பல்சேவை ஜனவரி முதல்

-பரீட்சார்த்த முதலாவது கப்பல் இன்று வருகை

October 6, 2023 7:01 am 0 comment

நாகப்பட்டினத்திலிருந்து இலங்கைக்கு செல்வதற்கான பயணிகள் கப்பல் நேற்று வியாழக்கிழமை நாகை துறைமுகத்தை வந்தடைந்தது.

பரீட்சார்த்தமாக இன்று வெள்ளிக்கிழமை நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படுகிறது.

இதற்காக கடந்த மாதம் அமைச்சர் எ.வ.வேலு, நாகை துறைமுகத்தை ஆழப்படுத்தி தூர்வாரும் பணியை தொடக்கி வைத்தார்.

நாகப்பட்டினம் துறைமுகத்தை நவீனப்படுத்த மத்திய அரசு வழங்கிய 03 கோடி ரூபா நிதியில், நாகப்பட்டினம் துறைமுகத்தை ஆழப்படுத்தி நவீனப்படுத்தும் முயற்சியில் தமிழ்நாடு அரசு இறங்கியது. இதை தொடர்ந்து நாகப்பட்டினம் துறைமுகத்தில் குடியுரிமை பெறுவது, மருத்துவ பரிசோதனை செய்வது, பயணிகள் கொண்டு வரும் உடமைகளை பாதுகாப்பாக வைப்பது மற்றும் ஆய்வு செய்வதெற்கென தனித்தனியாக அறைகள் கட்டப்பட்டுள்ளன. பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டதும் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து 02 கப்பல்கள் இலங்கைக்கு சென்று வரும். இதில் ஒரு கப்பல், நாகப்பட்டினத்திலிருந்து காலை 10 மணிக்கு காங்கேசன் துறைமுகம் நோக்கி செல்லும். எதிர்த் திசையில் இலங்கையிலிருந்து மாலை 05 மணிக்கு நாகப்பட்டினம் நோக்கி கப்பல் புறப்படும்.

திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது - நன்றி தினகரன் 


No comments: