கட்டுரை - தமிழ் பொது வேட்பாளர் யோசனை

 September 30, 2023

இவ்வாறானதொரு யோசனையை ஈழநாடு ஏற்கனவே வெளியிட்டிருந்தது.
இது தொடர்பில் கூட்டுத் தீர்மானமொன்றுக்கு தமிழ்த் தேசிய கட்சிகள் வரவேண்டும்.
பிரதான கட்சியான தமிழரசு கட்சி இந்த யோசனை தொடர்பில் ஆராய வேண்டும்.
தேர்தலில் போட்டியிடுவது என்பதுகூட இரண்டாவது விடயமே – ஆனால், முதலில் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் கூட்டுத் தீர்மானமொன்றுக்கு வரவேண்டும்.
பகிஷ்கரிப்பு கோரிக்கை தவறானது.
அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான ஆண்டு.
இந்தத் தேர்தல் இலங்கை அரசியலில் தீர்மானகரமான ஒன்றாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
2020இல் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலானது சிங்கள தேசியவாதத்தின் எழுச்சியாக அமைந்தது.
கோட்டாபய ராஜபக்ஷ சிங்கள வாக்கில் வெற்றிபெற்று தன்னையொரு சிங்கள – பௌத்த தலைவனாக பிரகடனம் செய்திருந்தார்.
ஆனால், பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஏற்பட்ட அதிருப்திகள் பிறிதோர் எழுச்சிக்கு வழிவகுத்தது.
ஒரு சிங்கள எழுச்சியால் அதிகாரத்துக்கு வந்த கோட்டாபய ராஜபக்ஷ பிறிதொரு சிங்கள எழுச்சியால் அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டார்.
ஆனால், சிங்கள தேசியவாத தரப்புகள் முற்றிலும் செயலிழந்துவிட்டதாக கருதினால் அது தவறானது.
இந்த நெருக்கடியை சரி செய்யும், ஒரு மீட்பராகவே ரணில் விக்கிரமசிங்கவின் பிரவேசம் நிகழ்ந்தது.
தென்னிலங்கையின் அரசியல் அரங்கிலிருந்து முற்றிலும் விளிம்பு நிலைக்கு சென்றிருந்த – ஒப்பீட்டடிப்படையில் பலவீனத்தின் உச்சத்திலிருந்தவரே ரணில்
விக்கிரமசிங்க – ஆனால், எவருமே எதிர்பாராத வகையில் மீண்டும் ஜனாதிபதியானார்.
இது ரணிலின் ஆட்டத்திற்கான இறுதி சந்தர்ப்பம்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பான சூழல் ரணிலின் பக்கம் உண்டு.
ரணில் ஒரு பொது வேட்பாளராக வரக்கூடுமென்னும் பார்வையுண்டு.
அதேவேளை ரணிலை எதிர்த்து போட்டியிடக் கூடிய இன்னொருவர், யாரென்பதும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
ஒரு பலவீனமான வேட்பாளரால் ரணிலை தோற்கடிக்க முடியாது.
அதேவேளை ரணிலின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு இன்னும் சிலரும் வேட்பாளராக களமிறங்கக் கூடிய சூழலும் காணப்படுகின்றது.
இந்த நிலைமையை தமிழர் தரப்புகள் எவ்வாறு கையாளப்போகின்றன? இந்தக் கேள்விக்கான பதில்தான் தமிழ் பொதுவேட்பாளர் யோசனை.
இதனையோர் அரசியல் வேலைத்திட்டமாக மாற்றவேண்டுமாயின் அனைத்து தமிழ் தேசிய தரப்புகளும் முதலில் இது தொடர்பில் உரையாடுவதற்கு தயாராக வேண்டும்.
மக்கள் மத்தியில் இதனை ஒரு பொதுக் கருத்தாக மாற்ற வேண்டும்.
ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தலாம் என்னும் யோசனைகூட, தென்னிலங்கையை திரும்பிப் பார்க்க வைக்கும்.
ஏனெனில், இன்றைய சூழலில் தமிழ் மக்களின் வாக்குகள் வெற்றிக்கு அடிப்படையானது.
2015இல் ஏற்பட்டவாறான ஓர் அரசியல் நிலைமை மீளவும் ஏற்படப்போகின்றது.
சூழ்நிலையை சரியாக கையாள்வதுதான் அரசியல்.
அரசியலில் சரி பிழையென்பது ஒரு குறிப்பிட்ட காலத்தின் தீர்மானங்களிலேயே தங்கியிருக்கின்றது.
இந்த அடிப்படையில் சிந்தித்தால், ஜனாதிபதி தேர்தலை ஒரு பேரம் பேசும் ஆயுதமாக கைக்கொள்வதற்கான வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கின்றது.
இந்தக் காலத்தை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளப்போகின்றோம்?
நன்றி  ஈழநாடு No comments: