இலக்கியவாழ்வில் பொன்விழா காணும் தாமரைச்செல்வி – சந்திரா இரவீந்திரன்

 

“வணக்கம் இலண்டனால் 2023ம் ஆண்டு செப்டெம்பர் 17ம் திகதி ஏற்பாடு செய்யப்பட்ட எழுத்தாளர் தாமரைச்செல்வியின் பொன்விழா மெய்நிகர் நிகழ்வில் எழுத்தாளர் சந்திரா இரவீந்திரன் ஆற்றிய பொன்விழாப் பேருரையின் முழுவடிவம்.”

 

இன்றைய தினம், தனது இலக்கிய வாழ்வில் பொன்விழாக்காணும்; இன்றைய விழா நாயகியான தாமரைச்செல்வி அவர்களுக்கும்,
மற்றும், இணையவழியாக இங்கே கூடியிருக்கும் அனைத்துப் பார்வையாளர்களுக்கும்,
மேலும் இங்கே தாமரைச்செல்வி அவர்களின் இலக்கியப்பணிக்கான இந்தப் பொன்விழாவில் வாழ்த்துரை வழங்க வந்திருக்கும்-
எண்பதுகளிலிருந்து எனக்கு அறிமுகமான, நான் அன்போடு ‘கோகிலாக்கா’ என்று அழைக்கும் எழுத்தாளர்- பேச்சாளர்- நாடகக்கலைஞர் எனப் பல்துறைகளில் மிளிரும் கோகிலா மகேந்திரன் அவர்களுக்கும்,
முன்னாள் வீரகேசரி நாளிதழின் துணையாசிரியராகப் பணியாற்றியவரும், ரஸஞானி என்ற பெயரில் வீரகேசரி இதழில் தொடர்ந்து எழுதி வந்தவருமான….எழுத்தாளரும் ஊடகவியலாளருமான லெ.முருகபூபதி அவர்களுக்கும்,
மற்றும், தமிழியல்துறை பேராசிரியரும். பதிப்பாசிரியரும், கட்டுரையாளரும், திறனாய்வாளரும், தமிழ் இலக்கியப்பரப்பில் காத்திரமான விமர்சகராகவும் இருக்கும் பெருமதிப்பிற்குரிய பேராசிரியர் அ.ராமசாமி அவர்களுக்கும்,
மற்றும், வன்னியில் ஒரு பேராட்சி இருந்த காலத்தில், பலராலும் பேசப்பட்டு வந்த ‘வெளிச்சம்’ என்ற சஞ்சிகையின் ஆசிரியராகவும், தமிழீழத்தொலைக்காட்சியின் பணிப்பாளராகவும் இயங்கிய, பதின்னான்கு கவிதை நூல்களின் ஆசிரியரும், எழுத்தாளரும், கவிதைகளிற்காகப் பல விருதுகளைப் பெற்றவருமான- பேரன்புக்குரிய கவிஞர் கருணாகரன் அவர்களுக்கும்,
அண்மையில் ‘திரைகடல் தந்த திரவியம்’ என்ற பன்னாட்டு சிறுகதைத்தொகுப்பு நூலொன்றை வெளிக்கொண்டுவந்து, எமது ஞாபகத்தில் பதிந்துபோன முனைவர் எம்.எஸ்.ஸ்ரீலக்ஸ்மி அவர்களுக்கும்,
ஈழத்தின் அரங்கத்துறையில் முக்கிய பங்காற்றியவரும், நாடக ஆசிரியரும், சிறுகதை எழுத்தாளருமான மதிப்பிற்குரிய பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களுக்கும்,
மற்றும் மதிப்பிற்குரிய கலாநிதி க. ஸ்ரீகணேசன் அவர்களுக்கும்,
விமர்சகரும், கவிஞருமான… நட்புக்குரிய மாதவி சிவலீலன் அவர்களுக்கும்,
எண்பதுகளிலே ஈழத்துப் பத்திரிகைகள், மற்றும் வானொலி மெல்லிசைப்பாடல்களில் தன்னை முத்திரை பதித்துக்கொண்டவரும், கவிஞரும், எழுத்தாளருமான மண்டூர் அசோகா அவர்களுக்கும்,
மேலும், உலகமெல்லாம் பரந்து வாழும் திறமை மிக்க ஈழத்தமிழ் படைப்பாளிகளை இனம்கண்டு, அவர்களின் படைப்புகளையெல்லாம் உலகத்தமிழ் இலக்கியப்பரப்பில் அறிமுகப்படுத்தும், அரிய பணிகளை 40 ஆண்டுகளுக்கும் மேலாக செய்துகொண்டிருப்பவரும், ‘தமிழியல்’; வெளியீடுகள், ‘ருவான்’ வெளியீடுகள் எனத் தரம்மிக்க நூல்களைப் பதிப்பித்து வந்தவரும், ஈழத்தமிழ் இலக்கியப்பரப்பிற்கும்- தமிழ்நாட்டு இலக்கியப்பரப்பிற்கும்; ஒருபெரும் பாலமாக இருந்து, அரிய பணிகளை செய்துகொண்டிருப்பவரும், நூல்களை ஆராதிப்பவருமான பெருமதிப்பிற்குரிய நூலவர் பத்மநாபஐயர் அவர்களுக்கும்,
என் நெஞ்சார்ந்த வணக்கங்கள்!

தாமரைச்செல்வி அவர்களுடைய இந்த இலக்கியப்பொன்விழாவிலே, இத்தனை- ஆளுமைகளும் ஒன்றாகக் கூடியிருப்பதே, ஒரு பெரும் வரம் என்றுதான் சொல்லவேண்டும்.
ஒவ்வொருவரும் உலகின் வெவ்வேறு பாகங்களில், வெவ்வேறு நாடுகளில் வாழுபவர்கள். இவர்களனைவரும்… குறிப்பிட்ட இந்த நிகழ்விற்கான இணையமேடையிலே ஒன்றாக அமர்ந்திருப்பது என்பதே தாமரைச்செல்வி அவர்களுக்குக் கிடைத்த பல விருதுகளில் இன்னுமொரு சிறப்பு விருது என்று தான் நான் நினைக்கிறேன்.

தாமரைச்செல்வி – என்ற பெயர் இலக்கிய உலகில் எனக்கு முதன் முதலில் அறிமுகமானது.. எண்பதுகளில்!
வீரகேசரிப் பத்திரிகைகளில் வரும் அவரது சிறுகதைகளினூடாகத் தான் நான் அவரது சிறுகதைகளை முதலில் வாசிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. நான் கல்லூரியில் அப்பொழுது ஏ.லெவல் வகுப்பில் கல்வி கற்றுக்கொண்டிருந்த நேரம் அது. பாடப்புத்தகங்களை விட, அப்போது.. நாவல்களும், சிறுகதைகளும், பத்திரிகைகளும். சஞ்சிகைகளும் தான் என் வாசிப்புத் தாகத்திற்கு தீனி போட்டுக்கொண்டிருந்தன. நான் எழுத ஆரம்பித்ததும் அப்போது தான். அந்த எண்பதுகளின் ஆரம்பத்தில் தான் தாமரைச்செல்வி அவர்களுடைய பல படைப்புகளை வாசிக்கும் சந்தர்ப்பமும் எனக்குக் கிடைத்தது. ஒருகட்டத்தில் தாமரைச்செல்வியின் சிறுகதை ஒன்று எங்காவது பிரசுரமாகியிருக்கிறதென்றால் அதனை ஆர்வத்துடன் தேடி வாசிக்கும் மனோநிலையும் உருவாகியிருந்தது. அப்பொழுது யாழ்ப்பாணத்திலே வந்துகொண்டிருந்த முக்கியமான இதழ்களான மல்லிகை, சிரித்திரன், சுடர், வெளிச்சம், நாற்று, ஞானம், மாணிக்கம், அமிர்தகங்கை, களம். கலாவல்லி, தாரகை, விளக்கு, ஆதாரம், கிருதயுகம், பெண்ணின்குரல், தாயகம், வளையோசை, மாருதம், ஜீவநதி, நுடபம், யாழ்மதி….போன்ற சஞ்சிகைகள் தவிர, வேறும் பல சிற்றிதழ்கள் உட்பட, வாராவாரம் வெளிவரும் பத்திரிகைகளான வீரகேசரி, தினகரன், தினக்குரல், சிந்தாமணி, ஈழநாடு, ஈழமுரசு போன்ற பத்திரிகைகளிலும் அவரது சிறுகதைகள் பிரசுரமாகிக்கொண்டிருந்தன.

ஆனால் ஈழத்துப்பத்திரிகைகளுக்கும் அப்பால், கடல் கடந்து தமிழ்நாட்டிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த ஆனந்தவிகடன், குங்குமம், மங்கை… போன்ற இதழ்களிலும் இவரது சிறுகதைகள் வெளியாகியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்க ஒரு விடயம்;.
அந்தக் காலத்தில், உங்கள் பொழுதுபோக்கு என்னவென்று ஒருவரைக் கேட்டால் ‘புத்தகங்கள் வாசிப்பது, வானொலி கேட்பது’ என்று தான் அநேகம்; பேர் அப்போது சொல்வார்கள். ஏனென்றால் அப்போது அவை தவிர வேறு பொழுதுபோக்கு சாதனங்கள் சாதாரண மக்களிடையே பயன்பாட்டில் அதிகம் இருக்கவில்லை. திரைப்படங்கள் கூட எப்போவாவது தியேட்டருக்குப் போய் பார்க்கிற அளவில் தான் இருந்திருப்பார்கள். அதுவும் அதற்கான வசதிகளுள்ள சிலருக்கே அந்த சந்தர்ப்பமும் இருந்திருக்கிறது.
தொலைக்காட்சியோ, கைத்தொலைபேசியோ, கணணியோ அல்லது இன்று நாங்கள் இங்கே கூடியிருப்பது போன்ற இந்த இணையவழிப் பயன்பாடுகளோ பொதுசனம் மத்தியில் வந்து சேராத ஒரு காலம். இலங்கையில் தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டதே 1979ம் ஆண்டளவில்; தான்! இருந்தாலும், அது பொதுசனம் மத்தியில் முழுமையாகப் பயன்பாட்டிற்கு வருவதற்கு அதைவிட அதிக காலம் பிடித்திருந்தது என்று தான் சொல்லவேண்டும்; ஆனால் புத்தகங்கள், வானொலி ஆகியவற்றை நாம் பொழுதுபோக்கு ஊடகங்கள் என்று சொன்னாலும், 70பதுகள,; 80களிலெல்லாம் எங்களில் அநேகருக்கு- அதாவது ஈழத்தமிழ் சமூகத்தினருக்கு வானொலியோ, பத்திரிகைகளோ, வெறும் பொழுதுபோக்கு ஊடகங்களாக மட்டும் இருக்கவில்லை. அவை பலதுறைகள் சார்ந்து பலவழிகளில் எங்களை வளர்த்துக்கொள்வதற்கான வழிகாட்டும் ஊடகங்களாகவும் தான் இருந்திருக்கின்றன.

இதனை நானிங்கு சொல்வதற்கான முக்கிய காரணம் என்னவென்றால், தாமரைச்செல்வி அவர்கள் 1973ல் எழுத ஆரம்பித்ததே நான் குறிப்பிட்ட இந்த ஊடகங்களில் ஒன்றான இலங்கை வானொலி வாயிலாகத் தான்! அவருக்கு எழுதவேண்டுமென்ற ஆர்வத்தை, அவர் அறியாமலே இலங்கை வானொலி தான் முதலில் அவருக்கு ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கை வானொலி என்றால்- இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் தமிழ்சேவை நிகழ்ச்சிகளைத் தான் குறிப்பாகச் சொல்கிறேன்.
இலங்கை வானொலியில் அப்பொழுது ஒலிபரப்பாகிக்கொண்டிருந்த “பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரி, இசையும் கதையும், விமர்சகர் விருப்பம்…போன்ற நிகழ்ச்சிகள் அக்காலத்தில், திறமை மிக்க பலர் எழுத்துலகிற்குள் தைரியமாக வருவதற்குரிய ஒரு உந்துசக்தியை அவர்களுக்குக் கொடுத்திருக்கின்றன. எழுதவேண்டுமெனும் ஆர்வம், அவா உள்ளவர்களுக்கு, இலங்கை வானொலியின் குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் பெருந்தூண்டுகோலாக இருந்து, அவர்களுக்கான ஆரம்பக் களத்தை அமைத்துக்கொண்டிருக்கின்றன என்றால் அது மிகையில்லை. அதற்குக் காரணம், அந்த நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கிய தயாரிப்பாளர்கள் மட்டுமல்ல, அந்த நிகழ்ச்சிகளுக்குக் குரல் வழங்கிய பல கலைஞர்களும் தாமறியாமலே இத்தகைய புதிய படைப்பாளிகள் உருவாகக் காரணமாக இருந்திருக்கிறார்கள்.
அதற்குப் பின்னர் தான் 1974ல் தாமரைச்செல்வி அவர்களுடைய முதற் சிறுகதையான “ஒரு கோபுரம் சரிகிறது” என்ற சிறுகதை ‘வீரகேசரி’ பத்திரிகையிலே பிரசுரமாகிறது. இந்தச் சிறுகதை மூலம் தான் அவர் ஈழத்து இலக்கிய உலகிற்குள் பத்திரிகை வாயிலாக, முறையாகக் கால் பதித்திருக்கிறார் என்று சொல்லலாம்.

எழுத்தாளர் தாமரைச்செல்வி அவர்களின் சொந்தப்பெயர் ரதிதேவி. அவர் சில சிறுகதைகளை ‘ரதிதேவி சுப்ரமணியம் என்ற பெயரிலும் ஆரம்பகாலங்களில் எழுதியிருக்கிறார்.
ஆனால் தாமரைச்செல்வி என்ற புனைபெயரை அவர் எப்போது தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்? ஏன் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்? அதற்கு ஏதோவொரு காரணம் நிச்சயம் இருக்குமல்லவா?
அவருடைய படைப்புகளை, ‘தாமரைச்செல்வி’ என்ற பெயரில் பார்க்கிற போது அதுதான் அவருடைய சொந்தப்பெயர் என்று பலரும் நினைத்திருக்க்கூடும். நானும் ஆரம்பத்தில் அப்படித்தான் நினைத்திருந்தேன். ஆனால் அது புனைபெயர் என்று அறிந்த பிற்பாடு தான் அதுபற்றி அறியவேண்டுமென்;கி;ற ஆவல் எனக்குள் ஏற்பட்டது. நான் அவரிடம் அதுபற்றி அண்மையில் தான் கேட்டிருந்தேன். அதற்கு அவர் தந்த பதிலும்; சுவாரஸ்யமாகத்தான் இருந்தது.
சுhதாரணமாக- இலக்கிய உலகில் புனைபெயரில் அறியப்பட்ட பல படைப்பாளிகள் இருக்கிறார்கள்.
மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் புனைபெயர் தான் பாரதியார். அவருடைய பெயர் சுப்பிரமணியன்.
எழுத்தாளர் அசோகமித்ரன் – அது- அவரது புனைபெயர். அவருடைய சொந்தப்பெயர் ஜகதீச தியாகராஜன்.
எழுத்தாளர் அம்பை என்பது அவரது புனைபெயர். அவரது சொந்தப்பெயர் சி.எஸ்.லக்ஷ்மி.
புதுமைப்பித்தன என்பது புனைபெயர். அவரது சொந்தப்பெயர் விருத்தாசலம்.
எழுத்தாளர் பிரபஞ்சன் என்பது புனைபெயர். அவருடைய சொந்தப்பெயர் எஸ்.வைத்திலிங்கம்.
எழுத்தாளர் நாஞ்சில்நாடன் என்பது புனைபெயர். அவரின் சொந்தப்பெயர் – க.சுப்ரமணியம்.
எழுத்தாளர் செங்கையாழியான் என்பது புனைபெயர். அவரின் சொந்தப்பெயர் க.குணராசா.
எழுத்தாளர் தெணியான் என்பது புனைபெயர். அவரது சொந்தப்பெயர் கந்தையா நடேசு.
எழுத்தாளர் குந்தவை என்பது புனைபெயர். அவரது சொந்தப்பெயர்- சடாட்சரதேவி.
எழுத்தாளர் குறமகள் என்பது அவரின் புனைபெயர். அவரது சொந்தப்பெயர் – வள்ளிநாயகி ராமலிங்கம்.
எழுத்தாளர் யாழ்நங்கை புனைபெயர். அவரது சொந்தப்பெயர்- அன்லக்ஷ்மி ராசதுரை.

இப்படி மேலும் பல படைப்பாளிகள் புனைபெயர்களில்; எழுதியிருக்கிறார்கள். அவர்கள் அதே புனைபெயர்களிலேயே அறிமுகமாகி படைப்புகள் ரீதியாக வெற்றிகள் பலவும் கண்டிருக்கிறார்கள். இந்த வரிசையில் தான் தாமரைச்செல்வி அவர்களும் இதே பெயரில் இலக்கிய உலகில் அறிமுகமாகி, இற்றைவரை தனக்கான ஒரு தனியிடத்தை பிடித்து, நிலையாகப் பயணித்துக்கொண்டிருக்கிறார்.
தாமரைச்செல்வி அவர்கள் யாழ்ப்பாணத்தில் ‘ஹின்டு லேடீஸ் கொலிஜ்ஜில் படித்துக்கொண்டிருந்த போது…. ‘பிரெப்’ படிக்கும் போது என்று சொன்னார். அப்போது ‘பிரெப்’ என்று சொல்வது ‘ஓலெவல்’ (பத்தாம் வகுப்பு) வகுப்பிற்கு நுழைவதற்கு முதல் உள்ள வகுப்பு என்று அறிகிறேன். அது ஒன்பதாம் வகுப்பாக இருக்கலாம். அப்படித்தான் நினைக்கிறேன்.

அவர் ‘பிரெப்’ படிக்கும் போது 69 அல்லது 70ம் ஆண்டாக இருந்திருக்குமென்று நினைக்கிறேன். அப்போது அவர் கற்றுக்கொண்டிருந்த பாடசாலை நூலகத்திலிருந்து “நந்தவனம்” என்றொரு நாவலை எடுத்துச்சென்று வாசித்திருக்கிறார். அவர் அந்த நாவலை பாடசாலை நூலகத்திலிருந்து எடுத்துச் செல்வதை சொல்லும் போது அதுவே ஒரு கதையாகத் தான் இருக்கும். ஒன்பதாம் வகுப்பில் பாடசாலை நூலகத்திலிருந்து நாவல்களை எடுத்துச்சென்று வாசிப்பதற்கு அனுமதி இருக்காது. அது வழமை. அப்படியொரு சூழலில் தான் அந்த நூலை எடுத்துச்சென்று அவர் வாசித்திருக்கிறார். அந்த நாவலில் வரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தின் பெயர் தான் “தாமரைச்செல்வி”.
அவருக்கு அந்தப் பாத்திரம் ஏனோ பிடித்திருக்கிறது. அதனால் அந்த நாவலை வாசிக்கும் போதே அவர் நினைத்துவிட்டார்; – தான் கதை எழுதுவதென்றால் “தாமரைச்செல்வி” என்ற புனைபெயரில் தான் எழுதவேண்டுமென்று. அப்பொழுது அவருக்கு பதினைந்து அல்லது பதினாறு வயதாகத் தான் இருந்திருக்கும். பதினைந்து அல்லது பதினாறு என்பது ஒரு குழப்பமான மனநிலையை ஏற்படுத்தும் முக்கியமான பருவம்! ஒரு சிறுவன் என்றாலும் சரி, அல்லது ஒரு சிறுமி என்றாலும்; சரி… அவரவர் வாழ்க்கை முறை, குடும்பப்பின்னணி, சுற்றுச்சூழல்… இவற்றைப் பொறுத்து, அவரவர் சிந்தனைக்கேற்ப, திசைமாறிப்போகிற தருணங்கள் அந்த வயதுகளில் தான் ஏற்படுகிறது! தனக்குரிய சரியான பாதையெது என்று தீர்மானிக்க முடியாத ஒருவித…குழப்பமான மனநிலைகள் ஏற்படுகிற வயசு அது! மனம் அப்போது யாருடைய சொல்லையும் இலகுவாகக் கேட்காது.; அந்த வயதுகளில் பலர், தமக்குப் பிடித்தமான விடயங்களில் துணிச்சலோடு களமிறங்கி விடுவார்கள். அதில் வெற்றிபெற்று ராஜநடை போடுகிறவர்களும் உண்டு. தோல்வி கண்டு தடுமாறி சிதறிப்போனவர்களும் இருக்கிறார்கள்.
தாமரைச்செல்வி அவர்கள் இதில் முதல் ரகம் என்று சொல்லலாம்- தான் தேர்ந்தெடுத்த, தனக்குப் பிடித்தமான அந்த எழுத்துத்துறையில் வெற்றி பெற்று, தனக்கான ஒரு நிலையான இடத்தை இலக்கியஉலகில் பிடித்துக்கொண்டிருப்பவர் அவர்!

தாமரைச்செல்வி அவர்கள் தனது படைப்புகளினூடாக இன்று பல்மொழி இலக்கியப்பரப்பிலும் அறியப்படுகிறாரென்றால், அதற்கு முக்கிய காரணம் அவரின் வாழ்வனுபவங்களும், அவற்றைத் தனது எழுத்தினூடாக வெற்றிகரமாக வெளிக்கொண்டு வந்திருக்கும் அவரது எழுத்தாளுமையும் தான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது!
பார்ப்பவர் கண்களுக்கு அவரது அமைதியான உருவமும், மென்மையான பேச்சும், சாந்தமான சுபாவமும், அழகான புன்னகையும் மட்டும் தான் தெரியும். அதற்கும் அப்பால் அவரிடமிருக்குமந்தத் தன்னம்பிக்கையும், பொறுமையும், சக மனிதர்கள் மீதான நேசிப்பும்;, சமூகத்தின் மீதான இரக்கமும், கலைகளின் மீதான பற்றுதலும், மனஉறுதியும், செயற்திறனும் அவருக்குள் எந்தளவிற்கு இருக்கிறது என்பதனை அவரின் படைப்புகள் எமக்குத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகின்றன!
அவரின் சொந்த மண்ணான, அவர் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த, அந்தக் குமரபுரம் என்ற ஊருக்கு- அவரின் படைப்புகளிற்கான ஏராளம் கருக்களையும், கருமாந்தர்களையும் அள்ளிக்கொடுத்த பெருமை இருக்கிறது. அந்த ஊரும், அந்த வாழ்வும் அவரின் படைப்புகளின் ஆழத்தைப் பெருக்கி, அவற்றை உச்சத்திற்குக் கொண்டு செல்வதற்கு, அவரறியாமலே உதவியிருக்கின்றன என்று சொல்லலாம். இவற்றின் வழியாக, அவரிடம் இருந்த, அந்தத் தேடலும், அவர் சார்ந்த சமூகத்தை நோக்கிய, அவரது நுட்பமான கவனிப்பும், இயல்பாகவே அவருக்கிருக்கும் பொறுமையும், நிதானமும், துன்பப்படும் மனிதர்கள் மீதான இரக்கஉணர்வும், அதனோடு சேர்ந்த அவரது படைப்பாற்றலும்… இவை தான் அவரின் படைப்புகளுக்கான வெற்றியின் அடிநாதங்களாகும். அவரின் ஒவ்வொரு சிறுகதைகளையும். ஒவ்வொரு நாவiயும் எடுத்து நுட்பமாகக் கவனி;த்தால்; இவற்றை நாம் உணர்ந்து கொள்ளலாம்.
இதுவரையில் 200ற்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் நாவல்களையும் அவர் எழுதியிருக்கிறார். அவை பல்வேறு பத்திரிகைகள், சஞ்சிகைகளில் பிரசுரமாகியிருக்கின்றன.
இவரின் பல சிறுகதைகள் சிறுகதைத் தொகுப்புகளாக வெளிவந்திருக்கின்றன.
அவற்றில் முதற்சிறுகதைத் தொகுப்பு “ஒரு மழைக்கால இரவு”
இந்நூல் 1998ல் தேசிய கலைஇலக்கியப் பேரவையினால் வெளியிடப்பட்டிருக்கிறது-
‘ஒரு மழைக்கால இரவு’ (சிறுகதைத் தொகுப்பு).

இது இவருடைய முதலாவது சிறுகதைத் தொகுப்பு. இந்தத் தொகுப்பிலே… 1983ம் ஆண்டிலிருந்து….97ம் ஆண்டுவரை உதிரிகளாக பத்திரிகைகள் சஞ்சிகைகளில் வெளிவந்த பெரும்பாலான அவருடைய சிறுகதைகள் சேர்க்கப்பட்டிருக்;கின்றன.
1983ற்கும் 1997ற்கும் இடைப்பட்ட காலத்தில், அவரால் எழுதப்பட்டு வெளியான கதைகள் இந்தத் தொகுப்பிலே இடம்பெற்றிருக்கிறதென்றால், இந்தத் தொகுப்பு ஈழத்து இலக்கியப் படைப்புலகில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நூலாக இருக்குமென்பதை நாம் தெளிவாக உணர்ந்துகொள்ள முடியும்.

ஈழத்தில், தமிழ் மக்களுக்கெதிரான பாரிய இனக்கலவரம் ஒன்று நடைபெற்றது 1983ம் ஆண்டு யூலை மாதம்! அதனை இந்த உலகமே அறிந்திருக்கும். அரசின் ஆதரவோடு சிங்களக்காடையர்களால் நடாத்தபட்ட அந்தக் கொடிய இனக்கலவரத்திற்கு முன்னரும் இரண்டு இனக்கலவரங்கள் நடந்தன.
அவை 1957, 1977ம் ஆண்டுக் காலப்பகுதிகளில் தென்னிலங்கையில் வாழ்ந்துகொண்டிருந்த தமிழர்களுக்கெதிரான கலவரங்கள்! அப்போதும் தமிழர்கள் பல இன்னல்களை உயிர் இழப்புகளை சந்தித்திருந்தார்கள்;.
இருந்தாலும், பாரிய உயிரிழப்புகளையும், பொருள் அழிவுகளையும் ஒன்றாக…. தமிழ் மக்கள் சந்தித்துக்கொண்ட மிகப்பெரிய நாடளாவிய ரீதியில் நிகழ்ந்த இனக்கலவரம் என்று சொன்னால், அது 1983ல் தமிழர்களுக்கெதிராக நடைபெற்ற கலவரம்! அதனால் தான் 1983 யூலை மாதத்தை ‘கறுப்பு யூலை’ எனப் பெயரிட்டு இலங்கைத் தமிழ்மக்கள் இன்றும் அந்த நாட்களை துக்க நாட்களாக அனுஷ்டித்து வருகிறார்கள்.
அதனைத் தொடர்ந்து தான் – தமிழ் இளைஞர்கள் எமது உரிமைகளுக்காகவும், எமக்கான சுதந்திரம் எமக்கு வேண்டுமெனக் கேட்டு, எமது விடுதலைக்காக ஆயதமேந்திப் போராடத் தொடங்கினார்கள்.
ஈழத்தமிழர்களின் அழிக்க முடியாத, வடுக்கள் நிறைந்த, துயரங்கள் வலிகள் மிக்க, ஒரு வீர வரலாறு இந்தப் போராட்டங்களின் பின்னால் இருக்கிறது! தமிழர்களின் ஈழம் என்ற நாடு எப்படி இலங்கை என்றும், பின்னர் அது லங்கா என்றும் மாறியது என்பதற்கும் வரலாற்றில் நிறைய கதைகளும் சூட்சுமங்களும்; இருக்கின்றன.
அது தொடர்பாக ஒரேயொரு உதாரணத்தை ஞாபகப்படுத்தி, இங்கு குறிப்பிடலாமென்று நினைக்கிறேன்.
சங்க இலக்கியங்களில் ஒன்றான ‘பட்டினப்பாலை’ யில் ஈழம் தொடர்பாக ஒரு பாடல் வருகிறது…..
“தென்கடல்; முத்தும் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத்து உணவும் கானகத்து ஆக்கமும்”
என்று சில வரிகள் வரும்.
அவை மட்டுமல்ல சங்க இலக்கியங்களில் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை போன்றவற்றில் ஈழத்துப்பூதந்தேவனார் எனும் புலவர் ஏழு பாடல்கள் பாடியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
அதுபோல், 7ம் நூற்றாண்டு, 8ம் நூற்றாண்டுகளில் திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகியோர் திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் சிவன்ஆலயங்களை நோக்கி ‘ஈழத்துப் பதிகங்கள்’ பாடியிருக்கிறார்கள் என்று நாயன்மார்; திருத்தல வரலாறுகளும் எமக்குச் சான்று பகர்கின்றன. அங்கே ‘லங்காப்; பதிகங்கள் பாடியிருக்கின்றார்’ என்று குறிப்பிடப்படவில்லை.

எனவே இலங்கை விடுதலைப் போராட்டம், அல்லது வெறுமனே தமிழர் விடுதலைப்போராட்டம் என்று சொல்லாமல், இந்தப் போராட்;டம் ‘ஈழ விடுதலைப் போராட்டம்’ என்று உருவானது ஏன் என்பதை இங்கு அனைவராலும் ஓரளவு விளங்கிக்கொள்ளக் கூடியதாக இருக்குமென்று நம்புகிறேன். இதற்கான வரலாற்றுச் சான்றுகள் சரித்திரப்பதிவுகள் நிறையவே இருக்கின்றன.
இந்தப் ஈழவிடுதலைப் போராட்டங்கள் ஆரம்பித்ததன் பின்னரான வடக்குக் கிழக்கு வாழ்; தமிழ்மக்களின் வாழ்வு என்பது சாதாரண வாழ்வு அல்ல. அந்தப் போர்க்கால வாழ்வு என்பது ஒரு வரியில் சொல்லிவிட்டுப் போகக்கூடிய அல்லது ஒரு சம்பவத்தை சொல்லிவிட்டுப் போகக்கூடிய ஒரு கதை அல்ல. அது ஒரு தனி வரலாறு! 1983இலிருந்து 2009 ம் ஆண்டு வரையான ஈழத்தமிழ் மக்களின் வாழ்வு என்பது வீரமும், துயரமும், வலிகளும் நிறைந்த காலத்தால் அழித்துவிட முடியாத ஒரு வரலாறு!
தாமரைச்செல்வி அவர்கள் இந்த போராட்டக்;காலத்தில் ஈழமண்ணில், தனது சொந்த ஊரான பரந்தன், குமரபுரம் என்ற கிராமத்திலே வாழ்ந்துகொண்டிருந்த ஒரு பெண்! இவரது படைப்புகளை வாசிக்கும் முன்னர் நாம் தெரிந்துகொண்டிருக்க வேண்டிய முக்கியமான விசயம் அது!
அவர் வாழ்ந்து கொண்டிருந்த அந்தக் காலத்தின் ஒவ்வொரு மணித்துளிகளையும் சுயமாகத் தரிசித்தவர். அவர் தனது ஐம்புலன்களாலும் உள்வாங்கிய விடயங்களை, உணர்வுபூர்வமாக எழுத்தில் வடித்துவிடுகிற ஆற்றலும், சக்தியும், திறமையும்; அவரின் எழுதுகோளுக்கு இருந்திருக்கிறது. எனவே அவை காத்திரமான சிறந்த படைப்புகளாக உருவாகியிருக்கின்றன.

அந்த வகையில், ‘ஒரு மழைக்கால இரவு’ என்ற அவருடைய முதலாவது சிறுகதைத் தொகுப்பு, அவர் வாழ்ந்துகொண்டிருந்த அந்தக் காலத்தை, அவரது வாழ்க்கைச் சூழலை, ஒரு சமூகத்தின் சந்தோசங்களை, துயரங்களை, கஷ்டங்களை அடையாளம் காட்டும் படைப்புகளாக அமைந்திருக்கின்றன என்றால் அது மிகையில்லை.
அந்தத் தொகுப்பில் தாமரைச்செல்வி அவர்கள் தனது என்னுரை என்ற பகுதியில் ஒரு முக்கியமான விடயத்தைச் சொல்லியிருப்பார். அதை நான் இங்கு குறிப்பிட்டேயாகவேண்டும். அவர் கூறியிருப்பது இது தான்:-
“எமது மண்ணின் நிகழ்வுகளை ஆவணப்படுத்துவது காலத்தின் தேவையாகும்.
அப்போது தான் இந்த மக்களின் உண்மையான பிரச்சனைகளையும், பல வருடங்களாகவே பல நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வாழும் மக்களின் உணர்வுகளையும், மற்றைய மக்களும் நாளைய சந்ததியினரும் அறிந்து கொள்ளமுடியும். சொந்த மண்ணிலேயே இருப்பிடம் இழந்து, அகதியாகி, குண்டுகளின் அதிர்வும், கந்தகநெடியும் ஒருபுறம் துரத்த, உயிருக்கு உத்தரவாதமற்ற இந்த நிலையில், பதுங்கு குழியின் பக்கத்துணையுடன் வாழ்கின்ற மக்களின் நடுவே, நானும் ஒருத்தியாக வாழ்ந்துகொண்டு தான் இச்சிறுகதைத் தொகுதியை தொகுக்க முனைகிறேன்…” இது தாமரைச்செல்வி அவர்களின் அந்த நூலில், என்னுரையில் வரும் ஒரு முக்கியமான பகுதி.

பார்த்தீர்களானால், அந்தத் தொகுப்பில் அவருடைய ‘என்னுரையே’ அந்த…காலத்தைக் கட்டியம் கூறி நிற்கிறது. அப்படியானால் உள்ளேயிருக்கும் அவரது சிறுகதைகள், அக்காலத்தில் வாழ்ந்துகொண்டிருந்த தமிழ்மக்களின், அந்தப் போர்க்கால வாழ்வை, எந்தளவு ஆழத்திற்குச் சென்று உள்வாங்கி, எழுத்துக்களாக அவற்றை வெளிக்கொண்டு வந்திருக்கும் என்பதை நாங்கள் உணர்ந்து கொள்ள முடியும்.

1998ல் வந்த அவரது முதற் சிறுகதைத் தொகுப்பைத்; தொடர்ந்து, 2002ல் ‘அழுவதற்கு நேரமில்லை’ என்ற அவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு வெளிவந்திருக்கிறது.
2017ல் ‘வன்னியாச்சி’ என்ற அவரது மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு வந்திருக்கிறது.
எனவே, இதுவரையில் அவரது மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும், தொகுப்பில் இடம்பெறாதவை எல்லாம் சேர்த்து, இதுவரையில் 200ற்கும் மேற்பட்ட சிறுகதைகளை அவர் எழுதியிருக்கிறார் என்பதும் இங்கே கவனத்தில் கொள்ளத்தக்கது.
அவருடைய ; பல படைப்புகள், போர்க்காலங்களில் அழிந்து, எரிந்து இல்லாமல் போய்விட்ட சம்பவங்கள் பல அவர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். இது ஈழத்தில் பல படைப்பாளிகளுக்கும் ஏற்பட்டிருக்கும் மிகத்துயரமான அனுபவம் தான்! தமிழ்மக்களுக்கு இதுவொன்றும் புதிய அனுபவம் அல்ல. குறிப்பாக, 1981ல், தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாக இருந்த, தமிழ் வரலாற்று ஆவணங்கள், நூல்கள் என தமிழர்களின் பொக்கிஷமாகத் திகழ்ந்த, யாழ் நூலகத்தையே சிங்களப் பொலீஸ், இராணுவக் காடையர்கள் எரித்துச் சாம்பலாக்கிய கொடிய நிகழ்வுகள் எமது வரலாற்றில் அழித்துவிட முடியாதவை! அதனை யாரும் மறந்து விடமுடியாது. அழிந்து போன ஈழத்தமிழ் படைப்புகள் என்பது எமது நினைவுகளில் அழிக்கமுடியாதவை!

1. மேலும், தாமரைச்செல்வி அவர்களுடைய படைப்புகளில்…
குறுநாவல் வடிவத்தில் ‘வேள்வித் தீ’ என்ற நூல், 1994ல் வெளிவந்திருக்கிறது.
2. இவற்றைத் தவிர அவருடைய பல நாவல்கள் இதுவரையில் வெளிவந்திருக்கின்றன.
1977ல் ‘சுமைகள்’ என்ற நாவலும்
1992ல் ‘விண்ணில் அல்ல விடிவெள்ளி’
1993ல் ‘தாகம்’ என்ற நாவல்
2003ல் ‘வீதியெல்லாம் தோரணங்கள்’ என்ற நாவல்
2004ல் ‘பச்சை வயல் கனவு’
2019ல் ‘உயிர் வாசம்’
என தாமரைச்செல்வியின் ஆறு நாவல்கள் இதுவரையில் வெளிவந்திருக்கின்றன.
3. இவற்றில் அவரது முதலாவது நாவல்…. அவரது 23வது வயதில் நூலாக வெளிவந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. அண்மையில் வெளியான ‘உயிர் வாசம்’ என்ற நாவல், அவரது 66வது வயதில் நூலாக வெளிவந்திருக்கிறது. இந்த ‘உயிர்வாசம்’ நாவலை அவர் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்து வந்தபின்னர் எழுதியிருக்கிறார் என்பதும் இங்கே கவனத்தி;ல் கொள்ளத்தக்கது.
இந்த நாவலை எழுதும் போது…. அவருக்கிருந்த சவால்களை அவர் எப்படிக் கடந்து வந்தார்; என்பதை ஒருதடவை என்னோடு பேசும்போது சொல்லக் கேட்டிருக்கிறேன்.
வன்னி மண்ணின் சிற்றூர் ஒன்றில் வாழ்ந்துகொண்டிருந்த ஒரு சாதாரண பெண்படைப்பாளிக்கு, திடீரென்று அவுஸ்திரேலிய நாட்டிற்குக் குடிபெயர்ந்து வந்து, அந்த மண்ணின் களத்தைப் பகைப்புலமாக்கி, ஒரு நாவலை எழுதுவதென்பது இலேசான காரியமல்ல. முற்றிலும் புதிய ஒரு நிலம், புதிய மனிதர்கள், புதிய கலாச்சாரம், புதிய மொழி…என முன்னெப்போதும் அனுபவத்தில் இருந்திராத, புதியதொரு கதைக்களத்தில் பாத்திரங்களை நடமாடச்செய்வது என்பது சாதாரண விசயமில்லை. அது ஒரு பெரிய சவால்! இந்தச் சவாலில் மிகுந்த கவனத்துடன் களமிறங்கி, அவர் வெற்றி பெற்றிருக்கிறார் என்றால் அது பாராட்டியே ஆகவேண்டிய ஒரு வெற்றி.
மேலைநாட்டுக் கலாச்சாரத்தை, மனிதர்களை, அந்த மண்ணை பகைப்புலமாகக் கொண்ட பல கதைகளை ஈழத்து எழுத்தாளர்களில் சிலர் ஏற்கனவே எழுதியிருக்கிறார்கள். அது மறுப்பதிற்கில்லை. உதாரணமாக, ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம், அ.முத்துலிங்கம் ஆகியோர் அந்நியநாட்டு வாழ்வியலை, கலாச்சாரத்தை, அனுபவங்களை மையமாக வைத்து, பல படைப்புகளை எமக்குத் தந்திருக்கிறார்கள்.; அவற்றில் பல அவர்களது சுய தரிசனங்களின் பிரதிபலிப்பாக இருப்பதையும் நாம் காணலாம்.
இங்கு தாமரைச்செல்வியின் ‘உயிர்வாசம்’ நாவல் என்பது ஈழத்தில், வன்னி மண்ணிலிருந்து போரிலே சிக்குண்டு, அதிலிருந்து மயிரிழையில் தப்பி, படகு மூலம் எண்ணற்ற கனவுகளை சுமந்துகொண்டு… அவுஸ்ரேலியாவுக்கு வந்துசேரும் மனிதர்களின் கஷ்டங்கள், வலிகள், உயிரிழப்புகள்… என அந்த மனிதர்களின் வாழ்வை சொல்கிறது. அந்த நாவல், அந்த மனிதர்களின் கதையோடு 500 பக்கங்கள்; வரை நகர்கிறது.
4. இந்த வகையிலே…எழுபது எண்பதுகளில,; இலங்கையில் எழுதிக்கொண்டிருந்த பல பெண் எழுத்தாளர்களில்;, விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பவர்கள்.
ஈழத்தில்….குறமகள், யாழ்நங்கை, குந்தவை, கோகிலா மகேந்திரன். ஜனகமகள் சிவஞானம், மண்டூர் அசோகா …இந்த வரிசையில் எண்பதுகளில் வேறும் சில இளம்பெண் படைப்பாளிகள் இணைந்துகொண்டார்கள்;. இவர்களில் பலர் குறிப்பிட்ட காலங்களில் மெல்லமெல்லக் காணாமலேயும் போயிருக்கிறார்கள்.

அதற்குக் காரணம் ஈழத் தமிழ் சமூகத்தினரிடையே இருக்கும் பெண்களுக்கான சில கட்டுப்பாடுகள், குடும்பச்சுமைகள், கலாச்சாரச் சிக்கல்கள் என… இவை தவிர, முக்கியமாக- தமிழ் இனத்தின் மீதான வன்முறைகள், போர்க் கெடுபிடிகள்…. அதன் விளைவாக, அமைதியற்ற வாழ்வு, மரணம்….என 1983ல் ஆரம்பித்த இனக்கலவரத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட போர்ச்சூழல், எல்லோரையுமே புரட்டிப்போட்டிருந்தது. அப்போது எழுதுவதற்கு நிறைய விடயங்கள் இருந்தன. பேசுவதற்கு நிறைய தேவைகள் இருந்தன. ஆனாலும்; எழுத்தையும், குரலையும் வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம் அங்கே பறிபோயிருந்தன.
தமிழ் மக்கள் படும் கஷ்டங்கள், துயரங்களை துணிந்து எழுத்தில் வெளியே கொண்டு வருபவர்கள் அரசகூலிப்படைகளால் ஈவிரக்கமின்றிக் கொல்லப்பட்டார்கள். எத்தனையோ தமிழ் நிருபர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், சமூகசெயற்பாட்டாளர்கள் எனப் பலர் மாற்றியக்கத்தினரால், இனந்தெரியாத இராணுவ ஒட்டுக்குழக்களால்; கொல்லப்பட்ட கதைகள் எமது மண்ணில் நிறைய இருக்கிறது.
இத்தகைய ஒரு சூழலில்,; இவையெல்லாவற்றையும் கடந்து, இற்றை வரை தொடர்ந்து 50 வருடங்களாக சிறுகதைகள். நாவல்கள் என எழுதிக்கொண்டேயிருக்கும் ஒரு இலங்கைத் தமிழ் பெண் எழுத்தாளர் என்றால் தாமரைச்செல்வி அவர்களை மட்டுமே என்னால் குறிப்பிட்டுக் கூறக்கூடியதாக இருக்கிறது.
அதற்கு ஒரு முக்கியமான காரணமும் இருக்கிறது. தாமரைச்செல்வி அவர்கள் எப்போதும் சாதாரண மக்களோடு மக்களாக, அவர்களில் ஒருவராக இருந்து, அந்த மக்களின் அவலங்களை உள்வாங்கி, தன் படைப்புகளை முன்வைத்துக்கொண்டிருந்தார். அவர் போர்க்களத்திற்குள்; தன் கண்களைக் கொண்டு சென்று ஆராயவில்லை. அதுபற்றித் தேடவில்லை. தன்னைச் சுற்றியிருக்கும் எளிய மனிதர்களின் வாழ்வியலை, அவர்களின் சந்தோசங்களை, துயரங்களை, ஏக்கங்களை என…அவர் சுயமாக தரிசித்தவற்றைத் தன் எழுத்துகளில் கொண்டுவந்தார்.
ஒரு போராளியின் போராட்ட வாழ்வை அவர் எழுதவில்லை. அவனின் குடும்ப வாழ்வை எழுதினார். போராட்;டத்தை அதற்கு வெளியே நின்று, மக்களோடு மக்களாக நின்று நோக்கியதால், அவரின் கதைகள் அனைத்திலும் போரின் தாக்கங்கள் ஏற்படுத்திய வலிகள், இழப்புகள் தான் அதிகம் பேசப்பட்டிருப்பதை நாம் காணலாம்.

தாமரைச்செல்வி அவர்கள் வாழ்ந்த, கிளிநொச்சி, பரந்தன்; என்ற இடத்தில்- குமரபுரம் என்ற கிராமத்தில் இருக்கும் நெல்வயல்களும், அந்த மண்ணின் மணமும், நெற்கதிர்களின் வாசனையும் அவரது கதைகளில் எப்போதும் மணம் வீசிக்கொண்டேயிருக்கும்.
அவருடைய படைப்புகளில் நான் பார்த்த இன்னுமொரு ஒரு நுட்பமான அம்சம்;- ஆண்பாத்திரங்களை வெகு லாவகமாக தன் படைப்புகளில் உலாவ விட்டிருப்பார். எத்தனை ஆண்பாத்திரங்களானாலும் அவர்களை தன் கட்டுக்குள் வைத்து நகர விட்டிருப்பார். அதில் வரும் ஆண்பாத்திரங்கள் தன்மையில் பேசுவதாக பல கதைகளை எழுதியிருக்கிறார்.
ஒரு பெண்படைப்பாளிக்கு ஒரு ஆண் பாத்திரத்தை வெகு தத்ரூபமாகப் புரிந்துகொண்டு, அப்பாத்திரம் தன்மையில் கதைசொல்வதாக அந்தக்கதையை நகர்த்துவதென்பது அத்தனை எளிதான விசயமில்லை. அதற்கு ஆண்களின் மனதை நன்கு தெரிந்தும் புரிந்தும் வைத்திருக்க வேண்டும். ஆனால் தாமரைச்செல்விக்கு, அது கைவந்த கலை என்பதை நான் அவரின் பல படைப்புகளினூடாக அவதானித்திருக்கிறேன். வெகு தைரியமாக, ஆண் கதாபாத்திரத்திரங்களினூடாக, தனது கதைகளை அழகாக எடுத்துச் சென்றிருப்பார். அது அவருக்கேயுரிய ஒரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் என்று நான் கருதுகிறேன்.
இந்த வகையில், பெண் மனதின் இரகசியமான பக்கங்களை ஒரு ஆண் படைப்பாளியான தி.ஜானகிராமன் வெகு துணிச்சலோடு தைரியமாக பல நாவல்களில் எழுதியிருப்பார். அதற்கு முக்கிய உதாரணமாக ஜானகிராமனின் ‘மரப்பசு’ வை சொல்லலாம்.
அதற்கு ஈடான துணிச்சலை தாமரைச்செல்வியின் ஆண்பாத்திரப் படைப்புகளில் நாம் காணலாம்.
இதற்கு, அவரது குடும்ப அமைப்பு முக்கியமானதாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்;. அவரின் தாய் தந்தையருக்கு 11 பிள்ளைகள். அவர்களில் மூவர் ஆண்கள்;. மிகுதி எட்டுப்பேரும் பெண்கள். தாமரைச்செல்வி அவர்கள் குடும்பத்தில் மூத்தபிள்ளை. அதிலும் பெண். அவர்களது குடும்பம் ஒரு விவசாயக்குடும்பம். நெல், வயல், தோட்டம், துரவு, 100 பசுமாடுகள் கொண்ட மாட்டுப்பண்ணை என அவர் வாழ்ந்த சூழலும், அவரது குடும்பத்தில் அவருக்குக் கீழேயிருந்த பத்து சகோதர சகோதரிகளுடனான அவரது வாழ்வும் அவருக்கு அத்தனை அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது. அவர் குடும்பத்தில் மூத்த பிள்ளை என்பதனால் அவர் வகித்த பாகம் ஒரு தாய்க்கு இணையாக இருந்திருக்கிறது. அதனால் அவரது கதைகளில் வரும் ஆண்பாத்திரங்கள் அத்தனை தத்ரூபமாக அமைந்திருக்கிறார்கள்!
அவர் எத்தகைய ஒரு சூழலுக்குள் இருந்து கொண்டு இத்தனை படைப்புகளை எழுதியிருக்கிறார் என்று பிரமிக்க வைக்கும் சம்பவங்கள் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவரது வீட்டில் பெருஞ்சமையல் நடக்காத நாட்களே கிடையாது. ஒரு தடவை ஈரோஸ் பாலகுமார் அவர்கள் கவிஞர் கருணாகரன் அவர்களிடம் சொல்லியனுப்பியிருந்தாராம்- “சமையல் எல்லாரும் செய்யலாம், ஆனால் கதைகள் எல்லாராலும் படைக்க முடியாது என்று தாமரைச்செல்வியிடம் போய் சொல்லு” என்று. அதனை அகப்பையும் கையுமாக நின்றுகொண்டிருந்த தாமரைச்செல்வி அவர்களிடம் கவிஞர் கருணாகரன் அவர்கள் வந்து சொன்னதாக கேள்விப்பட்டிருக்கிறேன். இது ஒன்று போதும் அவர் எத்தகைய ஒரு சூழலிற்குள் இருந்துகொண்டு இத்தனை படைப்புகளையும் உருவாக்கியிருக்கிறார் என்று.

மேலும், தாமரைச்செல்வி அவர்களின் சில படைப்புகள் வேற்றுமொழியிலும் வந்திருக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்குமோ தெரியாது.
சில கதைகள் குறும்படங்களாகவும் வந்திருக்கின்றன.
பல கதைகளுக்கு விருதுகள் கிடைத்திருக்கின்றன. அவைபற்றி நான் இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும்.
இவருடைய:-
ஐந்து சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
அவற்றில் “இடைவெளி” என்ற சிறுகதையும், “வாழ்க்கை” என்ற சிறுகதையும் பேராசிரியர் சி.சிவசேகரம் அவர்களால் “The Gab, Life என்ற தலைப்புகளில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்திருக்கிறன.
இவரது “பாதை” என்ற சிறுகதை ஏ.ஜே.கனகரட்ணா அவர்களால் “The Rugged Path”என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
மேலும் இவரது “முகமற்றவர்கள்” என்ற சிறுகதை “Face less People” என்ற தலைப்பில் பெ.இராஜசிங்கம் அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
மற்றும் “எங்கேயும் எப்போதும்” என்ற சிறுகதை ‘The Inevitable’ என்ற தலைப்பில் கே.எஸ்.சிவகுமாரன் அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
மேலும் இவரது மூன்று சிறுகதைகள் சிங்களத்திலே மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.
“ஒரு மழைக்கால இரவு”என்ற சிறுகதை திருமதி.ஜெயச்சித்திரா அவர்களாலும்,
“வன்னியாச்சி” என்ற சிறுகதை திருமதி.பெ.அநுராதா ஜெயசிங்க அவர்களாலும்-
“வாழ்க்கை” என்ற சிறுகதை பேராசிரியர் பியசீலி விஜயமான அவர்களாலும் சிங்களத்திலே மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.
மேலும்—-
இவரது “ஓட்டம்” என்ற சிறுகதை எல்வின் மாசிலாமணி அவர்களால் ஜெர்மன் மொழியிலே மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
இவற்றை விட………
இவரது “பசி” என்ற சிறுகதை தமிழ்நாட்டைச் சேர்ந்த இமயவர்மன் அவர்களால் குறும்படமாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
இவரது “இடைவெளி” என்ற சிறுகதை சினிமா இயக்குனர் உதிரிப்பூக்கள் புகழ் மகேந்திரன் அவர்களால் குறும்படமாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
“பாதணி” என்ற இவரது சிறுகதை ஜான் மகேந்திரன் அவர்களால் குறும்படமாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
“சாம்பல் மேடு” என்ற சிறுகதை திரு.திலகன் அவர்களால் குறும்படமாக்கப்பட்டிருக்கிறது.

இவற்றை விட இவரது பல நாவல்கள் பல விருதுகளைப் பெற்றிருக்கின்றன.
குறிப்பாக 2004ம் ஆண்டில் வெளிவந்த இவரது “பச்சைவயல் கனவு” என்ற நாவல் இலங்கை தேசிய சாகித்திய மண்டல விருதையும், யாழ் இலக்கிய விருதையும் பெற்றிருக்கிறது.
இவர் அண்மையில் எழுதிய “உயிர்வாசம்” என்ற நாவல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வழங்கிய சிறந்த நாவல் விருதினைனையும் இலங்கை அரச சாகித்திய விருதினைனையும் பெற்றிருக்கிறது.
இவை தவிர ……
ஒரு மழைக்கால இரவு- சிறுகதைத் தொகுப்பு
வீதியெல்லாம் தோரணங்கள்- நாவல்
தாகம்- நாவல்
வேள்வித் தீ – குறுநாவல்
ஆகியவையும் விருதுகளைப் பெற்றிருக்கின்றன.

தாமரைச்செல்வி அவர்களது 50 வருடகால இலக்கிய வாழ்வில், அவரது படைப்புகளினூடாக, அவருக்குக் கிடைத்த பெறுமதிமிக்க கௌரவப்பட்டங்கள் பல.
அக்கராயன் மகளிர் அபிவிருத்தி நிலையம் 2000ம் ஆண்டில் “சாதனைப் பெண்மணி விருது வழங்கியிருக்கிறார்கள்.
2001ல் வடக்குக் கிழக்கு மாகாண சபையின் ஆளுநர் விருதை பெற்றிருக்கிறார்.
2002ல் கிளிநொச்சி தமி;ழ்சங்கத்தின் ‘இலக்கியமணி’ பட்டம், தங்கப்பதக்கம் ஆகியவற்றை பெற்றிருக்கிறார்.
2003ல் கொழும்பு கலைஇலக்கியக் கழகத்தின் விருது
2010ல் தமிழ்நாடு சின்னப்ப பாரதி அறக்கட்டளை விருது
2011ல் ஒளிச்சுடர் விருது
2012ல் தமிழியல் விருது
2015ல் யாழ் மருத்துவபீட மாணவர்கள் ஒன்றியம் வழங்கிய இலக்கியத்திற்கான கௌரவ விருது என ஏராளம் விருதுகளை இவரது படைப்புகள் இவருக்கு பெற்றுக்கொடுத்திருக்கின்றன.

இவை தவிர…….
இவருடைய இரண்டு சிறுகதைகள் இலங்கைப் பாடத்திட்;டத்திலும், தமிழ்நாட்டுப் பாடத்திட்;டத்திலும் சேர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்க ஒரு விடயம்.
இவரது “இன்னொரு பக்கம்” என்ற சிறுகதை இலங்கை கல்வியமைச்சின் தமிழ்மொழிக்கான பதினோராம் ஆண்டின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
இவரது “பசி” என்ற சிறுகதை தமிழ்நாடு கல்வியமைச்சின் பதினோராம் ஆண்டுப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட்ட இவரது சிறுகதைகளைபபற்றிச் சொல்வதானால், ; அவற்றில் சொல்லப்படுகிற செய்தியைத் தவிர, அதனைச் சொல்லுகிற விதமும் அவ்வளவு சிறப்பாக இருக்கும். அவற்றை வாசிக்கும் போது…இன்னுமொரு படைப்பாளியும் அதிலிருந்து கற்றுக்கொள்வதற்கு இன்னும் ஏதோ இருப்பது போலத் தோன்றும்.
அவரது கதையோட்டத்திலிருக்கும் சமநிலையான வேகம், ஒவ்வொரு பாத்திரங்களின் மீதும் கதையாளி வைத்திருக்கும் கனிவான பார்வை, சாதாரணமாக நாம் கண்டுகொள்ளத் தவறியிருக்கும் நுட்பமான பக்கங்கள் என அதனை வாசித்து முடித்தவுடன் மனதிற்குள் ஏற்படும் மெல்லிய அதிர்வை நாம் உணர்ந்து கொள்ளலாம்.
இந்த விடயத்தை இத்தனை தெளிவாக அருமையாக வெளிக்கொண்டு வரலாமா என்று அவை இன்னுமொரு படைப்பாளியை நினைக்க வைக்கும்.
பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் தாமரைச்செல்வியின் கதைகள் பற்றிக்கூறும் போது-
“மொடேர்ன் ஆர்ட்டை பார்ப்போருக்கு அதனை மிகச்சுலபமாக வரைந்து விடலாம் போலத்தோன்றும். ஆனால் நாம் நினைப்பதைப் போல அதனை அத்தனை இலகுவாக வரைந்துவிட முடியாது. ஏனெனில் அது உச்சமான படைப்பாற்றலின் வெளிப்பாடு என்பதைனை நாம் வரையத்தொடங்கும் போதே உணர்ந்து கொள்வோம்…” என்று சொன்னதாக கவிஞர் கருணாகரன் அவர்கள் ஓரிடத்தில் குறிப்பிட்டிருப்பார். அது எத்தனை உண்மையானது என்பது அவரின் கதைகளை வாசிப்போருக்கு நிச்சயம்; புரிந்திருக்கும்.
ஏனெனில்.. தாமரைச்செல்வியின் கதை மொழி மிகவும் எளிமையானவை. மிகச்சாதாரண பாமர மக்களும் விளங்கிக்கொள்ளக்கூடிய வகையில் அது அமைந்திருக்கும். அவருடைய கதைகளிலிருக்கும் உண்மைத்தன்மை, மனிதவாழ்வியலோடு இரண்டறக்கலந்துவிடும் தன்மை கொண்டவை!
அவருடைய கதைகளில் பொய்மையும் அதீத புனைவுகளும் காணப்படுவதில்லை. அவருடைய கதைகள் வாசிக்கும் போது எமக்குக் கிடைக்கும் அனுபவம் என்பது கதைப்படிமங்கள் .காட்சிகளாக விரிந்து செல்வதை, ரிதம் பிசகாமல் ஓடும் ஒரு நதியின் வழியே மிதந்து சென்று தரிசிப்பது போல் இருக்கும்.
அவரது எழுத்து நடைக்கு ஒப்பாக, மலையாளக் கதைகள் சில இருக்கின்றன என்றும் அவை திரைக்கதைக்குரிய கட்டமைப்பையும், கதைகூறு முறைமையையும் கொண்டுள்ளதாகவும் திரைப்பட இயக்குனர் மகேந்திரன் அவர்கள் குறிப்பிட்டிருப்பார்.

தாமரைச்செல்வி பற்றி இன்னுமொரு விடயம் சொல்லவேண்டும். அவர் எழுத்தாளர் மட்டுமல்ல ஒரு ஓவியரும் கூட என்பதை எத்தனைபேர் அறிவார்களோ தெரியாது. அவர் ஆரம்பகாலத்தில் எழுதிய சிறுகதைகளுக்கு அவரே ஓவியமும் வரைந்து கொடுத்திருக்கிறார். பல சஞ்சிகைகளிலும் ஒருசில பத்திரிகைகளிலும் அவை பிரசுரமாகியிருக்கின்றன என்று அறிகிறேன். அவை தவிர பாடசாலை  மாணவர்களுக்காக நாடகப்பிரதிகளையும் எழுதியிருக்கிறார்.

மேலும் அவர் வாழ்ந்த ஊரில் இளைஞர்கள் சிலர் சேர்ந்து இளைஞர் வட்டம் என்ற ஒரு அமைப்பை ஆரம்பித்திருந்த நேரம், இவரிடம் வந்து, அதற்கான ஒரு வாசகம் எழுதித்தரும்படி கேட்டிருக்கிறார்கள். அதற்காக அவரும் ஒரு வாசகம் எழுதிக்கொடுத்திருந்தார்.
“சிறப்பாய் வளரும் சின்னக் கிராமம்
சிந்திக்க வைப்போம் அது எங்கள் இதயம்”
இது தான் அவர் எழுதிக்கொடுத்த அந்த வரிகள்.
நான் கேள்விப்பட்டேன். அவர் என்றைக்கோ எழுதிக்கொடுத்த அந்த வரிகள், இன்றைக்கும் பரந்தன் குமரபுரம் கிராமத்தின் மந்திரவரிகளாக பாவிக்கப்பட்டும், உச்சரிக்கப்பட்டுக்கொண்டும் இருக்கிறது.

தாமரைச்செல்வி அவர்கள் வெறுமனே கதைகளை எழுதிக்கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளர் அல்ல. அவர் மனிதர்களை நேசிப்பவர். கஷ்டங்களை அனுபவித்துக்கொண்டிருந்த தனது ஊர் மக்களின் வாழ்வை செழுமைப்படுத்த வேண்டும் என்பதற்காகப் பல நற்காரியங்களை இன்றைக்கும் செய்துகொண்டிருப்பவர்.

அவரின் செயற்பாடுகளுக்கு ஊக்கமளிக்கும் அவரின் குடும்பத்தினர், சகோதரர்கள், திருமணத்தின் பின்னர் அவரை விடாது எழுதுவதற்கு உறுதுணையாக இருந்த அவரது கணவர் திரு.கந்தசாமி அவர்கள்- அவரும் ஒருகாலத்தில் சிறுகதைகள் எழுதிக்கொண்டிருந்தவர். அவரின் இரண்டு பெண்பிள்ளைகள் என எல்லோரும் அவரின் எழுத்தை ஊக்குவிப்பவர்களாகவே இதுவரையில் இருந்திருக்கிறார்கள். இதனை மிகுந்த மனநிறைவோடு ஒரு தருணத்தில் தாமரைச்செல்வி அவர்கள் என்னோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

எழுத்தாளர் தாமiரைச்செல்வி அவர்கள் பற்றி சொல்வதற்கு இதற்கு மேலும் இருக்கலாம். ஆனால் அதற்கான நேரம் இருக்காது என்பது எனக்குத் தெரியும்.
தொடர்ந்து, தாமரைச்செல்வி அவர்களின் படைப்புகள் வெளிவரவேண்டும். அவரின் இலக்கியப்பணி 50வருடங்களோடு நின்றுவிட வேண்டியதில்லை. எழுதத் தோன்றும் போதெல்லாம் தாமரைச்செல்வி அக்கா எழுதுங்கள். உங்கள் படையல் தொடரட்டும்! நீங்கள் நிறைந்த ஆரோக்கியத்தோடும், நிறைந்த மனநிறைவோடும் பல்லாண்டுகள் வாழ்ந்து, உங்கள் மனதிற்கு அமைதி தரும் எல்லா விடயங்களோடும், எழுத்துப்பணியையும் தொடரவேண்டுமென்று வாழ்த்தி, எனக்கு இந்த உரையை ஆற்றுவதற்கு ஒரு சந்தர்ப்பம் தந்த ‘வணக்கம் இலண்டன்’ ஊடகத்திற்கும், இந்த விழாவை ஏற்பாடு செய்த, விழா ஏற்பாட்டாளர்களுக்கும் என் நன்றிகளைக் கூறிக்கொண்டு இத்துடன் விடைபெறுகிறேன்.
நன்றி.


சந்திரா இரவீந்திரன்

எழுத்தாளர் – இலண்டன்
No comments: