உலகச் செய்திகள்

 விண்வெளியில் சிக்கியிருந்த வீரர்கள் பூமிக்கு திரும்பினர்

ஈராக்கில் திருமண வைபவத்தில் தீ: புதுமண தம்பதியுடன் 114 பேர் பலி

உக்ரைன் நாட்டின் அமைதி திட்டத்திற்கு ரஷ்யா மறுப்பு

பாகிஸ்தானில் ஜனவரி கடைசி வாரத்தில் பாராளுமன்ற தேர்தல்

அமெரிக்க அரசாங்கம் ‘முடங்கும்’ நெருக்கடி



விண்வெளியில் சிக்கியிருந்த வீரர்கள் பூமிக்கு திரும்பினர்

September 29, 2023 6:23 pm 

விண்வெளியில் மிக அதிக நாட்கள் இருந்த அமெரிக்க விண்வெளி வீரர் பூமிக்குத் திரும்பியுள்ளார்.
பிரெங்க் ருபியோவும் 2 ரஷ்ய வீரர்களும் கடந்த ஆண்டு செப்டம்பரில் விண்வெளிக்குச் சென்றனர்.

அவர்கள் 6 மாதங்களுக்கு முன் திரும்பவிருந்தனர். விண்கலத்தில் கோளாறு ஏற்பட்டதால் பயணம் தடைப்பட்டது. அவர்கள் புதிய விண்கலம் அனுப்பப்படும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. இதனால் அவர்கள் 371 நாட்கள் விண்வெளியில் இருந்தனர். ருபியோ விண்வெளியில் மிக நீண்ட காலம் இருந்த அமெரிக்க வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.

எனினும் விண்வெளியில் அதிக காலம் இருந்தவர் என்ற சாதனையை ரஷ்யாவின் வெலெரி பொல்யாகோவ் வசமுள்ள. பொல்யாகொவ் 1994 ஜூனவரிக்கும் 1995 மார்ச் மாதத்திற்கு இடையே 437 நாட்கள் விண்வெளியில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 






ஈராக்கில் திருமண வைபவத்தில் தீ: புதுமண தம்பதியுடன் 114 பேர் பலி

September 28, 2023 5:37 am 

வடக்கு ஈராக்கில் திருமண வைபவம் ஒன்றில் ஏற்பட்ட தீயில் மணமகள் மற்றும் மணமகன் உட்பட 100க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் 150 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

வடக்கு நின்வே மாகாணத்தில் உள்ள குரகோஷ் நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை (26) இரவு இடம்பெற்ற இந்தத் திருமண வைபவத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றிருந்த நிலையிலேயே இந்த தீ ஏற்பட்டுள்ளது.

தீ ஏற்படுவதற்கான காரணம் உறுதி செய்யப்படாதபோதும் பட்டாசு கொளுத்தப்பட்ட நிலையிலேயே தீ பரவி இருப்பதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. திருமண மண்டபத்தில் இருந்த எரியக்கூடிய பனல்கள் தீ தீவிரமாக பரவக் காரணமாகி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதனால் மண்டபத்தின் உட்கூரைகள் தீப்பிடித்து உள்ளே இருந்தவர்கள் மீது விழந்துள்ளன.

தீ மூண்ட ஒருசில நிமிடங்களிலேயே கட்டடத்தின் சில பகுதிகள் இடிந்து விழுந்ததாக ஈராக்கின் சிவில் பாதுகாப்புத் துறை குறிப்பிட்டது. இதனால் பலரும் மண்டபத்திற்குள்ளேயே சிக்கியுள்ளனர்.

“அதிகம் தீப்பிடிக்கக் கூடிய மலிவான கட்டட பொருட்கள் பயன்படுத்தப்பட்டதால் மண்டபத்தின் ஒரு பகுதி தீப்பிடித்த சில நிமிடங்களிலேயே தீயில் கருகி விழுந்துள்ளன” என்று ஈராக்கின் சிவில் பாதுகாப்பு பணியகம், அரச செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளது. இந்த தீக்கு பின்னர் அந்தத் திருமண மண்டபத்தில் இரும்புக் கதிரைகள் உட்பட அனைத்து பொருட்களும் கருகிய நிலையில் இருக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

திருமண ஜோடிகள் நடனமாட ஆரம்பித்த நேரத்தில் தீ பரவ ஆரம்பித்ததாக காயங்களுடன் உயிர் தப்பிய ஒருவர் உள்ளுர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

“அவர்கள் பட்டாசு கொளுத்தினார்கள். அதனை அடுத்து உட்கூரை பகுதியில் தீப்பற்றியது. வினாடிகளிலேயே ஒட்டுமொத்த மண்டபத்திற்கும் தீ பரவியது” என்றார்.

இந்தத் தீயில் 114 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டபோதும் அந்த எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்தத் தீயில் 450க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தும் காயமடைந்தும் இருப்பதாக ஈராக் செம்பிறை சங்கம் குறிப்பிட்டுள்ளது.

மூச்சுத்திணறல் மற்றும் பலமான தீக்காயங்கள் காரணமாகவே உயிரிழப்புகள் இடம்பெற்றிருப்பதாக ஈராக் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மோசமாக தீக் காயங்களுக்கு உட்பட்டிருப்பதாக மாகாண சுகாதார அதிகாரியான அஹமது துபர்தானி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கும் ஈராக் பிரதமர் ஷியா அல் சுதானி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்கும்படி உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சிடம் கேட்டுள்ளார்.

இந்த திருமண மண்டபத்தின் உரிமையாளர் தலைமறைவாகி இருக்கும் நிலையில் அவரை கைது செய்ய பொலிஸார் தேடுதலில் ஈடுபட்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பல தசாப்தங்கள் போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் ஈராக்கில் நிர்மாண துறையின் பாதுகாப்பு தரங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. இதனால் இவ்வாறான விபத்துகள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன.

2021 ஜூலையில் தெற்கு ஈராக்கில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கொவிட் பிரிவில் ஏற்பட்ட தீயில் 60க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். அதே ஆண்டு ஒக்டோபரில் பக்தாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஒட்சிசன் தொட்டி வெடித்ததில் ஏற்பட்ட தீயில் 80க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.   நன்றி தினகரன் 






உக்ரைன் நாட்டின் அமைதி திட்டத்திற்கு ரஷ்யா மறுப்பு

September 25, 2023 12:07 pm

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உக்ரைன் முன்வைத்த அமைதித் திட்டத்தை நிராகரித்துள்ளார்.

அந்தத் திட்டத்துக்கு அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஆதரவளிப்பதைத் லாவ்ரோவ் கண்டித்தார்.

கருங்கடல் தானிய ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கும் உலக நிறுவனத்தின் முயற்சி நடைமுறைக்கு ஏற்றதல்ல என்றார் லாவ்ரோவ். உக்ரைனியப் போரை மேற்கத்திய நாடுகள் வழிநடத்துவதாக அவர் சாடினார்.

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவுவதை அவர் சுட்டிக்காட்டினார்.

ரஷ்யப் படையெடுப்புக்கு எதிராகக் கூடுதல் ஆதரவு திரட்ட உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்கா சென்றுள்ளார்.

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான 10 அம்ச அமைதித் திட்டத்தை அவர் முன்வைத்துள்ளார்.

கிரைமியா உட்பட உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட எல்லாப் பகுதிகளில் இருந்தும் ரஷ்யப் படையினர் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும் என்பதும் திட்டத்தின் நிபந்தனைகளில் ஒன்றாகும்.   நன்றி தினகரன் 




பாகிஸ்தானில் ஜனவரி கடைசி வாரத்தில் பாராளுமன்ற தேர்தல்

September 24, 2023 4:13 pm 

பாகிஸ்தானில் எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கடைசி வாரத்தில் பொதுத் தேர்தல் நடக்கும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 90 நாட்களில் தேர்தல் நடத்த சாத்தியம் இல்லை என்பதால் ஜனவரி மாதம் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் பாராளுமன்றத்தை கலைக்க, அப்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பரிந்துரை செய்தார். இதை ஏற்று பாராளுமன்றத்தை கலைத்து, ஜனாதிபதி ஆரிப் ஆல்வி உத்தரவிட்டார்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் இன்னும் 90 நாட்களில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது.

ஊழல் வழக்கில், இம்ரான்கான் சிறையில் உள்ள நிலையில் அவர் தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேவேளை, ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் தேர்தலில் போட்டியிட உள்ளார்.

தேர்தலில் வெற்றி பெறும்பட்சத்தில் ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் பிரதமராகும் வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன. இடைக்கால பிரதமராக பலூசிஸ்தான் எம்.பி. அன்வர் உல் ஹக் ககர் இருந்து வருகிறார்.

அந்நாட்டில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரிக்கே இன்ஸாஃப் கட்சியும், ஷெபாஸ் ஷரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியும் பிலாவால் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியும் பிரதான கட்சிகளாக உள்ளன.

அந்நாட்டின் தொகுதி சீரமைப்புக்கான முதல் பட்டியல் இம்மாதம் 27 அன்று வெளியிடப்படும் என ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் மற்றும் சம்பந்தபட்டவர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு பரிசீலனை செய்யப்பட்ட பின் இறுதி பட்டியல் நவம்பர் 30 அன்று வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

இதற்கு பின்னர் 54 நாள் தேர்தல் பணிகள் நடைபெற்று ஜனவரி கடைசி வாரம் தேர்தல் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.   நன்றி தினகரன் 





அமெரிக்க அரசாங்கம் ‘முடங்கும்’ நெருக்கடி

September 29, 2023 6:17 am 

அமெரிக்க அரசாங்கம் கடந்த பத்து ஆண்டுகளில் நான்காவது முறையாக பகுதி முடங்கும் ஆபத்து தற்போது தலை எடுத்துள்ளது.

இந்த நெருக்கடி நிலை ஏற்பட இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில் அதற்குள்ளாக அமெரிக்க பாராளுமன்றம் ஒரு சட்டத்தை நிறைவேற்ற வேண்டி ஏற்பட்டுள்ளது.

அதில் ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட வேண்டும். இதற்கு நாளை சனிக்கிழமை நள்ளிரவு வரைதான் கால அவகாசம் உள்ளது.

பல்வேறு அமைப்புகளுக்கும் வரும் நவம்பர் வரை நிதி கிடைக்க வகை செய்யும் ஒரு சட்டமூலம் பாராளுமன்றத்தின் செனட் சபை நிறைவேற்றி உள்ளது. ஆனால் மக்களவை அதை நிராகரித்துவிட்டது.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அனைத்தும் நல்லபடி நடக்கவில்லை என்றால் ஆயிரக்கணக்கான மத்திய அரசாங்க ஊழியர்கள் முதல் பொருளாதார புள்ளி விபரங்களை வெளியிடுவது, சத்துணவு சேவைகளில் ஈடுபட்டு இருக்கும் இதர ஊழியர்கள் வரை அனைவரும் தற்காலிகமாக விடுப்பில் போக வேண்டிய நிலை ஏற்படும்.

பாராளுமன்றத்தின் செனட் சபை 77க்கு 19 என்ற கணக்கில் கடந்த செவ்வாய்க்கிழமை (26) ஒரு சட்டமூலத்தின் மீதான விவாதத்தை ஆதரித்தது.

அந்த சட்டமூலம் அரசாங்கத்திற்கு வரும் நவம்பர் 17ஆம் திகதி வரை நிதியை ஒதுக்க வகை செய்யும். உள்நாட்டுப் பேரிடர்களைச் சமாளிக்க சுமார் 6 பில்லியன் டொலர், உக்ரைனுக்கு உதவியாக மேலும் 6 பில்லியன் டொலர் ஒதுக்கவும் அது வழி செய்கிறது.

ஆனால் அதை குடியரசுக் கட்சியினர் ஆதிக்கம் செலுத்தும் மக்களவை நிராகரித்துவிட்டது.

மெக்சிகோவுடன் கூடிய எல்லை வழியாக அகதிகள் அதிகம் பேர் அமெரிக்காவுக்குள் நுழைகிறார்கள்.

இந்தப் பிரச்சினையைக் கவனித்தால்தான் சட்டமூலத்திற்கு அங்கீகாரம் கிடைக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள். இதனிடையே, அரசாங்க முடக்கத்திற்கான வாய்ப்புகள், மாணவர் கடன் கொடுக்கும் நடைமுறை மீண்டும் ஆரம்பிக்கப்படும் நிலை, அதிக வட்டி விகிதம், மோட்டார் வாகன ஊழியர் வேலை நிறுத்த மிரட்டல் எல்லாம் தலைதூக்குவதால் அமெரிக்கப் பொருளாதாரம் சவால்களை எதிர்நோக்குவதாக வெள்ளை மாளிகை பொருளாதார ஆலோசகர் ஜெராட் பெர்ன்ஸ்டின் புதின்கிழமை (27) பொருளாதார கொள்கைப் பயிலகம் என்ற அமைப்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசியபோது தெரிவித்தார்.

அமெரிக்க அரசாங்கம் முடங்கினால் அது உலக அளவில் நிதிச் சந்தைகளையும் நாட்டின் நிதித் தரநிலையையும் பாதிக்கலாம்.   நன்றி தினகரன் 






No comments: