எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் 79 கல்வி போதித்த ஆசிரியையும், அரசியல் போதித்த அனுபவசாலியும் ! முருகபூபதி

 “ எனது தொடர்  பயணத்தில்  நான் சந்தித்த மேலும் சில பெண்


ஆளுமைகளை இனிவரும் அங்கங்களில் பதிவுசெய்வேன் “ என்று கடந்த 78 ஆவது அங்கத்தில் சொல்லியிருந்தேன்.

எதிர்பாராதவகையில் மேலும் சில உள்ளுர் பயணங்களில் ஈடுபட்டிருந்தமையால,  கடந்த சில வாரங்கள் எனது எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) தொடரை எழுத முடியாமல் போய்விட்டது.

இலங்கையில் எனது ஆரம்பகால கல்வி வாழ்க்கையில் எனது ஆசான்களாக விளங்கிய பலர், பசுமையான நினைவுகளை தந்துவிட்டு நிரந்தரமாக விடைபெற்றுவிட்டார்கள்.

அந்த ஆசான்களில் மூவினத்தவர்களும் மும்மதத்தவர்களும்  இருந்தனர்.

அமரர்கள் பண்டிதர் க. மயில்வாகனன், “ பெரிய ரீச்சர் அம்மா  “ மரியம்மா திருச்செல்வம், உடப்பூர் பெரி. சோமஸ்கந்தர், நிக்கலஸ் அல்ஃபிரட், நாகராஜா, இராமலிங்கம், கௌரி ரீச்சர், மணிமேகலை ரீச்சர், ஜப்பார் சேர், சுஃபியான் சேர், தர்மரத்தின சேர்… இவ்வாறு பலரை இன்றும் நினைவில் வைத்திருக்கின்றேன்.

இவர்கள் காலத்தில் எமக்கு கல்வி புகட்டிய திருமதி திலகமணி


தில்லைநாதன் ஆசிரியைக்கு தற்போது எண்பத்தியெட்டு  வயதும்  கடந்துவிட்டது.

இன்றும் இளமையோடு பேசுகிறார். இயங்குகிறார். இந்த வயதிலும் தனது அருமை மகள் ராதாவுடன் சேர்ந்து வீட்டில் ஒரு பாலர் பாடசாலையை நடத்திவருகிறார்.

எங்கள் ஊரில் ஐம்பதுகளில் நடன , சங்கீத ஆசிரியர்கள் இல்லாதிருந்த குறையைப்போக்கியவர்தான் திலகமணி ரீச்சர். நான் அவரது அபிமான மாணவன். இன்று அவரது அபிமான எழுத்தாளர்களில் நானும் ஒருவன்.

இலங்கை செல்லும்போதெல்லாம் இவரைச்  சென்று பார்ப்பேன்.  இறுதியாக 2019 இல் எனது இலங்கையில் பாரதி நூல் அறிமுகம் எங்கள் நீர்கொழும்பூரில் நடந்தபோதும், இவர் வருகைதந்து ஆசியுரை வழங்கி வாழ்த்தினார்.

இலங்கை வானொலியில் இவரது குரலில் இடம்பெற்ற நாடகங்கள் பிரசித்தம். அப்போது இவரது பெயர் திலகா தில்லைநாதன் என ஒலித்தது.

இவருக்கும் பூர்வீகம் நீர்கொழும்புதான்.  1954 ஆம் ஆண்டு விஜயதசமியின்போது எங்கள் ஊரில் வதியும் இந்து தமிழ் மாணவர்களுக்கு ஒரு பாடசாலையை  ( விவேகானந்தா வித்தியாலயம் ) அன்றிருந்த நகர பிதா எஸ். கே. விஜயரத்தினம் அவர்களின் தலைமையில் இயங்கிய இந்து வாலிபர் சங்கம் உருவாக்கியபோது நான் முதல் மாணவனாக ( சேர் விலக்கம் : 01 ) சேர்த்துக்கொள்ளப்பட்டேன்.

அன்று திலகமணி ரீச்சர், இந்தப் பாடசலையில் தொண்டர் ஆசிரியராக இணைத்துக்கொள்ளப்பட்டவர். அன்று முதல் இவரது பாசத்திற்குரிய அபிமான மாணவன்.

இம்முறை இலங்கை சென்றபோது எனது பேறாமகள் மதுரா, எமது வித்தியாலயத்தின் பழைய மாணவர்களின் ஒன்றுகூடலுக்கு என்னையும் அழைத்து பேசவைத்தார்.

தற்போது இந்த மன்றத்திலிருக்கும் பல இளம் தலைமுறையினருக்கு எமது கல்லூரி, வித்தியாலயமாக இருந்த காலப்பகுதியில் எவ்வாறு இருந்தது, யார்… யார்… எமது ஆசிரியர்கள் முதலான விபரங்கள் தெரியாது.

அவர்களையெல்லாம் நினைவுபடுத்தி நான் உரையாற்றியபோது,  அந்த அரங்கில் அனைத்தையும் செவிமடுத்துக்கொண்டிருந்த திலகமணி ரீச்சர், என்னை தனியாக அழைத்து தமது வீட்டுக்கு வருமாறும் தன்னோடு அமர்ந்து விருந்துண்ணுமாறும் கேட்டிருந்தார்.

எனது தங்கை ஜெயந்தியையும் அழைத்துக்கொண்டு சென்றிருந்தேன்.


நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தோம். எனது பேச்சைக்கேட்ட அவரும் எனது நினைவாற்றலை மெச்சினார்.

 “ நீர்கொழும்பூரைப்பற்றிய வரலாறு எழுதப்படவேண்டும். அது உம்மால்தான் முடியும். தற்போதைய தலைமுறைக்கு பல செய்திகள் தெரியவில்லை .  “ என்றார்.

எங்கள் ஊரில் 1950 களில் ஒரு தமிழர்  -  எஸ்.கே. விஜயரத்தினம் -   நகரபிதாவாக இருந்தார். இவருடைய பேத்திதான் ஐ. நா. வில் சிறுவர் நலன் விவகாரங்களில் அதிகாரியாகவிருந்த ராதிகா குமாரசாமி.

 “ நீர்கொழும்பில் தமிழர்கள் சிங்களவர்களாக மாறிவருகிறார்கள்.   என்று  சொன்ன வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போது பாராளுமன்ற உறுப்பினராகவும் இருக்கும் நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரனுக்கு நான் எழுதிய எதிர்வினைக்கு,  அவர் எனக்கு எழுதிய பதிலும் பற்றி எனது சொல்லத்தவறிய கதைகள் நூலில் ஒரு பதிவை எழுதியிருக்கின்றேன்.

திலகமணி ரீச்சரைப்பற்றி முன்னரும் ஒரு கட்டுரை எழுதியிருக்கின்றேன்.

அதிலிருந்து சில வரிகள் : பாடல்,    இசை,  நடனம்  முதலான 


நுண்கலைகளை பயிற்றுவிப்பதற்காக    அக்காலத்தில்  பிரத்தியேகமாக  ஆசிரியர்கள் இருக்கவில்லை.    எனினும்  அந்தக்குறையை    நீக்கியவராக குறிப்பிட்ட    துறைகளில்  ஆர்வம்  உள்ள  திலகமணி  அவர்கள்,   தமிழ்,  சமயப்   பாட நெறிகளை   சொல்லித்தந்தவாறு,  இக்கலைகளையும்   மாணவர்  மத்தியில்   வளர்த்தார்.   பாடசாலை பெற்றோர்    தின விழாவாகட்டும்  வட்டாரப்போட்டி  கலை விழாவாகட்டும்    மாணவர்களை  கலை   நிகழ்ச்சிகளுக்கு தயார்படுத்தும்   பணி   அவரிடம்  ஒப்படைக்கப்படும்.    அவர் பாடசாலையில்    மாத்திரமல்லாது   வீட்டுக்கும்  மாணவர்களை அழைத்து    பயிற்சி  வழங்குவார்.

அவ்வாறு   1954  முதல்  எமது  கலைத்துறை   ஆசிரியராகவும்  இதர பாடங்களின்  ஆசிரியராகவும்  விளங்கியவர்  திருமதி. திலகமணி தில்லைநாதன்.   

நீர்கொழும்பில்    தமது  வீட்டிலிருந்தவாறே  பாலர்  பாடசாலையை நடத்தி   தான் நேசித்த தொழிலை தொடருவதிலிருந்து  அவருக்கு  கற்பித்தலில்  நீடித்திருக்கும்    ஆர்வம்   குறையவே  இல்லை    என்பது தெரியவருகிறது.


எமது    மத்தியில்  தற்பொழுது  வாழ்ந்துகொண்டிருக்கும் பாடசாலையின்   தொடக்க  கால  ஆசான்  இவர்  மாத்திரமே.   எமது பாடசாலையின்    வரலாற்றை   ஆதாரங்களுடன்  பதிவுசெய்யக்கூடிய ஒரே   ஒரு   கண்கண்ட  சாட்சியாக  வாழ்ந்துகொண்டிருப்பவர்  திருமதி   திலகமணி   தில்லைநாதன் -

நீர்கொழும்பு    நகரில்  கடற்கரைத்தெரு  கத்தோலிக்கப்   பெண்கள் பாடசாலையில்  ஆறாம்  தரம்  வரையில்  அவர்  கற்றபொழுது - அக்காலகட்டத்தில்  எம்மவருக்கு  இந்து  தமிழ்ப்பாடசாலை   அங்கு இருக்கவில்லை.    அவர்  ஆங்கிலமும்  கற்க  விரும்பி,  புனித  மரியாள்  தமிழ்ப்பெண்கள்  பாடசாலையில்  இணைந்து பள்ளிப்படிப்பை    நிறைவுசெய்தார்.

 இதேவேளையில்    நீர்கொழும்பு  ஆவே மரியா  மகளிர் பாடசாலையில்    பணியாற்றும்  ஆசிரியர்கள்  எவரேனும் விடுமுறையில்    நிற்கும்  காலத்தில்,   அங்கு  வந்து  தற்காலிகமாக பணியாற்றினார்.    அக்காலகட்டத்தில்   அங்கு  கடமையாற்றிய பிரான்ஸ்   நாட்டைச்  சேர்ந்த  அருட்சகோதரி  ஒருவரிடமிருந்து பெற்ற    நற்சான்றிதழும்  மேலும்  ஆசிரியப்பணியில்  ஈடுபடுவதற்கு இவருக்கு   தூண்டுகோலாக    இருந்திருக்கிறது.    அக்காலகட்டத்தில் முகாமைத்துவ   பாடசாலைகளே  எங்கும்  இயங்கின.

இவருக்கு     சிறுவயதிலிருந்தே   பாட்டு,   பேச்சு,   நடனம்,   நாடகம் முதலான    துறைகளில்  ஆர்வமும்  ஈடுபாடும்  இருந்தமையினால்  இலங்கை   வானொலி   நிகழ்ச்சிகளுக்கும்  1952   முதல்  சென்றுவந்தார்.     பின்னர்  அவ்வப்பொழுது  வானொலி  கலையகத்திற்குச்     சென்று  நிகழ்ச்சிகளில்  பங்கேற்கும்  வாய்ப்புகள் 1982  வரையில்  தொடர்ந்திருக்கிறது. இவர்  இலங்கை  வானொலி   கலை    உலகில்  திலகா தில்லைநாதன்   எனவும்  அழைக்கப்பட்டார்.

1955  ஆம்  ஆண்டு  இவருக்கு  பதியப்பட்ட  ஆசிரியராக  நியமனம்


கிடைத்திருக்கிறது.

1962  ஆம்  ஆண்டு     யாழ்ப்பாணம்  நல்லூர்  ஆசிரிய  பயிற்சி கலாசாலைக்கு    தெரிவாகி,    அங்கிருந்து  கோப்பாய்  மகளிர் ஆசிரியப் பயிற்சிக்கலாசாலையில்   பயிற்சியை   தொடங்கி,  கலாசாலை   அதிபர்  திருமதி  ஆனந்தகுமார்  அவர்களிடம்  முதலாம்  தர  ஆசிரிய சான்றிதழ்    பெற்றுக்கொண்டு,  1964   ஆம்  ஆண்டு  மீண்டும் நீர்கொழும்பு    விஜயரத்தினம்  வித்தியாலயத்திற்கே   பணியேற்க வந்தார்.

இலங்கை  வானொலியில்  கலைஞர்  தேர்வுக்காக  சென்று ஒலிவாங்கியில்  பேசும்  தொனி,   குரலின்  ஏற்ற  இறக்கம்,   சிரிப்பு, அழுகை,   கோபம்,  நகைச்சுவை   முதலான  இன்னோரன்ன  ரசங்களை குரலில்    காண்பிக்கும்  பயிற்சிகளைப் பெற்றார்.

வானொலி    ஊடகம்  தொலைக்காட்சி  போன்று  கட்புலனுக்குரியதன்று.   செவிப்புலனுக்குரியது.    சரியான   தெளிவான   உச்சரிப்பு  மிகவும்  முக்கியமானது.   தமது  விடா முயற்சியினால்    அந்தத்தேர்வில்  தெரிவுசெய்யப்பட்டார்.

1955   ஆம்  ஆண்டு  வரையில்  நாடகம்,   உரைச்சித்திரம்,   மத்தாப்பு முதலான    நிகழ்ச்சிகளில்  பங்கேற்கவும்  இவருக்கு   சந்தர்ப்பங்கள்  கிடைத்தன.    அவரது  வாழ்க்கைத்துணைவர்   தில்லைநாதன் அவர்களும்  ஒரு  கலா  ரசிகர்.   அதனால் - திருமணத்தின்  பின்னரும் கணவரின்   பக்கத்துணையும்   ஊக்கமளிப்பும்  1982  வரையில்  அவரை இலங்கை    வானொலி   கலையகத்திற்கு  சென்று வருவதற்கு வழிவகுத்திருக்கிறது.

இலங்கை  வானொலி   கலையகத்தில் - சானா  மாமா  என அழைக்கப்பட்ட   சண்முகநாதன்  அவர்கள்  இவருக்கு   ஒரு குருவாகவே   திகழ்ந்தார். கே.எம். வாசகர்,   பி. விக்னேஸ்வரன், எழில்வேந்தன்,  பி. எச். அப்துல் ஹமீத்   பிச்சையப்பா,    ரொசாரியோ   பீரிஸ்,  பிலோமினா சொலமன்,   விஜயாள்  பீட்டர்,   மரிக்கார்  ராமதாஸ்,   கே.எஸ். பாலச்சந்திரன்,    தருமலிங்கம்,    வரணியூரான்  கணேசபிள்ளை, ராஜேஸ்வரி   சண்முகம்,   சோதிநாதன்,   உட்பட  பல வானொலிக்கலைஞர்களுடனும்    சகோதர  பாசத்துடன்  பழகியவர். பணியாற்றியவர். 

 “அகாலம் “  புஷ்பராணி

பிரான்ஸில் கடந்த ஓகஸ்ட் மாதம்  முற்பகுதியில்  வென்மேரி அறக்கட்டளையின் விருது விழாவுக்கு சென்றிருந்தவேளையில்,  பாரிஸில் சில நாட்கள் நின்றேன்.

தோழர் ராயப்பு அழகிரியிடம்,  “ என்னை  ‘அகாலம்  ‘ புஷ்பராணியை பார்க்க அழைத்துச் செல்லமுடியுமா..? எனக்கேட்டேன்.

ஓகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி  பாரிஸ் லாசப்பலில் சிட்னி பேராசிரியர் ஆசி. கந்தராஜாவின்  அகதியின் பேர்ளின் வாசல்  நாவல்  அறிமுக அரங்கு நடந்தது.  அதற்கு புஷ்பராணி வருவார் என எதிர்பார்த்து அந்த நிகழ்ச்சிக்கும் சென்றிருந்தேன். அவர் சற்று உடல்நலம் குன்றியிருப்பதாகவும், எனினும் முகநூலில் உற்சாகமாக இயங்குகிறார் என்ற தகவலையும் அறிந்தேன்.

வீட்டில் முடங்கியிருப்பவர்களுக்கு இந்த முகநூல் வரப்பிரசாதம்தான்!

இறுதியாக புஷ்பராணியை 2019 தொடக்கத்தில் லாசப்பலில் நண்பர் கோமகன் ஏற்பாடு செய்திருந்த இலக்கிய சந்திப்பில் காணமுடிந்தது.

அன்றுதான் அவரை முதல் முதலில் சந்தித்தேன்.

இம்முறை பயணத்தின்போது தோழர் ராயப்பு அழகிரி எனது வேண்டுகோளை ஏற்று புஷ்பராணியிடம் அழைத்துச்சென்றார்.

ஒட்சிசன் சிலிண்டருடன் வீட்டுக்குள் நடமாடும் புஷ்பராணி,  எமக்காக சிற்றுண்டிகளும் செய்திருந்ததை பார்த்து நெகிழ்ந்துவிட்டேன்.

தொடர்ந்தும் வாசிக்கிறார்.  முகநூலில் எழுதுகிறார்.

புஷ்பராணி பற்றியும் முன்னர் எழுதியிருக்கின்றேன்.  எனது யாதுமாகி நூலிலும் இவர்பற்றிய ஒரு பதிவு இடம்பெற்றுள்ளது.

இவரது அகாலம் பற்றி நான் முன்னர் எழுதிய குறிப்புகளிலிருந்து சில வரிகள்:

 “ என்னைவிட ஒரு வயது மூத்தவர் அவர். தனது இருபது வயதுப்பருவத்தில். தமிழ் ஈழக்கனவுடன் களமிறங்கி பல்வேறு சோதனைகளையும் வேதனைகளையும் துன்புறுத்தல்களையும் சித்திரவதைகளையும் சந்தித்தவர். அந்தச்செய்திகள் ஊடகங்களில் வெளிவரத்தொடங்கிய காலப்பகுதியிலேயே நானும் எழுத்துத்துறையில் பிரவேசித்தேன்.

புஷ்பராணி எழுதியிருக்கும் 'அகாலம்' நூலை படித்திருக்கிறீர்களா..? இல்லையாயின், எனது இந்தப்பதிவை படித்த பின்னராவது தேடி எடுத்து படிக்கவும் என்று பரிந்துரை செய்கின்றேன்.

உலக வரலாற்றில் சிறை சென்ற பலர் எழுதியிருக்கும் நூல்களின் வரிசையில், நேரு ( World History ) நெல்சன் மண்டேலா ( long walk to freedom) தொடக்கம், இந்திய பொடா – மிசா சட்டங்களில் தடுத்துவைக்கப்பட்ட தமிழகத்தலைவர்களின் நூல்கள், புலிகளிகள் இயக்கத்தினால் தடுத்துவைக்கப்பட்ட கடற்படை கொமடோர் அஜித் போயாகொட எழுதிய நீண்ட காத்திருப்பு, புனர்வாழ்வு முகாமிலிருந்த தமிழினி சிவகாமியின் ஒரு கூர்வாளின் நிழலில் முதலானவற்றை படித்திருப்பவர்கள், புஷ்பராணியின் அகாலம் நூலையும் படிக்கவேண்டும்.

 புஷ்பராணி, தனது போராட்ட வாழ்வில் கற்றதையும் பெற்றதையும் உள்வாங்கி, அதன் பட்டறிவை இந்த நூலின் இறுதியில் இவ்வாறு பதிவுசெய்துள்ளார்:

"இங்கே நான் பல்வேறு தரப்புகளின் தவறுகளை மனம்வெந்து சுட்டிக்காட்டுவது அவர்களைப் பழிக்கும் நடவடிக்கையோ அல்லது அவர்களை அவதூறு செய்யும் முயற்சியோ அல்ல. தவறுகளைச் சுட்டிக்காட்டுவது வெறுமனே குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கும் வேலையுமல்ல. இந்தத் தவறுகளிலிருந்து நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தத் தவறுகளை நாங்கள் எங்களிடமிருந்து வேரோடு களைய வேண்டியிருக்கிறது. இனி ஒரு துப்பாக்கிக் குண்டு துப்பாக்கியின் குழலிருந்தல்ல, நமது எண்ணங்களிலிருந்து கூடப் புறப்படக்கூடாது. ஆயுதப்போராட்டத்திற்கான எண்ணக்கருவை எமது சமூகத்தில் விதைத்த முன்னோடிகளில் ஒருத்தி என்ற வகையில் நான் உங்கள் முன் வெட்கித்து நிற்கின்றேன். ஆயுதப்போராட்டத்தில் நல்ல போராட்டம் , மோசமான போராட்டம் என்று எதுவுமே கிடையாது. ஆயுதம் மோசமானது மட்டுமே… அது எவர் கையிலிருந்தாலும் அழிவைத் தவிர வேறொன்றிற்கும் அது பயன்படாது."

எமது இலக்கிய குடும்பத்தின் சகோதரி புஷ்பராணி பூரண சுகம்பெற்று இலக்கிய சந்திப்புகளில் இணைந்துகொள்ளவேண்டும்.

நான் பெரிதும் மதிக்கும் ஒருவர் புஷ்பராணி. என்னை அவரிடம் அழைத்துச்சென்ற தோழர் ராயப்பு அழகிரி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி.

( தொடரும் )

letchumananm@gmail.com

No comments: