இலங்கைச் செய்திகள்

நீதிபதி விலகல்; ஜனாதிபதி அதிரடி உத்தரவு 

பாலியல் குற்றச்சாட்டு: குணதிலக்க குற்றமற்றவரென நீதிமன்றம் தீர்ப்பு

‘கொழும்பு துறைமுக நகரம்’ – ‘கொழும்பு நிதி வலயம்’ ஆக மாற்ற புதிய சட்டம்

டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நவீன இலங்கை: ‘INFOTEL கண்காட்சி’ நவம்பர் 03 – 05 வரை BMICH இல்

யாழ். பல்கலைக்கு விஜயம் செய்த பிரான்ஸ் தூதுவர்

யாழில். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்நீதிபதி விலகல்; ஜனாதிபதி அதிரடி உத்தரவு 

September 30, 2023

குருந்துமலை விவகாரம் உள்ளிட்ட முக்கியமான வழக்குகளை விசாரணைக்கு உட்படுத்தி
வருகின்றன முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் ரி.சரவணராஜா, தனக்கு மரண
அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகக் கூறி பதவியை இராஜினாமா செய்தமை தொடர்பில்
விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியின்
செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு பணித்துள்ளார்.

தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக இதற்கு முன்னர் பொலிஸ் நிலையத்தில்
அல்லது நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் நீதவான் முறையிடவில்லை என்பதால்
ஜனாதிபதி இவ்வாறு பணித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மற்றும்
பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.
அந்த விசாரணைகளின் போது, தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில்
பொலிஸ் நிலையத்திலோ அல்லது நீதிச் சேவைகள் ஆணைக்குழுவிலோ, நீதவான் இதற்கு
முன்னர் முறைப்பாடு செய்யவில்லை என்று அவ்விருவரும் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பில் சட்டமா அதிபரிடம் விசாரித்த போது, நீதவானை பிரதிவாதியாகக்
குறிப்பிட்டு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில்
ஆஜராகுமாறு நீதிச்சேவை ஆணைக்குழு அறிவுறுத்தியதன் பிரகாரம், நீதவானின்
உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்குச் சென்று அறிவுறுத்தியதாக சட்டமா அதிபர்
தெரிவித்துள்ளார்.

தனது அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, தன்னுடைய பதவியை இராஜினாமா செய்வதாக கூறி
23 ஆம் திகதியிட்ட கடிதத்தை நீதிச்சேவைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பியிருந்த நீதவான்
ரி.சரவணராஜா, நாட்டிலிருந்து 24ஆம் திகதியன்று வெளியேறிவிட்டார்.    நன்றி தினகரன் பாலியல் குற்றச்சாட்டு: குணதிலக்க குற்றமற்றவரென நீதிமன்றம் தீர்ப்பு

- குற்றத்தை நிரூபிக்கத் தவறியதாக நீதிபதி தெரிவிப்பு

September 29, 2023 12:04 pm 

ரி20 உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலியா சென்றிருந்தபோது பெண் ஒருவர் மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உடலுறவின்போது ஆணுறையை அகற்றுவதற்கான சந்தர்ப்பம் குணதிலக்கவுக்கு இருக்கவில்லை என்பது ஆதாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் பொலிஸுக்கு வழங்கிய வாக்குமூலத்தில் உண்மையாக இருந்தார் என்று தீர்ப்பளித்த நீதிபதி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் 2 ஆம் திகதி 29 வயதான சிட்னி பெண் உடன் அவரது கிழக்கு புறநகரில் இருக்கும் வீட்டில் உடலுறவில் ஈடுபட்டபோது பெண்ணின் விருப்பத்திற்கு முரணாக திருட்டுத்தனமாக ஆணுறையை அகற்றியதாகவே 32 வயதான குணதிலக்க மீது குற்றம்சாட்டப்பட்டது. எனினும் இந்தக் குற்றசாட்டை குணதிலக்க மறுத்த நிலையில் கடந்த வாரம் இடம்பெற்ற நான்கு நாள் வழங்கு விசாரணைக்கு பின்னர் டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி சாரா ஹுக்கட் நேற்று (28) தீர்ப்பு வழங்கினார்.

இதன்போது குணதிலக்க குற்றமற்றவர் என தீர்ப்பளித்த நீதிபதி கூறியதாவது, “உடலுறவு தொடர்ச்சியாக இடம்பெற்றதன் காரணமாக, குற்றம்சாட்டப்பட்ட வகையில் ஆணுறையை அகற்றுவதற்கான சந்தர்ப்பம் இருக்கவில்லை என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டது” என்றார்.

இதில் டென்னி என்று அழைக்கப்பட்ட குணதிலக்க மற்றும் அந்தப் பெண் கடந்த ஆண்டு ஒக்டோபர் 29 ஆம் திகதி டேடிங் செயலியான டின்டர் மூலம் நட்பாகி இருப்பதோடு இருவரும் வீடியோ அழைப்பு உட்பட இஸ்டாகிராம் மற்றும் வட்ஸ்அப் செயலி ஊடாகவும் தொடர்பில் இருந்துள்ளனர்.

இருவரும் ஒபெரா மதுபான விடுதியில் குடித்துவிட்டு பிராங்கிஸ் பிசாவில் இரவு உணவை எடுத்துக் கொண்டு பின்னர் படகு மூலம் குற்றம்சாட்டிய பெண்ணின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். அங்கு அந்தப் பெண் கிட்டார் வாசிப்பது மற்றும் பாட்டுப் பாடுவதை குணதிலக்க பதிவு செய்துள்ளார்.

புத்திசாலிப் பெண்”

“பிடிக்கப்பட்ட அந்த வீடியோக்கள் மூலம் அங்கு ஓய்வான, மகிழ்ச்சியான மற்றும் கொண்டாட்டம் நிறைந்த உணர்வு ஒன்று இருந்துள்ளது” என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

குற்றம்சாட்டும் பெண் புத்திசாலித்தனமாக செயற்படுவதாகவும் ஒரு சாட்சியாகவன்றி “வேண்டுமென்றே தவறான சாட்சியங்களை வழங்குவதற்கான விருப்பத்தால் தூண்டப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்ட நீதிபதி, அந்தப் பெண் குற்றம்சாட்டியவரை சாதகமற்றவராக சித்தரிக்கும் நோக்கமுடையவராக இருந்துள்ளார்” என்றார்.

இரண்டு நாட்கள் வாக்குமூலம் அளித்த அந்தப் பெண் குணதிலக்க தம்மை வலுக்கட்டாயமாக முத்தமிட்டதாகவும் தனது வீட்டுக்கு செல்லும் வழியில் படகில் தனது பின்புறமாக அடித்ததாகவும் குற்றம்சாட்டியிருந்தார். அதேபோன்று ஓய்வறைக்கு தன்னைத் தள்ளியதாகவும் அந்தப் பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

எனினும் தனுஷ்க குணதிலக்கவின் சார்பில் வாதாடிய வழங்கறிஞர் முருகன் தங்கராஜின் குறுக்கு விசாரணையில் தாமே அறைக்குச் செல்ல குணதிலக்கவை அழைத்ததை அந்தப் பெண் ஒப்புக்கொண்டதோடு உணர்வை ஏற்படுத்தும் வகையில் மெழுவர்த்தியை ஏற்றியதாகவும் ஒப்புக்கொண்டார்.

நிரூபிக்கத் தவறிய குற்றச்சாட்டு

குணதிலக்க குறைந்தது மூன்று முறை தன்னை மூச்சுத்திணற வைத்ததாக அந்தப் பெண் கூறியதோடு தனது படுக்கையறையில் 10 தொடக்கம் 15 நிமிடங்கள் இடம்பெற்ற வலுக்கட்டாயமான உடலுறவின்போது பின்புறமாக அடித்ததாகவும் குறிப்பிட்டார்.

பாலியல் உறவு முடிவுற்ற மூன்று தொடக்கம் ஐந்து விநாடிகளில் படுக்கையறை தரையில் ஆணுறை இருப்பதைக் கண்டதாக அந்தப் பெண் வழக்கு விசாரணையில் கூறினார். ஆணுறையை குணதிலக்க அங்கு வீசியதாக குற்றம்சாட்டிய அந்தப் பெண் அதனை அவர் வீசுவதை காணவில்லை என்று குறிப்பிட்டார்.

வழக்குத்தொடுநர் கெப்ரியல் ஸ்டீட்மன் வாதாடியபோது, “அவரது (பெண்ணின்) எதிர்பார்ப்பு மற்றும் விரும்பியதற்கு மாற்றமாக இது இருந்தது” என்று குறிப்பிட்டதோடு, அவரது நடத்தை “அந்த மனநிலையில், அவரது (பெண்ணின்) தெளிவான விருப்பத்திற்கு மாறாக ஆணுறையை அகற்றும் விருப்பத்தை கொண்டதாக இருந்தது” என்றும் தெரிவித்தார்.

எனினும் பிரதிவாதியின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் முருகன் தங்கராஜ், “உடலுறவின்போது குணதிலக்க ஆணுறையை அகற்றுவதற்கு வாய்ப்பு இருக்கவில்லை என்றும் அது தொடர்ச்சியான உடலுறவாக இருந்தது என்றும் அந்தப் பெண்ணும் விபரித்திருந்தார்” என்று வாதிட்டார்.

வழக்குத்தொடுநரால் இதனை நிரூபிக்க முடியாமல் போயிருப்பதாகவும் தங்கராஜ் குறிப்பிட்டிருந்தார்.

உண்மை பேசிய குணதிலக்க

ரி20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்றுவிட்டு இலங்கை திரும்புவதற்காக இலங்கை அணியினர் நவம்பர் 6 ஆம் திகதி ஹியாட் ரிஜென்சி ஹோட்டலில் இருந்து விமானநிலையத்திற்கு புறப்படுவதற்கு முன்னரே குணதிலக்க கைது செய்யப்பட்டார். இதன்போது அவரது ஹோட்டல் அறை பொலிஸாரால் சோதனை செய்யப்பட்டது. அங்குள்ள பை ஒன்றில் இருந்து இரு ஆணுறைகள் கைப்பற்றப்பட்டன.

“அவரிடம் இரு ஆணுறைகள் இருப்பதைக் கொண்டு அவர் குறித்த சந்தர்ப்பங்களில் ஆணுறை அணிவது உறுதியாகிறது” என்று நீதிமதி தெரிவித்துள்ளார்.

குணதிலக்க பதிவு செய்யப்பட்ட இரண்டரை மணி நேர பொலிஸ் விசாரணைக்கு முகம்கொடுத்திருந்தார். “எந்த சந்தர்ப்பதிலாவது ஆணுறையின்றி உடலுறவில் ஈடுபட்டீர்களா?” என்று பொலிஸார் கேட்டபோது, “இல்லை, இல்லை, இல்லை” என்று குணதிலக்க பதிலளித்தார்.

ஆணுறையுடன் உடலுறவு கொள்ள விரும்பவில்லை என்று அந்தப் பெண்ணிடம் கூறியதை குணதிலக்க ஒப்புக்கொண்டார். அந்தப் பெண்ணே ஆணுறையை எடுத்து வந்ததாக குறிப்பிட்டார்.

“ஆணுறையின்றி செய்ய வேண்டும் என்று நான் ஒருபோதும் கூறவில்லை” என்று குறிப்பிட்ட குணதிலக்க “நாம் ஆணுறையுடனேயே செய்தோம்” என்றார்.

அந்த விசாரணையில் குணதிலக்கவிடம் கேட்கப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்திருப்பதாக குறிப்பிட்ட நீதிபதி, “உண்மையாக இருப்பதற்கும் பொலிஸாருக்கு உதவுவதற்கும் அவர் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளார் என்றே முடிவுக்கு வரவேண்டியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

“அந்த விசாரணையில் அவர் கூறியவற்றை நிராகரிப்பதற்கு அல்லது நம்பாமல் இருப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை” என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

பெண்ணின் ஆதாரங்களே எதிரானது

குணதிலக்க “மிருகமாக மாறியதாகவும் உண்மையில் மிகப் பயங்கரமான ஒன்று நடந்ததாகவும்” அந்தப் பெண் தனது நண்பர்களிடம் தெரிவித்ததாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது. ஆணுறை தொடர்பில் அந்த பெண் நண்பர்களிடம் கூறும்போது, “அவர் அதனை அகற்றினாரா என்பது எனக்குத் தெரியாது” என்று குறிப்பிட்டதோடு “எனக்கு உறுதியாகத் தெரியாது அப்படி உணர்கிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

நீதிபதி கூறியதாவது, “குற்றம்சாட்டுபவரின் ஆதாரங்கள் குற்றம்சாட்டுபவருக்கு ஆதரவாகவன்றி அதனை குறைத்து மதிப்பிடுவதாக உள்ளது” என்றார்.

அந்தப் பெண் உண்மையானவரல்ல என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட தங்கராஜ், படகில் இருந்த சிசிடீவி மற்றும் கண்காணிப்பு கெமராவில் இந்த ஜோடி முத்தமிடுவது மற்றும் கட்டிப்பிடிப்பது தெரிகிறது என்றும் அது எனது கட்சிக்காரர் வலுக்கட்டாயமாகவும் கடுமையாகவும் செயற்பட்டதாக அந்தப் பெண் விபரிப்பதற்கு முரணாக இருப்பதாகவும் தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

குணதிலக்க கைது செய்யப்பட்டதை அடுத்து கிரிக்கெட் ஆடுவதில் இருந்து அவர் இடைநிறுத்தப்பட்டார். 2015 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான குணதிலக்க இலங்கை அணிக்காக எட்டு டெஸ்ட் போட்டிகள் உட்பட 100க்கும் அதிகமான போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அவர் ரி20 உலகக் கிண்ண போட்டியில் ஆடுவதற்காக அவுஸ்ரேலியா சென்றபோதும் ஒரு போட்டியில் ஆடிய பின் உபாதை காரணமாக அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணைக்கு முன்னரே இந்த வழக்குத் தொடர்பில் ஊடகங்கள் அதிக அவதானம் செலுத்தியதால் வழக்கு விசாரணை ஒரு நீதிபதியை கொண்டதாக நடத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தனது வருவாயைக் கொண்டு பெற்றொருக்கான உதவிகளை வழங்க வேண்டி இருப்பதாக குணதிலக்க விடுத்த கோரிக்கையை அடுத்தே இந்த வழக்கு விசாரணை துரிதப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் கிரிக்கெட் ஆட திட்டமிடும் குணதிலக்க

பாலியல் குற்றச்சாட்டில் நிரபராதியென அறிவிக்கப்பட்ட தனுஷ்க குணதிலக்க நீதிமன்றத்தின் தீர்ப்பின் பின், தான் கிரிக்கெட் விளையாட்டுக்கு திரும்ப விரும்புவதாகவும் கலங்கத்திற்கு உள்ளான தனது நற்பெயரை கட்டியெழுப்பவுள்ளதாகவும் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

“கடந்த பதினொரு மாதங்களும் எனக்கு கடுமையாக இருந்தன. எனது முகாமையாளர், குறிப்பாக எனது வழக்கறிஞர் முருகன் தங்கராஜுக்கு நான் நன்றிகளை கூறிக்கொள்கிறேன்.

எனது வாழ்வு வழக்கத்திற்கு திரும்பியதை இட்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். நாடு திரும்பி மீண்டும் கிரிக்கெட் ஆடுவதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்” என்று குணதிலக்க குறிப்பிட்டார்.

இதேவேளை பாலியல் குற்றச்சாட்டில் இருந்து நிரபராதியாக்கப்பட்ட தனுஷ்க குணதிலக்க மீது விதிக்கப்பட்ட தற்காலிக போட்டித் தடையை நீக்குவது குறித்து இலங்கை கிரிக்கெட் சபை ஆலோசித்து வருவதாக தெரியவருகிறது.   நன்றி தினகரன் 


‘கொழும்பு துறைமுக நகரம்’ – ‘கொழும்பு நிதி வலயம்’ ஆக மாற்ற புதிய சட்டம்

- அதில் இலங்கை முதலீட்டுச் சபையை பொருளாதார ஆணைக்குழுவாக மாற்றியமைக்கவும் நடவடிக்கை

September 26, 2023 8:12 pm 

இலங்கையின் பிரச்சினைகளை செயல்திறனுடன் தீர்ப்பதற்கு தற்போதுள்ள முறைமைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டியது அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நீதிமன்றங்களுக்குள் நீண்டகாலமாக வழக்கு விசாரணைகள் நீடிப்பது நெருக்கடியாக அமைந்துள்ளதாகவும், பிரச்சினைகளை தீர்ப்பதற்கான மாற்று வழிகளை கண்டறிய வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இன்று (26) நடைபெற்ற 2023 வர்த்தக மத்தியஸ்தம் தொடர்பான மாநாட்டிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேசிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கான மத்தியஸ்தானத்தினால் (IADRC) இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

2018 ஆம் ஆண்டில் மாற்று பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான மத்தியஸ்தானம் ஒன்று நிறுவப்பட்டிருப்பதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி அதன் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கு அரசாங்கம் அர்பணிப்புடன் செயற்படுவதாகவும் தெரிவித்தார். இந்த ஆரம்பத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதித்துறை மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அதிகாரிகளிடத்தில் கேட்டுக்கொண்டார்.

இலங்கையின் திறந்த பொருளாதார கொள்கையை அமுல்படுத்துவதற்கு பிரச்சினைகளை தீர்ப்பதில் காணப்படும் சாதக நிலைமை முக்கிய பங்கு வகிப்பதாகவும், கொழும்பு துறைமுக நகரத்தை கொழும்பு நிதி வலயமாக மாற்றியமைப்பதற்கான சட்டமூலத்தை உருவாக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

அந்த சட்டத்தின் ஊடாக முதலீட்டுச் சபையை, பிரச்சினைகளுக்கு செயல்திறனுடன் தீர்வுகளை பெற்றுக்கொடுக்கக்கூடிய பொருளாதார ஆணைக்குழுவாக மாற்றியமைக்க தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சர்வதேச சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களின் முக்கியத்துவம் மற்றும் மாற்று பிரச்சினைகளை தீர்பதற்கான மத்தியஸ்தானமாக இலங்கையை மாற்றியமைப்பதற்கான அவசியத்தையும் வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டின் போட்டித்தன்மை மிக்க எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக இலங்கையின் எல்லைகளுக்கு அப்பால் சென்று செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் புளொக்செயின், பசுமை வலுசக்தி உள்ளிட்ட வளர்ந்து வரும் துறையில் சிறப்பம்சங்களை உருவாக்க ஒன்றுபடுமாறு சட்ட வல்லுநர்களிடத்தில் கேட்டுக்கொண்டார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“மாற்று பிரச்சினைகளை தீர்த்தல் மற்றும் மத்தியஸ்தம் உள்ளிட்ட இரு துறைகளிலும் இலங்கை பெருமளவான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்பதே தற்போதைய பிரச்சினையாகும். நாம் முதலில் இந்த செயன்முறைக்கு எவ்வாறு எம்மை வடிவமைத்துக்கொள்வது என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும்.

அது தொடர்பில் எமக்கு கலாசார ரீதியான மாற்றம் அவசியம். குறுகிய காலத்தில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய வகையில் அந்த மாற்றங்கள் அமைய வேண்டும். அதேபோல் நாம் பழமையான நீதிமன்ற கட்டமைப்புடன் இணைந்துள்ளமை எமக்கு சவாலான விடயமாகும்.

நாம் இலங்கையை பொருளாதார மத்தியஸ்தானமாக மாற்றியமைக்க வேண்டும். கடல்சார் நடவடிக்கைகள் தொடர்பில் தேவையான சட்ட ஏற்பாடுகளுடன் துறைமுக நகரத்தை “கொழும்பு நிதி வலயமாக” மாற்றுவதற்கு புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும். அந்த சட்டத்தை உருவாக்கும் பணிகள் இவ்வருட இறுதிக்குள் நிறைவடையும். அடுத்தபடியாக முதலீட்டு ஊக்குவிப்புச் சபைக்கு மாறாக பொருளாதார ஆணைக்குழுவொன்றை நிறுவ வேண்டும் என்பதோடு, மேற்படி விடயம் சார்ந்த பிரச்சினைகளுக்கு அந்த ஆணைக்குழுவே தீர்வுகளை வழங்கும்.
நாம் பல சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களுக்குச் செல்லவுள்ளோம். சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுடன் ஒப்பந்தம் தொடர்பிலான பேச்சுக்கள் நிறைவை எட்டியுள்ளன. மேம்படுத்தப்பட்ட ஒப்பந்தமொன்று தொடர்பில் இந்தியாவுடனும் கலந்தாலோசித்துள்ளோம். பங்களாதேஷுடனும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கு மேலதிகமாக பிராந்தியத்தின் பரந்த பொருளாதார கூட்டிணைவான (RCEP) அமைப்பினுள் இணைந்துகொள்ள எதிர்பார்த்துள்ளோம். உலகின் வலுவான பொருளாதார சமூகம் அதற்குள் இருக்கின்றது. அதனால் எமக்கு மாற்று பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியதன் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள வேண்டும்.

அதேபோல் இலங்கையை பொருளாதார கேந்திர நிலையமாக உறுதிப்படுத்த வேண்டும். சிங்கப்பூரை போன்ற அபிவிருத்தியை இலங்கையில் ஏற்படுத்த நாம் முயற்சிக்க வேண்டும். அதன்போது சிங்கப்பூருக்கு நிகராக எமது செலவீனங்கள் குறைவடைய வேண்டும். அதனால் சிங்கப்பூருடன் போட்டியிடும் இயலுமையும் எமக்கு கிட்டும். அந்த இடைவெளியை குறைத்துக்கொள்ள வேண்டுமெனில் எமது பயணத்தை துரிதப்படுத்த வேண்டும்.

அடுத்ததாக, நாட்டின் சட்டத்தரணிகளும் ஏனைய நீதித்துறை சார்ந்தவர்களும் மாற்றுச் செயற்பாடுகள் தொடர்பிலும் சிந்திக்க வேண்டும். இலங்கை உங்களுக்கான சந்தையல்ல, இலங்கைக்கு வெளியிலேயே உங்களுக்கான மிகப்பெரிய சந்தை வாயப்பு உள்ளது. இந்த துறை மாத்திரமின்றி புதிய துறைகள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு (AI), புளொக் செயின் மற்றும் மருத்துவத் துறை உள்ளிட்ட அபிவிருத்தி கண்டுவரும் துறைகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும். அதனை செய்யும் பட்சத்தில் நாம் பொருளாதார மத்தியஸ்தானமாக மாற முடியும். நாம் தாமதமடைந்தால் அந்த வாய்ப்பு மற்றுமொருவருக்கு கிட்டும்.

காலநிலை அனர்த்தங்கள் தொடர்பில் கவனம் செலுத்தும் போது, நாம் பாரிய அர்பணிப்புக்களை செய்து வருகிறோம். பசுமை ஹைட்டிரிஜன், பச்சை அமோனியா மற்றும் காற்றின் மூலம் 60 கிகாவோட் மின் உற்பத்தியை மேற்கொள்ள முடியும். சிலர் 40 கிகாவோட்களை உற்பத்திச் செய்ய முடியும் என்றும் கூறுகின்றனர்.

அது தொடர்பிலான வர்த்த வாய்ப்புகள் தொடர்பில் நாம் அவதானம் செலுத்த வேண்டியுள்ளது. அத்தோடு அனைத்து புதிய துறைகள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.

மேற்படி துறைகளில் கல்வி,நிபுணத்துவ தெரிவுகளை பெற்றுக்கொள்ளல் மற்றும் மேம்படுத்தல்களுக்கு அவசியமான தேவைப்பாடுகளை பெற்றுக்கொடுக்க தயாராகவுள்ளோம். இலங்கையை செயல்திறன் மிக்க தூரநோக்குடன் கூடிய சட்ட சூழலை கொண்ட நாடாக மாற்றியமைப்பதற்கான பயணத்தில் இணைந்துகொள்ளுங்கள்.” என ஜானாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.

நீதி மற்றும் சிறைச்சாலைகள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சட்டத்தரணி கலாநிதி விஜேதாச ராஜபக்‌ஷ, நீதி மற்றும் சிறைச்சாலைகள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன, உயர் நீதிமன்ற நீதியரசர்கள், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர்கள், தூதுவர்கள், முன்னாள் தூதுவர்கள், இலங்கையின் அபிவிருத்து வேலைத்திட்டங்களுக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி அசூசா குபோடா, மாற்று பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சர்வதேச மத்தியஸ்தானத்தின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி கே. கணக ஈஸ்வரன், மாற்று பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சர்வதேச மத்தியஸ்தானத்தின் பணிப்பாளர் நாயகம் தாரா ஜயதிலக்க உள்ளிட்டவர்களுடன் சட்டத்தரணிகள், இலங்கை முன்னணி நிறுவனங்களின் பிரநிதிகள் பலரும் பங்குபற்றினர்.   நன்றி தினகரன் 


டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நவீன இலங்கை: ‘INFOTEL கண்காட்சி’ நவம்பர் 03 – 05 வரை BMICH இல்

September 26, 2023 4:51 pm 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நவீன இலங்கையை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக இலங்கை தகவல் தொழில்நுட்ப கைத்தொழில் சபையினால் (Federation of Information Technology Industry Sri Lanka (FITIS) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘INFOTEL தகவல் தொழில்நுட்ப கண்காட்சி’ நவம்பர் 03 முதல் 05 வரை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெறவுள்ளது.

தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சின் வழிகாட்டலின் கீழ் ‘டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துதல்’ என்ற தொனிப்பொருளின் கீழ் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடக மாநாடு தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தலைமையில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (26) நடைபெற்றது.

இக்கண்காட்சி இலங்கையின் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப துறையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும், டிஜிட்டல் பொருளாதாரம், இணைய இணைப்பை மேம்படுத்துதல் மற்றும் விரிவுபடுத்துதல், டிஜிட்டல் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், பாதுகாப்பான டிஜிட்டல் கட்டமைப்புகள் மற்றும் தீர்வுகளை பாதுகாத்தல், பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவித்தல் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான மனித வளத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு இந்த கண்காட்சி சிறந்த வாய்ப்பை வழங்கும் எனவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அபிவிருத்தியடைந்த நாடுகள் தமது பொதுச் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கியுள்ளதாகவும், இதனால் வினைத்திறன் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், 2030 ஆம் ஆண்டுக்குள் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இலங்கையை கட்டியெழுப்புவதற்கான அரசாங்க வேலைத்திட்டத்தை வெற்றிகொள்ளும் நோக்குடன் ‘INFOTEL தகவல் தொழில்நுட்ப கண்காட்சி’ ஏற்பாடு செய்யப்பட்டமை தொடர்பில் அவர் தகவல் தொழில்நுட்ப கைத்தொழில் சபைக்கு தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த இலங்கை தகவல் தொழில்நுட்ப கைத்தொழில் சபையின் தலைவர் இந்திக்க டி சொய்சா, 2030 ஆம் ஆண்டளவில் டிஜிட்டல் பொருளாதாரத்தின் ஊடாக 15 பில்லியன் அமெரிக்க டொலர்களை அரச வருமானத்திற்கு அளிக்க எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.

இந்த கண்காட்சியானது டிஜிட்டல் புத்தாக்க சூழலை உருவாக்குவதோடு, டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்தவும், இந்த நாட்டில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் உதவும் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்தக் கண்காட்சிக்கான அனுசரணை காசோலைகளும் இதன் போது கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சின் மேலதிகச் செயலாளர் (அபிவிருத்தி) எம். பி. என். எம். விக்ரமசிங்க, ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் ‘INFOTEL’ ஞானம் செல்லத்துரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


யாழ். பல்கலைக்கு விஜயம் செய்த பிரான்ஸ் தூதுவர்

September 26, 2023 2:27 pm 0 comment

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் ப்ராங்கோஸிஸ் பக்றெற் தலைமையிலான குழு ஒன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள பிரான்ஜ் தூதுவர் தலைமையிலான குழுவினர் இன்று (26) காலை 10.00 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்தனர்.

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் ப்ராங்கோஸிஸ் பக்றெற், கலாசார ஒத்துழைப்புக்கான துணைத் தூதுவர் ஒலிவியா பெலீமியர் மற்றும் பிரான்ஸ் தூதரகத்தின் ஊடகத் தொடர்பாடல் அதிகாரி டினுசா இல்லப்பெருமா ஆகியோர் அடங்கிய குழுவினரே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்தனர்.

பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்த பிரான்ஸ் தூதுவர் தலைமையிலான குழுவினரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, பதிவாளர் வி. காண்டீபன், கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம் ஆகியோர் சந்தித்துக் கலந்துரையாடினர்.

சமகால விடயங்கள் மற்றும் பிரான்ஸ் தூதரகத்தினூடாக யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் முன்னெடுக்கப்படும் கற்றல் மற்றும் ஆராய்சி செயற்றிட்டங்களின் மீளாய்வு குறித்து இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது

யாழ்.விசேட நிருபர் - நன்றி தினகரன் 


யாழில். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்

September 25, 2023 9:11 am

இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஸ் நாராயணன் யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வருகை தந்துள்ளார். யாழ் வருகை தந்த சந்தோஸ் நாராயணனை ஈழத்தின் புகழ் பெற்ற நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தி குமரன் உள்ளிட்டவர்கள் வரவேற்றனர்.

யாழ்.கோண்டாவில் உப்புடம் விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வை தொடர்ந்து, மங்கள வாத்தியத்துடன் கோண்டாவிலில் அமைந்துள்ள சந்தோஸ் நாராயணன் மனைவியின் பூர்வீக இல்லத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அதேவேளை சந்தோஸ் நாராயணன் அடுத்த மாதம் யாழ்ப்பாணத்தில் பெரியளவிலான இசை நிகழ்ச்சியை நடாத்த திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தினகரன் No comments: