மௌனம் ஏனோ (கவிதை) உஷா ஜவகர் (ஆவுஸ்திரேலியா)

 

அன்று நான் உன்

கழுத்தில் மங்கல நாண்

சூட்டினேன் மிக்க மகிழ்ச்சியுடன்

மணவறையில் நீ மௌனம்  காத்தாய்


பின் கூட்டு குடித்தனத்தில்

வாழ்ந்தோம் சில வருடங்கள்

சில பல பிரச்சினைகள்

வந்தாலும் நீ மௌனம் காத்தாய்


அதன் பின் தனிக் குடித்தனத்தில்

வாழ்ந்தோம் பல வருடங்கள்!

கோபக் கனல் தலைக்கேற

நான் கத்தினாலும் நீ மௌனம் காத்தாய்

 

ஆசைக்கொரு மகன் பிறந்தான்

எங்களுக்கு!  நாளும் பொழுதும்

ஏற அவன் வளர்ந்தான்

அப்போதும் நீ மௌனம் காத்தாய்!

 

மகன் அழகிய பெண்

ஒருத்தி மேலே காதல் கொண்டு

வீட்டுக்கு அழைத்து வந்தான்

அப்போதும் நீ மௌனம் காத்தாய்!

 

மகன் மருமகள் இருவர்

நாமிருவர் என ஒன்றாக

வாழ்ந்தோம் - சில பல பிரச்சினைகள்

வந்தாலும் - நீ மௌனம் காத்தாய்!

 

மகனும் மருமகளும் தனிக்கூட்டில்

வாழப் பறந்த போது

நான் கலங்கி அழுத போது

அப்போதும் நீ மௌனம் காத்தாய்!

 

     இப்போது நான் உன்னுடன்

ஆசையாய் பேசும் போதும்

 ஆவலாய் உன்னைத் தேடும் போதும்

 நீ - மௌனம் காக்கிறாயே!

 

ஏனெனில் என் அன்புத்தெய்வமான

நீயோ  இருப்பது புகைப்பட கட்டத்தினுள்

நானோ  இருப்பது  நான்கு சுவர்களின் நடுவே

தன்னந் தனியே முதியோர் இல்ல கட்டடத்தினுள்

xxx

 

 

 

 

 

 

1 comment:

Anonymous said...

Super