இலங்கைச் செய்திகள்

 இலங்கையில் இடம்பெற்ற இந்தியாவின் 77ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம்

தேயிலை உட்பட பெருந்தோட்ட தொழில்துறையை முன்னேற்ற புதிய செயற்றிட்டங்கள் அவசியம்

13 ஐ முழுமையாக அமுல்படுத்தி மாகாண தேர்தலை நடத்தவும்

இந்தோ – பசுபிக் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாடு ஆரம்பம்

தர பரிசோதனையில் 73 மருந்துகள் தோல்வி


இலங்கையில் இடம்பெற்ற இந்தியாவின் 77ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம்

August 16, 2023 4:47 pm 

இந்தியாவின் 77ஆவது சுதந்திர தினம் நேற்று ஓகஸ்ட் 15 ஆம் திகதி இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் உத்வேகத்துடன் கொண்டாடப்பட்டது.

கொழும்பில் பிரதான நிகழ்வு இந்திய உயர் ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான இந்திய இல்லத்தில் இடம்பெற்றது. இந்திய தேசியக் கொடியினை ஏற்றி வைத்த உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே அணிவகுப்பு மரியாதையினையும் பார்வையிட்டிருந்தார்.

அத்துடன் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய ஜனாதிபதியினால் மக்களுக்காக ஆற்றப்பட்டிருந்த உரையின் முக்கிய அம்சங்களும் உயர் ஸ்தானிகரால் இச்சந்தர்ப்பத்தில் வாசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பல நூற்றுக்கணக்கான இந்தியர்கள் இந்நிகழ்வில் பங்கு பற்றியிருந்தனர். இந்நிகழ்வுகளின் விசேட அம்சமாக ஐந்து முக்கிய அம்சங்களுக்கான உறுதிமொழி உயர் ஸ்தானிகரால் நிர்வகிக்கப்பட்டதுடன் அங்கு சமூகமளித்திருந்த அனைவரும் 2047 ஆம் ஆண்டில் இந்தியாவை அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவதற்கு திட சங்கற்பம் மேற்கொண்டதுடன் தேசத்தை கட்டி எழுப்புவதற்கும் தமது அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தியிருந்தனர்.

பல்வேறு கலாசார நிகழ்வுகள் இக்கொண்டாட்டங்களுக்கு மேலும் மெருகூட்டியிருந்தன. தேசப்பற்று மற்றும் வீரத்தினை பிரதிபலிக்கும் இசை மெட்டுகள் இலங்கை கடற்படையின் இசைக் குழுவினரால் இச்சந்தர்ப்பத்தில் இசைக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் உயர் ஸ்தானிகராலயத்தின் கலாசார பிரிவான சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தின் மாணவர்கள் “வைஷ்ணவ ஜனதோ” என்ற பாடலுக்கு பரத நாட்டிய ஆற்றுகையையும் அதே போல “வந்தே மாதரம்” பாடலுக்கு இந்திய மற்றும் இலங்கை நடன வகைகள் சங்கமித்த நடன நிகழ்வையும் அரங்கேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இலங்கையில் சமாதானம் மற்றும் ஐக்கியத்தினை பாதுகாப்பதற்காக உயிர்த்தியாகம் செய்த இந்திய அமைதிகாக்கும் படையினரின் நினைவுத்தூபியில் உயர் ஸ்தானிகரும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் ஏனைய அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இதேவேளை கண்டியில் உள்ள உதவி உயர் ஸ்தானிகராலயம், யாழ்ப்பாணம் மற்றும் அம்பாந்தோட்டையில் உள்ள கொன்சுலேட் ஜெனரல் காரியாலயங்கள் ஆகியவற்றாலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன.

இந்தியாவின் 75 வருடகால முன்னேற்றம் மற்றும் சுய சார்பு ஆகியவை குறித்து முன்னெடுக்கப்பட்ட உலகளாவிய ரீதியிலான செயற்திட்டமான “ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்” இந்த சுதந்திர தினத்தில் முழுமையடைகின்றது.

இந்நிலையில் 2047 ஆம் ஆண்டில் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவதற்காக “அம்ரித் கால்” எனப்படும் 25 வருடகால இந்திய வளர்ச்சிப் பயணத்தில் 2022 முதல் இந்தியா இணைந்துள்ளது.

“ஹர் கர் திரங்கா” முன்னெடுப்பில் பங்குகொண்டமை, இந்தியாவில் தாம் வளர்ந்த நினைவுகளை பகிர்தல், “மெறி மாற்றி மேரா தேஷ்” பிரசாரத்தின் கீழ் தாய் நாட்டுக்கு மரியாதை செலுத்துதல் ஆகியவற்றின் மூலம் இந்திய சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் சுதந்திர தினத்தை உற்சாகத்துடன் கொண்டாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 






தேயிலை உட்பட பெருந்தோட்ட தொழில்துறையை முன்னேற்ற புதிய செயற்றிட்டங்கள் அவசியம்

– பெருந்தோட்ட தொழில்துறையில் நவீன டிஜிட்டல் தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்த வேண்டும்.

August 16, 2023 5:42 pm 

– இலங்கைத் தேயிலை தூய தேயிலை என சர்வதேச அளவில் கொண்டு செல்லும் இலக்கில் வெற்றியடையுங்கள்
– கொழும்பு தேயிலை வர்த்தகர்கள் சங்கத்தின் வருடாந்த மாநாட்டில் ஜனாதிபதி

தேயிலை உட்பட இலங்கையில் பெருந்தோட்ட தொழில்துறையை முன்னேற்றுவதற்கு புதிய வேலைத்திட்டம் ஒன்று தேவைப்படுவதாகவும், அது நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய சிறந்த வடிவமைப்பாக இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலில் நேற்று (15) பிற்பகல் நடைபெற்ற கொழும்பு தேயிலை வர்த்தகர்கள் சங்கத்தின் 129 ஆவது வருடாந்த மாநாட்டில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தில் பரந்த பங்களிப்பை வழங்குவதற்கு தேயிலை தொழில்துறைக்கு இன்னும் பலம் இருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அத்துறையில் உள்ள பிரச்சினைகளை அடையாளம் கண்டு, புத்தாக்கத்துடன் அதில் மாற்றத்தை ஏற்படுத்த தயாராக வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபத ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:

நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதன் மூலம் நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து காப்பாற்றும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம். ஆனால், நமது நாட்டின் பொருளாதாரத்தில் வர்த்தக பற்றாக்குறை ஏற்பட்டால், இந்த பொருளாதார ஸ்திரத்தன்மையை 10 ஆண்டுகளுக்கு மேல் முன்னெடுக்க முடியாது. எமக்கு வெளிநாட்டுக் கடன் பெற நேரிடும். பட்ஜெட் பற்றாக்குறை ஏற்படுவதால் அதிக பணம் அச்சிட வேண்டும். மீண்டும் இந்த பழைய முறைக்கு செல்வதா அல்லது முறையான பொருளாதார முறை மூலம் எழுந்து நிற்பதா என்பதை முடிவு செய்ய வேண்டும். மேலும் புதிதாக சிந்தித்து புதிய பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

யுத்த காலத்திலும் எமது நாட்டின் பொருளாதாரம் வலுவாகவே இருந்தது. யுத்த காலத்திலும் நாம் ஆடைத் தொழிற்சாலைகளை ஆரம்பித்ததை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். எவ்வாறாயினும், உரிமை மற்றும் ஒழுங்குமுறை ஆகிய இரண்டிலும் அரசாங்கத்தின் ஆதிக்கம் செலுத்தக் கூடிய பொருளாதாரத்தை பராமரிப்பது இன்று கடினமாக உள்ளது. கட்டுப்பாடுகளை நீக்குதல் மற்றும் தனியார்மயமாக்கல் ஆகியவை இப்போது நமக்கு இருக்கும் மாற்று வழிகளாகும்.

தேயிலை உற்பத்தி என்பது அரசாங்க ஆதரவுடன் கட்டமைக்கப்பட்ட தொழில் அல்ல. தனியார் மூலதனத்தைப் பயன்படுத்தி வெற்றி பெற்றவர்களின் தொழில் இது. இதில் சிலர் தோல்வியடைந்தனர். ஆனால் பலர் வெற்றி பெற்றனர். சிலர் விவசாயம் செய்து கொண்டிருந்த காணிகள் கூட சர்ச்சைக்குரிய வகையில் மீண்டும் கைப்பற்றப்பட்டன.

நாம் தற்போது எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும். நாட்டின் பொருளாதாரத்தில் பரந்த பங்கை வகிக்கும் பலம் தேயிலைத் தொழிலுக்கு இன்னும் உள்ளது. அடுத்த 20-30 வருடங்களில் கவனம் செலுத்தி இந்தத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை கண்டறிய வேண்டும்.

உலகளாவிய காலநிலை மாற்றத்தால், எதிர்காலத்தில் நாம் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தேயிலை தொழிலைக் காப்பாற்ற, இந்த மிதமான காலநிலை வலயத்தை, காலநிலை மாற்றத்திலிருந்து பாதுகாக்க வேண்டும். சர்வதேச மாநாடுகளில் இது தொடர்பான முன்மொழிவுகளை முன்வைத்துள்ளோம். இந்த நிலை உலகின் வடக்கு அரைக்கோளத்தில் ஏற்பட்ட பாரிய தொழில்மயமாதலின் பாதகமான விளைவு என்றும் இதனை குறிப்பிடலாம். காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப நாம் மாற வேண்டும். மேலும் நீர் தொடர்பான நிலைமை மிகவும் ஆபத்தானது என்றுதான் சொல்ல வேண்டும். காலநிலை மாற்றத்தால் இலங்கையில் பயன்படுத்தக்கூடிய நீர் மூலங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய தகவல்களை அண்மையில் படித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. பெரும்பாலான நீர் மூலங்கள் மத்திய மலைநாட்டில் இருப்பதால், அது நேரடியாக தேயிலை தொழிலை பாதிக்கிறது. இன்னும் 50 முதல் 60 வருடங்களில் நமது சந்தை எங்கே இருக்கும் என்று பார்க்க வேண்டும்.

2050 ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகை வளர்ச்சியின் கணிப்புகளைப் பார்க்கும்போது, ​​இந்தியாவின் மக்கள்தொகை மேலும் 400 மில்லியன்களால் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. கென்யா, மலாவி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது. அதனுடன் இணைந்ததாக அந்த நாடுகளின் தனிநபர் வருமானமும் அதிகரிக்கிறது.

ஆனால் இலங்கையின் சனத்தொகை அதிகரிக்கவில்லை. எனவே, எங்கள் உற்பத்திகளை எவ்வாறு மேம்படுத்துவது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். சீனா திட்டமிட்டு மக்கள் தொகையை கட்டுப்படுத்தி வருகிறது. எதிர்காலத்தில், சீனாவில் இருந்து அதிகமான தேயிலை சந்தைக்கு வரும். இது உங்களுக்கு நல்ல வாய்ப்புகளை உருவாக்கும். மேலும் இந்தியாவும் தேயிலை சந்தைக்கு வருகிறது. எனவே இந்தியா மற்றும் சீனாவுடன் இது குறித்து கலந்துரையாட வேண்டும். எங்களுக்கு தனியாக பயணிக்க முடியாது. அவர்களின் சந்தைப் போக்கை நீங்கள் கவனமாக நோக்க வேண்டும். உலகின் கிழக்கு மற்றும் மேற்கத்திய நாடுகள் தேயிலையை கொள்வனவு செய்து அதை பால் அல்லது பிஸ்கட்டுடன் சேர்த்துத் தயார் செய்து குடிக்கிறார்கள். இன்று, கிரீன் டீ உலகில் பிரபலமான பானமாக மாறிவிட்டது. தேயிலை தொடர்பான புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் உற்பத்திகள் பற்றி சிந்திக்க வேண்டும்.

நான் சிறுவயதில் எங்கள் வீட்டில் மிகப் பெரிய சமையலறை இருந்தது. ஆனால் இப்போது வீடுகளில் மிகச் சிறிய சமையலறை தான் உள்ளது. அடுத்த 20 முதல் 30 ஆண்டுகளில் சமையலறை இல்லாமல் வீடுகள் கட்டப்படும். அவற்றில் ஓரிரண்டு உணவு பதப்படுத்தும் இயந்திரங்கள் இருக்கும். எதிர்காலத்தில் நாம் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் இவை என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். அந்தச் சவால்களை நாம் உணர்ந்து அதற்கு ஏற்றவாறு மாற்றுவழிகளுடன் முன்னேற வேண்டும். சுவீடன் நாட்டுப் பொருளாதார நிபுணரான குன்னர் மிர்டலினால் 1960களில் எழுதப்பட்ட Asian Drama என்ற புத்தகத்தில் இலங்கையைப் பற்றி ஆய்வு செய்யப்பட்டிருந்தது. “ஆங்கிலேயர்கள் தொழில் புரட்சியில் இருந்து நிர்வாகம் மற்றும் நிதி பற்றிய அனுபவத்தைப் பெற்று இந்தியாவிற்கும் இலங்கைக்கும் அதனைக் கொண்டு வந்து பின்னர் அவற்றை பெருந்தோட்டத் துறையில் அறிமுகப்படுத்தினர். எனவே, எமக்கு நவீன தோட்ட முகாமைத்துவ முறைமை கிடைத்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுடன் ஒப்பிடுகையில் புதிய முகாமைத்துவ நடைமுறைகளைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது. இது அனைத்து நவீன டிஜிட்டல் நுட்பங்களையும் உள்ளடக்கிய ஒரு தலைசிறந்த படைப்பாக இருக்க வேண்டும்.

அதில் செயற்கை நுண்ணறிவு, உயிரியல் தொழில்நுட்பம் போன்ற துறைகளையும் பயன்படுத்த முடியுமா என்பது குறித்து ஆராய வேண்டும். இது தனியார் துறையினரால் உருவாக்கப்பட வேண்டும். லிப்டன் இலங்கைக்கு வரவில்லையென்றால் இன்று இவை எதுவும் இருந்திருக்காது. எனவே, அந்த முறைமையை மேம்படுத்துவதன் மூலம் புதிய தயாரிப்புகளை சந்தைக்குக் கொண்டுவருவதற்கான வழிகளை அவசரமாக அடையாளங்காண வேண்டும்.

அதற்கு உங்களுக்கு முழு ஆதரவை வழங்குவோம். தேயிலை தொழில்துறையின் எதிர்கால வளர்ச்சிக்கு அதுதான் எம்மால் செய்ய முடியும். அதனுடன் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்கவும் செயற்பட்டு வருகின்றோம்.

சர்வதேச ரீதியில் இலங்கை தேயிலையை தூய (pure) தேயிலையாக கொண்டு செல்லும் இலக்கை அடைய சிறந்த தீர்வுகளுடன் தொடர்ந்து செல்வதற்கு உங்களை அழைக்கிறேன். என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரன, ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் ஜனக தர்மகீர்த்தி, இலங்கை தேயிலை சபையின் தலைவர் நிராஜ் டி மெல், இலங்கை முதலீட்டுச் சபை மற்றும் துறைமுக நகரம் என்பவற்றின் தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான தினேஷ் வீரக்கொடி, கொழும்பு தேயிலை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் சஞ்சய் ஹேரத், உப தலைவர் லுஷாந்த டி சில்வா, முன்னாள் தலைவர்களான ஜனக கருணாரத்ன, அன்ஸ்லம் பெர்னாண்டோ ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.   நன்றி தினகரன் 





13 ஐ முழுமையாக அமுல்படுத்தி மாகாண தேர்தலை நடத்தவும்

-ஜனாதிபதிக்கு தமிழரசுக்கட்சி கடிதம்

August 16, 2023 6:22 am 

 

13 ஐ அமுல்படுத்தி மாகாண தேர்தலை நடத்துமாறு தமிழரசுக்கட்சி ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. அக்கடிதத்தில், அரசுகளால் தீர்வுக்காக வழங்கப்பட்ட பல்வேறு உறுதிமொழிகளுக்கு இணங்க தமிழ்த் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நடவடிக்கையை விரைந்து முடிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நேற்று முன்தினம் (14) எழுதிய கடிதத்திலேயே இந்த விடயத்தை சம்பந்தன் எம்.பி சுட்டிக்காட்டியுள்ளார்.

13 ஆவது அரசமைப்புத் திருத்தம் தொடர்பில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் நிலைப்பாட்டை அறியத் தருமாறு ஜனாதிபதி கோரியிருந்தார். அதற்கான காலக்கெடு நேற்றோடு (15) முடிவடைந்துள்ள நிலையில் சம்பந்தன் தமது ஐந்து பக்கக் கடிதத்தை அனுப்பி வைத்தார்.

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சமஷ்டிக் கட்டமைப்பிலேயே அர்த்தமுள்ள எந்தத் தீர்வும் சாத்தியம் என்ற நிலைப்பாட்டில் வேறு சமரசம் அல்லது விட்டுக் கொடுப்புச் செய்து கொள்ளாமல், அரசமைப்பில் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களையும் விரைவாக நடைமுறைப்படுத்தவும் என தெரிவித்துள்ளார். மேலும், நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்ட மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாம் விவரித்துள்ளபடி, தமிழ் மக்களின் அபிலாஷைகளின் அடிப்படையிலும் மற்றும் தொடர்ந்து வந்த அரசுகளால் தீர்வுக்காக வழங்கப்பட்ட பல்வேறு உறுதிமொழிகளுக்கு இணங்கவும் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நடவடிக்கையை விரைந்து செயற்படுத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அர்த்தமுள்ள எந்தத் தீர்வும் சமஷ்டி அடிப்படையில் அமைய வேண்டும் என்பது இந்தக் கடிதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. தமிழரின் தேசிய இனப் பிரச்சினை மற்றும் அவர்களின் நியாயமான அபிலாஷைகள் தொடர்பில் கடந்து வந்த ஒவ்வொரு அரசுகளும் அளித்த வாக்குறுதிகள் மற்றும் முயற்சிகள் இந்தக் கடிதத்தில் விவரிக்கப்பட்டுள்ளன.   நன்றி தினகரன் 





இந்தோ – பசுபிக் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாடு ஆரம்பம்

- கொழும்பில் 17ஆம் திகதிவரை இடம்பெறும்

August 16, 2023 6:10 am

 

இந்தோ – பசிபிக் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாடு திங்கட்கிழமை (14) கொழும்பில் ஆரம்பமானது. அமெரிக்க இந்தோ – பசிபிக் கட்டளை, இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர கடற்படை இணைந்து கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் ஏற்பாடு செய்துள்ள இம்மாநாடு எதிர்வரும் 17 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

நேற்றைய தினம் இடம்பெற்ற இதன் ஆரம்ப நிகழ்வில் அமெரிக்க தூதுவர் ஜூலி சங், காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்தன, பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றிருந்தனர்.

நான்கு நாட்கள் இடம்பெறவுள்ள இம்மாநாட்டில் இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் உள்ள மூத்த இராணுவ வீரர்கள் மற்றும் உயர்மட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கலந்து கொள்கின்றனர்.

இந்தோ-பசிபிக் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மன்றத்தின் 12 ஆவது பதிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பங்குதாரர்களிடையே கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதற்கான விளக்கக்காட்சிகள், குழு அமர்வுகள் மற்றும் குழு செயல்பாடுகளை உள்ளடக்குவதாக அமைந்துள்ளது.

இந்த ஆண்டுக்கான இந்தோ-பசிபிக் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாட்டில் 28 நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 140க்கும் மேற்பட்ட மூத்த அதிகாரிகள் மற்றும் உயர்மட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பங்கேற்கின்றனர்.

அத்தோடு, கடற்படைத் தளபதியின் வழிகாட்டுதல்களின் பேரில், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர கடற்படை ஆகியவை அமெரிக்க இந்தோ – பசிபிக் கட்டளையுடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 





தர பரிசோதனையில் 73 மருந்துகள் தோல்வி

- மருத்துவ விநியோக பிரிவு தெரிவிப்பு

August 16, 2023 5:17 am 0 comment

இந்த வருடத்தில் இதுவரை 73 மருந்துகள் தர பரிசோதனையில் தோல்வி அடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோக பிரிவு தெரிவித்துள்ளது. தர பரிசோதனைகளில் தோல்வியடைந்துள்ள மருந்துகளில் 45 வகையான மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று 17 மருந்து வகைகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நிலையில் ஏனையவை பாகிஸ்தான், ஜப்பான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கொள்ளப்பட்ட தர பரிசோதனையில் உரிய தரத்தை கொண்டிராத மருந்துகளில், சில மீளப் பெறப்பட்டன. அதேபோல சில மருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு முதல் மொத்தமாக 585 தரம் குறைந்த மருந்துகள் இனம்காணப்பட்டன. கடந்த 2019ஆம் ஆண்டில் 96 சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் 2022ஆம் ஆண்டில் 86 மருந்து வகைகள் தரக்குறைபாடுகளை கொண்டிருந்ததாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.   நன்றி தினகரன் 


No comments: