கட்டுரை இப்படியும் நடக்கிறது August 14, 2023

 அந்த நகரத்தில் அவர் ஒரு பிரபல்யமான நபர்.


நகரத்தில் உள்ளவர்கள் மதிக்கின்ற மனிதர்.
சந்தை கூடும் இடத்தில் ஓர் உயர்ந்த இடத்தில் அவர் நின்று கொண்டார்.
மக்கள் சந்தையை நோக்கிப்போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருந்தனர்.
‘அன்பார்ந்த நண்பர்களே? உங்களுக்கு உங்கள் வாழ்க்கைக்கு ஏற்ற அருமையான சில யோசனைகள் என்னிடம் இருக்கின்றன.
இவற்றை காது கொடுத்துக் கேட்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அருள் கூர்ந்து சற்று நில்லுங்கள் ‘ என்று அவர் உரத்த குரலில் கூறினார்.
அவர் என்ன சொல்லப் போகிறார் என்று அறிந்து கொள்வதற்காக ஒரு பெருங்கூட்டம் அங்கே கூடிற்று.
‘நண்பர்களே! கொஞ்சங்கூட உடல் உழைக்காமல் வீட்டில் இருந்தவாறே ஆயிரக்கணக்கில் சம்பாதித்து சுகபோக வாழ்வு வாழ உங்களில் எத்தனை பேருக்கு விருப்பம்? நான் அதற்கு வழி சொல்லுகிறேன் என்னுடைய யோசனைகளைக் கேட்கத்தயாராக இருப்பவர்கள் எத்தனை பேர்? அவர்கள் மட்டும் கைதூக்குங்கள்’ என்றார்.
அநேகமாக அங்கே இருந்த அத்தனை பேரும் கை தூக்கினார்கள்.
அவர் தாம் நின்றிருந்த இடத்தை விட்டுக் கீழிறங்கி நடக்கத் தொடங்கினார்.
‘என்ன ஒன்றும் சொல்லாமல் செல்லுகிறீர்களே?’ என்று மக்கள் கேட்டனர்.
‘நண்பர்களே நமது ஊரிலே எத்தனை சோம்பேறிகள் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள விரும்பினேன் என்னையும் சேர்த்து இந்த ஊரில் உள்ள
எல்லோருமே சோம்பேறிகள் தான் என்ற உண்மை எனக்கு விளங்கி விட்டது.
இனி எனக்கு இங்கே என்ன வேலை? போய் வருகிறேன்’ என்று கூறியவாறே நடக்கத் தொடங்கினார்.
தெற்கு ஊடகங்களில் இப்போது அதிகம் பேசப்படுவது, ஒரு தமிழர் அரச தொலைக்காட்சி ஒன்றை வாடகைக்கு எடுத்த விவகாரம்தான்.
அரச தொலைக்காட்சியான ரூபவாஹினி தொலைக்காட்சி நிறுவனம் தனது அலைவரிசை ஒன்றை தமிழர் ஒருவருக்கு சொந்தமான நிறுவனத்துக்கு சில
மாதங்களுக்கு குத்தகைக்கு வழங்கியிருக்கின்றது.
அதனைப் பார்த்துவிட்டு சிங்கள ஊடகங்களும் சில தெற்கு பத்தி எழுத்தாளர்களும் அதுபற்றியே எழுதிக்கொண்டிருக்கின்றனர்.
ஈழத்தமிழரான லைக்கா சுபாஸ்கரன் தமிழகத்தில் சினிமா துறையில் கால்பதித்தபோது அவருக்கு எதிராக திரையுலகம் பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்தபோதிலும் அவற்றையெல்லாம் தாண்டி இன்று தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத நபராக மாறியிருக்கிறார்.
இதேபோல அவர் இலங்கையில் மிகப்பழைய ஊடகநிறுவனமான சுவர்ணவாஹினி நிறுவனத்தை வாங்கியபோது இலங்கையிலும் குறிப்பாக, தெற்கில்
இனவாத சக்திகள் அவருக்கு எதிராக சேறடிப்புகளை செய்தன.
அவற்றையும் தாண்டி இன்று ஊடகத்துறையில் மாத்திரமின்றி கிரிக்கெட்டில் எல். பி.எல்லின் யாழ்ப்பாண குழுவை தன தாக்கியதுடன், பல்வேறு
நிறுவனங்களிலும் முதலிட்டு வருகின்றார்.
நடப்பு எல். பி. எல். போட்டிகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை பெற்றுள்ள அவரது சுவர்ணவாஹினி நிறுவனம் தமது புதிய தொலைக்கட்சி
ஒன்றில் அந்த போட்டிகளை ஒளிபரப்பி வருகின்றது.
அதற்காக தனியான அலைவரிசை இல்லை என்பதால், தற்போது ரூபவாஹினியின் அலைவரிசை ஒன்றை ஆறு மாதங்களுக்கு குத்தகைக்கு பெற்று அதன் ஊடாக எல். பி. எல். போட்டிகளை ஒளிபரப்பி வருகின்றார்கள்.
அரசுக்கும் கிரிக்கெட் சபைக்கும் இந்தப் போட்டிகளை மக்கள் பார்க்க வேண்டும் என்பதும் முக்கியமானதுதானே.
நாம் சொல்ல வருவது அதுவல்ல.
அதற்காக அவர்கள் ரூபவாஹினிக்கு வழங்கியுள்ள தொகை, நட்டத்தில் அடுத்தநாள் செலவுக்கு என்னசெய்வது என்று விழித்துக்கொண்டிருந்த ரூபவா
ஹினி நிறுவனத்துக்கு ‘குளுக்கோஸ்’ கொடுத்திருக்கின்றது.
அன்று நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த போது தமிழர் தரப்பில் பலரும் இனப்பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டிருந்தால் இந்த நிலைமை
வந்திருக்காது என்று கூறிய போது யாரும் கண்டுகொள்ளவில்லை.
ஆனால், புலம்பெயர் தமிழர்களை நாட்டில் முதலிடுமாறு கோட்டாபயவிலிருந்து அனைவருமே கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர்.
இன்று சேடம் இழுத்துக்கொண்டிருந்த ரூபாவாஹினிக்கு ஒரு புலம்பெயர் தமிழர் உயிர் கொடுத்திருப்பதுபோல அன்று சரியான முறையில் தமிழர் பிரச்னையை அணுகியிருந்தால் பொருளாதார நெருக்கடிக்கும் தீர்வு கண்டிருக்கலாம்.
இனியாவது சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொண்டால் சரி.
மேலே சோம்பேறிகளை வெட்கப்பட வைப்பதன் மூலம் திருத்துவதற்கு அந்த நகரத் தலைவர் கையாண்டது போல, எடுத்ததற்கெல்லாம் இனவாதம் பேசுவோரை வெட்கப்பட வைத்து திருத்துவதற்கு தெற்கில் ஒருவர் எப்போது வருவாரோ?

  • ஊர்க்குருவி.
  • நன்றி ஈழநாடு 

No comments: