மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ..... அவுஸ்திரேலியா
நல்லூரான் கொடிகாண எல்லோரும் வந்திடுவார்
நாடுவிட்டு சென்றோரும் ஓடியோடி வந்திடுவார்
வல்வினைகள் போக்கென்று மனமுருகி வேண்டிடுவார்
மால்மருகன் கொடிகண்டு மனநிறைவும் கொண்டிடுவார்
கொடியேற்றம் வருநாளை மனமெண்ணி மகிழ்ந்திடுவார்
அடியழித்து அடியழித்து பெண்களங்கு பணிந்திடுவார்
விண்ணவரும் வியந்துமே மலர்மாரி சொரிந்திடுவார்
மண்ணகத்தில் நல்லூரும் மங்கலமாய் ஒளிர்ந்திடுமே
ஏழைபணக் காரென்னும் பேதமின்றி எல்லோரும்
தாழ்மையுடன் கொடிகாண தமைமறந்து இணைந்திடுவார்
வேலவனின் திருமுகத்தை அகமதனில் பதித்திடவே
காதலுடன் காத்திருப்பார் கந்தனவன் சன்னிதியில்
கந்தனது சன்னதியில் பெதமெலாம் அகன்றுவிடும்
நொந்திடுவார் அழுதிடுவார் நோயுள்ளார் வேண்டிடுவார்
வந்த வினையும் வருகின்ற வல்வினையும்
அமர்க்களங்கள் அடங்கிவிடும் அதிகாரம் பதுங்கிவிடும்
ஆணவமும் அடங்கிவிடும் அப்பனது சன்னதியில்
அன்படியார் அனைவருமே அப்பனது நாமமதை
அகத்திருத்தி உருக்கமுடன் பாடிப்பரவச மாகிடுவார்
வேதியர்கள் வேதவொலி விண்ணவரும் கேட்டுவிட்டு
பூதலத்தில் நல்லூரை புகழ்ந்துமே வாழ்த்திடுவார்
ஓதிடுவார் திருமுறையை உளமுருக வைத்திடுவார்
நாதஸ்வர மோடுமேளம் நமைலயிக்கச் செய்திடுமே
கொடியேறும் நிலைகாண அடியார்கள் காத்திருப்பார்
வடிவழகன் நல்லூரான் கொடிபிடிப்பார் வேதியர்கள்
பூமாரி சொரிந்திடவே வேதமந்திர மொலித்திடவே
நல்லூரான் கொடியேற்றம் நல்வேளை நடந்திடுமே
No comments:
Post a Comment