கட்டுரை இப்படியும் நடக்கிறது August 19, 2023

 காலம் காலமாக நம்மிடையே பழக்கத்தில் உள்ள சர்தார்ஜி


நகைச்சுவைகள் நம்மை எப்படியாவது சிரிக்கவைத்து விடுகின்றன.

நம்மைச் சிரிக்க வைப்பதற்காகவே சர்தார்ஜி என்ற பாத்திரத்தை சிருஷ்டித்து அவரின் நகைச்சுவை கதைகள் நீண்ட காலத்துக்கு முன்னரே எழுதியிருந்தனர்.
அந்த சர்தார்ஜி தலைப்பாகை கட்டியிருப்பார்.
தாடி வளத்திருப்பார்.
தனக்கே உரிய உடை ஒன்றையும் அணிந்திருப்பார்.
ஒரு நாள் சர்தார்ஜி, சின்னதாக ஒரு ரீ. வி. வாங்க ஆசைப்பட்டு, எலக்ட்ரோனிக்ஸ் கடைக்கு போயிருந்தார்.
கடைகாரனைப் கூப்பிட்டு ஒரு சின்ன ரீ. வியை காட்டி கேட்டார்.
‘இந்த ரீ. வி. என்ன விலை?’ கடைகாரன் சர்தார்ஜியை ஏற இறங்க பார்த்துட்டு சொன்னான் ‘இந்தக் கடையில் சர்தார்ஜிக்கெல்லாம் ரீ. வி. விற்கிறதில்லை…’
எப்படியும் இந்த ரீ. வியை வாங்கிடவேண்டும் என்று வீட்டுக்குபோய் தன்னுடைய ‘கெட்அப்’பை மாற்றிக்கொண்டு வந்து கடைக்காரனைப் பார்த்து கேட்டார், ‘இந்த ரீ. வி. என்ன விலை?’ ‘இந்த கடையில சர்தார்ஜிக்கெல்லாம் ரீ. வி. விற்கிறதில்லை…’
சர்தார்ஜியால் பொறுக்கமுடியவில்லை, கடைகாரன்கிட்ட பரிதாபமாக கேட்டார், ‘ரீ. வி. குடுக்கலைன்னா பரவாயில்லை, அட்லீஸ்ட், நான் சர்தார்ஜிதான்னு எப்படி
கண்டுபிடிச்சே சொல்லு?’ கடைகாரன் சிரிச்சிக்கிட்டே சொன்னான், ‘இது ரீ. வி. இல்லை, மைக்ரோவேவ் ஓவன் அதுதான்’.
குருந்தூர் மலையில் பொங்கல் வழிபாடுகள் பக்தி பூர்வமாகவும் அசம்பாவிதம் எதுவுமின்றியும் நடந்து முடிந்திருக்கின்றது.
தமிழர்கள் ஏற்பாடு செய்த இந்தப் பொங்கலுக்கு எதிராக சிங்கள – பௌத்த மதவாதிகள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்ததாலும் உதய கம்மன்பில போன்றவர்கள் குருந்தூர்மலையை நோக்கி அணிதிரளுமாறு அழைப்புவிடுத்திருந்ததைத் தொடர்ந்து அங்கு மோதல் நிலைமை ஏற்படலாம் என்று நேற்று இந்தப் பத்தியில் குறிப்பிட்டிருந்தோம்.
ஆனால், அப்படி எதுவித அசம்பாவிதமும் இன்றி பொங்கல் வைபவம் நடந்துமுடிந்திருக்கின்றது.
முன்னதாக, இந்த நாட்டில் மத வழிபாடுகளைத் தடுக்க எவருக்கும் உரிமை கிடையாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
குருந்தூர்மலையில் தமிழர்கள் பொங்கல் வழிபாடுகளை செய்வதை தடுக்கும் வகையில் அங்கு திரண்டுவருமாறு கம்மன்பில அழைப்பு விடுத்திருப்பது தொடர்பாகவும், மணலாறு பகுதியில் (இப்போது வெலிஓயா) பொங்கலுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பது தொடர்பாகவும் ஜனாதிபதியிடம் ஊடகவியலாளர்கள் கருத்துக்
கேட்டபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதியின் இந்தக் கருத்து காரணமாகத்தான், கம்மன்பிலவின் அழைப்பை சிங்கள மக்கள் கருத்தில் எடுக்கவில்லை என்று யாரும் வாதிடப்போவதில்லை.
ஆனால், அசம்பாவிதம் எதுவுமின்றி பொங்கல் நடந்து முடிந்திருப்பது ஆறுதல் தருகின்றது.
குருந்தூர்மலையில் சிவன் ஆலயத்தை அமைக்க சைவர்களுடன் பௌத்தர்களும் இணைந்து அமைக்கவிருப்பதாக நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்தில் வைத்து பௌத்த – சைவர்கள் கூட்டாக அறிவித்திருந்தமை பற்றி நேற்று இந்தப் பத்தியில் குறிப்பிட்டிருந்தேன்.
குருந்தூர்மலை விகாராதிபதி யாழ்ப்பாணம் வந்து யாழ். நாகவிகாரையில் அந்த விகாராதிபதி, தையிட்டி விகாராதிபதி, நாவற்குழி விகாராதிபதி மற்றும் இலங்கை சிவசேனை தலைவர் சச்சிதானந்தம் உட்பட மற்றும் சில அமைப்புக்கள் இணைந்து சிவன் ஆலயத்தை கட்டுவது தொடர்பாக கூட்டாக அறிவித்திருந்தனர்.
இதுதொடர்பாக நாகவிகாரையில் நடைபெற்ற கூட்டம் குறித்து நேற்றைய பத்திரிகைகளில் வெளிவந்த செய்தியில், அது ஓர் இரகசிய கூட்டம் என்றே அறிக்கையிட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
இந்தக் கூட்டம் நடந்துகொண்டிருக்கின்றபோதே இப்படியொரு கூட்டம் நடக்கின்றதா என்று கேட்டு ஊடக ஜாம்பவான் ஒருவர் இந்த ஊர்க்குருவியை தொடர்புகொண்டு
கேட்டிருந்தார்.
அதுபற்றி இந்த ஊர்க்குருவி தகவல் அறியமுயன்றபோது, அப்படியொரு கூட்டம் நடந்துகொண்டிருப்பதை அறியமுடிந்தது.
ஏற்கனவே குருந்தூர்மலைக்கு விஜயம்செய்த சச்சிதானந்தம், அங்கு விகாராதிபதியை சந்தித்தபோது அவரே சிவன் ஆலயத்தை எல்லோரும் இணைந்தே கட்டலாம் என்று யோசனையை சொல்லியதாக சச்சிதானந்தம் கூறியிருந்ததை நேற்று இந்தப் பத்தியில் தெரிவித்திருந்தேன்.
அந்தச் சந்திப்பின் தொடர்ச்சியாகவே நேற்றுமுன்தினம் சந்திப்பு நடந்தது.
சந்திப்பின் முடிவில் அனைவரும் இணைந்தே ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தியுமிருந்தனர்.
அப்படியிருக்கையில், அந்த சந்திப்பு இரகசிய சந்திப்பு என்றும் ஏதோ அரசியல் கட்சிகள் இரகசியமாக சந்திப்பதுபோல அது நடந்ததாகவும் அறிக்கையிட்டிருந்தன.
அந்தச் செய்திகளை படித்தபோது சர்தார்ஜிதான் ஞாபகத்தில் வந்துபோனார்.

  • ஊர்க்குருவி.
  • நன்றி ஈழநாடு 

No comments: