வீட்டுக்கு வந்த மருமகள் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 ஒரு திரைப் படம் எப்படித்தான் எடுக்கப்பட்டிருந்தாலும் அப்படத்தை


விறுவிறுப்பான படமாக மாற்றும் சாமர்த்தியம் அப் படத்தின் படத் தொகுப்பாளரிடமே இருக்கும். அவ்வாறு எடிட்டிங் துறையில் தன் திறமையை வெளிப்படுத்தி சாதனை புரிந்தவர் தான் அண்மையில் மறைந்த எடிட்டர் ஆர் விட்டல். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை எடிட்டிங் செய்த இவர் 1973ம் ஆண்டு பட இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். அப்படி இயக்குனரானவர் முதன் முறையாக இயக்கிய படம் தான் வீட்டுக்கு வந்த மருமகள்.


குடும்பக் கதைகளை குறைந்த பஜெட்டில் எடுத்து வெற்றி கண்டு

கொண்டிருந்த தயாரிப்பாளர் சுப்ரமணிய ரெட்டியார் இந்தப் படத்துக்கு கதை எழுதி தயாரித்திருந்தார். பணத் திமிர் பிடித்த பாட்டி அந்த திமிரினால் தன் சொந்த மருமகனையே அடிமை போல் நடத்துகிறாள். அவனின் மனைவியும் அவனை துச்சமென எண்ணுகிறாள். அதனால் மனமுடைந்து போகும் அவனுக்கு சித்த சுவாதீனம் ஏற்றப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான். இங்கோ அவனின் குடும்பம் பாட்டியின் முழுக் கட்டுப்பாட்டில் நடக்கிறது. பேரப் பிள்ளைகள் வளர்ந்து அவரவர் இஷ்டத்துக்கு காதலிக்கத் தொடங்கும் போது பிரச்சனைகள் சூறாவளி போல் எழுகின்றன. பாட்டியின் எதிர்ப்பை மீறி நடக்கும் திருமணத்தால் வரும் வீட்டுக்கு வந்த மருமகள் எவ்வாறு பாட்டியை திருத்துகிறார் என்பதே கதை.



ஆணவமிக்க பாட்டியாக நடிப்பவர் அப் பாத்திரங்களுக்கு என்றே முத்திரை குத்தப்பட்ட பழம் பெரும் நடிகை ஜி வரலஷ்மி. குலேபகாவலி, ஆரவல்லி, குழந்தையும் தெய்வமும், வீட்டுக்கொரு பிள்ளை போன்ற படங்களில் இது போன்ற வேடங்களில் நடித்து பாராட்டைப் பெற்ற வரலஷ்மி இதிலும் அதே வேலையே செய்திருந்தார். மிடுக்கான தோற்றம், நடிப்பு. அவரிடம் அடங்கி அவமானப்படும் மருமகனாக உருக்கமாக நடித்திருந்தார் ஏ வி எம் ராஜன். அவரின் மகனாக ரவிச்சந்திரன்! அவரின் மனைவியாக வீட்டுக்கு வந்த மருமகளாக லதா. பேத்தியாக மனோரமா, வெண்ணிற ஆடை நிர்மலா, மனோரமாவின் கணவனாக சோ, நிர்மலாவின் ஜோடி முத்துராமன்.


எம் ஜி ஆரின் கதாநாயகியாக அறிமுகமான லதா இதில் ரவிச்சந்திரனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். கிளாமராக நடித்ததோடு ஒரு காட்சியில் நீச்சல் உடையிலும் தோன்றினார் அவர்.

இவர்களுடன் எம் என் ராஜம்,தேங்காய் சீனிவாசன்,வி எஸ் ராகவன்,ஒரு விரல் கிருஷ்ண ராவ், காந்திமதி, அங்கமுத்து, ஐசரிவேலன், தாம்பரம் லலிதா, கரிக்கோல் ராஜு ஆகியோரும் நடித்திருந்தார்கள். முதல் படத்திலேயே இத்தனைப் பேரிடமும் வேலை வாங்கும் வேலை விட்டலுக்கு . படத்தின் கதை பழசு என்றாலும் படத்துக்கான வசனங்கள் புதுசு. ஏ எல் நாராயணன், ச அய்யாபிள்ளை இருவரும் இணைந்துபி அருமையான வசன விருந்தை படைத்திருந்தார்கள்!

கண்ணதாசன் பாடல்களை இயற்ற இசையமைத்தவர்கள் சங்கர்

கணேஷ். இந்தப் படத்தில்தான் வாணி ஜெயராம் தமிழுக்கு அறிமுகமானார். டீ எம் எஸ்ஸுடன் அவர் பாடிய ஓரிடம் உன்னிடம் என் தேவையை நான் கேட்பது வேராரிடம் பாடல் இனிமையாக ஒலித்து பிரபலமானது. ஏ எம் ராஜா, ஜிக்கி குரலிலும் ஒரு பாடல் இடம் பெற்றது.


என் கே விசுவநாதன் படத்தை ஒளிப்பதிவு செய்தார். தாமோதரம் படத் தொகுப்பை கவனித்தார். முதல் படத்தை நேர்த்தியாக டைரக்ட் செய்த விட்டல் அதன் பின் மேலும் சில படங்களை டைரக்ட் செய்து பிரபலமானார். ஏ வி எம் பட நிறுவனத்தில் உருவான இவர் பின்னர் 1979ம் ஆண்டு முதல் எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் ஏ வி எம் தயாரித்த ரஜினி, கமல் படங்களுக்கு எல்லாம் எடிட்டராக பணியாற்றி புகழ் பெற்று சமீபத்தில் புகழுடம்பேவினார்!

No comments: