கட்டுரை இப்படியும் நடக்கிறது August 18, 2023

                                                                                                                             

குருந்தூர்மலையில் இன்று வெள்ளிக்கிழமை 
பொங்கலுக்கு
தமிழர்கள் சிலர் ஏற்பாடு செய்திருக்கின்றனர்.

நீதிமன்றம்அதற்கான அனுமதியை வழங்கியிருக்கின்றது.
ஏற்கனவே, நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் பொங்கல் நடத்த சென்றவர்கள் மீது பொலிஸாரும் சில பௌத்த மதவாதிகளும் தாக்குதல் நடத்தியதுடன்,
பொங்கல் நடத்த முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து மீண்டும் நீதிமன்றை நாடி பொங்கலுக்கான அனுமதியை பெற்றுக்கொண்டு பொங்கலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் மறுபுறம், பொங்கல் வழிபாட்டை தடுப்பதற்காக சிங்கள – பௌத்த கடும்கோட்பாளர்கள் பெரும் ஏற்பாடுகளைச் செய்துவருவதாக செய்திகள்
தெரிவிக்கின்றன.
பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, பொங்கல் நடத்தவிடாமல் தடுப்பதற்காக குருந்தூர் மலைக்கு பெரிய படையெடுப்பை செய்யப்போவதாக
அறிவித்திருக்கின்றார்.
நிலைமைகளை பார்க்கும்போது, பெரும் முறுகல் நிலை ஒன்று அங்கு ஏற்படுவதற்கு ஏதுநிலை ஏற்பட்டிருப்பதாகத் தெரிகின்றது.
இவ்வாறு அங்கு ‘போர் மேகங்கள்’ சூழ்ந்துள்ள அதேவேளையில்தான், யாழ்ப்பாணத்தில் நேற்று ஒரு சமாதான முயற்சிக்கும் பச்சைக்கொடி காட்டப்பட்டிருக்கின்றது.
சில வாரங்களுக்கு முன்னர் குருந்தூர்மலைக்கு சென்றிருந்த இலங்கை சிவசேனை தலைவர் மறவன் புலவு க. சச்சிதானந்தம் ஐயா, அங்கு புத்தர் சிலை
ஒன்றின் முன்னால் நின்று வழிபடுகின்ற படங்களை வெளியிட்ட சிலர் அவருக்கு எதிராக மிக மோசமான பரப்புரைகளை செய்துவந்ததைக் காணமுடிந்தது.
ஆனால், அங்கு சென்ற அவர் குருந்தூர்மலை விகாராதிபதியைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
அப்போது அவரே (விகாராதிபதியே) சிவன் ஆலயம் கட்டப்படவேண்டியதன் அவசியத்தை மறவன்புலவு சச்சிதானந்தத்திடம் வலியுறுத்தியதுடன், கோவிலை மலை உச்சியில் கட்டுவதெனில் சிறிதாகவே கட்டவேண்டியிருக்கும் என்றும் ஆனால், மலையின் கீழே கட்டுவதெனில் பெரிதாக கட்டலாம் எனவும் அதற்கான காணியை தெரிவு செய்யவேண்டும் என்றும் கருத்துத் தெரிவித்திருந்தாரெனப் பின்னர் சச்சிதானந்தம், இந்த ஊர்க்குருவியிடம் தெரிவித்திருந்தார்.
சிவன் கோவில் கட்டப்படவேண்டும் என்பதிலும் அது சுமுகமாக நடக்கவேண்டும் என்பதிலும் விருப்பம் கொண்டிருந்த சச்சிதானந்தம், ”மகா சங்கத்தினருடன்
பேசி நீங்களே அதுகுறித்து முடிவுக்கு வாருங்கள்’, என்றும் சொல்லிவிட்டு வந்திருந்தார்.
பின்னர், குருந்தூர்மலை விகாராதிபதியே யாழ்ப்பாணம் வந்து யாழ். நாக விகாரை விகாராதிபதி, தையிட்டி விகாராதிபதி, நாவற்குழி விகாராதிபதி
ஆகியோருடன் சிவசேனை தலைவரையும் மற்றும் சில அமைப்புகளையும் இணைத்து கலந்துரையாடிய பின்னர் ஊடக மாநாட்டை நடத்தினார்கள்.
முல்லைத்தீவு – குருந்தூர்மலையில் சிவன் ஆலயத்தை நிறுவ அந்தச் சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, பௌத்த – இந்து அமைப்புகள்
கூட்டாக இங்கு அறிவித்தன.
குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில், நேற்று யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாக விகாரையில், தென்னிலங்கை பௌத்த பிக்குகள், சிவசேனை உள்ளிட்ட
சில சைவ அமைப்புகளின் பிரதிநிதிகள், குருமார்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த அறிவிப்பை
விடுத்தனர்.
இன்று குருந்தூர்மலையில், தமிழர்கள் பொங்கலில் ஈடுபடவுள்ள நிலையில், அது தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெறவில்லை என்றும் அங்கு சிவன்
ஆலயத்தை நிறுவுவது தொடர்பாகவே கலந்துரையாடப்பட்டு முடிவு எடுக்கப்பட்டதாகவும் அங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது நம்மில் சிலர் அது எங்களுடைய கோவில் அதைக் கட்டுவதற்கு அவர்கள் என்ன அனுமதி தருவது என்று கிளம்பக்கூடும்.
ஆனால், அது இன்று நீதிமன்றில் இருக்கின்ற பிரச்னை.
அதனை தொடர்ந்து பிரச்னையாகவே வைத்திருக்காமல், சுமுகமாக தீர்க்க சந்தர்ப்பம் கிடைக்கின்றபோது அதனை பயன்படுத்திக்கொள்வதில் தவறில்லையே.

  • ஊர்க்குருவி.
  • நன்றி ஈழநாடு 

No comments: