எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் 77 விமல் சொக்கநாதன் நினைவும் – மடலும் - முருகபூபதி

 .

விமல் சொக்கநாதன்  நினைவும் – மடலும்

தொடரும் பயணத்தில் சந்தித்த ஆளுமைகளும் ஆர்வலர்களும்

                                                                                

 


பிரான்ஸ் வென்மேரி அறக்கட்டளையின் விருது விழாவுக்காக அவுஸ்திரேலியா மெல்பனிலிருந்து நான் புறப்படுவதற்கு தயாராகிக்கொண்டிருந்தபோது,  லண்டனில்  மூத்த ஒலி – ஒளிபரப்பாளர் – எழுத்தாளர் சட்டத்தரணி விமல் சொக்கநாதன் அகால மரணமடைந்தார் என்ற அதிர்ச்சியான செய்தி வந்தது.

அவரது விதி,  வீதியில் முடிந்திருக்கிறது. பிரான்ஸ் பயணத்தை நிறைவுசெய்துகொண்டு, இங்கிலாந்து வந்து, அன்னாரின் இறுதி நிகழ்விலாவது கலந்துகொள்ளவேண்டும் என்பதற்காக காத்திருந்தவாறு இந்த தொடர் பதிவை எழுதுகின்றேன்.

இம்மாதம் 01 ஆம் திகதி மரணமடைந்தவரின் பூதவுடல் இன்னமும் பொது மக்களின் பார்வைக்கு வரவில்லை. 

காலமும் கணங்களும் என்ற பெயரில் காணொளிப்பதிவு நிகழ்ச்சியை  தொகுக்கும் பணியை கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ஆரம்பித்திருந்தேன்.

முதல் அங்கமாக அமரர் ஓவியர் கே. ரி. செல்வத்துரை அய்யா பற்றிய காணொளித் தொகுப்பு மெய்நிகரில் வெளியானது.

சிட்னியில்  2001 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி மறைந்த மூத்த ஒலிபரப்பாளர் சுந்தா சுந்தரலிங்கம் அவர்கள் பற்றிய காணொளிப்பதிவை ( காலமும் கணங்களும் ) கடந்த ஆண்டு ( 2022 ) தயாரிப்பதற்கான பூர்வாங்க வேலைகளை ஆரம்பித்திருந்தபோது, விமல் சொக்கநாதனிடமிருந்தும்  கருத்துக்களை கேட்டிருந்தேன். அத்துடன் மேலும் சிலரிடமும் கேட்டிருந்தேன். விமல்தான்  தாமதிக்காமல் முதலில்  தனது குரலை பதிவுசெய்து அனுப்பியிருந்தார்.  அதற்கு நான் எழுதிய ( 01-01-2022 ) பதிலையும், அவர் எனக்கு அனுப்பிய சுருக்கமான பதிலையும் இங்கு பதிவுசெய்கின்றேன்.

அன்புள்ள திரு. விமல் சொக்கநாதன் அவர்கட்கு வணக்கம்.  புத்தாண்டு பிறந்துள்ள இவ்வேளையில் உங்கள்  மதுரமான குரலைக்கேட்டவாறே இன்றைய  இனிய பொழுதை ஆரம்பித்துள்ளேன். இணைப்புக்கு மனமார்ந்த நன்றி.


இந்த வாரத்திலிருந்து சுந்தா அண்ணர் பற்றிய ( காலமும் கணங்களும் )  காணொளிப்பதிவு வேலைகளை தொடங்கவிருக்கின்றோம்.

உங்கள் ஆதரவுக்கு அன்பார்ந்த நன்றி.  காணொளி வெளியீட்டு திகதி - நேரம் பற்றி பின்னர் தங்களுக்கு அறியத்தரப்படும். 

மலர்ந்துள்ள புத்தாண்டு, தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் அனைத்து வளங்களையும் பெற்றுத்தரல் வேண்டும்.

என்றும் அன்புடன்

முருகபூபதி

---------------  

அன்பு சொட்டும் உங்கள் மடல் என்னை வந்தடைந்தது.

மிக்க நன்றி

தொடர்ந்து தொடர்பில்

இருங்கள் 

வணக்கம்

விமல்.

 

 

எங்கே சென்றாலும் முடிந்தவரையில் எனது வர்க்கத்தை சேர்ந்தவர்களை சந்தித்து உரையாடுவதுதான் எனது இயல்பு. கடந்த ஜூன் மாதம் 01 ஆம் திகதி கனடா புறப்பட்டு, அங்கிருந்து ஜூன் 15 ஆம் திகதி கட்டார் வந்து, பின்னர், ஜூன் 21 இலங்கை சென்று, அங்கிருந்து ஜூலை 25 ஆம் திகதி மீண்டும் அவுஸ்திரேலியா – மெல்பன் வந்து, அதன்பின்னர்  ஓகஸ்ட் 03 ஆம் திகதி பாரிஸுக்குச் சென்று, தற்போது இங்கிலாந்துக்கு வந்திருந்தவாறு இந்தப்பதிவை எழுதுகின்றேன்.

இவ்வாறு சென்ற நாடுகளிலெல்லாம் பல கலை, இலக்கியவாதிகளையும்  ஊடகவியலாளர்களையும் முடிந்தவரையில் சந்திக்கின்றேன்.

கடந்த நான்கு ஆண்டுகளில் எனது கலை, இலக்கிய , ஊடக குடும்பங்களைச் சேர்ந்த பலரை இழந்துவிட்டேன். அதனால், இந்த நெடும்பயணம்  மறைந்தவர்களின் துணைகளை மற்றும் அவர்களின் குடும்ப உறவுகளை சந்தித்து  ஆறுதல் சொல்வதாகவே அமைந்தது. இதனை எங்கள் தாயகத்தில்                “ துக்கம் விசாரித்தல்  என்பார்கள்.

பயணக் களைப்பினையும் பொருட்படுத்தாமல் அவர்களை  பார்க்கச்சென்றேன்.  அத்துடன் சுகவீனமுற்றிருக்கும் எழுத்தாளர்களையும் முடிந்தவரையில் நேரம் ஓதுக்கிச்சென்று பார்த்தேன்.

அவர்களில் சிலர் முகநூல் கணக்கு வைத்திருப்பவர்கள்.  என்னிடம் முகவரி மாத்திரம்தான் இருக்கிறது.  ஒரு முகவரியிலிருந்து மற்றும் ஒரு முகவரிக்கு அவர்களைத் தேடிச்செல்வேன்.

ஆனால், அவர்களோ தங்கள் முகநூலில் எனது வருகை பற்றி படத்துடன் பதிவேற்றிவிடுகிறார்கள்.

அதனாலும் சில  சங்கடங்கள் இருக்கின்றன.                                        “ அவரைப்பார்க்கச் சென்றிருக்கிறார், இவரைப்பார்க்க சென்றுள்ளார். என்னைப்பார்க்க வரவில்லையே ?   “ என்ற ஆதங்கம் நான் சந்திக்காதவர்களிடமிருந்து வருவதும் இயல்புதானே?!

நீர்கொழும்பு, கொழும்பு,  நுவரேலியா,  நானு ஓயா, கொழும்பு, வத்தளை,  வவுனியா, யாழ்ப்பாணம்,  மாத்தளை, பேராதனை,  மட்டக்களப்பு,  பாண்டிருப்பு முதலான பிரதேசங்கள் எங்கும் சுற்றி அலைந்துவிட்டுத்தான், மீண்டும் அவுஸ்திரேலியாவுக்கு வந்து, ஒரு வாரகாலத்துள்  பிரான்ஸுக்குப் புறப்பட்டேன்.

இலங்கையில் எமது மாணவர் கல்வி நிதியத்தின் நிகழ்ச்சிகள் உட்பட பல நிகழ்வுகள் நடந்தன.

ஜூலை 01 ஆம் திகதியன்று யாழ்ப்பாணம் நிகழ்ச்சிக்கு ஊடகவியலாளர்கள்  வீரகத்தி தனபாலசிங்கம், ரவிவர்மா, இராஜநாயகம் பாரதி ஆகியோரையும்  என்னுடன் ஒரு 1960 களில் யாழ். ஸ்ரான்லிக்கல்லூரியில் படித்தவரும் பின்னர்  வெளிநாடுகளில் இராஜதந்திரியாக  பணியாற்றியவருமான  நண்பர் தருமகுலசிங்கம் அவர்களையும்  அழைத்திருந்தேன்.

ஜூலை 02 ஆம் திகதி  அல்வாயில்  ஜீவநதி ஆசிரியர் கலாமணி பரணீதரனின் இல்லத்தில், அவர் வெளியிட்ட எனது சினிமா: பார்த்ததும் கேட்டதும் நூல் வெளியீட்டு அரங்கு கொற்றாவத்தை கிருஷ்ணானந்தன் தலைமையில் நடந்தது.  அலை யேசுராசா, கலாமணி, இராஜேஸ் கண்ணன், ந. ரவீந்திரன், சோ. தேவராஜா, பஞ்ச கல்யாணி உட்பட பலரையும், பின்னர் நண்பர் வன்னியகுலத்தையும், கிளிநொச்சியில் நண்பர் கருணாகரன் எனக்காக  ஒழுங்குசெய்திருந்த சந்திப்பில்  மேலும் பலரையும் சந்திக்க முடிந்தது.

கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் ஞானம் ஆசிரியர் தி. ஞானகேரன்  தலைமையில் எனது உரை நிகழ்ந்தபோது மற்றும் பலரையும் சந்தித்தேன். அவர்களின் பெயர்ப்பட்டியல் சற்று நீளமானது.    பேராதனை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் எம். ஏ. நுஃமான், துரைமனோகரன், ஶ்ரீபிரசாந்தன், மற்றும் செல்லத்துரை சுதர்சன் ஆகியோரையும் பார்த்தேன்.

கொழும்பில் நின்றபோது,  ஊடகத்துறை நண்பர் வித்தியாதரன், தனது புதல்வனின் திருமணத்திற்கு வருமாறு அழைத்திருந்தார்.  ஜூலை 15 ஆம் திகதி சனிக்கிழமை  குறிப்பிட்ட திருமண வைபவம் ஜிந்துப்பிட்டி முருகன் கோயிலில் நடந்தது. முதல் நாள் 14 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை இரவு தமிழ்ச்சங்கத்தில் நடந்த நிகழ்வை முடித்துக்கொண்டு,  இரத்மலானையில்  ஊடகவியலாளரும்  கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றுபவருமான  தேவகௌரியின் இல்லத்தில் தங்கினேன். அவரது கணவர் மறுநாள் என்னை ஜிந்துப்பிட்டிக்கு அழைத்துச்சென்றார்.

அந்தப்பிரதேசத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

நண்பர் வித்தியாதரனுக்கு இலங்கையில் மூவின  அரசியல் தலைவர்களுடனும்   நெருக்கமான நட்புறவு நீடித்திருப்பதை நன்கறிவேன். அதனால்,  அவரது குடும்பத்தின் நிகழ்வுக்கு சில முக்கிய அரசியல் தலைவர்கள் வருவார்கள் என்பது நிச்சயம். முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்‌ஷ,  மற்றும் ரவூப்ஹக்கீம், ஆனந்த சங்கரி,  மனோ கணேசன், எம். ஏ. சுமந்திரன்,  சி. வி. கே. சிவஞானம் ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.

இவர்களில் மகிந்த ராஜபக்‌ஷ தவிர்ந்த ஏனையோருடனும் உரையாடினேன். 

எனது சினிமா:  பார்த்ததும் கேட்டதும் நூலின் பிரதிகளை  வித்தியாதரனுக்கும் ரவூப்ஹக்கீம்,  மற்றும் சி. வி. கே. சிவஞானம் ஆகியோருக்கும் வழங்கினேன்.

வித்தியாதரன் யாழ். காலைக்கதிரில் ஆசிரியராகவிருந்தபோது எனது ஆக்கங்களை தொடர்ந்தும் வெளியிட்டவர்.  அவற்றில் பின்னாளில் நூலுருப்பெற்ற சொல்லத்தவறிய கதைகள், இலங்கையில் பாரதி முதலான தொடர்கள்  அவர் காலைக்கதிரில் பணியாற்றியபோது வெளியானவை.  அவற்றின் வெளியீடுகள் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் நடந்தபோதும் கலந்து சிறப்பித்தவர்.

அவரது புதல்வனின் திருமண நிகழ்விற்கு பத்திரிகையாளர்கள்  அனந்த பாலகிட்ணர்,  வீரகேசரி ஆசிரியர் கஜன், மற்றும் பிரபாகரனும் வருகை தந்திருந்தனர்.

அன்றைய தினம் மாலையில்  நண்பர் மல்லியப்பு திலகர், என்னை  மறைந்த இலக்கிய நண்பர் தெளிவத்தை ஜோசப் அவர்களின் இல்லத்திற்கு அழைத்துச்சென்றார்.  தெளிவத்தையின் துணைவியார்,  அந்த இழப்பின் துயரத்திலிருந்து இன்னமும் விடுபடவில்லை.   அவரது நிலையில்தான்  வடமராட்சியில்  நான் சந்தித்த மறைந்த இலக்கிய நண்பர் தெணியானின் துணைவியாரும் இருந்தார். 

தெணியானின் உருவச்சிலை அவரது இல்லத்திற்கு முன்பாக நிறுவப்பட்டிருக்கிறது.  எனது அஞ்சலியை செலுத்தினேன்.

மல்லியப்பு திலகர், என்னை சகோதரி அன்னலட்சுமி இராஜதுரையை பார்ப்பதற்கும் தனது இல்லத்திற்கும் அழைத்துச்சென்றார்.

நாரகேன்பிட்டியில், நண்பர் வாமதேவனின் இல்லத்தில், இவரும் மல்லியப்பு திலகரும், சடகோபனும் எனக்கு  இராப்போசன விருந்தளித்தனர்.

ஞானம் ஆசிரியர் இல்லத்திலும் விருந்துபசாரம் நடந்தது. நண்பர் உடுவை தில்லை நடராஜாவும் விருந்தளித்து உபசரித்தார். அவரே என்னை தமிழ்ச்சங்கத்தில் நடந்த அமரர் ஆர் சிவகுருநாதனின் நினைவாக சிட்னியில் வதியும் ஐங்கரன் விக்னேஸ்வரா தொகுத்தளித்த நூல் வெளியீட்டுக்கும் அழைத்துச்சென்றார்.

எனது தொடர் பயணத்தில் இவ்வாறு காலை, மதியம், இரவு விருந்துகளில் கலந்துகொள்வதன் மூலம்  பலரதும் அன்புத் தொல்லையிலிருந்து விடுபடலாம் என்பதும் எனது நம்பிக்கை.  

                நண்பர் பூபாலசிங்கம் ஶ்ரீதரசிங்குடன் மீலாத்கீரான், மற்றும் மல்லிகை ஜீவாவின் குடும்பத்தினர்,  இலக்கிய ஆர்வலர் செல்வம் ( கனடா சிந்தனைப்பூக்கள் பத்மநாதனின் சகோதரர் ) ஆகியோரையும் பார்த்தேன்.

பாண்டிருப்பில்  முன்னாள் அதிபர் கமலநாதன் இல்லத்தில் நடந்த சந்திப்பில் பேராசிரியர் மௌனகுரு, செங்கதிரோன் கோபாலகிருஷ்ணன்,  உமா வரதராஜன்,  பீர்முகம்மது, உட்பட சிலர் கலந்துகொண்டனர்.

பாரிஸில் ஓகஸ்ட் 05 ஆம் திகதி பேராசிரியர் ஆசி. கந்தராஜாவின் அகதியின் பேர்ளின் வாசல் – நாவல் அறிமுகக் கூட்டமும்  கலந்துரையாடலும் நடந்தபோதும்  பலரை நேருக்கு நேர் சந்திக்க முடிந்தது.

 

மொழி தெரியாத நாட்டில், சுற்றித்திரிவதற்கு இடம் – வலம் தெரியாத இடங்களில் யாராவது துணைக்கு வருவார்கள்.  இம்முறை பிரான்ஸ் பயணத்தின்போது தோழர் ராயப்பு அழகிரி உடன் வந்தார்.  நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் மரணத்தின் வாசலுக்குச்சென்று, திரும்பிவந்த தோழர் அழகிரி, எனக்கு 2019 ஆம் ஆண்டுதான் முதல் முதலில் பாரிஸில் அறிமுகமானார்.

இம்முறை பாரிஸ்  பயணத்தின்போது, அவர் எனக்காக சிலரது வீட்டு வாசல்களை தட்டினார்.

சந்திப்புகள் தொடரும்.

( தொடரும் )

---0---

 

 

 


No comments: