உலகச் செய்திகள்

 கிரேக்கத்தில் குடியேறிகள் படகு மூழ்கியதில் 79 பேர் உயிரிழப்பு

 கிரேக்க படகு விபத்து: உயிரிழப்பு பல நூறாக அதிகரிக்கும் அச்சம்

நீதிமன்றில் குற்றச்சாட்டை மறுத்தார் டொனால்ட் ட்ரம்ப்

உக்ரைனிய ஜனாதிபதியின் சொந்த ஊரில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: அறுவர் பலி

 3 கிராமங்களை மீட்டதாக உக்ரைன் படை அறிவிப்பு

ரஷ்யாவுக்கு எதிரான உக்ரைனின் பதில் படை நடவடிக்கை ஆரம்பம்


கிரேக்கத்தில் குடியேறிகள் படகு மூழ்கியதில் 79 பேர் உயிரிழப்பு

100க்கும் அதிகமானோரை மீட்ட சொகுசுக் கப்பல்

தெற்கு கிரேக்கத்தின் கடற்கரைக்கு அப்பால் குடியேறிகளை ஏற்றிய மீன்பிடி படகு ஒன்று மூழ்கியதில் குறைந்தது 79 பேர் உயிரிழந்ததோடு 100க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டுள்ளனர்.

இது கிரேக்கத்தில் இடம்பெற்ற மிகப்பெரிய குடியேறிகள் தொடர்பான அனர்த்தம் என குறிப்பிட்டிருக்கும் அந்நாட்டு அரசு மூன்று நாள் துக்க தினத்தை அறிவித்துள்ளது.

கடலோரக் காவல் படையினரின் உதவியை நிராகரித்த நிலையில் அந்தப் படகு பீடோஸ் நகருக்கு அப்பால் சுமார் 80 கிலோ மீற்றர் தொலைவில் மூழ்கியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய எல்லை நிறுவனமான பிரான்டெக்ஸுக்கு சொந்தமான விமானம் ஒன்றினால் இந்தப் படகு கடந்த செவ்வாய்க்கிழமை சர்வதேச கடற்பகுதியில் அவதானிக்கப்பட்டதாக கடலோர காவல்படை கூறியது. அப்போது படகில் இருந்த ஒருவரும் உயிர் காப்பு அங்கியை அணிந்திருக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கிரேக்க நிர்வாகம் பல முறை இந்தப் படகை செய்மதி தொலைபேசி வழியாக தொடர்புகொண்டு உதவி அளிக்க முன்வந்தபோதும், படகில் உள்ளவர்கள் அதனை நிராகரித்திருப்பதோடு, “எமக்கு இத்தாலிக்குச் செல்வதை தவிர வேறு தேவை இல்லை” என்று பதிலளித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த புதனன்று படகின் இயந்திரம் செயலிழந்து சில நிமிடங்களிலேயே படகு முழுமையாக மூழ்கியுள்ளது. தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டபோதும் கடும் காற்றுக்கு மத்தியில் அதனை செயற்படுத்துவதில் சிரமம் நீடித்து வருகிறது.

காப்பாற்றப்பட்ட பலருக்கு நீச்சல் தெரிந்திருக்கவில்லை என்றும் அவர்கள் படகு உடைந்து சிதறிய இடிபாடுகளைப் பிடித்துக்கொண்டிருந்தனர் என்றும் மீட்புப் பணியாளர்கள் கூறினர்.

தேடல் பணிகளில் மெக்சிகோவைச் சேர்ந்த பெருஞ்செல்வந்தரின் சொகுசு கப்பல் பேருதவி புரிந்துள்ளது. சொகுசுப் படகில் 106 பேர் காப்பாற்றப்பட்டதாக ப்ளும்பேர்க் செய்தி நிறுவனம் கூறியது.

அந்த சொகுசுக் கப்பல் மெக்சிகோவில் ‘வெள்ளி அரசர்’ என்று அழைக்கப்பட்ட அல்பெர்ட்டோ பைலியெரெஸுக்குச் சொந்தமானது. ஒரு காலத்தில் உலகின் மிகப் பெரிய வெள்ளி உற்பத்தி நிறுவனத்தின் உரிமையாளராக இருந்த அவர் கடந்த ஆண்டு காலமானார்.

இந்தப் படகு லிபியாவில் இருந்து இத்தாலியை நோக்கி பயணித்திருப்பதோடு படகில் பெரும்பாலும் 20 வயதுகளில் இருக்கும் இளைஞர்களே இருந்துள்ளனர். இதில் ஆட்கடத்தல் சந்தேகத்தில் மூவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுவதாக கிரேக்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மத்தியதரை கடவை கடக்கும் முயற்சியில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர். கடந்த பெப்ரவரியில் தெற்கு இத்தாலியின் கலப்ரியா பிராந்தியத்தில் கட்ரோ நகருக்கு அருகில் குடியோறிகள் படகு ஒன்று மூழ்கியதில் குறைந்தது 94 பேர் உயிரிழந்தனர்.

மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் ஆபிரிக்காவில் இருந்து வரும் அகதிகள் மற்றும் குடியேறிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைய கிரேக்கம் பிரதான பாதை ஒன்றாக உள்ளது.

இந்த ஆண்டில் 70,000க்கும் அதிகமான அகதிகள் மற்றும் குடியேறிகள் ஐரோப்பாவை அடைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இத்தாலியில் கரையொதுங்கி இருப்பதாக ஐ.நா தரவுகள் குறிப்பிடுகின்றன.    நன்றி தினகரன் 




கிரேக்க படகு விபத்து: உயிரிழப்பு பல நூறாக அதிகரிக்கும் அச்சம்

- படகில் 100 சிறுவர்கள் வரை இருந்துள்ளனர்

ஐரோப்பாவை அடையும் முயற்சியில் குடியேறிகள் மற்றும் அகதிகளை ஏற்றிய மீன்பிடி படகு மூழ்கிய சம்பவத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

தென்மேற்கு கிரேக்கத்திற்கு அப்பால் கடந்த புதனன்று மூழ்கிய இந்தப் படகில் இருந்த குறைந்தது 79 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மிட்புக் கப்பல்கள் சம்பவ இடத்தில் தொடர்ந்து தேடுதல்களில் ஈடுபட்டு வருகின்றன.

லிபியாவில் இருந்து இத்தாலியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது ஆழ் கடலில் மூழ்கிய இந்த கப்பலில் இருந்து 104 பேர் காப்பாற்றப்பட்டனர்.

இந்நிலையில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் படகில் கீழ் பகுதியில் சிக்கி இருக்கலாம் என்று அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இது உறுதி செய்யப்படும் பட்சத்தில், மத்திய தரைக்கடலில் இடம்பெற்ற மிக மோசமான விபத்துகளில் ஒன்றாக இது பதிவாக வாய்ப்பு உள்ளது.

“இன்னும் உயிருடன் இருப்பவர்களை கண்டுபிடிப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது” என்று ஓய்வுபெற்ற கிரேக்க கடலோரக் காவல்படையின் அட்மிரல் நிகோஸ் ஸ்பானோஸ் அந்நாட்டு அரச தொலைக்காட்சியான ஈ.ஆர்.டி. இற்கு தெரிவித்துள்ளார்.

உயிர் தப்பியவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலை அடிப்படையாகக் கொண்டு படகில் குறைந்தது 40 சிறுவர்கள் உட்பட 700 தொடக்கம் 750 பேர் இருந்ததாக குடியேற்றத்திற்காக சர்வதேச அமைப்பு கணித்துள்ளது. எனினும் படகில் சுமார் 100 சிறுவர்கள் இருந்ததாக சிறுவர்களை பாதுகாப்போம் அமைப்பு கணக்கிட்டுள்ளது.

கிரேக்கத்தின் தெற்கு துறைமுக நகரான பீலொஸில் இருந்து சுமார் 80 கிலோமீற்றர் தொலைவிலேயே இந்தப் படகு மூழ்கி இருப்பதாக கருதப்படுகிறது.

அகதிகள் செயற்பாட்டாளர்கள், தன்னார்வ தொண்டு அமைப்புகள், ஐரோப்பிய அரசியல்வாதிகள் சிலர் மற்றும் பாப்பரசர் பிரான்ஸில் என பல தரப்பினரும் இந்த அனர்த்தம் தொடர்பில் கவலை மற்றும் கோபத்தை வெளியிட்டுள்ளனர்.

பாப்பரசர் “ஆழ்ந்த கவலை” மற்றும் “உயிரிழந்த பல குடியேறிகள்், அவர்களின் அன்புக்குரியவர்கள் மற்றும் இந்த சோகத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இதயபூர்வமான பிரார்த்தனைகளை” வழங்கினார் என்று வத்திக்கான் கூறியது.

இந்த படகு மூழ்குவதற்கு முன் அதனை வானில் இருந்து எடுத்த படங்களை கிரேக்க கரையோர காவல் படையினர் வெளியிட்டுள்ளனர். அதில் படகின் மேல் மற்றும் கீழ் பாகங்களில் அளவுக்கு அதிகமானவர்கள் நிரம்பி இருப்பது தெரிகிறது.

கிரேக்க கடற்கரைக்கு அப்பால் இருந்து படகில் இருந்தவர்களிடம் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை உதவிக்கான அழைப்பு விடுக்கப்பட்டதாக ஐரோப்பிய மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவும் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

தொடர்ந்து இது பற்றி கிரேக்க நிர்வாகத்தை அறிவுறுத்தியதாக அந்த அமைப்பு தெரிவித்தது. இதன்போது அந்த படகில் இருந்து தலைமை மாலுமி சிறு படகு ஒன்றில் தப்பிச் சென்றுவிட்டதாக உதவி கோரியவர்கள் தெரிவித்துள்ளனர்.

படகின் எஞ்சின் நின்று இரு பக்கமாக அசைய ஆரம்பித்த நிலையில் புதன்கிழமை அதிகாலை 2 மணி அளவில் மூழ்கி இருப்பதாக அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதில் உயிர் தப்பியவர்கள் துறைமுக நகரான கலமடாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதோடு அவர்களில் பொருபாலானவர்கள் ஆண்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மூழ்கும் நிலையில் இருந்து காப்பற்றப்பட்ட பலருக்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.

இந்த குடியேறிகள் படகில் இருந்து உயிர் தப்பிய ஒன்பது பேர் ஆட்கடத்தல் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டதாக கிரேக்க கரையோர காவல் படை தெரிவித்தது.

இந்த சந்தேக நபர்கள் அனைவரும் எகிப்து நாட்டவர்கள் என்று கிரேக்க அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

கிரேக்கத்தில் மூன்று நாள் துக்கதினம் அனுஷ்டிக்கப்படுவதோடு உயிரிழந்தவர்களின் உடல்கள் மரபணு சோதனைக்காக ஏதன்ஸ் நகருக்கு அருகில் உள்ள கல்லறை ஒன்றுக்கு அனுப்பப்பட்டுள்ளன. தேவையான காலம் வரை மீட்பு பணிகள் முன்னெடுக்கப்படும் என்று கடலோரக் காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.

மத்தியதரை கடலை கடக்கும் முயற்சியில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர். கடந்த பெப்ரவரியில் தெற்கு இத்தாலியின் கலப்ரியா பிராந்தியத்தில் கட்ரோ நகருக்கு அருகில் குடியேறிகள் படகு ஒன்று மூழ்கியதில் குறைந்தது 94 பேர் உயிரிழந்தனர்.

மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் ஆபிரிக்காவில் இருந்து வரும் அகதிகள் மற்றும் குடியேறிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைய கிரேக்கம் பிரதான பாதை ஒன்றாக உள்ளது.

இந்த ஆண்டில் 70,000க்கும் அதிகமான அகதிகள் மற்றும் குடியேறிகள் ஐரோப்பாவை அடைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இத்தாலியில் கரையொதுங்கி இருப்பதாக ஐ.நா தரவுகள் குறிப்பிடுகின்றன.   நன்றி தினகரன் 





நீதிமன்றில் குற்றச்சாட்டை மறுத்தார் டொனால்ட் ட்ரம்ப்

- அமெரிக்க வரலாற்றில் ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக முதல் முறை குற்றவியல் குற்றப்பத்திரம் தாக்கல்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது சுமத்தப்பட்ட குற்றவியல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து தாம் குற்றமற்றவர் என்று அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்த டொனால்ட் ட்ரம்ப் தேர்தல் தோல்வியின் பின்னர், அமெரிக்காவின் அணுவாயுதங்கள் குறித்த இரகசிய ஆவணங்கள் உட்பட சுமார் 300 இரகசிய ஆவணங்களை புளோரிடா மாநிலத்திலுள்ள ட்ரம்ப்புக்குச் சொந்தமான மார் ஏ லாகோ இல்லத்துக்கு எடுத்துச் சென்றார் என கடந்த வாரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொள்ளும் நிகழ்வுகள் நடத்தப்படும் மார் ஏ லாகோ இல்லத்தில் நடன அறை, படுக்கையறை, குளியலறைகளிலும் இந்த இரகசிய ஆவணங்கள் காணப்பட்டதாக, 49 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுவரை ட்ரம்ப் எதிர்நோக்கும் மிக சவால்மிக்க வழக்காக இது கருதப்படுகிறது. அதனால் அவர் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு பாதிக்கப்படலாம்.இந்த வழக்கில் மியாமியிலுள்ள நீதிமன்றத்தின் முன் தோன்றிய ட்ரம்ப் தான் தவறு செய்யவில்லை என்றும், வழக்கை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்ததை அடுத்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (13) நீதிமன்றத்திற்குச் சென்ற பின் ட்ரம்ப் உணவகம் ஒன்றில் காணப்பட்டார். நீதிமன்ற வழக்கு சிறப்பாகப் போய்கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

நேற்று தனது 77ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய ட்ரம்புக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படாத நிலையில் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க வரலாற்றில், பதவியிலுள்ள அல்லது முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக மத்திய அரசின் குற்றவியல் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டமை இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 





உக்ரைனிய ஜனாதிபதியின் சொந்த ஊரில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: அறுவர் பலி

உக்ரைனின் மத்திய நகரான கிரிவி ரி மீது ரஷ்ய படைகள் கடந்த திங்களன்று (12) நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டு, குறைந்தது 25 பேர் காயமடைந்துள்ளனர்.

“துரதிருஷ்டவசமாக ஏற்கனவே ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன” என்று அந்த நகரில் இராணுவ நிர்வாகத் தலைவர் ஒலெக்சான்டர் வில்குல் தெரிவித்துள்ளார்.

பாரிய ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெறுவதாக முன்னர் கூறிய நிலையில் நேற்று அதிகாலை ஐந்து மாடி குடியிருப்புக் கட்டடம் ஒன்று தாக்கப்பட்டதாக இந்தப் பிராந்திய ஆளுநர் செர்ஹி லிசக் தெரிவித்துள்ளார்.

மூன்று குரூஸ் ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டபோதும் மற்றவை ஊடுருவிச் சென்றதாகக் கூறிய அவர், மக்கள் தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று அச்சம் வெளியிட்டார்.

கிரிவி ரி உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கியின் சொந்த ஊராகும். அவர் இந்தத் தாக்குலுக்கு கண்டனத்தை வெளியிட்டுள்ளார். உக்ரைனின் ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான இணைப்பாளரான டெனிஸ் பிரெளன், தாக்குதலை கண்டித்திருப்பதோடு, “பொதுமக்கள் மற்றும் பொதுமக்களின் உட்கட்டமைப்புகள் இலக்கு வைக்கக் கூடாது என்று சர்வதேச மனிதாபிமான சட்டம் தெளிவாகக் குறிப்பிடுகிறது” என்று தெரிவித்துள்ளார்.தலைநகர் கீவிலும் வான் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. வடக்கு நகரான கார்கிவில் பொதுமக்கள் உட்கட்டமைப்புகள் மீது ஆளில்லா வான் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த நகர மேயர் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்தத் தாக்குதல்கள் தொடர்பில் ரஷ்ய தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. உக்ரைனில் தமது சிறப்பு இராணுவ நடவடிக்கையில் பொதுமக்கள் உட்கட்டமைப்புகள் இலக்குவைக்கப்படவில்லை என்று அது தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

எனினும் உக்ரைன் பதில் தாக்குதல் ஒன்றை ஆரம்பித்து சில கிராமங்களை ரஷ்யாவிடம் இருந்து மீட்டதாக அறிவித்திருக்கும் நிலையிலேயே ரஷ்யாவின் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தகர்க்கப்பட்ட ககோவ்கா அணையில் இருந்து பெருக்கெடுத்த நீரினால் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை பத்தாக அதிகரித்துள்ளது. இதனால் 41 பேர் தொடர்ந்து காணாமல்போன நிலையில் இருப்பதாக உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   நன்றி தினகரன் 





3 கிராமங்களை மீட்டதாக உக்ரைன் படை அறிவிப்பு

ரஷ்ய படைக்கு எதிரான பதில் தாக்குதலை ஆரம்பித்திருக்கும் உக்ரைனிய இராணுவம் நாட்டின் தென்கிழக்கில் மூன்று கிராமங்களை மீட்டதாக அறிவித்துள்ளது.

உக்ரைனின் 68ஆவது படையணி கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட உறுதி செய்யப்படாத வீடியோ ஒன்றில் குண்டு தாக்குதலில் சேதம் அடைந்த கட்டடம் ஒன்றில் படையினர் உக்ரைனிய கொடியை ஏற்றுவது பதிவாகியுள்ளது. அது டொனட்ஸ்க் பிராந்தியத்தின் பலொஹடட்னே குடியிருப்புப் பகுதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

'தெற்கு முன்னரங்கில் இரண்டு திசைகளால் 300 மற்றும் 1,500 மீற்றர்கள் இடையே முன்னேறி தெற்கே அடுத்த கிராமமான மகரிவ்காவை உக்ரைனிய படையினர் கைப்பற்றினர்' என்று பிரதி பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மலியர் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் உக்ரைனிய நிலைக்கு மிக நெருக்கமாக உள்ள நெஸ்குச்னே கிராமத்தில் உக்ரைனிய படையினர் தமது தேசிய கொடியை ஏற்றும், உறுதி செய்யப்படாத படங்கள் டெலிகிராமில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த ஞாயிறு இரவு தொலைக்காட்சியில் தோன்றிய உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி, தமது படையினருக்கு பாராட்டுகளை தெரிவித்தபோதும், மோதல் இடம்பெறும் பகுதிகள் பற்றி குறிப்பிட்டு எதுவும் கூறவில்லை.

எனினும் குறித்த பகுதிகளில் இருந்து உக்ரைனிய படையினர் பின்வாங்கச் செய்யப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) வலியுத்தியது. தெற்கு டொனட்ஸ்க் மற்றும் சபொரிசியா பகுதிகளின் முன்னரங்குகளில் உக்ரைனிய துருப்புகள் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொண்ட தாக்குதல் முயற்சிகள் 'வெற்றியளிக்கவில்லை' என்று அது குறிப்பிட்டது.

உக்ரைன் முன்னரங்குகளில் இருந்து சுயாதீனமான தகவல்கள் குறைவாகவே கிடைக்கும் நிலையில் அங்கு நீடிக்கும் போர் நிலைமை குறித்து மதிப்பிடுவது சாத்தியமில்லாத ஒன்றாக இருந்து வருகிறது.   நன்றி தினகரன் 




ரஷ்யாவுக்கு எதிரான உக்ரைனின் பதில் படை நடவடிக்கை ஆரம்பம்

தமது நாட்டின் மீது படையெடுத்துள்ள ரஷ்ய இராணுவத்திற்கு எதிரான பதில் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் செலன்ஸ்கி அறிவித்துள்ளார். எனினும் இது பற்றிய மேலதிக விபரங்களை அவர் வெளியிடவில்லை.

உக்ரைன் தலைநகர் கீவில் கடந்த சனிக்கிழமை (10) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே செலன்ஸ்கி இந்த அறிவிப்பை வெளியிட்டார். உக்ரைன் சென்றுள்ள கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் இணைந்து நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே இது பற்றி கூறினார்.

உக்ரைனின் பதில் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகும் உக்ரைனிய படைகளுக்கு கணிசமான இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமர் புட்டின் ஒரு தினத்திற்கு முன்னர் வெளியிட்ட அறிவிப்பு குறிப்பித்து செலன்ஸ்கியிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார். ‘உக்ரைனில் பதில் தாக்குதல் மற்றும் தற்காப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அது எந்தக் கட்டத்தில் எந்த அளவில் இருக்கிறது என்பதை நான் கூறப்போவதில்லை’ என்று உக்ரைன் ஜனாதிபதி பதிலளித்தார்.   நன்றி தினகரன் 


No comments: