எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம்- 68 தொடர்பாடலில் எதிர்நோக்கப்படும் சிக்கல்கள் ! கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல்விருது விழாவில் சந்தித்த ஆளுமைகள் முருகபூபதி


கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது விழா ஜூன் மாதம் 04 ஆம்  நடந்த மண்டபத்திற்கு,  நண்பர் பாலச்சந்திரன் என்னையும், இந்த விழாவுக்காகவே மெக்ஸிக்கோவிலிருந்து வருகை தந்திருந்த எனது பெறாமகள் செல்வி லாவண்யா ஶ்ரீதரனையும் அழைத்து வந்தார்.

எம்முடன் வந்தவர் பாலச்சந்திரனின் துணைவியார் ராஜி.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அந்த விழாவில் பலரையும் சந்திக்க முடிந்தது. அன்றுதான் முதல் முதலில் எனது அன்பிற்கும் அபிமானத்திற்குமுரிய எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்களையும் நேருக்கு நேர் பார்க்க முடிந்தது.

எனது பெயர் இயல்விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு, நான் தெரிவாகியிருக்கின்றேன் என்ற செய்தியை முதலில் சொன்னவரும் அவர்தான். அவரைத் தொடர்ந்து காலம் இதழின் ஆசிரியர் செல்வம் அருளானந்தனும் அச்செய்தியை உறுதிப்படுத்தியிருந்தார்.

காலம் செல்வம் அவர்களையும் 2007 ஆம் ஆண்டிற்குப்பின்னர் அன்றுதான்  பார்க்கின்றேன்.

காலம் இதழில் அவ்வப்போது எழுதியிருக்கின்றேன்.

எனது பெறாமகள் லாவண்யா,  மறைந்த பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியத்தின் தீவிர ரசிகை. ஒரு சமயம் அவர் உயிருடன் இருந்த காலப்பகுதியில் தனது அப்பா ஶ்ரீதரனுடன்              ( எனது உடன் பிறந்த தம்பி ) சென்று சந்தித்து பேசியிருக்கிறாள்.

பாலசுப்பிரமணியத்தின் திடீர் மறைவு லாவண்யாவையும் மனதளவில் பெரிதும் பாதித்திருந்தபோது,  ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதி எனக்கு மின்னஞ்சலில் அனுப்பியிருந்தாள். அவள் ஆங்கிலத்தில் கவிதைகளும் கட்டுரைகளும் எழுதுபவள். பெரும்பாலும் தனது முகநூலில் அவற்றை பதிவேற்றியும் வருபவள். எஸ். பி. பி. மறைந்தபோது அவள் எழுதிய அந்த ஆங்கிலக் கட்டுரையை கனடாவில் நீண்ட காலமாக பதிவுகள் இணைய இதழை நடத்திவரும் நண்பர் கிரிதனுக்கு அனுப்பியிருந்தேன். அவர் அதனை வெளியிட்டிருக்கிறார்.

 “ அவரையும் அன்றுதான் முதல் முதலில் நேருக்கு நேர் சந்திக்கப்


போகின்றேன்.  அவரை உனக்கு அறிமுகப்படுத்துவேன்  “ என்று காரில் செல்லும்போது அவளிடம் சொல்லியிருந்தேன்.

எனக்கு 2003 ஆம் ஆண்டு இலங்கை அரசின் தேசிய சாகித்திய விருது,  எனது பறவைகள் நாவலுக்காக கிடைத்திருந்தபோது அந்த விழாவிலும் அவள் என்னுடன் வருகை தந்து பங்கேற்றவள். அப்போது அவளுக்கு பத்து வயதுதான்.  அச்சமயம் நாம் சென்ற வாகனத்தில் எம்முடன் எனது அம்மாவும் எனது தங்கை மகள் ஜெயபிரசன்யாவும் ( தற்போது


இங்கிலாந்திலிருக்கிறாள் )  மற்றும் ஒரு தம்பி மகள் அகல்யாவும்  ( தற்போது கட்டாரில் இருக்கிறாள். ) வந்தனர். இவ்வாறு பல நாடுகளுக்கும் திசைமாறிப் பறந்து சென்ற பறவைகள் நாம். விதி எம்மை எமது தாயகத்திலிருந்து விரட்டிவிட்டது.

அம்மா 2003 ஆம்   ஆண்டு நடுப்பகுதியில் மறைந்துவிட்டார்.

நண்பர் பாலச்சந்திரனுடன் இயல்விருது விழாவுக்கு புறப்பட்டபோது,  இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அந்த நிகழ்ச்சிகள் யாவும் நினைவுக்கு வந்தன.

என்னை சந்திப்பவர்களில் பெரும்பாலானவர்கள், எனது  எழுத்துப்பிரதிகள் தொடர்பாக பேசும்போது,  எனது  நினைவாற்றலை விதந்து குறிப்பிடுவது வழக்கம். அதனை பெரும் கொடையாகவும் சொல்வார்கள். ஆனால், எனக்கோ இந்த நினைவாற்றல் கொடுமையானது என்றுதான் கூறுவேன்.

கடந்த காலங்களில் எனது வாழ்வில்  நடந்த சம்பவங்களில்


இடம்பெற்ற இன்பமான செய்திகளை மட்டுமன்றி,   துயரமான செய்திகளையும் மறக்கமுடியாமல் தொடர்ந்தும் தவித்துவரும் ஒரு சாதாரண மனிதன்தான் நான்.

 “ நினைக்கத் தெரிந்த மனதால் மறக்கவும் முடியாது   என்று அனுபவித்து எழுதியவர் கவியரசு கண்ணதாசன்.

உலகெங்கும் மக்கள் நினைவு மறதி உபாதையினால் பாதிக்கப்பட்டு வருவதை அறிவீர்கள். நான் உளமாற நேசித்த பல கலை, இலக்கியவாதிகளும் இந்த நினைவு மறதி நோய்க்கு ஆளாகிவிட்டிருக்கின்றனர். அவர்களில் சிலர் கனடா தேசத்திலும் வாழ்கின்றனர்.  இந்த இயல் விருது விழாவுக்காக புறப்பட்டபோது அவர்களையும் பார்க்க வேண்டும் என்ற ஆவலுடன்தான் எனது பயண நிகழ்ச்சிகளை தயாரித்திருந்தேன்.


ஆனால்,  அவர்களைப் பார்க்க முடியாமல்போனது பெரும் துயரம். கனடாவில் நான் சந்தித்த ஒரு வித்தியாசமான அனுபவம் தொலைபேசி தொடர்பாடல்தான்.

சம்பந்தப்பட்டவர்களின் தொலைபேசி இலக்கங்களை தேடிப்பெற்று தொடர்புகொண்டால் உடனடியாக இணைப்பு கிடைக்காது.

அவர்களுடன் தொடர்புகொள்ளும் எனது இலக்கம் அவர்களுக்கு புதியதாக இருப்பின் பேசமாட்டார்கள்.  தவிர்த்துவிடுகிறார்கள்.

காரணம்:  கனடாவில் இந்த டெலி மார்க்கட்டிங் தொலைபேசி அழைப்புகள் பெருகிவிட்டன.

நான் வதியும் அவுஸ்திரேலியா கண்டத்திலும் இதுதான் நிலைமை.


அதனால், முடிந்தவரையில் எமக்கு நன்கு தெரிந்தவர்களின் தொலைபேசி இலக்கங்களை அவர்களின் பெயர்களுடன் பதிவுசெய்து வைத்திருப்போம்.

முன்பின்  தெரியாத தொலைபேசி அழைப்புகள் ( அவை டெலி மார்க்கட்டிங் )  வந்தால், நான் சொல்வது  “ நோ இங்கிலீஷ்.  “ அத்துடன் அந்த இணைப்பு துண்டிக்கப்பட்டுவிடும்.

அல்லது நான் முன்னர் பார்த்திருந்த இந்தித் திரைப்படங்களின்  பெயர்களை தொடர்ந்து சொல்லுவேன்.                “ ஜிஸ்தேஷ்மன்  கங்கா பேத்திகே -  ஜாப்பியர் கிசி கிசி கோத்தாகே -  ஏக் பூல் தோமாலி -  சோட்டி ஸி முலாகட்  “.   இவை அக்காலத்தில் ராஜ்கபூர்,  பத்மினி,  வைஜெயந்திமாலா முதலான நடிகர்கள் நடித்த திரைப்படங்கள்.


சமகாலத்தில் இந்த டெலிமார்க்கட்டிங்கில் ஈடுபட்டு வாடிக்கையாளர்களைத்  தேடுபவர்கள் அறியாத திரைப்படங்கள்.

பரபரப்பான வாழ்க்கையில் ஓடிக்கொண்டிருக்கும் நானும் இந்த உத்தியினால் தப்பிப்பிழைத்துகொண்டிருக்கின்றேன் என்றும் இச்சந்தர்ப்பத்தில் சொல்லிவிடுகின்றேன்.

கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல்விருது விழா  மண்டபம் நிறைந்திருந்தது. வாயிலில் நண்பர்கள் தமிழர் தகவல் எஸ். திருச்செல்வம், பதிவுகள் கிரிதரன்,  உதயன் லோகேந்திரலிங்கம், காலம் செல்வம் , தாய்வீடு திலீப் குமார் ஆகியோர் வரவேற்றனர்.

இவர்களின் ஊடகங்களில் எழுதியிருக்கின்றேன்.

 “ நண்பர் முத்துலிங்கம் என்னைத்தேடிக்கொண்டிருக்கிறார் , முதலில்


அவரைப் பாருங்கள்.    என்றார் காலம் செல்வம். 

அவரையும், தொடர்ந்து ஏனையவர்களையும் சந்தித்தேன். சிலரது பெயர்களை இங்கே குறிப்பிட்டேயாகவேண்டும்.

எனது தொடக்க கால படைப்புகளை தனது பூரணி இதழில் பதிவேற்றிய என். கே. மகாலிங்கம் தம்பதியர்,  இலங்கை வானொலியில் எனது குரல் ஒலிபரப்பாவதற்கு காரணமாகத் திகழ்ந்த நண்பர் வி. என். மதியழகன் தம்பதியர், பேராசிரியர் சுப்பிரமணியன்  தம்பதியர், இயல் விருது அறிவிப்பின் பின்னர் எனது நெஞ்சத்துக்கு நெருக்கமான தமிழக எழுத்தாளர் பாவண்ணனும் அவரது துணைவியாரும்,  பேராசிரியர் சந்திரகாந்தன்,  முனைவர் விஜய் ஜானகிராமன், தங்க சிவபாலு,  பால சிவகடாட்சம், சிந்தனைப்பூக்கள் பத்மநாதன், நாடகக் கலைஞர்கள்  ஜயகரன்,  சின்னையா சிவநேசன், திரைப்படக்  கலைஞர்  திவ்வியராஜன்,  ஶ்ரீரஞ்சனி,  கவிஞர் சேரன், கனடா மூர்த்தி, சுமதி,  கலை இலக்கிய ஆர்வலர்கள் மனுவேல் யேசுதாசன், உஷா மதிவாணன், சோமசுந்தரம் ராமேஸ்வரன்,  முரளி, அகணி சுரேஷ், வெண்சிலாஸ் அநுரா, இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த படைப்பாளிகள்  சிவசங்கரி, சாம்ராஜ்.


எனது உடன்பிறவாத சகோதரிகள் செல்வராணி தம்பதியர், ரோகிணி தம்பதியர், சுலோஜனா தம்பதியர் மற்றும் செல்வமணி, செல்வ நளினி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இயல்விருது விழா தொடர்பான நிகழ்ச்சிகளின் காணொளித் தொகுப்பு பரவலாக வெளியாகியிருப்பதனால்,  பலரும் அதனைப் பார்த்திருப்பார்கள். பலருடைய முகநூலிலும் வெளியாகியிருப்பதாக அறிகின்றேன்.

அக்காணொளிக்குள் சிக்காத சில சுவாரசியமான செய்திகளும் இருக்கின்றன.

நான் அமர்ந்திருந்த மேசையில் எனக்கு அருகிலிருந்த திருமதி ராஜி பாலச்சந்திரன் என்னிடத்தில்,   “ கடவுள் நம்பிக்கை இருக்கிறதா….? உங்களை கனடாவிலிருக்கும்  ஏதாவது ஒரு கோயிலுக்கு அழைத்துச்செல்லப்போகின்றோம் .”  என்றார்.

அன்பர் முத்துலிங்கம் அவர்கள், நான் அவுஸ்திரேலியாவிலிருந்து


புறப்படுவதற்கு முன்பே, இயல் விருது விழாவுக்கு மறுநாள் ஜூன் 05 ஆம் திகதி  திங்கள் இரவையும் அதன் பிறகு ஜூன் 08 ஆம் திகதி வியாழக்கிழமை முழுநாள் பொழுதையும் வேறு நிகழ்ச்சிகளுக்குச் செல்லாமல் ஒதுக்கி வைத்திருக்கச் சொல்லியிருந்தார்.

கனடாவிலிருக்கப்போகும் இரண்டு  வார காலத்துள் எங்கெங்கே செல்லவேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலை எழுதிக்கொண்டுதான் இந்தப்பயணத்திற்குப்  புறப்பட்டிருந்தேன்.

அதில் கோயில்களுக்கு செல்லும் நிகழ்ச்சி அடங்கியிருக்கவில்லை.  ராஜி  பாலச்சந்திரன் கோயிலுக்கு அழைத்ததும், எனது பறவைகள் நாவலில் நான் குறிப்பிட்டிருந்த வரிகள்தான் உடனே நினைவுக்கு வந்தது.

 “ கட்டினார்…. கட்டினார்…. கோயில்கள் கட்டினார், கட்டிய கோயில்களில் என்னதான் கண்டார் .. “

இவ்வாறு அந்த நாவல் எழுதப்பட்ட காலப்பகுதியில் நான் வதியும் அவுஸ்திரேலியாவிலும் சில கோயில்கள் எழுந்தன. அங்கே உறுப்பினர்களிடையே பிணக்குகளும் சண்டை சச்சரவுகளும் அடிதடிகளும்  இடம்பெற்றன.  சில பிரச்சினைகள் பொலிஸ் நிலையம் , நீதி மன்றம் வரையில் சென்றன. முரண்பாடுகள் வெடித்து புதிய புதிய  கோயில்களும் தோன்றின. ஒரு கோயிலுக்கு தீயும் வைக்கப்பட்டது. சில கோயில் அய்யர்மார் சில வேண்டத்தகாத செயல்களில் ஈடுபட்டு விலக்கி வைக்கப்பட்டனர்.


அதனையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டுதான் அந்த வரிகளை இருபது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியிருந்தேன்.

ஆன்மீகத்தை வளர்த்திருக்வேண்டிய கோயில்கள் ஆணவத்தையே வளர்த்தன என்பது எனது கருத்து.  அதனால்,  சகோதரி ராஜி பாலச்சந்திரன் என்னை கோயிலுக்கு  அழைத்தவுடன்,  நான் அவ்வாறு சொன்னதும் அருகிலிருந்தவர்கள் சிரித்தனர்.

 “ ராஜி … உங்கள் அழைப்பினை தட்டிக்கழிக்க மாட்டேன்.  ஒரு நாள்  அழைத்துச் செல்லுங்கள்.  2007 இல் கனடாவுக்கு நான் வந்த சமயத்திலும் எவரும் உங்களைப்போன்று கோயிலுக்கு என்னை அழைக்கவில்லை. இம்முறை பயணத்தில் நிச்சயம் வருவேன். கனடாவிலும் நிறைய கோயில்கள் இருப்பதாக அறிகின்றேன். அழைத்துச்செல்லுங்கள். அதற்காக ஒரு   நாளைத் தெரிவுசெய்வோம்.  “ என்றேன்.

அவரது வேண்டுகோளை தட்டிக்கழிக்காமல் பிறிதொரு நாளில் பாலா  - ராஜி  தம்பதியருடன்  Richmond Hill பிள்ளையார் கோயிலுக்கும் சென்றேன். அங்கே புனருத்தாரண வேலைகள் நடந்துகொண்டிருந்தன.

அதுபற்றி பின்னர் எழுதுவேன்.

ஜுன் 05 ஆம் திகதி திங்கள் இரவு நண்பர் முத்துலிங்கம் அவர்களின் இல்லத்தில் நடந்த விருந்தின்போதுதான்  எழுத்தாளர் சிவசங்கரியுடன் ஓரளவு பேச முடிந்தது.  இயல்விருது விழா நிகழ்ச்சியின்போது நான் அமர்ந்திருந்த மேசைக்கருகில்தான் அவருக்கும் ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தது.

அச்சமயம் அவருக்கு எனது சில நூல்களையும்  கொடுத்திருந்தேன். சிவசங்கரியும் எனது எழுத்துலக பிரவேச காலத்தில் எனது பிரியத்திற்குரிய படைப்பாளி. அவரது சில  படைப்புகள் திரைப்படமாகியிருக்கின்றன. தனது 25 வயதில் இலக்கியப்பிரதிகளை எழுதத் தொடங்கியிருக்கும் சிவசங்கரிக்கு தற்போது எண்பது வயதாகிறது. தொடர்ந்தும் எழுதுகின்றார். 

இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு என்ற திட்டத்தின் அடிப்படையில், பதினெட்டு இந்திய மொழிகளைச் சார்ந்த நூறு முக்கிய எழுத்தாளர்களைச் சந்தித்து நேர்காணல் செய்து அவர்களது படைப்புகள் பற்றியும் எழுதி, அந்தந்த மாநில பயணக் கதைகளையும் சொல்லி, ஒவ்வொரு மொழியின் இலக்கியப்  பின்னணி குறித்த விரிவான கட்டுரைகளையும் எழுதியிருப்பவர் சிவசங்கரி.

நான்கு தொகுதிகளாக ( தெற்கு – கிழக்கு – மேற்கு ) தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியாகியுள்ளது. இந்த நூலுக்காக சிவசங்கரிக்கு இந்திய இலக்கிய தரிசன விருது கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தினால் வழங்கப்பட்டது.

அண்மையில் அவரை நடிகை ரேவதி நேர்காணல்  செய்திருந்த  காணொளியையும்   பார்த்திருக்கும் தகவலை அவருக்குச் சொன்னதும்  அதனைத்  தயாரித்திருந்த  தன்னுடன் வந்திருந்த பெண்மணியையும் சிவசங்கரி எனக்கு அறிமுகப்படுத்தினார்.

மூவந்தியில் சூழலுறும் மர்மம் என்ற  தனது நூலுக்கு அபுனைவுப் பரிசினைப்பெற்ற, சாம்ராஜ் பல திரைப்படங்களில்  உதவி இயக்குநராக பணியாற்றியிருப்பவர். இயக்குநர் மிஷ்கினுடன் பணியாற்றிவரும்  சாம்ராஜ், திருடன் மணியம்பிள்ளை நூலை திரைப்படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

நண்பர் முத்துலிங்கம் அவர்களின் இல்லத்தில் நடந்த  விருந்தில்  சாம்ராஜ், திருடன் மணியம்பிள்ளை பற்றிய பல சுவாரசியமான செய்திளைச்சொல்லி எம்மை சிரிக்கவைத்தார்.

இதுவரையில் நூறு நூல்களை எழுதியிருக்கும் பாவண்ணன் எண்பதுகளில் எழுதத் தொடங்கியவர். ஏற்கனவே பல இலக்கிய விருதுகளை பெற்றிருப்பவர்.  பாவண்ணன் அவுஸ்திரேலியாவில் முன்னர் வெளியான உதயம் மாத இதழிலும் பத்தி எழுத்துக்களை எழுதினார். பல வருடங்களுக்கு முன்னர் ஆனந்த விகடன் வெளியிட்ட சிறுகதைச் சிறப்பிதழில் இவரது ஆறுதல்  என்ற சிறுகதையையும்,  சொல் புதிது இதழில் இவரைப்  பேட்டி கண்டு எழுதிய ஜெயமோகனின்  பதிவையும் ( தலைப்பு :  அடையாளமற்றதன்மை பெரிய வலியைக் கொடுக்கும் ) படித்திருக்கின்றேன்.

 படைப்பாளி பாவண்ணன்  பற்றிய விரிவான பதிவை பின்னர் எழுதவிருக்கின்றேன்.  அந்த இராப்போசன விருந்து இலக்கிய விருந்தாகவே அமைந்தது.

( தொடரும் )

letchumananm@gmail.com

No comments: