வாழ்தென்பது வரமாகும் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேர்ண் ….. அவுஸ்திரேலியா 
 வாழ்த்தும் மனமிருந்தால்  வையகமே பார்க்கும் 
 மனமகிழ்வு  மனநிறைவு வந்துமே சேரும் 
 மனவுழைச்சல்  மனவுடைவு மறைந்துமே போகும்
 மனவமைதி மனமலர்ச்சி வந்துமே நிறையும் 

இருக்கின்ற காலம் எவருக்கும்  தெரியாது
இறக்கின்ற காலமும் எவருக்கும் தெரியாது
வாழ்கின்ற காலத்தில் வண்ணமுற வாழ்வோம்
வாழ்த்ததனை வாழ்வில் வழங்கியே மகிழ்வோம் 

ஓடித்தேடி யெங்குமே அலைந்துலய வேண்டாம் 
ஒருவார்த்தை உள்ளமதில் எழுந்தாலே போதும் 
வாழ்த்தென்னும் வார்த்தையினை வரவழைத்து விட்டால்
வரவேற்பும் கெளரவமும் வந்துமே குவியும் 

மங்கலமாய் வார்த்தைபல  நம்மொழியில் இருக்கு
இடமறிந்து நாமும் எடுத்துமே சொல்வோம் 
எவ்விடத்தும் எடுத்துரைக்க ஏற்ற பெருவார்த்தை
வாழ்த்தென்னும் வார்த்தையாய் வாய்த்திருக்கு தமிழில் 

பரிசுக்கும் வாழ்த்து பட்டத்துக்கும் வாழ்த்து 
பணிவுக்கும் வாழ்த்து துணிவுக்கும் வாழ்த்து 
அணைத்தாலும் வாழ்த்து அழைத்தாலும் வாழ்த்து
அடியார்கள் ஆண்டவனை வாழ்த்தியே மகிழ்ந்தார் 

நமச்சிவாய  வாழ்க நமையீர்க்கும் மந்திரம்
நாதன் தாள்வாழ்க நாளுரைக்கும் மந்திரம் 
இமைப் பொழுதும் நெஞ்சில் நீங்கா 
இறைவனை எண்ணுவதும் போற்றுவதும் வாழ்த்தொன்றே  
No comments: