இலங்கைச் செய்திகள்

 இன நல்லிணக்கம் ஏற்பட நாட்டு மக்களது சிந்தனை மாற வேண்டும்

குருந்தி விகாரைக்குச் சொந்தமான அரச காணிகளை ஏனையவர்களுக்கு வழங்கும் தீர்மானம் இல்லை

600 சுற்றுலாப் பயணிகளுடன் அதிசொகுசுக் கப்பல் வந்தது

நாட்டில் புலம்பெயர் தமிழர்கள் முதலீடு செய்வது குறித்து பேச்சு

குருந்தூர்மலை, திரியாய் பகுதி விகாரைகளுக்கு காணி ஒதுக்கீடு?


இன நல்லிணக்கம் ஏற்பட நாட்டு மக்களது சிந்தனை மாற வேண்டும்

- அந்த மாற்றத்தை ஏற்படுத்த முன்வருமாறு நீதியமைச்சர் அழைப்பு

நாட்டிலுள்ள அனைவரும் எமது சகோதரர்களென்ற சிந்தனை ரீதியான மாற்றம் ஏற்படும்வரை நாட்டில் அபிவிருத்தி மற்றும் மனித வாழ்க்கைக்கான பாதுகாப்புத் தன்மையை எதிர்பார்க்க முடியாது. அதனால், இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப நாட்டு மக்களின் சிந்தனை ரீதியான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென, நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

கலாசார நல்லிணக்கத்தை மக்கள் மயமாக்கும் உலகத் தரம் வாய்ந்த திரைப்படம் திரையிடுதல் மற்றும் அது தொடர்பான கலந்துரையாடலின் ஆரம்ப நிகழ்வு நேற்று முன்தினம் நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றிய போது,

"தேசிய ஒருங்கிணைப்பை பாதுகாக்கத் தேவையானளவு சட்ட திட்டங்கள் இருக்கின்றன. சமத்துவத்தை உறுதிப்படுத்த தேவையானளவு உறுப்புரைகள் எமது அரசியலமைப்பில் இருக்கின்றன. இவை அனைத்தும் இருந்தும், எமது நாடு அடிக்கடி இரத்த ஆற்றில் நிரம்பி வழிகின்றது.

1971 கலவரத்தில் 60 ஆயிரம் பேர்வரை மரணித்தனர். 1983, 1988 கலவரங்களில் மேலும் ஆயிரம் பேர்வரை மரணித்தனர். வடக்கு, கிழக்கு பிரிவினைவாத யுத்தம் காரணமாக மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இவ்வாறான நிலையில், எங்களுக்கு எதிர்காலம் தொடர்பாக கனவு காண முடியுமா?

இவ்வாறான கலாசாரம் இருக்கும் நாடொன்றில் நாங்கள் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்தாலும், சட்டத்தில் மறுசீரமைப்புகளை மேற்கொண்டாலும், நாட்டு மக்களின் எதிர்கால பரம்பரையின் பிள்ளைகளின் வாழ்க்கைக்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

நாங்கள் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த அனைத்து விடயங்களையும் செய்வதுடன், நாட்டு மக்களின் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறில்லாமல், எந்த பயனும் இல்லை.

இந்த நாட்டில் வாழும் மக்கள் எமது சகோதரர்கள், எமது பிள்ளைகள் எனும் உணர்வு இருக்க வேண்டும். அந்த உணர்வை ஏற்படுத்திக் கொள்ளும்வரை எமது நாட்டு மக்களின் வாழ்க்கைக்கான பாதுகாப்பு தொடர்பாக சிந்திக்க முடியாது.

எமது நாட்டு மக்கள் பல்வேறு வகையில் பிளவுபட்டிருக்கின்றனர். சிங்களம், தமிழ், முஸ்லிம் என்றும் ஸ்ரீலங்கா, யூ.என்.பி. ஜே.வி.பி. என்றும் கலாசார ரீதியிலும் பிளவுபட்டிருக்கின்றனர்.

ஏன் நாங்கள் இவ்வாறு பிளவுபட்டிருக்கிறோம்.

மக்களை பிளவுபடுத்தவா ஜனநாயகம் தேவை? ஜனநாயகத்துக்கு மிகவும் இலகுவான வரைவிலக்கணம் பன்முகத்தன்மையின் மூலம் ஒருமைப்பாட்டுக்கு வருவதாகும்.

ஆனால், நாங்கள் அதற்கு அப்பாற்பட்ட விடயங்களே செய்கிறோம்.

அதனால், நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப நாங்கள் இந்த நாட்டு மக்களின் சிந்தனை ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தியேயாக வேண்டும்" என்றார்.   நன்றி தினகரன் 
குருந்தி விகாரைக்குச் சொந்தமான அரச காணிகளை ஏனையவர்களுக்கு வழங்கும் தீர்மானம் இல்லை

- ஜனாதிபதியின் செயலாளரினால் தொல்பொருள் ஆய்வாளர் கலாநிதி எல்லாவல மேதானந்த தேரருக்கு விளக்கம்

ஜனாதிபதி செயலகத்தில் கடந்த 08ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலில், குருந்தி விகாரைக்குச் சொந்தமான அரச காணிகள் தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கமைய, தொல்பொருள் ஆய்வாளர் கலாநிதி வண.எல்லாவல மேதானந்த தேரர் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் தனது நிலைப்பாட்டை அறிவித்திருந்தார்.

விகாரைக்குச் சொந்தமில்லாத காணிகளை பொதுமக்களிடம் கையளிக்குமாறு பணிப்பரை விடுக்கப்பட்டதாக ஊடகங்கள் மூலம் அறியமுடிந்தது. விகாரையை சுற்றிலும் பல்வேறு பௌத்த விஹாரைகளின் இடிபாடுகள் சிதறிக்கிடப்பதால் அங்குள்ள காணிகளை பகிர்ந்தளிப்பது பொறுத்தமற்றதெனவும் கலாநிதி எல்லாவல மேதானந்த தேரர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

தற்போதைக்கு அரச காணிகளை பகிர்ந்தளித்தாலும் பகிர்ந்தளிக்காவிட்டாலும் தவறாக பலவந்தமாக காணிகள் கையகப்படுத்தப்பட்டிருப்பதாக அறியமுடிந்துள்ளது. அதனால் மேற்படி காணிகளின் உரிமத்தை பிறருக்கு வழங்கக்கூடாது எனவும் அவரது கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதியின் செயலாளரினால் தொல்பொருள் ஆய்வாளர் கலாநிதி எல்லாவல மேதானந்த தேரருக்கு 2023 ஜூன் 15 திகதியிடப்பட்ட பதில் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குருந்தி விகாரையானது இலங்கையர்களான எமது தொல்பொருள் சின்னமாகும். அதனால் குருந்தி விகாரையின் காணிகளை ஏனையவர்களுக்கு வழங்குவதற்கான தீர்மானங்கள் எவையும் எடுக்கப்படவில்லை. வடக்கு, கிழக்கு பகுதிகளில் காணப்படுகின்ற காணி பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கும்போதும் 1985 களில் காடுகள் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்கள் அவ்வண்ணமே பாதுகாக்கப்பட வேண்டும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பதில் கடிதத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 2023.06.08 அன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது குருந்தி விகாரை மற்றும் திரியாய பிரதேச விகாரை இடிபாடுகள் ஆகிய இரண்டையும் பற்றி ஆலோசிக்கப்பட்டதெனவும் ஊடகங்கள் இவ்விடயம் தொடர்பில் மேற்கொண்ட தவறான அறிக்கையிடலே பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளதாகவும் குருந்தி விகாரையை அண்மித்த விவசாய காணிகளில் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் தேடியறிந்து அறிக்கையொன்றை சமர்பிக்குமாறு முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் மற்றும் தொல்பொருள் திணைக்கள் பணிப்பாளர் நாயகத்திற்கும் அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அறிந்துகொண்டு அவற்றை மாவட்டச் செயலாளரின் பொறுப்பின் கீழ் வைத்துக் கொள்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நேபாளத்தின் லும்பினி மகா தேவி விகாரையின் அகழ்வு பணிகளை நடத்திய பேராசிரியர் ரொபின் கனின்ஹேமின் உதவிகளை பெற்றுக்கொண்டு மகா விகாரை பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதியின் செயலாளரினால் தொல்பொருள் ஆய்வாளர் கலாநிதி வண,எல்லாவல மேதானந்த தேரருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள பதில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.   நன்றி தினகரன் 600 சுற்றுலாப் பயணிகளுடன் அதிசொகுசுக் கப்பல் வந்தது

- அமைச்சர்களான நிமல், டக்ளஸ் வரவேற்பு

இலங்கை துறைமுக அதிகார சபையால் நிர்மாணிக்கப்பட்ட காங்கேசன்துறை நவீன புதிய பயணிகள் முனையம் நேற்று (16) துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிமல் சிறி பால டி சில்வா மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தாவால் வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டது.

இந்தியாவிலிருந்து 600 சுற்றுலாப் பயணிகளுடன் வந்த முதலாவது அதிசொகுசுக் கப்பல் எம்.வி. எம்பிரஸ், காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது. கப்பலில் வந்த இந்திய சுற்றுலாப் பயணிகளை அமைச்சர்கள் அடங்கிய குழாம் வரவேற்றதுடன், கப்பலின் கப்டனுக்கு நினைவுப்பரிசிலும் கையளிக்கப்பட்டது.இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா,

"காங்கேசன்துறைக்கும் இராமேஸ்வரத்துக்குமிடையில் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பது தொடர்பாக இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களுக்கிடையில் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

இராமேஸ்வரம் பகுதியில் சில வேலைத்திட்டங்களை கப்பல் சேவை ஆரம்பிக்க முன்னர் முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளது. இதன் காரணமாக தற்போதைய சூழ்நிலையில் உடனடியாக கப்பல் சேவையை ஆரம்பிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.

எனினும், இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களின் தொடர் முயற்சியின் பயனாக விரைவில் கப்பல் சேவை ஆரம்பிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன" என்றார்.

இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ், கப்பல்துறை அமைச்சின் செயலர், துறைமுகங்கள் அதிகார சபையின் அதிகாரிகள், வட பிராந்திய கடற்படை தளபதி, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், கடற்படை உயர் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.   நன்றி தினகரன் 
நாட்டில் புலம்பெயர் தமிழர்கள் முதலீடு செய்வது குறித்து பேச்சு

- அலி சப்ரி, சாகலவுடன் கனடா ரோய் கலந்துரையாடல்
- நிரந்தர சமாதானம், தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவையும் கனேடிய அரசியல், சமூகச் செயற்பாட்டாளரான ரோய் சமாதானம், கடந்த வியாழக்கிழமை (15) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இது தொடர்பாக தெரிவித்த சமூக செயற்பாட்டாளரான ரோய் சமாதானம், "இலங்கையில் புலம்பெயர் தமிழர்கள் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பாக விரிவாக கலந்துரையாடினேன். குறிப்பாக, இலங்கையில் நிரந்தரமான சமாதான நிலைமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென்பதோடு, தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பாக கூடிய கரிசனைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் கோரினேன்.இதேவேளை, டென்மார்க்கில் வாழ்கின்ற 2 ஆயிரம் பேர் வரையான புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு தடையாகவுள்ள டென்மார்க் அரசாங்கத்தால் வழங்கப்படும் அகதிகளுக்கான பயண ஆவணம் அல்லது கடவுச்சீட்டு (அலையன்ஸ் கடவுச்சீட்டு) ஆகியவற்றுக்கு இலங்கை அரசாங்கம் விதித்துள்ள தடைகளை நீக்க வேண்டுமென்று கோரினேன்.

டென்மார்க்கிலுள்ள எமது பிரஜைகள் தமது தாய்நாட்டைப் பார்ப்பதற்காக இலங்கைக்கு வருகை தருவதற்கு தயாராகவுள்ளனர். அத்துடன், முதலீடுகளைச் செய்வதற்கும் முன்வந்துள்ளனர். அவற்றினூடாக இலங்கைக்கு அந்நிய செலவாணி வருமானம் கிடைப்பதற்கு சாத்தியமான நிலைமைகள் உள்ளன.

ஆகவே, அவர்கள் இலங்கைக்கு பிரவேசிப்பதற்குரிய தடைகளை நீக்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்றும் கோரினேன். அக்கோரிக்கைகளை சாதகமாக பரிசீலிப்பதாக அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்கவும் தெரிவித்துள்ளனர்" என்றார்.   நன்றி தினகரன் 
குருந்தூர்மலை, திரியாய் பகுதி விகாரைகளுக்கு காணி ஒதுக்கீடு?

முறையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க நிபுணர் குழு

எந்த அடிப்படையில் இந்தளவு காணிகள் கோரப்பட்டுள்ளதென்பதை விஞ்ஞானபூர்வ தரவுகள், ஆதாரங்களுடன் ஆராய்வதற்காகவே ஜனாதிபதி நிபுணர்கள் குழுவை நியமிக்கவுள்ளார்

தொல்பொருள் நடவடிக்கைகளுக்கென முல்லைத்தீவு, குருந்தூர்மலை விகாரை மற்றும் திருகோணமலை, திரியாய் விகாரை ஆகியவற்றுக்காக காணிகளை கோரியுள்ளமை தொடர்பாக முறையான விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நிபுணர் குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

இவ்வாறு முல்லைத்தீவு, குருந்தூர்மலை விகாரைக்கு 3,000 ஏக்கர் காணியும் திருகோணமலை, திரியாய் விகாரைக்கு 2,000 ஏக்கர் காணியும் கோரப்பட்டுள்ளன.

வனவள பாதுகாப்பு திணைக்களம், காணி திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றுக்குச் சொந்தமான அரசாங்க காணிகளில் இந்தளவு

காணிகளை தொல்பொருள் பிரதேசங்களென தெரிவித்து எத்தகைய அடிப்படையில் கோரப்படுகிறதென்பதை உடனடியாக ஆராயுமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் ஸ்தாபிக்கப்பட்ட தொல்பொருள் ஜனாதிபதி செயலணி மூலம் மேற்படி காணிகள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அந்தக் காணிகள் தொல்பொருள் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட வேண்டுமென அந்த செயலணியால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பௌத்த தலைமையகமாக கருதப்படும் அநுராதபுரம் மஹாபோதி விகாரைக்கோ அல்லது சிறந்த பாரம்பரிய மரபுரிமை சொத்தாக கணிக்கப்படும் சிகிரியாவுக்கும் கூட இந்தளவு காணிகள் கிடையாதென்றும் எனினும், குருந்தூர்மலை விகாரை மற்றும் திரியாய் விகாரை ஆகியவற்றுக்கு இந்தளவு காணிகள் எந்த அடிப்படையில் கோரப்பட்டுள்ளதென்பதை விஞ்ஞானபூர்வத் தரவுகள் மற்றும் ஆதாரங்களுடன் ஆராய்வதற்காகவே ஜனாதிபதி இந்த நிபுணர்கள் குழுவை நியமிக்கவுள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம் - நன்றி தினகரன் No comments: