கடன் பொறியால் இலக்கு வைக்கப்படும் இந்திய பெருங்கடல்!

 Thursday, June 15, 2023 - 5:16pm

இலங்கையில் சீனா மேற்கொண்டு வரும்  முதலீடுகள் அண்மைய காலங்களில் விவாதத்திற்கும் விமர்சனத்திற்கும் உட்பட்டிருக்கிறது. இலங்கையில் பல்வேறு திட்டங்களுக்கு சீனா கணிசமான நிதி முதலீடுகளை செய்துள்ளது. துறைமுகங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் விமான நிலையங்கள் போன்ற நாட்டின் உள்கட்டமைப்பு திட்டங்களில் அதிக முதலீட்டை செய்துள்ள சீனா இலங்கையுடன் பல ஆண்டுகளாக அரசியல் மற்றும் பொருளாதார இலாபங்களை அனுபவித்து வருகிறது.

இந்நிலையில், இந்த முதலீடுகளால் இலங்கை அடைந்துள்ள பொருளாதார முற்னேற்றங்கள்  மற்றும் நன்மைகள் குறித்த சர்ச்சைகள்  தொடர்ந்த வண்ணம் உள்ளன. இலங்கை எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு சீனாவிடமிருந்து பெறப்பட்ட வெளிப்படைத் தன்மைகளற்ற கடன்களும் காரணமாக அமைந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணமுள்ளன.

இலங்கையில் சீனாவின் முதலீடுகள் புவியரசியலில் தனது ஆதிக்கத்தை நிறுவுவதற்கு சீனாவுக்கு அதிக பலன்களை வழங்கியுள்ள, இலங்கைக்கு வருமானங்களை கொண்டு வராத பயனற்ற திட்டங்களாக கணிக்கப்படுகிறது. இவை, இலங்கையின் கடன் சுமையை அதிகப்படுத்தி இலங்கையை ஒரு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிய சீனாவின்  கடன் பொறி ராஜதந்திரமாக  கருதப்படுகிறது.

தென்னிலங்கையில் உள்ள ஹம்பந்தோட்டை  துறைமுகத்தில் சீனாவின் முதலீடு சச்சரவுகளையும், பிராந்திய அரசியல் முறுகலையும்  ஏற்படுத்திய முக்கிய முதலீடுகளில் ஒன்றாகும். 2017 ஆம் ஆண்டு, சீனாவிடமிருந்து பெறப்பட்ட  கடனை திருப்பிச் செலுத்த முடியாமல், சீன அரசுக்கு சொந்தமான ஒரு நிறுவனத்திற்கு 99 ஆண்டு குத்தகைக்கு இந்த துறைமுகம் வழங்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை  நீண்ட கால குத்தகைக்கு சீனாவுக்கு வழங்கப்பட்ட விவகாரம் உள்நாட்டிலும், பிராந்தியத்திலும் சர்ச்சைகளை உருவாக்கின. துறைமுகத்தை சீனாவுக்கு வழங்க இலங்கை ஒப்புக் கொண்டதன் மூலம், சீனாவின்  இருப்பை இந்திய பெருங்கடலில் அனுமதித்ததாக உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் இலங்கை அரசாங்கம் விமர்சனங்களை எதிர்கொண்டது.

அதேபோன்று, சீனாவின் மற்றுமொரு முக்கிய முதலீடான மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையமும் இதேபோன்ற சவால்களை எதிர்கொண்டுள்ளது. தென்னிலங்கையில் தொலைதூரப் பகுதியில் அமைந்துள்ள இந்த விமான நிலையம், பிராந்திய விமானப் போக்குவரத்தின் மையமாக மாறும் என எதிர்பார்க்கப்பட்ட போதும்,  குறைந்த அளவிலான சர்வதேச விமானங்களின் வருகை காரணமாகவும்,  குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளின் பயன்பாட்டின் காரணமாகவும்  இது பல  தோல்வியையும், நஷ்டத்தையும் சந்தித்துள்ளது

எது எப்படியிருப்பினும், இலங்கையில் சீனா செய்து வரும் முதலீடுகள் இலங்கைக்கான  பொருளாதார மேம்பாடுகளைக் காட்டிலும் மூலோபாய ரீதியிலும் மற்றும் பிராந்திய, புவிசார் மற்றும் கடல்சார் அரசியலில் சீனாவுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கியிருப்பதாக  கூறப்படுகிறது..

2013ம் ஆண்டு தற்போதைய  சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் ஆரம்பித்த  பெல்ட் அண்ட் ரோட் முன்முயற்சி (பிஆர்ஐ), என்ற  உலகளாவிய உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் , உலகின் ஏனைய  நாடுகளுடன் சீனாவின் இணைப்பை மேம்படுத்துவதையும் அதன் அரசியல், வர்த்தக  ஆதிக்கத்தையும் செல்வாக்கையும் விரிவுபடுத்துவதை அடிப்படை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தியப் பெருங்கடலில் இலங்கை கொண்டுள்ள  புவியியல் ரீதியிலான மூலோபாய இருப்பிடம் காரணமாக, சீனா இலங்கை மீது அதிக ஆர்வத்தைக் காட்டி வருகிறது. சீனாவின் கடல்சார் நலன்களைப் பாதுகாப்பதற்கும் பிராந்தியத்தில் காலூன்றுவதற்கும் சீனாவிற்கு கவர்ச்சிகரமான இலக்காக இலங்கை அமைந்துள்ளது.

கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும்  துறைமுக நகர திட்டம் கூட சீனாவின் கடல்சார் ஆதிக்க அரசியலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கும் மற்றுமொரு திட்டமாக கருதப்படுகிறது. கொழும்பு துறைமுக நகர  திட்டம்  இலங்கையின் தலைநகரை ஒட்டியுள்ள கடலில் ஒரு புதிய நகரத்தை உருவாக்கும் திட்டமாகும். இது,  இந்திய பெருங்கடலில் பிராந்திய அரசியல் அதிகார சிக்கல்களை உருவாக்குவதாக பரவலாக குற்றஞ்சாட்டப்படுகிறது.  இந்த திட்டத்திற்கு  சீனா 15 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு செய்யவுள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர, சீன கடற்படை இந்தியப் பெருங்கடல் பகுதியில் தனது இருப்பை விரிவுபடுத்தி வருகிறது.  பிராந்தியத்தில்  தனது கடற்படை நடவடிக்கைகளுக்கு புதிய தளங்களை உருவாக்கி வருகிறது.  இந்திய பெருங்கடல் பகுதியில் சீன கடற்படை, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளின் கடற்படைகளுடன் இணைந்து கூட்டுப் பயிற்சிகளையும் நடத்தி வருகிறது.

கடல் பிராந்தியங்களை இலக்காக வைத்து வளர்ந்து வரும் சீனாவின் பொருளாதார மற்றும் இராணுவ ஆதிக்கம் பிராந்தியத்தில் அடிக்கடி பதற்றங்களை உருவாக்கி வருவதாக மற்றொரு குற்றச்சாட்டு உள்ளது.

சீனா கட்டமைத்து வரும் கடல்சார் ஆதிக்கத்தை முறியடிக்க, அமெரிக்கா, ஜப்பான், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவை உள்ளடக்கிய குவாட் (Quad) அமைப்பு இராஜதந்திர மற்றும் பொருளாதார திட்டங்கள் மூலம் இணைந்து செயலாற்றி வருகின்றன.

உலகெங்கிலும் உள்ள மூலோபாய இடங்களில் உள்ள முக்கிய துறைமுகங்களைக் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சீனா முயன்று வருவது, இந்தப் பிராந்தியங்களிலும் அதற்கு அப்பாலும் உள்ள பல நாடுகளிடையே கவலைகளை எழுப்பியுள்ளது. சீனாவின் இந்த நகர்வுகள் நீண்டகால பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களை பாதுகாக்கும் அதன் வழியாக பார்க்கப்படுகிறது.

இதேபோல், பாகிஸ்தான், ஜிபூட்டி மற்றும் மியன்மார் போன்ற பிற நாடுகளின் துறைமுகங்களில் சீனா  தடம் பதித்து வருகிறது.  பெரும்பாலும் கடன்களை வழங்கியும், முதலீடுகளை செய்தும் இந்த நாடுகளின் கட்டுப்பாடுகளை தன் பக்கம் ஈர்த்து வருவதாக குறிப்பிடப்படுகிறது.  இந்தியப் பெருங்கடல் பகுதியைத் தவிர, சீனாவின் கடல்சார் செல்வாக்கு தென் சீனக் கடல் வரை நீண்டுள்ளது. 

தென் சீனக் கடலில் சீனாவின் இந்த செயற்பாடுகளால், அண்டை நாடுகளான வியட்நாம், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா ஆகிய நாடுகளுடன் அதற்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.   பல நாடுகளின்  துறைமுகங்களை சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது,  பல நாடுகளுக்கு சாத்தியமான இராணுவ பயன்பாடு மற்றும் பாதுகாப்பு தொடர்பான கவலையையும் எழுப்பியுள்ளது.

சீனாவின் கடல்சார் செயற்பாடுகள்  பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கு ஆபத்துகளையும் சவால்களையும் ஏற்படுத்துவதாக பல நாடுகள் நம்புகின்றன. பொருளாதார கூட்டாண்மை மற்றும் இராணுவ விரிவாக்கம் போன்ற உத்திகளைப் பயன்படுத்தி சமீபத்திய ஆண்டுகளில் அதன் உலகளாவிய கட்டுப்பாட்டை அதிகரிக்க சீனா செயல்பட்டு வருகிறது. இந்த முயற்சிகள் பல நாடுகளிடையே உலகளாவிய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தோ-பசிபிக் பிராந்தியம் சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் அதிகரித்து வரும் ஆதிக்கத்தை  அனுபவித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பின்வரும் நாடுகளில் சீனா தனது முதலீடுகளின் ஊடாக தனது இருப்பை பலப்படுத்த முயல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தான்: குவாதர் துறைமுகத்தின் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்காக  பாகிஸ்தானில் சீனா அதிக அளவில் முதலீடு செய்துள்ளது. குவாதர் துறைமுகம் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ள குவாதார் நகரில் அரபிக்கடலின் கரையில் அமைந்துள்ளது.

உலகின் எண்ணெய் இருப்புக்களில் மூன்றில் இரண்டு பங்கைக் கொண்ட பெரிய பகுதியால் சூழப்பட்ட, மத்திய ஆசிய குடியரசுகள் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு அருகிலுள்ள உள்ள துறைமுகமாகவும் இது உள்ளது. சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (CPEC) திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட முக்கிய திட்டமாக இந்த துறைமுக திட்டம் இருக்கிறது.

ஜிபூட்டி: பாபுல்-மன்தப் நீரிணையில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள ஜிபூட்டியில் சீனா ராணுவ தளத்தை நிறுவியுள்ளது.  பாபுல் மன்தப் என்பது அரேபிய தீபகற்பத்தில் உள்ள, யெமனுக்கும் ஆப்பிரிக்காவின் கொம்பில் உள்ள ஜிபூட்டி மற்றும் எரித்திரியா ஆகியவற்றுக்கு இடையில் உள்ள ஒரு நீரிணை ஆகும். இது செங்கடலை ஏடன் வளைகுடாவுடன் இணைக்கிறது.

மியன்மார்: கியூகிபுவில் ஆழ்கடல் துறைமுகத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட மியன்மாரின் உள்கட்டமைப்புகளில் சீனா முதலீடு செய்துள்ளது. இந்த துறைமுகம் சீனாவின் கடல்சார் நோக்கங்களுக்கான மூலோபாய சொத்தாக கருதப்படுகிறது.

கம்போடியா: கம்போடியாவுக்கு சீனா தனது கடனுதவி  முதலீடுகள் மூலம் அந்நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாடுகளை செய்துள்ளது.

வெனிசுலா: வெனிசுலாவின் எண்ணெய் மற்றும் எரிசக்தி துறையில் சீனா அதிக அளவில் முதலீடு செய்து எண்ணெய் ஏற்றுமதிக்கு கடன் வழங்குகிறது. தற்போது வெனிசுலா பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

மேலும், இலங்கையில் சீனாவின் அதிகரித்துவரும் இருப்பு அண்டை நாடுகளால், குறிப்பாக இந்தியாவால் சந்தேகத்துடன் பார்க்கப்பட்டு வருகிறது. இந்தியா நீண்ட காலமாக இலங்கையை அதன் செல்வாக்கு மண்டலத்திற்குள் உள்ள நேச நாடாக பார்த்து வருகிறது. இந்த பிராந்தியத்தில் சீனாவின் விரிவாக்கம் குறித்து இந்தியா எச்சரிக்கையாக இருந்து வருகிறது. இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம்  சீன-இந்திய உறவுகளில் முறுகலுக்கு அவ்வப்போது வழிவகுத்து வருகிறது. 

ஒட்டுமொத்தமாக, இலங்கையில் சீனாவின் முதலீடுகள் பிராந்திய அரசியலில் எதிர்மறையான தாக்கங்களையே ஏற்படுத்தியுள்ளன. பிராந்தியத்தில் வளர்ந்து வரும் சீன செல்வாக்கு  புவிசார் அரசியலில் பதற்றங்களையும், கவலைகளையும் எழுப்பி வருகின்றன. மற்ற நாடுகளில் முதலீடுகள் மூலம் சீனா தனது உலகளாவிய இருப்பைத் தொடர்ந்து விரிவுபடுத்துவதால், அதன் முதலீடுகளினால் உருவாக்கப்படும் புவியரசியல் தாக்கங்கள் தொடர்ந்து உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகின்றன.

-சூரியா

நன்றி தினகரன் No comments: