மணிப்பூரில் ஒரு மாத காலத்துக்கு மேலாக ஓயாத வன்முறைகள்!

 Sunday, June 18, 2023 - 11:14am

இந்தியாவின் மணிப்பூரில் வன்முறை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மத்திய அமைச்சர் ரஞ்சன் சிங் வீடு வன்முறையாளர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் 40 நாட்களாக நிகழ்த்தப்பட்ட வன்முறையில் பலர் உயிரிழந்துள்ளனர்.

மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி- குக்கி இனக்குழுவினரிடையேயான மோதல் ஒரு மாத காலத்துக்கும் மேலாக தொடருகிறது. வடகிழக்கு மாநிலத்தில் பட்டியல் பழங்குடியினர் (எஸ்.டி) பிரிவில் சேர்க்கக் கோரி இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் மணிப்பூர் மாநிலத்துக்கு நேரில் சென்று முகாமிட்டு அமைதி முயற்சிகளை முன்னெடுத்தார். ஆனாலும் மணிப்பூரில் வன்முறை ஓயவில்லை.

இம்மாநிலத்தில் 10,000 க்கும் அதிகமான அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினர், 500க்கும் அதிகமான பி.எஸ்.எப்.வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பாதுகாப்புப் படையினரிடம் இருந்து ஆயுதங்களை கொள்ளையடித்து வன்முறைகளில் ஈடுபடுவதால் நிலைமை மிக மோசமடைந்துள்ளது. மைத்தேயி, குக்கி ஆகிய இரு இனக்குழுக்களும் ஆயுதங்கள் ஏந்தி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மோதலில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

கடந்த வாரம் மணிப்பூர் பெண் அமைச்சர் ஒருவரது வீடும் வன்முறையாளர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. மைத்தேயி இனக்குழுவினரே இந்த வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் குக்கி இனக் குழுவினரது வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தலைநகர் இம்பாலில் மத்திய அமைச்சர் ஆர்.கே ரஞ்சன் சிங் வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த போது மத்திய அமைச்சர் ஆர்.கே.ரஞ்சன் சிங் வீட்டில் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.   நன்றி தினகரன் 

No comments: