பெரிய இடத்துப் பெண் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச சுந்தரதாஸ்

 தமிழில் ஆயிரக் கணக்கில் படங்கள் வெளிவந்த போதும் சில


படங்களின் கதைகள் ரசிகர்களை கவர்ந்து , அக் கதைகள் மீண்டும் மீண்டும் படமாகி ரசிகர்களின் ஆதரவை பெற்றே வந்துள்ளன. அப்படிப் பட்ட ஒரு கதையை கொண்டு உருவான படம் தான் பெரிய இடத்துப் பெண். படம் வெளியாகி அறுபது ஆண்டுகளாகிய போதும் இன்றும் இப் படத்தின் கதை ரசிகர்களின் கவனத்தில் எதோ ஒரு படம் மூலம் நினைவில் இருந்த வண்ணமே உள்ளது.


எம் ஜி ஆரின் நடிப்பில் , படத்தின் இறுதியில் கதாநாயகன் இறப்பது

போல் காட்டி பாசம் என்ற தோல்வி படத்தை தயாரித்து இயக்கிய டி ஆர் ராமண்ணா , அந்த தோல்வியில் இருந்து சுதாரித்துக் கொள்ள உருவாக்கிய ஜனரஞ்சக படம் இது. ஆனால் குடும்பக் கதையை அடிப்படையாக கொண்டே படம் உருவானது.

கிராமத்தில் குடுமி வைத்து, வீடுண்டு, மாடுண்டு என்று தன் ஒரே அக்காளுடன் வாழ்ந்து வரும் முருகப்பன் , அதே ஊரில் வாழும் செல்வந்தர் கைலாசபிள்ளையின் எதிர்ப்புக்கு உள்ளாகிறான். அவரின் மகள் புனிதத்தின் தந்திரத்தால் தான் மணக்க இருந்த தில்லை , புனிதத்தின் அண்ணன் சபாபதியை மணக்க , என்றாவது ஒரு நாள் உன்னை நான் மணப்பேன் என்று புனிதத்திடம் சபதம் செய்கிறான் முருகப்பன். ஆனால் கைலாசபிள்ளையின் சதியால் அவன் வீடு எரிக்கப் படுகிறது. அக்காள் கங்கையம்மாள் களங்கப்படுத்தப் பட்டு காணாமல் போகிறாள். எல்லாவற்றையும் இழந்து பட்டணம் போகும் முருகப்பன் தன் நண்பன் பிச்சாண்டி மூலம் நவநாகரீக மனிதனாகி புனிதத்தை கல்யாணம் செய்து தன் சபதத்தை நிறைவேற்றுகிறான்!

படத்தில் கிராமத்தானாகவும், பட்டணவாசியாகவும் வரும் எம் ஜி ஆர் ஒரு கலக்கு கலக்கி இருந்தார். பிற்படுத்தப் பட்ட மக்களின் கோயில் பிரவேசத்துக்கு குரல் கொடுக்கும் போதும் , சாட்டையடியில் இருந்து ஒரு தொழிலாளியை காப்பாற்றும் போதும் எழுச்சியுடன் அவர் நடிப்பு மிளிர்கிறது. அதே போல் அக்காளை பிரிந்து துடிக்கும் போதும், குழந்தையை பார்க்க ஏங்கும் போதும் உணர்ச்சிகரமாக நடித்திருந்தார். அதே போல் பாடல் காட்சிகளில் அவருடைய ஆட்டம், முகபாவம் எல்லாம் ஜோர்!

பெரிய இடத்துப் பெண்ணாக , திமிர் பிடித்தவளாக வரும் சரோஜாதேவி, ஆரம்பத்தில் குமரியாக அலட்சியத்துடனும் , பின்னர் தாயாகி , கணவன் அன்புக்கு ஏங்கும் பெண்ணாகவும் நிறைவாக நடித்திருந்தார். நாகேஷ் இல்லாவிட்டால் படமே இல்லை என்பது உண்மை. அவர் நடிப்பு சூப்பர். அசோகன் காட்டும் முறைப்பும், விறைப்பும் கவனத்தை கவர்கிறது. ஒரு காலத்தில் கவர்ச்சி காட்டி நடித்த டீ ஆர் ராஜகுமாரியின் நடிப்பு மென்மை. அதே சமயம் பிற் காலத்தில் கவர்ச்சி நடிகையாக திகழ்ந்த ஜோதிலட்சுமிக்கு இதுவே முதல் படம். இவர்களுடன் மணிமாலா, ஆர். எம் சேதுபதி, கொட்டப்புளி ஜெயராமன், ஆகியோரும் நடித்தனர். கலைவாணர் என் எஸ் கிருஷ்ணனின் மகன் கோலப்பன் இந்தப் படத்தில் அறிமுகமானார்.


படத்தில் எம் ஆர் ராதா கோயில் தர்மகர்த்தாவாகவும், செல்வந்தராகவும் வந்து முத்திரை பதிக்கிறார். நான் வாழனும், என் குடும்பம் வாழனும், என் குலம் வாழனும் அதுக்கு நீதான் அருளணும் என்று அவர் பிரார்த்திப்பதுடன் தொடங்கும் படம் அவர் கதாபாத்திரத்தை உணர்த்துவதாக அமைந்தது. ஆரம்பத்தில் ஆர்ப்பாட்டமாக நடிப்பவர் , படத்தின் பிற் பகுதியில் மகளின் நிலையை பார்த்து உருகி நடித்து திறமையை வெளிப்படுத்துகிறார். ஆனால் எந்த வஞ்சனைக்கும் அஞ்சாத எம் ஆர் ராதா இரவு தூக்கத்தில் ஒர் உருவத்தைக் கண்டு அலறுகிறார், உளறுகிறார். ஆனால் எவ்வித பாதுகாப்பும் அவர் வீட்டுக்கு செய்யப்படுவதாக இல்லை. அந்த உருவமும் இஷ்டப்படி வந்து போகிறது. இது கதையில் இருக்கும் ஓட்டை!

படத்துக்கு கதை வசனம் எழுதியவர் சக்தி கிருஷ்ணசாமி.

சிவாஜியின் கட்டபொம்மனுக்கு அனல் பறக்கும் வசனம் எழுதியவர் இதில் சீர்திருத்த கருத்துகளை எழுதி யதார்த்தத்தை உணர்த்தினார். ‘மாட்டையே அடிக்க கூடாதுன்னு சொல்ற காலத்திலே மனுசன சாட்டையால அடிக்கிரீங்க, தவறு செய்திருந்தால் தண்டணையை சட்டப்படி செய்யனும் , உங்கள் இஷ்டப்படி அல்ல , மனித சமுதாயத்தில் இருக்கும் நீதி, உரிமை, வழிபாடு இவற்றில் எல்லாம் ஏற்ற தாழ்வு கூடாது ‘ என்று சக்தி கிருஷ்ணசாமியின் வசனங்கள் பளிச்சிட்டன. இந்தப் படத்தை தொடர்ந்து எம் ஜி ஆரின் மேலும் சில படங்களுக்கு வசனம் எழுதும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

படத்துக்கு படம் ஏதாவது புதுமை செய்யும் நோக்கில் இருந்த விஸ்வநாதன், ராமமூர்த்தி இருவரும் இப் படத்திலும் அதனை செய்ய தவறவில்லை. பி சுசிலாவின் மென்மையான குரலில் ரகசியம் இது ரகசியம் பாடலுக்கு சபாஷ். இது தவிர அன்று வந்ததும் இதே நிலா, கட்டோடு குழலாட ஆட, பாரப்பா பழனியப்பா, அவனுக்கென்ன தூங்கி விட்டான் பாடல்கள் இன்றும் வரவேற்பில் உள்ளன. கண்ணதாசன் எட்டு பாடல்களையும் எழுதி இருந்தார்.


படத்தை தரமாக ஒளிப்பதிவு செய்தவர் எம் ஏ ரஹ்மான். படத்தொகுப்பை கையாண்ட எம் எஸ் மணி படத்தின் விறுவிறுப்புக்கு உதவினார். படத்தில் எம் ஜி ஆரும் , அசோகனும் இரண்டு கரங்களினாலும் போடும் சிலம்பாட்டம் அருமை. அதனை அமைத்த சிவ சுப்ரமணியத்துக்கு ஓ போடு!

ராமண்ணா இயக்கிய பெரிய இடத்துப் பெண் வெற்றி படமானது. அதுமட்டுமன்றி இப் படத்தின் சாயலில் பின்னர் குமரிப் பெண் , கல்யாணமாம் கல்யாணம், பட்டிக்காடா பட்டணமா, சகலகலா வல்லவன் என்று இன்னும் சில படங்கள் உருவாகி ரசிகர்களை கவர்ந்தன. அறுபது ஆண்டுகள் கடந்தும் ஸ்வீட் சிக்ஸ்டியாக இன்றும் பெரிய இடத்துப் பெண் உயர்ந்து நிற்கிறாள்!

No comments: