எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) – அங்கம் 66 பதினாறு ஆண்டுகளின் பின்னர் கனடாவுக்கு மீண்டும் ஒரு பயணம் ! ஜூன் 04 ஆம் திகதி கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது விழா ! முருகபூபதி

 “   குளிர்காலம் என்பதனால் வீட்டினுள்ளே முடங்கியிருந்துவிட முடியுமா?


கோடை விடுமுறையை வெளிநாடுகளில் அனுபவித்திருக்கின்றோம். ஆனால்,  குளிர்கால விடுமுறை இல்லை. கோடைகாலத்தில் வியர்க்கும். இரத்தத்தில் சுரக்கும் கொழுப்பும் கரைய வாய்ப்புண்டு.

 குளிர்காலம் அப்படியல்ல. இயங்காமால் முடங்கினால் எத்தனை நோய்கள் சொந்த உறவாகப் பற்றிக்கொள்ளும் என்பதை டொக்டரிடம் மருத்துவ சோதனைக்குச்சென்றால் தெரிந்துகொள்ளலாம்.

 அதனால் குளிர்காலத்தில்தான் கை,கால்களை அசைத்து நன்கு


இயங்கவைத்து வேலை செய்யவேண்டும்.

 வேலை. . . வேலை. . வேலையே வாழ்க்கை என்ற தலைப்பில் கி.ராஜநாராயணன் எழுதிய கதையொன்று ஞாபகத்திற்கு வருகிறது.

குடும்பத்தின் தேவைக்காக இராப் பகலாக கஷ்டப்பட்டு உழைக்கும் ஒரு பெண்ணை அவர் அக்கதையில் சித்திரித்திருந்தார்.  

இவ்வாறு தொடங்கும் ஒரு தொடர் கட்டுரையை 2008 ஆம் ஆண்டு கொழும்பு தினக்குரல் ஞாயிறு இதழில் எழுதத் தொடங்கியிருந்தேன்.

அந்த பயண இலக்கியத் தொடருக்கு நான் சூட்டியிருந்த தலைப்பு வட்டத்துக்கு வெளியே2007 ஆம் ஆண்டு இறுதியில், அதாவது டிசம்பர் மாதம் கனடாவுக்கு செல்வோமா..? என்று கேட்டார் மெல்பனில் வதியும் இலக்கிய நண்பர் நடேசன்.

இவர் எனக்கு முதலில் தேர்ந்த இலக்கிய வாசகராகத்தான் அறிமுகமானார்.  பின்னாளில் இவர் இலக்கியப் பிரதிகளும், அரசியல் பத்தி எழுத்துக்களும் எழுதினார். இற்றைவரையில் எழுதி வருகின்றார்.

நடேசன் பயணங்களை பெரிதும் விரும்புபவர். திரும்பி வந்து  தனது பயண அனுபவங்களையும் எழுதுவார்.

2007 ஆம் ஆண்டு நாமிருவரும் கனடாவுக்கு புறப்படுகிறோம் என அறிந்த சிட்னியிலிருந்த எமது மூத்த படைப்பாளி எஸ். பொ. “ உங்கள் இருவருக்கும் சிலைதான் வைக்கவேண்டும். “  என்று நக்கலடித்தார்.

ஏன் என்று கேட்டேன்.


அங்கே இப்போது கடும் குளிர் காலம், தெரிந்துகொண்டே
செல்கிறீர்கள் .
என்றார்.

 ஸ்னோ கனடாவை மூழ்கவைக்கும் காலம் அது.

தெரிந்துகொண்டுதான் புறப்படுகின்றோம்.  நாம் கனடாவுக்கு மாத்திரமல்ல, அங்கிருந்து கியூபாவுக்கும், அங்கிருந்து மீண்டும் கனடா வந்து, அங்கிருந்து இங்கிலாந்திற்கும், பின்னர் இந்தியா – தமிழ் நாட்டுக்கும் செல்கின்றோம். என்று நடேசன் எஸ்.பொ. விடம் சொன்னார்.

எமது பயணம் சிட்னியிலிருந்து ஆரம்பித்தது.  மெல்பனிலிருந்து புறப்பட்டு சிட்னிக்கு முதல்நாளே சென்று கவிஞர் அம்பி அவர்களுடன் தங்கினோம்.

எஸ். பொ. வின் மூத்த புதல்வர் மருத்துவர் அநுரா, எம்மிருவரையும் தமது வீட்டுக்கு காலைநேர விருந்துக்கு அழைத்துச்சென்றார். அந்த விருந்தில் எஸ். பொ.வும் கலந்துகொண்டார்.  எஸ்.பொ.வுடன் பலதும் பத்தும் பேசினோம். 

அன்று மாலை நாம் சிட்னியிலிருந்து புறப்படவிருந்த  ஏயார் கனடா


விமானம், தரிப்பிடத்திலேயே அசையாமல் சில மணிநேரங்கள் நின்றது எமது பொறுமைக்கு வந்த சோதனை. ஏதோ இயந்திரக்கோளாறு எனச்சொல்லி, பயணிகளையும், பொதிகளையும் இறக்கினர்.

பயணிகளை பஸ் வண்டிகளில் ஏற்றி ஒரு உல்லாசப்பயணிகள் விடுதியில் தங்க வைத்தனர். அன்றிரவு அங்கே எமக்கு தங்கும் அறைகளும், உணவும் இலவசமாகத் தரப்பட்டது.

மறுநாள் காலை ஆறுமணியளவில் அறைகளின் கதவிடுக்கினூடக ஒரு காகிதத்தை செலுத்தியிருந்தார்கள்.

எடுத்து படித்தோம்.  கனடாவுக்கான விமானம் தயாராகியிருப்பதாகவும்,  ஏற்றிச்செல்ல வாகனங்கள் வரும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவ்வாறே புறப்பட்டோம். அந்த காலை வேளையில் கனடாவுக்கு விமானம் ஏறும்தருவாயில் அனைத்து பயணிகளுக்கும் ஒரு வவுச்சர் தரப்பட்டது.

அடுத்த தடவை ஏயார் கனடாவில் பயணிக்கும்போது நூறு அவுஸ்திரேலியன் வெள்ளிகள்  கட்டணத்திலிருந்து குறைக்கப்படும் சலுகை பற்றி அதில் சொல்லப்பட்டிருந்தது.

வாழ்க விமானச்சேவைகள் .

பயணிகளை கவரும் மற்றும் ஒரு வியாபார தந்திரம்தான் இது.  எனினும் உரிய நேரத்தில் அந்த விமானத்தின் இயந்திர கோளாறு பிரச்சினையை கண்டுபிடித்த பெயர் தெரியாத அந்த புண்ணியவானுக்கு மனதிற்குள் நன்றி தெரிவித்தேன்.

இந்த அமளியில் எனது கண்ணாடியை தொலைத்துவிட்டேன்.  அது பின்னர் கிடைக்கவேயில்லை.

கனடா சென்றதும்,  முன்னர் வீரகேசரியில்  என்னுடன்  பணியாற்றிய நண்பர் வர்ணகுலசிங்கம் வீட்டில் தங்கியிருந்து அவர் மூலமாக  ஒரு Reading Glass வாங்கினேன்.

இந்த நினைவுகள் மீண்டும்  கனடாவுக்கு புறப்படும் இந்தத் தருணத்தில்  மனதில் சஞ்சரிக்கின்றன.

கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின்  வாழ்நாள் சாதனையாளருக்கான இயல்விருதுகள்  இம்முறை எனக்கும் இந்தியாவில் பெங்களுரில் வதியும் படைப்பிலக்கியவாதியும் இலக்கிய மொழிபெயர்ப்பாளருமான பாவண்ணன் அவர்களுக்கும் கிடைத்திருப்பதனால், குறிப்பிட்ட விருது வழங்கும் விழாவுக்கு செல்லத்தயாராகிக்கொண்டிருக்கும் வேளையில் இந்தத்  தொடரின் 66 ஆம் அங்கத்தை எழுதுகின்றேன்.

இந்தப்பதிவில் இடம்பெற்ற நமது மூத்த எழுத்தாளர் எஸ். பொ. அவர்களுக்கு 2010 ஆம் ஆண்டுக்கான  இயல் விருது கிடைத்தது. 

கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்  இந்த இயல் விருதை வழங்கி வருகிறது.

 ஒவ்வோர் ஆண்டும் உலக அளவில் சிறந்த  தமிழ் இலக்கிய சேவையாளர் எனக்கருதும் ஒருவருக்கு, ' இயல் விருது ' எனும் வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது வழங்கப்படுகிறது.  

இந்த வாழ்நாள் விருது ஒரு படைப்பாளிக்கோ, கல்வியாளருக்கோ, நூல்வெளியீட்டாளருக்கோ, விமர்சகருக்கோ, வேறு ஏதேனும் ஒரு வகையில் சிறந்த தமிழ் தொண்டாற்றியதாக  கருதுபவர்களுக்கோ அளிக்கப்படுகிறது.

இதுவரையில்  வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனைக்காக கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது பெற்றவர்கள்: 

இந்தியாவிலிருந்து  சுந்தரராமசாமி, வெங்கட் சாமிநாதன், அம்பை, எஸ். ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், தியோடர் பாஸ்கரன்,  கோவை ஞானி,  ஜெயமோகன், ஐராவதம் மகாதேவன், என். சுகுமாரன், வண்ணதாசன்,  இமையம்,               சு. வெங்கடேசன், இரா. வெங்கடாசலபதி,

ஐக்கிய அமெரிக்காவிலிருந்து ஜோர்ஜ் எல். ஹார்ட்,

இலங்கையிலிருந்து கே. கணேஷ், டொமினிக் ஜீவா,                             இ. மயூரநாதன், 

இங்கிலாந்திலிருந்து தாஸீஸியஸ், பத்மநாப அய்யர், லட்சுமி ஹோம்ஸ்ட்ராம் ,

 அவுஸ்திரேலியாவிலிருந்து எஸ். பொன்னுத்துரை ஆகியோர்.  

இவர்களில் சிலர் இன்றில்லை. 

இவர்கள் அனைவரையும் மனதிற்குள் வாழ்த்திக்கொண்டு எனது பயணத்தை ஆரம்பிக்கின்றேன்.

அத்துடன் எனக்கும்  இலக்கிய சகோதரன் பாவண்ணன் அவர்களுக்கும்  கிடைத்திருக்கும் இயல்விருது தொடர்பான செய்திகளை தத்தமது வலைப்பதிவுகளிலும்,  முகநூல்களிலும், இணைய இதழ்களிலும், இலங்கை இந்திய ஊடகங்களிலும் மற்றும் வானொலிகளிலும் தெரிவித்த அனைவருக்கும் கட்டுரைகள் எழுதிய நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.  

கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது தொடர்பாக மேலதிக தகவல்களை பின்வரும் இணைப்பினை அழுத்தி தெரிந்துகொள்ளமுடியும்.

https://www.tamilliterarygarden.com/

இம்முறை புனைவு எழுத்துக்கான விருது 'மன்னார் பொழுதுகள்' நாவல் எழுதிய வேல்முருகன் இளங்கோவுக்கும் அபுனைவு விருதுக்கு 'மூவந்தியில் சூலுறும் மர்மம்' என்ற படைப்புக்காக சாம்ராஜுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கவிதைக்கான விருது கவிஞர் சுகிர்தராணிக்கும் இலக்கிய ஆய்வு மற்றும் மொழிபெயர்ப்பு
இலக்கியத்துக்கான விருது எழுத்தாளர் சிவசங்கரிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கியச் சாதனை விருது வ.ந.கிரிதரனுக்கு வழங்கப்படுகிறது.

இந்த விருதுகள் கனடா நாட்டின் தலைநகர் டொரோண்டோவில் நடைபெறவுள்ள விழாவில் வழங்கப்படும்.

எம்மை இந்த விருதுகளுக்காக பரிந்துரை செய்த அன்பர்களுக்கும் கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் அமைப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டு கனடாவுக்கு புறப்படுவதற்கு தயாராகின்றேன்.

( தொடரும் )

No comments: