என் நினைவுகளில் யோகா பாலசந்திரன் - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

 .

யோகா பாலசந்திரன் இவ்வுலகை விட்டுப் போனார் என்ற செய்தி கேட்டு கலங்கியவர் பலர். அவர்களுள் நானும் ஒருத்தி. நீண்ட பெருமூச்சை விடலாம். ஆனால் இழப்பு இழப்புதான். ஏற்கும் மனம் வேண்டும்.

அவர் எனது முதல் ஆடல் நிகழ்ச்சி சரஸ்வதி மண்டபத்தில் நடந்தபோது தினக்குரலில் அழகிய விமர்சனம் எழுதினார். பின் நான் நாட்டிய நாடகங்களை மற்றவர்களில் இருந்து மாறுபட்ட வகையில் நடத்தியபோது எல்லாம் அவற்றை இனம் கண்டு விமர்சனம் செய்து வந்தார். அவரை ஒருபோதும் பார்த்தது கிடையாது. விமர்சகர்கள் எழுதுவது அவரவர் கருத்து. கலைஞர்களாகிய நாம் அவர்களைத் தேடிப் போய் சந்தித்தால் அது உறவாகி விடும். ஆகவே அதை நான் தவிர்த்தே வந்தேன். இவரும் தவறாது எனது ஆக்கங்களை உற்று நோக்கி தகுந்த விமர்சனம் செய்து வந்தார். அவர் என்னை ரூபவாஹினி தொலைக்காட்சியிலும் நேர்முகம் கண்டார்.

எனக்கு தமிழக அரசின் பரிசு கிடைத்த பொழுது தமிழ்க் கலாசார அமைச்சர் இராஜதுரை தமிழகப் பரிசைப் பெறும் முன் நான் இலங்கையில் கௌரவிக்கப்பட வேண்டும் என முடிவு செய்து எழுத்தாளர் மணியன் தலைமையில் இராமகிருஷ்ணா மண்டபத்தில் ஒழுங்கு செய்தார். அப்பொழுது என்னைப் பாராட்டிப் பேசுவதற்கு யோகாவை அழைத்திருந்தார். என் ஆக்கங்களை உற்று நோக்கி விமர்சனம் செய்து வந்த யோகா என்னைப் பற்றியும் எனது ஆக்கங்களைப் பற்றியும் விரிவாகப் பேசினார். அப்பொழுது தான் அவரை நேரில் கண்டேன். எனது உறவு தொடங்கியது. அவரை ஒரு நிமிர்ந்த நேரிய நோக்குள்ள, யாருக்கும் அஞ்சாத ஒரு பெண்ணாக கண்டேன். நாம் பல விஷயங்களைப் பற்றி கலந்துரையாடி மகிழ்ந்தோம். அவரது நூல் வெளியீட்டிலும் என்னைப் பேச வேண்டும் என கேட்டார். அவரது சிந்தனைகளை, ஆளுமையை எடுத்துக்கூறி நூல் பற்றி பேசினேன். இது யோகா பற்றிப் பேச எனக்குக் கிடைத்த நல்லதொரு சந்தர்ப்பமாகவே கருதி மகிழ்ந்தேன்.

இறுதியாக கொழும்பில் சந்தித்த போது தான் மகன்களுடன் வாழப் போவதாகக் கூறினார். எம் நாட்டின், இனத்தின், மொழியின், கலாசாரத்தின் செழுமைக்கு உழைக்கும் பல கலைஞர்களை நாடு இழந்து வருவதை இருவருமாக பேசிக் கவலைப்பட்டோம். எப்போதும் தனது வெளிநாட்டுப் பயணம் முடிந்து விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தின் மேல் பறக்கும் போதெல்லாம் ‘எனது தாய் நாட்டில் மீண்டும் கால் வைக்கப் போகிறேன்’ என என் உள்ளம் மகிழும் என கூறிய யோகா இன்று ஒரு பிற நாட்டிலே தனது இறுதி மூச்சை விட்டார். உலகெங்கும் தஞ்சம் புகுந்து வாழும் தமிழ்க் கலைஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர் என யோகாவின் பல்முகம் கொண்ட வாழ்வில் பழகிய அத்தனைப் பேரும் அஞ்சலி செலுத்துகிறோம், நேரிலே அவரைப் பார்த்து வழியனுப்ப இயலாத பாவிகளாக.

யோகாவின் நினைவு என்றென்றும் எம் போன்றவர்கள் மனதில் வாழும்.


No comments: