இலங்கைச் செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு விரைவில் விமான சேவைகள்! 

இந்தியத் தூதுவருடன் கிழக்கு ஆளுநர் செந்தில் விரிவான கலந்துரையாடல்

கொழும்பு - காங்கேசன்துறை ரயில் சேவை ஜூலை 15 ஆரம்பம்

TNA தலைவர் இரா. சம்பந்தனுக்கும் கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு

ஜப்பான் பிரதமருடன் ஜனாதிபதி சந்திப்பு


கிழக்கு மாகாணத்திற்கு விரைவில் விமான சேவைகள்! 

- பயன்படுத்தாமல் உள்ள விமான நிலையங்கள் தொடர்பில் அமைச்சர் நிமலின் கவனத்திற்கு கொண்டு வந்த ஆளுநர் செந்தில்
- ஜூலையில் சேவையை தொடங்க Cinnamon Air உறுதியளிப்பு

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் விமான சேவையை உடனடியாக ஆரம்பிப்பது குறித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சர்  நிமல் சிறிபால டி சில்வாவுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் இரண்டு விமான நிலையங்கள் மற்றும் பல விமான இறங்கும் கடல் தளங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளமை குறித்து அமைச்சரின் கவனத்துக்கு ஆளுநர் கொண்டுவந்ததையடுத்து இவ்வாறு விமான சேவைகளை ஆரம்பிக்க ஏற்பாடு செய்வதாக அமைச்சர் உறுதியளித்தார்.

இக்கலந்துறையாடலில் கிழக்கு மாகாண  பிரதம செயலாளர், சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் செயலாளர் , விமானப் போக்குவரத்து பணிப்பாளர், சுற்றுலா பணியகம், இலங்கை விமானப்படை, Cinnamon Air, Fits Air உள்ளிட்ட தனியார் விமான சேவை நிறுவன பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இதேவேளை, தனது விமான சேவையை ஜூலை மாதத்திலிருந்து ஆரம்பிக்கவுள்ளதாக, Cinnamon Air தனியார் விமான சேவை நிறுவனம் உறுதியளித்தது. இதனை ஊக்குவிக்க கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகம் தனது முழுமையான ஆதரவை வழங்கவுள்ளதாக இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி  தினகரன் 




இந்தியத் தூதுவருடன் கிழக்கு ஆளுநர் செந்தில் விரிவான கலந்துரையாடல்

இந்தியாவின் உதவித்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இலங்கையிலுள்ள இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே மற்றும் பிரதி உயர்ஸ்தானிகர் ஜேக்கப் ஆகியோருடன் கலந்துரையாடலை நடத்தியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் தற்போதைய இந்திய உதவித் திட்டத்தினூடான வேலைத்திட்டங்கள் மற்றும் எதிர்கால அபிவிருத்திகள் தொடர்பாக இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டன.

கிழக்கிலுள்ள இந்திய நிறுவனங்கள், தமது நலன்புரிக்காக ஒதுக்கப்பட்ட நிதியை கிழக்கிலுள்ள நலிவடைந்த மக்களுக்கு வழங்க இந்தியத் தூதரகம் உதவி செய்ய வேண்டு​மென்று இதன்போது ஆளுநர் கேட்டுக்கொண்டார். மேலும், Alliance Air சேவையை யாழ்ப்பாணத்திலிருந்து கிழக்கு விமான நிலையங்களுக்கு நீடிப்பதற்கும் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் யாழ்ப்பாணத்தைப் போன்று கிழக்கிலும் ரயில் பாதையை மேம்படுத்துவதற்கும் இதன்போது கோரிக்கை முன்வைக்கப்பட்டது. கிழக்கில் புதிய வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 




கொழும்பு - காங்கேசன்துறை ரயில் சேவை ஜூலை 15 ஆரம்பம்

ரயில்வே திட்டப் பணிப்பாளர் தகவல்

கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரையிலான ரயில் சேவை மீண்டும் ஜூலை 15ஆம் திகதிக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, மஹவ - ஓமந்தை ரயில்வே திட்டப் பணிப்பாளர் அசோக்க முனசிங்க தெரிவித்தார்.

ரயில் பாதை திருத்தப் பணிகள் காரணமாக தற்போது வடக்கு ரயில் சேவைகள் கொழும்பிலிருந்து அநுராதபுரம் வரை மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அநுராதபுரத்திலிருந்து வவுனியா வரையான ரயில் பாதையின் திருத்தப் பணிகளை அடுத்த ஜூன் மாதம் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

இதன்படி, கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரை மீண்டும் ரயில் சேவையை ஜூலை 15ஆம் திகதிக்குள் ஆரம்பிக்க முடியுமெனவும், மஹவ - ஓமந்தை ரயில்வே திட்டப் பணிப்பாளர் அசோக முனசிங்க மேலும் தெரிவித்தார்.   நன்றி தினகரன் 





TNA தலைவர் இரா. சம்பந்தனுக்கும் கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு

- அமைச்சர் ஜீவன், ராமேஸ்வரன் எம்.பியும் பங்கேற்பு

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், தோட்ட உட்கட்டமைப்பு, நீர்வழங்கல் வசதிகள்  அமைச்சர்  ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன் ஆகியோர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பந்தனை அவரது இல்லத்தில் நேற்று (24)  சந்தித்து, நலம் விசாரித்தனர்.

இதன்போது, மறைந்த தலைவர்களான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், அமரர் ஆறுமுகம் தொண்டமான் ஆகியோரின் காலத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இருந்த வலுவான உறவு குறித்து சம்பந்தன்  நினைவூட்டினார்.

இச்சந்திப்பின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான  சுமந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்  சாணக்கியன்  இராஜமாணிக்கம்  ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இச்சந்திப்பின்போது கிழக்கு மாகாணத்தின் சமூக, பொருளாதார அபிவிருத்திகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 




ஜப்பான் பிரதமருடன் ஜனாதிபதி சந்திப்பு

ஜப்பானுக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (25) ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவை டோக்கியோ நகரில் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஜப்பானிய பிரதமரால் சிநேகபூர்வமான வரவேற்பளிக்கப்பட்டது. இரு நாடுகளினதும் தலைவர்களது சுமூகமாக கலந்துரையாடலை தொடர்ந்து இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதற்காக இலங்கைக்கு ஜப்பான் வழங்கி வரும் ஒத்துழைப்புகளுக்கு பாராட்டு தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜப்பான் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.

அதேபோல், இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் இருநாட்டு தலைவர்களும் கலந்துரையாடினர்.   நன்றி தினகரன் 






No comments: