அஞ்சலிக்குறிப்பு இலக்கியவாதிகளும் இடதுசாரிகளும் நேசித்த பாக்கியம் பூபாலசிங்கம் மறைந்தார் முருகபூபதி


யாழ்ப்பாணத்தில் முன்னர் அடிக்கடி தீக்குளித்தாலும் ஃபீனிக்‌ஸ் பறவையைப்போன்று உயிர்த்தெழுந்த அறிவாலயம்தான் பூபாலசிங்கம் புத்தகசாலை.

அதன் நிறுவனர் அமரர் ஆர். ஆர். பூபாலசிங்கம் அவர்களின் அன்புத் துணைவியார் திருமதி பாக்கியம் பூபாலசிங்கம் அவர்கள் மறைந்துவிட்டார் என்ற துயரமான செய்தி , லண்டனிலிருக்கும் தொலைக்காட்சி – வானொலி ஊடகவியலாளரான  நண்பர் எஸ். கே. ராஜெனிடமிருந்து குறுச்செய்தியாக வந்தது.

அச்செய்தியில் இடம்பெற்ற அன்னாரின் படத்தின் பின்னாலும் ஒரு


கதை இருக்கிறது. பூபாலசிங்கம் தம்பதியரின் புதல்வன் ஶ்ரீதரசிங்கை தொடர்புகொண்டு, எனது ஆழ்ந்த இரங்கலை கூறியபோது, அக்கதையை நினைவுபடுத்தி ஊர்ஜிதப்படுத்தினார்.

2003 ஆம் ஆண்டு எமது மூத்த எழுத்தாளர் வரதர் அவர்களுக்கு சாகித்திய ரத்தினா விருது கிடைத்த சமயத்தில் அவரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு, வெள்ளவத்தையில் ஶ்ரீதரசிங் வீட்டில் தேநீர் விருந்துபசாரத்துடன் நடந்தது. அந்நிகழ்வுக்கு நான் சென்றிருந்தபோது,  பாக்கியம் அம்மாவை அழைத்து, அவரது கணவர் பூபாலசிங்கம் அவர்களின் படத்துக்கு அருகில் நின்று படம் எடுத்துக்கொண்டேன்.

அந்தப்படத்தையே நான் ராஜெனின் குறிப்பிலிருந்து பார்த்து, பாக்கியம் அம்மாவுக்கு மனதிற்குள் அஞ்சலி செலுத்தினேன்.

எமது தமிழ் சமூகத்தில் பொதுவாழ்க்கையில் அதிலும் இடதுசாரி முகாமிலிருந்து இயங்கும் எந்தவொரு ஆண்மகனுக்கும் வாய்க்கும் மனைவி சகிப்புத்தன்மையும் பொறுமையும் நிதானமும் மிக்கவராக இருக்கவேண்டும்.

வடபுலத்தில் நயினா தீவை பூர்வீகமாகக்கொண்டிருந்தவர்கள் பூபாலசிங்கம் தம்பதியர். நயினை நாகபூஷணி அம்பாளை குலதெய்வமாக போற்றியவர்கள். இவர்களின் குடும்பம் அந்த ஆலயத்தின் பணிகளில் ஈடுபட்டிருந்தபோதிலும், குடும்பத்தலைவர் பூபாலசிங்கம்,  இடதுசாரி இயக்கத்திலும் தன்னை அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்தி வந்திருப்பவர்.

தங்களுக்கெல்லாம் இலக்கிய நூல்களை இலவசமாகத் தந்து படிக்கவைத்து எழுத்தாளராக்கிவிட்டவர்தான் புத்தகக் கடை பூபாலசிங்கம் என்று மல்லிகை ஜீவா அடிக்கடி சொல்லி வந்திருப்பதுடன் தனது வாழ்க்கை சரித நூலிலும் பதிவுசெய்துள்ளார்.

 நயினாதீவில் ஒரு சாதாரண குடும்பத்தில் 1922 ஆம் ஆண்டில் பிறந்திருக்கும் பூபாலசிங்கம்,  ஆரம்ப பாடசாலைப்படிப்பை தனது ஒன்பது வயதிலேயே நிறைவுசெய்துகொண்டு பின்னாளில், மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கல்விமான்கள், அறிஞர்கள், பேராசிரியர்கள் உட்பட கலை, இலக்கியவாதிகளுக்கும் இடதுசாரித் தலைவர்களுக்கும் அறிவொளி தந்திருக்கிறார் என்பது ஆச்சரியமானது. இவர்கள் அனைவரும் பல வழிகளில் அவரது புத்தகசாலையினால் பயன்பெற்றவர்களே. சிறியோர் முதல் பெரியோர் வரையில் நன்கு அறிந்த புத்தக விற்பனை நிலையமாக அதனை வளர்த்தெடுக்க அவர் கொடுத்த விலை அதிகம்.


அத்தகைய ஒருவருக்கு வாழ்க்கைத்துணையாக விளங்கி சிறந்த குடும்பத் தலைவியாகவும் திகழ்ந்திருப்பதுடன், கணவர் அழைத்துவரும் அவரது தோழர்களுக்கெல்லாம் இன்முகத்துடன் உணவு பரிமாரி உபசரித்தவர் பாக்கியம் அம்மா.

தென்னிலங்கையிலிருந்து செல்லும் இடதுசாரி சிங்கள – இஸ்லாமிய தோழர்களுக்கும் வடக்கிலிருந்த தமிழ்த்தோழர்களுக்கும் யாழ். கொட்டடியில் அமைந்த அன்னாரின் இல்லம் ஒரு காலத்தில் தங்குமடமாகவும் திகழ்ந்திருக்கிறது.

வடபுலத்தில் இடதுசாரி இயக்கங்கள் பல போராட்டங்களை சந்தித்திருக்கிறது. அவற்றிலெல்லாம் ஈடுபட்டவர் பாக்கியம் அம்மாவின் கணவர் பூபாலசிங்கம்.  

1981 ஜூன் மாதம் 1 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு கயவர்கள் தீ மூட்டியபொழுது யாழ். பொதுநூலகம், உட்பட பூபாலசிங்கம் புத்தகசாலையும் அவ்விடத்திலிருந்த கடைத்தொகுதிகளும் யாழ். எம்.பி வெ. யோகேஸ்வரனின் வீடும் இரையானது. செய்தி அறிந்து மறுநாள் நான் யாழ்ப்பாணம் சென்று ஜீவாவுடன் பஸ்நிலையம் வந்தேன். பூபாலசிங்கம் அவர்கள் எரியூட்டப்பட்ட கடை வாசலில் ஒரு மேசையில் அன்றைய பத்திரிகைகளை பரப்பிவைத்து விற்பனையை கவனித்துக்கொண்டிருந்தார். அவருடை ஓர்மம் எனக்கு திகைப்பூட்டியது. மரணத்துள் வாழ்ந்த மக்கள் மத்தியில் மரணத்தை கடந்து வந்தவராக அவர் உறுதியோடு இயங்கினார். கயவர்களுக்கு எரிப்பதற்கு தோதான பொருள் காகிதம்தான். அது வெற்றுத்தாளாக இருந்தாலென்ன அறிவுக்களஞ்சியத்தை உள்ளடக்கிய நூல்களாக இருந்தாலென்ன இரண்டும் ஒன்றுதான். யாழ்ப்பாணம் பூபாலசிங்கம் புத்தகசாலை மூன்று தடவைகள் தீக்கிரையாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவர் அதனால் துவண்டுவிடவில்லை. அவருக்குத்தெரிந்தது புத்தகம் - பத்திரிகை விற்பனைதான். அந்தத்தொழில்தான் அவருக்கு எல்லாம். அவரது கனவு உழைப்பு அனைத்தும் அதில்தான் தங்கியிருந்தது. அதனால் இவ்வுலகை விட்டு நீங்கும் வரையில் அதனைவிட்டு அவர் அகலவில்லை. தனக்குப்பிறகும் தனது சந்ததியிடம் அதனை ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளார்.

அத்தகைய  திடசித்தம் கொண்ட ஒருவரின் வாழ்க்கைத்துணையாக , அவரின் நிழலில் இயங்கியவராக வாழ்ந்து மறைந்திருக்கும் பாக்கியம் அம்மா அதிர்ந்து பேசத் தெரியாதவர்.

ஒருசமயம் கொழும்பிலிருந்து வெளியான கம்யூனிஸ்ட் கட்சியின் சிங்கள நாளேடு “  அத்த  “ ( உண்மை )   பத்திரிகையில் தோழர் பூபாலசிங்கம் இறந்துவிட்டார் என்ற செய்தியை  அவருடைய படத்துடன் வெளியிட்டு விட்டது.  ஆனால், வடக்கில் இறந்தவர் வேறு ஒரு தோழர். அந்தப்  பத்திரிகை  மறுநாள் மன்னிப்புக்கோரி எழுதியிருந்தது.

 “ அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி தவறாக இருந்தாலும், இவ்வாறு அவர் அறியத்தக்கதாகவே செய்தி வெளியாகியிருப்பதனால், அவர் இன்னும் நீண்ட காலம் வாழ்வார் என்று  சுவாரசியமாகச் சொன்ன வாழ்க்கைத் துணைதான் திருமதி பாக்கியம் பூபாலசிங்கம் அவர்கள்.

தமது 97 ஆவது வயதில் மறைந்திருக்கும் பாக்கியம் அம்மாவின் மூத்த சகோதரி தங்கம்மா அம்மா 104 வயதில் இன்றும் நயினா தீவில் வாழ்ந்துகொண்டிருக்கிறார் எனச்சென்னால் ஆச்சரியமடைவீர்கள்.

 நயினா தீவிலும், யாழ். கொட்டடியிலும் கொழும்பு வெள்ளவத்தையிலும்  பாக்கியம் பூபாலசிங்கம் அம்மாவின் உபசரிப்பில் திழைத்த எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், முற்போக்கு இயக்கத் தோழர் தோழியர் ஏராளம்.

அவரது வீடு எங்கிருந்தாலும் அங்கே இவர்களின் கால்கள் பதியாமலிருந்ததில்லை.

நிறைவான வாழ்க்கை வாழ்ந்து மறைந்திருக்கும் திருமதி பாக்கியம்  பூபாலசிங்கம் அம்மாவுக்கு எமது ஆழ்ந்த அஞ்சலியை செலுத்துகின்ற அதே சமயம்,  அன்னாரின் மறைவினால் ஆழ்ந்த துயரத்திலிருக்கும் முழுக்குடும்பத்தினருக்கும் அம்மாவின் குடும்ப நண்பர்களுக்கும் எமது அனுதாபங்களை தெரிவிக்கின்றோம்.

அமரத்துவம் எய்தியிருக்கும் பாக்கியம் அம்மாவின் இறுதிநிகழ்வுகள் 29 ஆம் திகதி திங்கட் கிழமை கொழும்பில் நடைபெறும்.

  ---0---

No comments: