இது சத்தியம் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச சுந்தரதாஸ்

 தமிழ் திரையில் ஆரம்ப கால அம்மா நடிகை என்றால் அது பி.


கண்ணாம்பா தான். பிரபல வசனகர்த்தா இளங்கோவன் எழுதிய கனல் தெறிக்கும் வசனங்களை கண்ணகி படத்தில் பேசி நடித்து தமிழில் புகழ் பெற்றார் இவர். மனோகரா படத்தில் பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரா என்று சிவாஜியை ஆவேசம் கொள்ள வைப்பதாகட்டும் , தாய்க்கு பின் தாரத்தில் மகனின் கடமையை எம் ஜி ஆருக்கு உணர்த்துவதாகட்டும் அவரின் நடிப்பு தனித்துவம் மிக்கதாகவே மிளிர்ந்தது. ஏனைய

அம்மாக்கள் அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்திய போது அவற்றுடன் சேர்த்து கண்டிப்பையும் , கடுமையையும் படங்களில் காட்டியவர் இவர். அந்த கண்ணாம்பா பாட்டியாக நடித்த படம் இது சத்தியம். குமுதம் வார இதழில் ரா கி ரங்கராஜன் எழுதிய நாவலே அதே பேரில் படமானது.


இந்தப் படத்தில் அதிகார திமிர் பிடித்த , செல்வச் செருக்கில் , பிறரை ஆட்டிவைக்கும் பெண்ணாக தோன்றினார் கண்ணாம்பா. ரசிகர்களின் வெறுப்பை சம்பாதிக்கக் கூடிய வேடத்தில் துணிந்து நடித்து தன் திறமையை வெளிப்படுத்தினார் அவர். படத்தில் அவர் காட்டும் கண்டிப்பு அவரின் மகனையும், மருமகளையும், பேரனையும் வாட்டி வதைக்கிறது. இறுதியில் பூட்டன் வந்துதான் குடும்பத்தை ஒன்று சேர்க்கிறான் !

பிரபல படத் தயாரிப்பாளரான சரவணா பிலிம்ஸ் ஜி என் வேலுமணி 1963ம் ஆண்டு ஹிந்தி நடிகர் ஷம்மிகபூர் நடிப்பில் ராஜ்குமார் என்ற ஹிந்திப் படத்தையும், சிவாஜி நடிப்பில் ஜெயகாந்தன் எழுதி ஸ்ரீதர் இயக்கத்தில் உன்னைப் போல் ஒருவன் படத்தையும், எம் ஜி ஆர் நடிப்பில் இது சத்தியம் படத்தையும் ஒரே நேரத்தில் தயாரிக்கத் திட்டமிட்டார். ஹிந்திப் படத்தை முதலில் முடித்து விட்டு வாருங்கள் பிறகு நான் நடிக்கிறேன் என்று எம் ஜி ஆர் , அசோகன் மூலமாக வேலுமணிக்கு சேதி அனுப்பினார். சேதியை கேட்ட வேலுமணி சேதி கொண்டு வந்த அசோகனையே போட்டு இது சத்தியம் படத்தை தயாரித்து விட்டார்!

படத்தில் கதாநாயகியாக சந்திரகாந்தா நடித்தார். கதாநாயகனின் தாயாக நடித்தவர் ஸ்ரீரஞ்சனி. ஸ்ரீரஞ்சனி என்றாலே சோகம் தான். இதிலும் உருக்கமாக நடித்து கலங்கடித்தார் அவர். படத்தில் கண்ணாம்பாவுக்கு அடங்கிய மகனாக வருபவர் டி எஸ் பாலையா. சகிக்க முடியவில்லை. தவறான தேர்வு . இவர்களுடன் நாகேஷ், மனோரமா, எஸ் வி ராமதாஸ் ஆகியோரும் நடித்தனர். ஆனாலும் மானேஜராக வரும் டீ எஸ் துரைராஜ் நடிப்பு ரசிக்கும்படியாக இருந்தது.


ஹிந்தி திரையுலகில் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் ஹேமமாலினி. இப்போது 75 வயதான இவர் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் தனது பதின்னைந்தாவது வயதில் இந்தப் படத்தின் மூலம் தான் திரையுலகில் அறிமுகமானார். சிங்கார தேருக்கு சேலை கட்டி சின்ன சின்ன இடையிலே நூலை கட்டி பாடலுக்கு மட்டும் இப்படத்தில் அவர் ஆடியிருந்தார்!

அசோகன் ஹீரோவாக நடிக்க கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக

பயன்படுத்திக் கொண்டார். சந்திரகாந்தா குடும்பப்பாங்காக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இருவரும் தோன்றும் மனம் கனிவான இந்த கன்னியை கண்டால் டூயட் பாடலில் அவர்களின் நடிப்பு அருமை.

படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பரோ சூப்பர். சரவண பொய்கையில் நீராடி, சத்தியம்
இது சத்தியம் , குங்கும பொட்டு குலுங்குதடி ஆகிய பாடல்கள்

ஹிட்டடித்தன. கவிஞர் கண்ணதாசன் எல்லா பாடல்களையும் எழுத , மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன், ராமமூர்த்தி இருவரும் இசை வழங்கினார்கள் . படத்தின் வசனங்களை மா லக்ஷ்மணன் எழுதினார். தம்பு ஒளிப்பதிவு செய்தார்.

ஜி என் வேலுமணியின் ஆஸ்தான இயக்குனராக மாறிவிட்டிருந்த கே சங்கர் படத்தை டைரக்ட் செய்தார். பாட்டி என்றால் பாசத்தை பொழிபவர், அன்பை காட்டுபவர் என்று இருந்த சினிமா ட்ரெண்டை உடைப்பது போல் கண்ணாம்பாவின் பாத்திரம் அமைந்ததை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தப் படம் வெளிவந்த அடுத்த ஆண்டே 1964, மே மாதம் 7ம் தேதி கண்ணாம்பாவும் காலமானார்!


No comments: