ஊருக்குத்தான் உபதேசம் உனக்கில்லையா கண்ணே…?! அவதானி


இலங்கையில் தற்போது சுமார் 30 அமைச்சர்கள் இருக்கிறார்கள் எனச்சொல்லப்படுகிறது.

இத்தனை அமைச்சர்கள் எமது சின்னஞ்சிறிய நாட்டிற்குத் தேவைதானா..?

இந்த நிலைமைதான் முன்னரும் இருந்தது.  அத்துடன் மாகாண சபைகளும் இயங்கின. அங்கும் அமைச்சர்கள் இருந்தனர். இறுதியில் அந்த மாகாண சபைகளும், அதிலிருந்த அமைச்சர்களும் என்ன செய்தார்கள்..? எதனைச் சாதித்தார்கள்..? என்பதுதான் தெரியவில்லை.

இந்தப்பின்னணியில் இலங்கைக்கு பதினைந்து  அமைச்சர்களே


போதும் என்று ஒரு ஆய்வு அமைப்பு கருத்து வெளியிட்டுள்ளது. வெரிடே ரிசேர்ச் என்ற இந்த அமைப்பு ஆசிய நாடுகளின் உள்விவகாரங்களை தொடர்ச்சியாக கண்காணித்து காலத்துக்கு காலம் தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுவருகிறது.

ஆனால், இதன் கருத்துக்களை இலங்கை அரசு மட்டுமல்ல இங்கிருக்கும் அரசியல் கட்சிகளும்  கண்டுகொள்வதில்லை.

கடந்த காலங்களில் அமைச்சுப் பதவிகளுக்காக கட்சி தாவிய எம். பி. க்களையும் பார்த்தோம்.  சிலரை திருப்திப்படுத்துவதற்காக புதிதாக உருவாக்கிய அமைச்சுகளையும் கண்டோம்.

ஜே. ஆர். ஜெயவர்தனா,  தான்  பதவியிலிருந்த காலத்தில் தமிழரசுக் கட்சியிலிருந்து தாவிய மட்டக்களப்பின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த செல்லையா இராசதுரைக்காகவே ஒரு  அமைச்சினை உருவாக்கினார். அதன் பெயர் பிரதேச அபிவிருத்தி, தமிழ் மொழி அமுலாக்கல் , இந்து கலாசார அமைச்சு.

அது என்ன இந்து மதத்திற்கு மாத்திரம் ஒரு அமைச்சு என்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேட்டபோது,  பௌத்த மதத்திற்கான  அமைச்சினை தானும் அதிபர் ஜே.ஆரும். பார்த்துக் கொள்கின்றோம் என்று பிரதமராகவிருந்த  ரணசிங்க பிரேமதாச சமாதானம் சொன்னார்.

பின்னாளில் புத்த சாசன அமைச்சு உருவாகியது. அதற்கென ஒரு அமைச்சரும் தெரிவானார்.


அரசின் ஆதரவு எம்.பி.க்களாக எந்தவொரு தமிழர் தெரிவானாலும் அவருக்கு குறிப்பிட்ட இந்து கலாசார அமைச்சு தயாராகவே இருக்கும்.

கடந்த காலங்களில் இந்த அமைச்சினை செல்லையா இராஜதுரைக்குப்பின்னர்,  மனோகரி புலேந்திரன், பி. தேவராஜ், மனோ, கணேசன், டக்ளஸ் தேவானந்தா, மகேஸ்வரன் ஆகியோர் வகித்திருந்ததை அவதானித்திருப்போம்.

ஜே. ஆர். ஜெயவர்தனா, தனது பதவிக்காலத்தில், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களையும் அத்தகைய அந்தஸ்து அற்ற அமைச்சர்களையும் பிரதி அமைச்சர்களையும், இவை போதாதென்று மாவட்ட அமைச்சர்களையும் உருவாக்கி பலரையும் திருப்திப்படுத்தினார்.

அவரது காலத்தில் மற்றும் ஒரு வேடிக்கையும் நடந்தது.


  சபாநாயகராக பாக்கீர் மாக்கார் பதவியிலிருந்ததை சிங்கள கடும்போக்காளர்களும் இனவாதம் பேசிய பௌத்த பிக்குகளும் விரும்பவில்லை.

அதனால், பாக்கீர் மார்க்காரிடமிருந்து அந்த சபாநாயகர் பதவியை மீளப்பெற்று,  ஒரு சிங்கள எம். பி.க்கு அந்தப்பதவியை  ஜே.ஆரும். பிரேமதாசவும் வழங்கினர்.

பாக்கீர்மார்க்கார், அமைச்சரவை அந்தஸ்து அற்ற ஒரு அமைச்சராக இறுதிவரையில் வாழ்ந்து மறைந்தார்.

இந்த வரலாற்றுப் பின்னணிகளுடன்தான் அண்மையில் வெரிடே ரிசேர்ச் வெளியிட்டுள்ள ஆய்வினையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

தங்கள் அரசுகளை தக்கவைத்துக்கொள்வதற்காக அரசின் தலைவர்கள் இவ்வாறு எம். பி.க்களை வாங்கி அமைச்சர் பதவிகளை வழங்கி வந்தனர்.

கட்சி மாறி அமைச்சுப் பதவிகளை பெறுபவர்களும், தங்கள் வசமிருக்கும்    அரசியலில் எதிரியும் இல்லை, நண்பரும் இல்லை!  “ என்ற  பொன்மொழியையும் உதிர்ப்பதற்கு தவறுவதில்லை.

சமகாலத்தில் இலங்கையில் தோன்றியிருக்கும் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக அரசு, சர்வதேச நாணய நிதியத்திடமும், உலக வங்கியிடமும் கையேந்திக்கொண்டிருக்கிறது.

அத்துடன் பல உலக நாடுகளும் உதவ முன்வந்தன.  மூன்றாம் உலக நாடான இந்தியாவும் வளர்முக நாடாக விளங்கும் பங்களா தேஷும் கூட உதவிகளை வழங்கின.

ஆனால், அரசு தனது செலவீனங்களை குறைத்துக்கொள்ள முன்வரவில்லை.

எரிபொருள் பற்றாக்குறை , அத்தியாவசிய மருந்துகளின் தட்டுப்பாடு,  விலைவாசியேற்றம், மின்வெட்டு… இவை அத்தனைக்கும் மத்தியில் மக்கள் முகம்கொடுத்துக்கொண்டிருந்தமையால்தான் முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்‌ஷ பதவியிலிருந்து விலகிச்சென்றார். அவருடைய சகோதரர்கள் மகிந்த, பஸில் மட்டுமன்றி நாமலும் (பெறாமகன் )  அமைச்சுப் பதவிகளை இழக்க நேர்ந்தது.

இத்தனை மாற்றங்களுக்கும் பின்னர் முதலில் பிரதமராகவும், பின்னர் அதிபராகவும் வந்துள்ள ரணில் விக்கிரமசிங்கா ஆறு தசாப்த கால அரசியல் அனுபவம் மிக்கவர்.

இலங்கை ஏன் பின்னடைவுகளை சந்தித்தது..?  என்பதை தெரிந்துகொண்டிருப்பவர். நீடித்த உள்நாட்டுப்போர், அதனால் பாதுகாப்பு செலவீனங்களின் அதிகரிப்பு,  பின்னர் வந்த கொவிட் பெருந்தொற்று நெருக்கடி.

மக்களை சிக்கனமாக வாழுமாறு சொல்லும் ஆட்சியாளர்கள், ஏன் தங்கள் செலவீனங்களை குறைக்கமுடியாது.  தமது மொட்டுக்கட்சியின் எம். பி.க்கள் சிலருக்கு ரணில் அமைச்சுப் பதவிகளை வழங்கவில்லை என்ற அதிருப்தியிலும் கோபத்திலும் மொட்டுக்கட்சியின் பிரதான அமைப்பாளர் பஸில் ராஜபக்‌ஷ இருக்கிறாராம்.

இவரது அதிருப்தியும் கோபமும்தானா இன்று மக்களுக்குத் தேவை.?!  அவரது கோபத்தினால், ரணிலை ஆதரிக்கக்கூடிய பொதுஜன பெரமுனையின் (  மொட்டுக் கட்சி ) சுமார் பத்து எம். பி..க்கள் எதிர்க்கட்சி வரிசை ஆசனங்களில்  அமருவதற்கு தயாராகி வருகிறார்களாம்.

ஆசனங்கள் சூடாகும் அவ்வளவுதான் !

ஒரு அமைச்சருக்கு பிரதி அமைச்சர் வேண்டும். இவர்களுக்கென அமைச்சு அலுவலகங்கள்,  வாகனங்கள், சாரதிகள், பாதுகாப்பு ஊழியர்கள், அலுவலர்கள்,  வீட்டு வசதிகள்… இவற்றுக்கெல்லாம் தேவைப்படும் நிதியை ரணிலின் அரசு எங்கிருந்து பெறமுடியும்!

தற்போதைய அமைச்சுப் பதவிகளை பாருங்கள்:

பாதுகாப்பு , நிதி , பொருளாதார உறுதிப்பாடு, மற்றும் தேசியக்கொள்கைள் , தொழில் நுட்பம், மகளிர் சிறுவர் அலுவல்கள்- சமூக வலுப்படுத்துகை, முதலீட்டு மேம்பாடு, பொது நிருவாக உள்நாட்டு அலுவல்கள் - மாகாண சபைகள், உள்ளுராடட்சி மன்றங்கள், துறை முகங்கள், கப்பற்றுறை, விமானச் சேவைகள், வனஜீவராசிகள், வனவள பாதுகாப்பு, கடற்றொழில், கல்வி, போக்குவரத்து நெடுஞ்சாலைகள், இவற்றை  வெகுசன ஊடகம், சுகாதாரம், நீர் வழங்கல், விவசாயம், நீதி, சிறைச்சாலைகள்- அரசியலமைப்பு மறுசீரமைப்பு , சுற்றுலாத்துறை, பெருந்தோட்ட கைத்தொழில், நகர அபிவிருத்தி – வீடமைப்பு, வெளிநாட்டலுவல்கள், புத்தசாசனம், மின் சக்தி – வலு சக்தி, சுற்றாடல், விளையாட்டுத்துறை – இளைஞர் விவகாரம், நீர்ப்பாசனம், தொழில் – வெளிநாட்டு வேலை வாய்ப்பு , வர்த்தகம் - வாணிபம் – உணவுப்பாதுகாப்பு ,  நீர்வழங்கல் பெருந்தோட்ட உட் கட்டமைப்பு .

இவற்றை  சுருக்க முடியாதா..? அமைச்சரைவிட   அமைச்சின் செயலாளர்கள்தானே கூடுதல் நேரம் வேலை செய்கின்றனர்.

ஜனாதிபதி இதுபற்றியும்  யோசிக்கவேண்டும்.

---0---

No comments: