வென்ற்வேத்வில் மூத்தோர் சங்கம் மகளிர் தினம் - ரசிகபிரியா

 


மே மாதம் 3-ஆம் திகதி வென்ற்வேத்வில் மூத்தோர் சங்கம் மகளிர் தினத்தை வெகு விமரிசையாகக் கொண்டாடினார்கள். சங்க நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்து, இறை வணக்கம் என ஆரம்பமானது. சங்கத்தின் செயலாளர் எலிசபெத் ரொட்றிகோ யுநெஸ்கோ நிறுவனம் உலக மகளிர் தினத்தை எதற்காக நடத்துகிறது என விளக்கிக் கூறினார். இன்றும் உலகின் பல பாகங்களிலும் பெண்கள் அடக்கி ஒடுக்கப்படும் நிலையில் உள்ளனர் என்பதை எடுத்துக்கூறி, தனது சிற்றுரையை நிறைவு செய்தார்.

நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்பை திருமதி. கனகமணி செல்லத்துரையிடம் கையளித்தார். மகளிர் தின சிறப்புரை ஆற்ற நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர் அழைக்கப்பட்டிருந்தார். அவர் ‘மனித வரலாற்றில் பெண்கள்’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அடுத்து சங்க உறுப்பினர் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. முதல் நிகழ்வாக எப்பொழுதுமே உடற்பயிற்சி நடாத்தும் சரோஜினி நலந்துவன் சினிமா பாடலின் தாளத்திற்கேற்ப உடலைக் குலுக்கி வளைத்து அபிநயம் புரிந்து யாவரின் பாராட்டுகளையும் பெற்றார்.இன்னிசை நிகழ்வில் தம் குரல் வளத்தால் பாடி மகிழ்வித்தவர் மொனா பிலிப், அருந்ததி ஜெயசீலன், எலிசபெத் ரொட்றிகோ ஆவார். இவர்கள் தனித்தனியாகவும் சேர்ந்தும் வெவ்வேறு பாடல்களை இரசித்துப் பாடினார்கள். பார்வையாளரும் இசையில் லயித்தனர். தொடர்ந்து குத்துப்பாடல் ஈழத்து பைலா என பாடல் மாற, பலர் முன்னே வந்து ஆட ஆரம்பித்தனர். நாம் முதியோர் அல்ல, இளையோரே, வயது என்பது ஒரு வெறும் எண்ணிக்கையே என தம் ஆடல் மூலம் நிரூபித்தனர். உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.

அடுத்து யாவரும் ஆவலுடன் எதிர்பார்த்த கும்மி நடனம். ஆடல் என்ன இளம் பெண்களுக்கு மட்டுமா? என ஆனந்தக் கும்மி ஆடினர். கர ஒலி வானைப் பிளந்தது. பேரப் பிள்ளைகள் கமரா சகிதம் தம் பேத்திகளைப் படம் பிடித்தனர். இறுதி நிகழ்வாக நகைச்சுவை நாடகம் றஜகுலதேவி – ஜெகநாதன், சுலோசனா தேவி – புஸ்பநாயகம் தனித்து வாழும் தம்பதியராக நடித்தனர். எந்த சின்ன வேலையையும் பொறுப்பாகச் செய்யாத கணவரைக் காட்டினர். யாவரையும் தம் நடிப்பால் மகிழ்வித்தனர். கலை நிகழ்வை அடுத்து சங்கத்திற்கு பல வழிகளிலும் உதவிய மூத்த உறுப்பினர் கணேஸ்வரி இராமகிருஷ்ணா கௌரவிக்கப்பட்டார்.


இறுதியாக, பெண்களின் விருந்தினராக ஆண்கள் கலந்து மகிழ்ந்து உணவருந்தினர்.  
No comments: