உலகச் செய்திகள்

வெளிநாடு செல்வதற்கு இம்ரான் கானுக்கு தடை

அமெரிக்க போர் கப்பலின் வருகைக்கு ரஷ்யா எதிர்ப்பு

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் புளோரிடா ஆளுநர்

ரஷ்யா மீது மேலும் ஊடுருவி தாக்க துணைப் படை குழுவினர் எச்சரிக்கை

உக்ரைனிய போரில் ரஷ்ய எல்லை தாண்டி தாக்குதல்


வெளிநாடு செல்வதற்கு இம்ரான் கானுக்கு தடை

பாகிஸ்தானை விட்டு வெளியேற அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அவரது மனைவி உள்ளிட்டோருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 9 மற்றும் 10ஆம் திகதிகளில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக, இம்ரானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாப் கட்சியைச் சேர்ந்த நூற்றுக் கணக்கானோரை வெளிநாட்டுப் பயணத் தடைப் பட்டியலில் அரசு சேர்த்துள்ளது. இதில் இம்ரான் கானும், அவரது மனைவி புஷ்ராவும் அடங்குவர் என்று பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

“ஒவ்வொரு வழக்கினதும் நிலையான நடைமுறையாக இது உள்ளது. நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு முகம்கொடுக்கும் அனைவரும் நாட்டை விட்டு வெளியேற தடை செய்யப்படுகின்றனர்” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் தன் மீது பயணத் தடை விதித்ததற்காக அவர் நேற்று அரசுக்கு நன்றி தெரிவித்தார்். “நாட்டுக்கு வெளியில் எனக்கு எந்த சொத்தும் அல்லது எந்த வர்த்தகமும் அல்லது வங்கிக் கணக்கு கூட இல்லாத நிலையில் வெளிநாடு செல்ல எனக்குத் திட்டமில்லை” என்று இம்ரான் கான் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தனது பிரதமர் பதவியை இம்ரான் கான் இழந்தார்.

அதன் பின், நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் இம்ரான் கான் மீது 100க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.   நன்றி தினகரன் 





அமெரிக்க போர் கப்பலின் வருகைக்கு ரஷ்யா எதிர்ப்பு

பதற்றமான சூழலில் அமெரிக்காவின் உலகின் மிகப்பெரிய போர் கப்பல் நோர்வே வந்திருப்பது ஆபத்தானது என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.

337 மீற்றர் நீளம் கொண்ட அணு சக்தி திறனுடைய இந்தப் போர் கப்பல் கடந்த புதன்கிழமை (24) ஒஸ்லோ பிஜோர்ட் கடல் பகுதியை அடைந்ததோடு இராணுவ ஒத்திகை ஒன்றுக்காக ஆர்டிக் செல்லும் முன்னர் அது அங்கு சில நாட்கள் தங்கி இருக்கும் என்று நோர்வே ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைன் போர் தொடர்பில் மேற்குலகம் மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் பதற்றம் அதிகரித்திருக்கும் நிலையில் இந்தப் போர் கப்பலின் வருகைக்கு நோர்வேயில் உள்ள ரஷ்ய தூதரகம் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

நேட்டோ உறுப்பு நாடான நோர்வே ரஷ்யாவுடன் நில எல்லை மற்றும் பேரண்ட்ஸ் கடலில் ஒரு கடல் எல்லையையும் பகிர்ந்து கொள்கிறது.   நன்றி தினகரன் 






அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் புளோரிடா ஆளுநர்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் போட்டியில் புளோரிடா ஆளுநர் ரோன் டிசான்ட்டிஸ் அதிகாரபூர்வமாக இணைந்துள்ளார்.

குடியரசுக் கட்சியின் சார்பில் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முயலும் டொனல்ட் டிரம்ப்புக்கு இது பெரும் சவாலாய் அமையும்.

ட்விட்டர் நிறுவனத் தலைவர் இலோன் மஸ்க்குடன் இணையத்தில் நேரடியாக உரையாடுவதற்கு முன், 44 வயது டிசான்ட்டிஸ் வேட்பாளருக்கான ஆவணங்களைச் சமர்ப்பித்தார். தம்முடைய செயல்பாடுகளும் பாரம்பரியப் பண்புகளும் வாக்குகளைப் பெற்றுத்தரும் என்று டிசான்ட்டிஸ் நம்புகிறார்.

கொவிட் நோய்ப்பரவல் காலத்தில் புளோரிடாவைத் திறமையாய் நிர்வகித்த அவர், கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் மீண்டும் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் டிரம்புக்கும் டிசான்ட்டிஸுக்கும் சுமார் 40 வீத புள்ளிகள் வித்தியாசம் இருப்பதாகத் தெரிகிறது. டிரம்ப் கிட்டத்தட்ட தினசரி சமூக ஊடகம் வழியே டிசான்ட்டிஸை சாடிவருகிறார்.   நன்றி தினகரன் 





ரஷ்யா மீது மேலும் ஊடுருவி தாக்க துணைப் படை குழுவினர் எச்சரிக்கை

உக்ரைனில் இருந்து ரஷ்யாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்திய ரஷ்ய துணை இராணுவக் குழு, மேலும் அவ்வாறான தாக்குதல்களை நடத்தப்போவதாக குறிப்பிட்டுள்ளது.

“ரஷ்யாவுக்குள் எம்மை மீண்டும் உங்களால் காண முடியும் என்று நான் நினைக்கிறேன்” என்று ரஷ்ய தன்னார்வப் படைத் தலைவர் டெனிஸ் கபுஸ்டின் தெரிவித்துள்ளார்.

இந்த ஊடுருவலை முறியடித்ததாகக் குறிப்பிட்டிருக்கும் ரஷ்யா, 70க்கும் அகதிமான நாசகாரர்களை கொன்றதாகவும் கூறியது. எதிர்காலத்தில் இடம்பெறும் இவ்வாறான ஊடுருவல்களுக்கு கடும் பதில் அளிக்கப்படும் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கி சொய்கு எச்சரித்தார்.

இந்தத் தாக்குதலுடன் தமக்கு தொடர்பு இல்லை என்று உக்ரைன் மறுத்துள்ளது. ரஷ்ய தேசியவாதி ஒருவராக அறியப்படும் டெனிஸ் கபுஸ்டின், ஒற்றை இன ரஷ்ய நாடு ஒன்றை உருவாக்க விரும்புவதாக கூறி வருகிறார். ரஷ்யாவின் பெல்கொரோட் பிராந்தியத்தின் மீது கடந்த திங்கட்கிழமை (22) நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ரஷ்ய சுதந்திரப் படையணியுடன் ரஷ்ய தன்னார்வப் படை உரிமை கோரியது.

ரஷ்ய எல்லைக்கு அருகில் உக்ரைன் பக்கமாக இருந்து செய்தியாளர்களிடம் கடந்த புதன்கிழமை (24) பேசிய கபுஸ்டின், “(தாக்குதல்) முடிவுகள் பற்றி நாம் திருப்தி அடைகிறோம்” என்றார்.

தமது குழுவினரால் சில அயுதங்களை கைப்பற்ற முடிந்ததாகவும் சிலரை கைதிகளாக பிடிக்க முடிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த குழுவினரை உக்ரைனிய இராணுவத்தினர் என்று ரஷ்யா குறிப்பிட்டபோதும் உக்ரைன் அதனை மறுத்துள்ளது.   நன்றி தினகரன் 




உக்ரைனிய போரில் ரஷ்ய எல்லை தாண்டி தாக்குதல்

ரஷ்யாவின் பல்கொரோட் பிராந்தியத்தில் மோதல் வெடித்தை அடுத்து அங்குள்ள குடியிருப்பாளர்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி இருப்பதோடு அவர்கள் வீடுகளுக்கு திரும்ப வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

உக்ரைனில் இருந்து நாசகார ஆயுதக் குழு ஒன்றே எல்லை மாவட்டமான கிராவ்யோர்ஸ்கியில் தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த மோதல்கள் நீடித்து வரும் நிலையில் ரஷ்யா பயங்கரவாத புலன் விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளது.

இதற்கு பொறுப்பேற்க உக்ரைன் மறுத்துள்ளதோடு இரு துணைப் படையைச் சேர்ந்த ரஷ்ய பிரஜைகளே இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

இந்த மோதலில் உயிரிழப்புகள் பதிவாகாதபோதும் பெரும் எண்ணிக்கையானோர் காயமடைந்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த திங்கட்கிழமை இரவு ஆளில்லா விமானம் ஒன்று வான் பாதுகாப்பு அமைப்பினால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் கட்டடங்களுக்கு சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் பிராந்திய ஆளுநர் வியாசெஸ்லெவ் கிளாக்டோவ் குறிப்பிட்டுள்ளார்.

இதில் ரஷ்யாவின் பிரதான பாதுகாப்பு நிறுவனமான எப்.எஸ்.பி கட்டடமும் தாக்குதலில் சேதமடைந்திருப்பாக செய்தி வெளியாகியுள்ளது.

பல கிராமங்களின் மக்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் தப்பிச் சென்றவர்கள் மீண்டும் ஊர் திரும்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். ரஷ்ய படையினர் தேடுதல் பணிகளில் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்ய படையெடுத்து கடந்த 15 மாதங்களில் எல்லை கடந்து ரஷ்யாவில் இடம்பெற்ற மிகப்பெரிய தாக்குதல் சம்பவமாக இது அமைந்துள்ளது. இது ரஷ்யப் படையினர் பல்கொரோட்டில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள துண்டி இருப்பதோடு தொடர்பாடல்களை துண்டிக்கவும் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் இராணுவத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.   நன்றி தினகரன் 



No comments: