நீதிக்கு பின் பாசம் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச சுந்தரதாஸ்

 



ஒரு படம் ஓடி வெற்றி பெற்றவுடன் அந்த படத்தின் கதை என்னுடையது அதை திருடி படமாக்கி விட்டார்கள் என்று வழக்குப் போடுவது தமிழ் திரையுலகில் அவ்வபபோது நடப்பதுதான். சில ஆண்டுகளுக்கு முன் கூட விஜய்யின் ஒரு படத்துக்கு இந்த நிலை ஏற்பட்டது. ஆனால் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் எம் ஜி ஆர் நடித்து தேவர் பிலிம்ஸ் தயாரித்த நீதிக்கு பின் பாசம் படத்துக்கும் இதே போன்ற ஒரு பிரச்னை உருவானது.

எம் ஏ அபபாஸ் என்ற கதாசிரியர் அன்றைய காலகட்டத்தில் பிரபலமாக திகழ்ந்தார். இவர் எழுதிய கள்ளத்தோணி என்ற நாவல் இலங்கையிலும், தமிழகத்திலும் வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ் நாட்டின் பிரபல வர்த்தகரும், படங்களுக்கு நிதி உதவி செய்பவருமான யாசின் என்பவர் மூலம் இவருக்கு சின்னப்பா தேவரின் அறிமுகம் ஏற்பட்டது . தேவருக்கு இவர் சொன்ன இரண்டொரு கதைகள் பிடிக்கவில்லை. ஆகவே தேவர் அப்பாஸிடம் நான்கு வரிகளில் ஒரு கதையை சொன்னார்.

அந்த கதைக்கு திரைக்கதை எழுதி வரும்படி அப்பாஸிடம் கூறினார். சில மாதங்கள் கழித்து அப்பாஸிடம் நான்கு வரியில் சொன்ன கதையை நீதிக்கு பின் பாசம் என்ற பேரில் படமாகத் தயாரித்து தேவர் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து அப்பாஸிடம் இருந்து தேவருக்கு வக்கீல் நோடீஸ் ஒன்று வந்தது. அதில் நீதிக்கு பின் பாசம் படத்தின் கதை தன்னுடையது என்றும் அதனை தன்னுடைய அனுமதி இன்றி தேவர் படமாக்கிவிட்டார் என்றும் படத்தின் கதையை தான் பதிவு செய்து வைத்திருப்பதாகவும் உரிமை கொண்டாடி இருந்தார்.

தேவர் தனக்கு நிதியுதவி அளிக்கும் யாசினை அணுகினார். அவரின் மத்தியஸ்தத்துடன் அப்பாஸுக்கு பத்தாயிரம் ரூபாயை வழங்கி பிரச்னையை முடித்துக் கொண்டார் தேவர்!

ஒரு போலீஸ் அதிகாரி, அவர் மனைவி ஒரு மருத்துவர், ஒரு மகன் அரச தரப்பு வக்கீல், மற்றைய மகன் எதிர் தரப்பு வக்கீல் . இளைய மகன் கோபால் வீட்டில் முறை பெண் காத்திருக்க கிராம பெண்ணான கௌரியை காதலிக்கிறான். காதலுக்கு தாய் தடை போடுகிறாள். அதே சமயம் கௌரியின் தந்தை சிவசாமி மர்மமான முறையில் கொல்லப் படுகிறார். கொலை பழி கோபாலின் தாய் மீது விழ போலீஸ் அதிகாரியான அவள் கணவனே அவளை கைது செய்கிறார் . மூத்த மகன் அரச தரப்பில் அவளுக்கு எதிராக வாதாடுகிறான். இளைய மகன் தாயின் விடுதலைக்காக வாதாடுகிறான், போராடுகிறான். இதுதான் படத்தின் கதை.

படத்தில் எம் ஜி ஆரின் தாயாக கண்ணாம்பா மிடுக்குடன் நடித்திருந்தார். இதுவே இருவரும் சேர்ந்து நடித்த கடைசி படமாகும்.

படத்தில் கோபாலாக எம் ஜி ஆர் நடித்திருந்தார். கதாநாயகி சரோஜாதேவிக்கு சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுக்கிறார், வயதானவர் போல் வந்து காதலிக்கிறார், காதலியை பிரிந்து துடிக்கிறார் , தாய்க்காக நீதிமன்றில் வாதாடுகிறார் , வில்லன் நம்பியார் , சின்னப்ப தேவருடன் போராடுகிறார், ஈற்றில் வெற்றி வகை சூடி காதலி கரம் பற்றுகிறார். எல்லா விதத்திலும் குறை இல்லாத நடிப்பை வழங்குகிறார் எம் ஜி ஆர்.

ஆடி இடையை அசைந்து , பின்னழகை காட்டி அறுபதாண்டுகளுக்கு முன்னரே ரசிகர்களை பரவசப் படுத்துகிறார் சரோஜாதேவி. இடை இடையே உருக்கமான நடிப்பையும் வெளிப்படுத்துகிறார். படம் முழுதும் கண்டிப்பான அம்மாவாக வருகிறார் கண்ணாம்பா. அப்படி இருந்தும் முறைப் பெண்ணை விடுத்து வேறு பெண்ணை காதலிக்கிறான் மகன்! ரங்காராவ் போலீஸ் அதிகாரி, அசோகன் அரச தரப்பு வக்கீல். இவர்களுடன் நம்பியாரும் வந்து முறைப்பு, விறைப்பு காட்டி எம் ஜி ஆருடன் மோதுகிறார்.


படம் முழுவதும் வருவார் என்று எதிர் பார்த்தால் இடையில் சாகடிக்கப் படுகிறார் எம் ஆர் ராதா. அவருடன் நகைச்சுவையும் போய் விடுகிறது. இவர்களுடன் ஜி சகுந்தலா, செந்தாமரை, குமாரி ராதா, திருப்பதிசாமி ஆகியோரும் நடித்தனர்.

கே வி மகாதேவனின் இசையில் கண்ணதாசனின் மான் அல்லவோ கண்கள் தந்தது, சிரித்தாலும் போதுமே, அக்கம் பக்கம் பார்க்காதே, இடி இடித்து மழை பொலிந்து, வாங்க வாங்க

கோபாலையா, காடு கொடுத்த கனி இருக்கு ஆகிய பாடல்கள் சுசிலா, சௌந்தரராஜன் குரலில் இனிமையாக அமைந்தன. என் எஸ் வர்மாவின் ஒளிப்பதிவு தரமாக இருந்தது. சில காட்சிகள் ஊட்டியில் படமாக்கப் பட்டன.

ஆரூர்தாஸ் வசனங்களை எழுதி தன் வல்லமையை அங்கங்கே பதிந்திருந்தார். எம் ஏ திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த நீதிக்கு பின் பாசம் தேவரின் நிதிக்கு மோசம் வராவண்ணம் நூறு நாட்கள் ஓடி வெற்றி கண்டது.



No comments: