இலங்கைச் செய்திகள்

 நியுசிலாந்துக்கு பயணமான 248 இலங்கையர் உயிரிழந்தனரா?

இலங்கைக்கான கடன் நிவாரண ஒப்பந்தத்துக்கு சீனா உதவியது

பொருளாதார மீட்சிக்கு அமெரிக்கா ஆதரவு!

தலைமன்னார் - தனுஷ்கோடி கப்பல் சேவையுடன் சுற்றுலா அபிவிருத்தி

தமிழ் அரசியல் கைதிகள் மூவர் 14 வருடங்களின் பின் விடுதலை!


நியுசிலாந்துக்கு பயணமான 248 இலங்கையர் உயிரிழந்தனரா?

2019 இல் நியுசிலாந்துக்கு ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொண்ட இலங்கையர் தொடர்பாக புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இவர்கள் காணாமல் போயிருக்கலாமென, நியுசிலாந்தின் ஊடகமொன்று நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.

நியுசிலாந்தைச் சென்றடைவதற்கு முயற்சிகளை மேற்கொண்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் அந்த நாட்டு அரசாங்கத்தின் ஆவணங்களில் இலங்கையைச் சேர்ந்த 248 பேருடன் காணப்பட்ட மீன்பிடிப்படகை மீண்டும் காணவில்லயென குறிப்பிடப்பட்டுள்ளதாக, டிவிஎன்ஜட் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

2019ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் திகதி ஆட்கள் பயணிக்கும் படகாக மாற்றப்பட்ட 27 மீற்றர் ஆழ்கடல் மீன்பிடிப்படகு இந்தியாவிலிருந்து 248 தமிழர்களுடன் புறப்பட்டது. அந்தப் படகு, அவுஸ்திரேலியா அல்லது நியுசிலாந்தை சென்றடைய முயற்சி செய்திருக்கலமென, நியுசிலாந்து அரச ஆவணங்கள் தெரிவித்துள்ளன.​

அதன் பின்னர், அந்தப் படகிலிருந்தவர்கள் தொடர்பாக எந்தத் தகவலும் இல்லையென, நியுசிலாந்தின் ஆவணங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பான விசாரணைகளின் போது, கைது செய்யப்பட்ட பிரபு தண்டபாணி என்ற நபர், குறிப்பிட்ட படகு நியுசிலாந்துக்கே சென்று கொண்டிருந்ததாக, இந்தியப் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

பெருமளவு எண்ணிக்கையிலானவர்கள் நியுசிலாந்துக்குள் நுழைவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொடர்பான அந்த ஆவணங்களில், தமிழர்கள் கேரளாவிலிருந்து நியுசிலாந்து அல்லது அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்கு மேற்கொண்ட முயற்சி தொடர்பாக காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியுசிலாந்துக்கு செல்ல முற்பட்ட இலங்கை அகதிகள் படகு தொடர்பாக டைம்ஸ் ஒவ் இந்தியாவில் வெளியாகியுள்ள கட்டுரையில், புதுடில்லியின் மதங்கீர் காலணியில் தங்கியிருந்த இலங்கைத் தமிழ் அகதிகளே ​இந்தப் படகில் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய - இலங்கை உடன்படிக்கை காரணமாக இந்தக் காலணி உருவானது.

இந்த அகதிகள் மிக மோசமான நிலையில் வாழ்ந்ததாக இந்தக் கட்டுரையை எழுதிய கே.பி. சைகிரான் என்பவருக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். தங்கள் பயணத்தை பாதுகாப்புத் தரப்பினர் கண்டுபிடிப்பதைத் தவிர்ப்பதற்காக 25 நாட்கள் நீடித்த படகுப் பயணத்தின் போது, அவர்கள் ஜி.பி.எஸ். சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்த்துள்ளனர்.

இந்தப் படகு நீரில் மூழ்கியிருக்க வேண்டும் அல்லது இலங்கை அதிகாரிகள் இவர்களை கைது செய்திருக்க வேண்டும். இதனால் அவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாமென, ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், அவர்கள் உயிரிழந்திருக்கலாமெனவும், அவர் தெரிவித்துள்ளார்.   நன்றி தினகரன் 






இலங்கைக்கான கடன் நிவாரண ஒப்பந்தத்துக்கு சீனா உதவியது

IMF தலைவர் ஜோர்ஜிவா தெரிவிப்பு

இலங்கைக்கான கடன் நிவாரண ஒப்பந்தத்தை எட்டுவதற்கு சீனா உதவியதாக, சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார்.

சாம்பியா, கானா மற்றும் எதியோப்பியா போன்ற நாடுகளுக்கான கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களையடைய சீனா தனது பணியை விரைவுபடுத்த வேண்டுமென்று சீனாவின் புதிய உயர்மட்ட பொருளாதார அதிகாரி லி கியாங்கிடம் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா கோரிக்கை விடுத்துள்ளார்.

மெரிடியன் ஹவுஸ் மற்றும் பொலிட்டிகோ நடத்திய ஒரு நிகழ்வில் உரையாற்றிய கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, கடன்களை கையாள்வதற்கு சீனா பல நிறுவனங்களைக் கொண்டுள்ளமையால், தாமதங்கள் ஏற்படுகின்றன என்று தெரிவித்துள்ளார்.

எனினும், சீனா தமது பங்கேற்பை விரைவுபடுத்த வேண்டுமென்று கோரியுள்ளதாக, கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.   நன்றி தினகரன் 






பொருளாதார மீட்சிக்கு அமெரிக்கா ஆதரவு!

இலங்கைக்கான USA தூதுவர் தெரிவிப்பு

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு அமெரிக்கா ஆதரவளித்து வருவதாக, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். அமெரிக்கத் தூதரகத்தின் முதலாவது புத்தாண்டுச் சந்தையை

விளம்பரப்படுத்தும் முகமாக வெளியிட்ட தனது டுவிட்டர் பதிவிலேயே ஜூலி சங் இவ்விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த புத்தாண்டுச் சந்தை, உள்ளூர் மற்றும் பெண்களுக்குச் சொந்தமான வணிகங்கள் உட்பட 40 விற்பனையாளர்களுக்கு தங்கள் பொருட்களைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது.   நன்றி தினகரன் 





தலைமன்னார் - தனுஷ்கோடி கப்பல் சேவையுடன் சுற்றுலா அபிவிருத்தி

தலைமன்னாரிலிருந்து தமிழகம் தனுஷ்கோடி வரை 'இராமர்பாலம்' பகுதி ஊடாக கப்பல் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பது தொடர்பிலும், ஆன்மீக சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது சம்பந்தமாகவும் விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.

துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில், இ.தொ.காவின் பொதுச்செயலாளர், நீர்வழங்கல்,தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் பங்குபற்றலுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. இந்திய தூதரகத்தின் துணைத் தூதுவரும், இந்திய முதலீட்டாளர்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.

இலங்கை கடற்படை அதிகாரிகள், துறைமுக அதிகாரசபை அதிகாரிகள், நில அளவை திணைக்கள அதிகாரிகள், சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு அரசு பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.இதற்கமைய இலங்கையின் வடபகுதியிலுள்ள தலைமன்னாருக்கும், இந்தியாவின் தென்முனையான தனுஷ்கோடிக்குமிடையிலான இராமர் பாலம் பகுதியை அபிவிருத்தி செய்து, அதன்மூலம் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், தலைமன்னார் முனையத்தை அபிவிருத்தி செய்வதால் ஏற்படும் சாதகத் தன்மை பற்றியும் ஆராயப்பட்டது.

இந்தியாவிலிருந்து தமிழகத்துக்கு 03 கோடி பக்தர்கள் வருகின்றனர். அவர்களில் ஒரு பகுதியினரை இராமர் பாலம் ஊடாக அழைத்து வந்தால் அதன்மூலம் சுற்றுலாத்துறை மேம்படுமென யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பில் நடைபெற்ற ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் சாதகமாக முடிவடைந்துள்ளதாக இரு தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.   நன்றி தினகரன் 






தமிழ் அரசியல் கைதிகள் மூவர் 14 வருடங்களின் பின் விடுதலை!

வுனியா மேல்நீதிமன்றம் நேற்று தீர்ப்பு

அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எதுவுமே  நிரூபிக்கப்படாத நிலையில், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் அவர்களை விடுவித்தார்

பதினான்கு வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று தமிழ் அரசியல் கைதிகள் நேற்று வவுனியா மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதுவுமே நிரூபிக்கப்படாத நிலையில், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனால் நேற்று இவர்கள் விடுவிக்கப்பட்டனர். அந்தவகையில், கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த யாழ். வேலணையைச் சேர்ந்த இ. திருவருள், யாழ். கரவெட்டியைச் சேர்ந்த ம. சுலக்‌ஷன், முள்ளியவளையைச் சேர்ந்த க. தர்ஷன் ஆகிய மூவருமே இவ்வாறு நேற்று (03) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேற்படி மூவருக்கும் எதிரான வழக்கு விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தன. இந்நிலையில் அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமையால் மூவரையும் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலுமிருந்தும் விடுதலை செய்வதாக தீர்ப்பினை வழங்கிய வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக சதித்திட்டம் தீட்டினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்தவகையில் அவர்கள் ஏற்கனவே வழங்கியிருந்த குற்ற ஒப்புதல் வாக்குமூலம் செல்லுபடியற்றது என நீதிமன்றம் தீர்மானித்தது. அதனைத் தொடர்ந்து சுயாதீன சாட்சிகள் அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டன. இதன்போது, அந்த சாட்சியங்கள் அவர்களது குற்றத்தை நிரூபிப்பதற்கு போதுமானதாகவில்லை என்ற காரணத்தினால் அனைத்துக் குற்றங்களிலிருந்தும் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். மிக நீண்டகாலம் தடுப்புக் காவலிலிருந்த அரசியல் கைதிகளின் வழக்காக இந்த வழக்கு காணப்படுகிறது. நேற்று விடுதலையான மூவரும் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்த தமது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியை பரிமாறியதுடன் தமது விடுதலைக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டனர்.

(வவுனியா விஷேட நிருபர்)  நன்றி தினகரன் 





No comments: