இலங்கையிலும் இந்தியாவிலும் சிங்கப்பூர் , மலேசியாவிலும் மற்றும் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் புகலிட தேசங்களிலும், சித்திரைப் புத்தாண்டு இம்மாதம் நடுப்பகுதியில் களைகட்டத் தொடங்கிவிடும்.
குறிப்பாக இந்துக்களின்
பண்டிகை நாளாக சித்திரைப்
புதுவருடமானது , தமிழர்களின் புதுவருடப் பிறப்பு என சொல்லப்பட்டாலும், இது ஆரியர்கள் சொல்லித்தந்த பாடம், தமிழர்களின்
புத்தாண்டு ஒவ்வொரு வருடமும் தை மாதம் 01 ஆம் திகதிதான் பிறக்கிறது.
அதுவே தைப்பொங்கல், தைத்திருநாள் என்று தமிழ்த்தேசிய
உணர்வாளர்கள் சொல்லி, வாதிட்டு வருகிறார்கள்.
இலங்கையிலும் புலம்பெயர்ந்தும் வாழும் சிங்கள பௌத்தர்களுக்கு
இப்படி ஒரு விவாதம் தமிழர் தரப்பில் இருப்பது கூட பெரும்பாலும் தெரியாது.
அவர்கள் இலங்கையிலிருந்தாலும்,
வெளிநாடுகளில் வசிக்கநேர்ந்தாலும் ஏப்ரில் மாதம் நடுப்பகுதியில் வரும் சித்திரைப் புத்தாண்டை வெகு சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.
இலங்கை அரசும், தனியார்
துறையினரும் விடுமுறை தருவதனால், தென்னிலங்கையிலிருந்து
வெளியாகும் பத்திரிகை நிறுவனங்களும் தமது ஊழியர்களுக்கு
விடுமுறை வழங்கிவிடும். குறிப்பிட்ட நாளில் அந்த நிறுவனங்களின் வெளியீடுகளும் அச்சிடப்படமாட்டா.
முதல்நாளே , “ நாளைய தினம் பத்திரிகை வெளிவராது “ என்ற குறுஞ்செய்தியையும் வெளியிடுவார்கள்.
அதே சமயம் நாட்டின் உயர்
தலைவர் – ஜனாதிபதி, மற்றும் பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தொழிற்சங்கங்களின் தலைவர்கள், மற்றும் சமயத் தலைவர்கள்,
பிரமுகர்களின் சித்திரைப் புத்தாண்டு நற்செய்திகளையும் வெளியிட்டுவிடும்.
இந்த நடைமுறை காலாகாலமாக
நடந்துவருகிறது.
சிங்கள பெளத்த மக்கள் சித்திரைப்
புதுவருடத்தை கோலாகலமாக கொண்டாடுவார்கள். அவர்கள்
வசிக்கும் பிரதேசங்களில் திறந்த அரங்குகளில்
விளையாட்டுப் போட்டிகள் உட்பட அழகுராணி போட்டிகளும் நடைபெறும்.
இந்துக்கள் மருத்து நீர்
வைத்து நீராடி ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு, உறவினர் வீடுகளுக்கும் சென்று விருந்துகளில்
பங்கேற்று கொண்டாடி மகிழும் நாள் இந்த சித்திரைப் புத்தாண்டு தினம்.
பௌத்த சிங்கள மக்களிடத்திலும்
இத்தகைய சடங்கு சம்பிரதாயங்கள் நீடித்திருக்கிறது.
அவர்கள் மூன்று அல்லது
நான்கு நாட்கள் இந்த சித்திரைப் புதுவருடப்பிறப்பினை கொண்டாடுவார்கள்.
இலங்கையில் தமிழ் – சிங்கள
புதுவருடப்பிறப்பு என விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும், இரண்டு இனத்தவர்களும் இணைந்து
இதனை இதுவரையில் எங்காவது பொது வெளியில் கொண்டாடியிருப்பார்களா..? என்பது தெரியவில்லை.
இலங்கை சுதந்திரம் பெற்ற
காலம் முதல் மாறி மாறி பதவிக்கு வந்த ஆட்சியாளர்கள், வருடம்தோறும் சித்திரைப்புத்தாண்டு தினத்தன்று பத்திரிகைகளில்
வாழ்த்துச்செய்தி விடுத்துவிட்டு, வீட்டில் பாற்சோறும், பணியாரமும், கொக்கிஸ் போன்ற தின்பண்டங்களும் வாழைப்பழமும் சாப்பிட்டு ஏப்பம் விடுவார்கள்.
ஆனால், ஏன் இந்த இரண்டு
இனங்களும் இந்த நாட்டில் புரிந்துணர்வுடன் வாழ முடியாதிருக்கிறது என்பது பற்றி சில
கணமேனும் சிந்திக்க மாட்டார்கள்.
ஒரு தமிழ் ஆண்டு என்பது வானியல்
ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் அளவிடப்பட்ட காலத்தைக் கொண்ட காலப்பகுதியாகும் எனவும்
பூமி, சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது எனவும் இதுவே தமிழ்
வருடத்தினதும் கால அளவாகும் என்றும் சொல்லப்படுகிறது.
இதனை சோதிட ரீதியாகவும் கணித்திருப்பதனால், தமிழ்தேசிய உணர்வாளர்கள், “ இது
ஆரியர்களின் கூற்று… எங்களுக்கு புதுவருடம் தை மாதம் 01 ஆம் திகதிதான் பிறக்கிறது எனச்சொல்லி வருகிறார்கள். அதற்காக இந்த சித்திரைப்
புத்தாண்டை இந்துக்கள் கொண்டாடாமல் விட்டதுமில்லை.
ஆலயங்கள் இப்போதே இந்த நாளுக்கு
தயாராகியிருக்கும். அங்கிருக்கும் பூசகர்களுக்கும் வருவாய் பெருகும் நாள்தான் இது.
ஆலயங்களுக்கும் வருமானம் அதிகரிக்கும் தினம்தான் இது.
நீண்ட நெடுங்காலமாக தமிழ்
– சிங்கள உறவு நலிவடைந்திருப்பதற்கு கடும் போக்காளர்களும் அரசியலமைப்புகளை உருவாக்கியவர்களும்தான்
பிரதான காரணம்.
ஆனால், அவர்களின் பிள்ளைகள்
காதலித்து மணம் முடிக்கும்போது இனம், மதம், மொழி பார்ப்பதில்லை.
அவ்வாறு மணம் முடித்தால்
இன ஐக்கியம் , தேசிய ஒருமைப்பாடு பிறந்துவிடுமா..? இல்லை ! பிள்ளைகள்தான் பிறப்பார்கள்.!
காதல் , அன்பிலிருந்து துளிர்ப்பது. அதற்கு இனவேறுபாடு தெரியாது. அதனால்தானோ காதலுக்கு கண் இல்லை என்பார்கள் காதலை வெறுப்பவர்கள்.
சிங்கள மொழியை அரசகரும மொழியாக
பிரகடனப்படுத்ததத் தொடங்கிய நாள் முதலாக இன முரண்பாடு தோன்றி, இறுதியில் இன விடுதலைப்
போராட்டமாகவும் வெடித்து பல்லாயிரக்கணக்கானோரை எமது தேசம் இழந்திருக்கிறது. இலட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளனர்.
பெரும்பாலான தமிழர்கள் சிங்களம்
பேசக்கூடியவர்களாக இருந்தும், சிங்கள மக்களின் தரப்பில் தமிழ் பேசக்கூடியவர்கள் சொற்பம்தான்.
தாங்களும் தமிழ் கற்றிருக்கலாம்
என்று சமகாலத்தில் சிங்கள மக்கள் உணர்ந்து வருகின்றனர். எத்தனை தமிழ் நூல்கள் சிங்களத்திலும் எத்தனை சிங்கள
நூல்கள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன என்ற தகவல் குறிப்புகளும் இரண்டு
இனத்தவர்களுக்கும் தெரியாதிருக்கிறது.
சிலப்பதிகாரமும், திருக்குறளும், பாரதி கவிதைகளும்
மட்டுமன்றி பல இலங்கை , தமிழக படைப்பாளிகளின் நூல்களும் சிங்களத்தில் வரவாகியிருக்கின்றன.
அதே போன்று தமிழ் நூல்கள் பல சிங்கள மொழியில் வெளிவந்துள்ளன.
இந்த சீரிய பணிகளை மேற்கொண்ட
மொழிபெயர்ப்பாளர்களை தமிழ் – சிங்கள சமூகமோ கொண்டாடுவதாகவும் தெரியவில்லை.
ஆட்சியாளர்களும் இதனை கண்டுகொள்வதில்லை. இந்த சந்தர்ப்பத்தில்தான் இனி ஒரு விதி செய்வோம்
எனச்சொல்லத்தோன்றுகிறது.
இலங்கையின் தமிழ் – சிங்களப்
பிரதேசங்களில் வதியும் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், வருடாந்தம் சித்திரை மாதம் வரும்
தமிழ் – சிங்கள புதுவருடப்பிறப்பு பண்டிகை காலத்தில், இலக்கியப்பரிவர்த்தனை தொடர்பான
கூட்டங்களை – விழாக்களை – கண்காட்சிகளை நடத்தவேண்டும்.
மொழிபெயர்ப்பாளர்களை அழைத்து
உரையாற்றச்செய்யவேண்டும்.
மொழிபெயர்க்கப்பட்டுள்ள புத்தகங்களின்
கண்காட்சிகளை ஓழுங்கு செய்யவேண்டும். அத்துடன்
அரசும் கலாசார அமைச்சும், பிரதேச செயலகங்களும் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு மானியம் வழங்கி
மொழிப்பரிவர்த்தனைக்கும் இனங்களின் புரிந்துணர்வுக்கும் ஊக்கமளிக்கவேண்டும்.
செய்வார்களா…?
---0---
No comments:
Post a Comment