எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் - 59 எழுத்தாளன் ஒரு நாட்டின் முதுகெலும்பா..? முதுசமா..? முருகபூபதி

இயக்குநர் ஶ்ரீதரின்   கதை ,  வசனம் இயக்கத்தில் 1959 இல்


வெளியான கல்யாணப்பரிசு திரைப்படம் பார்த்திருப்பீர்கள்.

இதில் நகைச்சுவை நடிகர் தம்பதியர் கே. ஏ. தங்கவேல் – சரோஜா நடித்த காட்சிகளை மூத்த தலைமுறை ரசிகர்கள் மறந்திருக்கமாட்டார்கள்.  தங்கவேல்  நிறைய பொய் சொல்லி மனைவியிடம்  அடிக்கடி மாட்டிக்கொள்வார்.

அவருக்கு ரசிகர்கள் மத்தியில்   டூப் மாஸ்டர் எனவும் பெயர் தோன்றியது. அக்காலத்தில் இலங்கை வானொலியில் இவர்கள் இருவரும் சம்பந்தப்பட்ட காட்சிகள் குரல் வடிவில் அடிக்கடி ஒலிபரப்பாகும்.

கல்யாணப்பரிசு திரைப்படத்தில் தங்கவேலுவின் லூட்டியை


மறக்கவே முடியாது.

இறுதியில் அவர் தன்னை எழுத்தாளர் பைரவன் என்ற புனைபெயரில் அழைத்துக்கொண்டு மனைவியை ஏமாற்றுவார்.  தனக்கு ஒரு சங்கம் பாராட்டு விழா நடத்துவதாகவும் பொய் சொல்லி, ஒரு பூக்கடையில் மலர்மாலையும் பூச்செண்டும் வாங்கி வந்து மனைவியை ஏமாற்றி, கையும் களவுமாக பிடிபடுவார்.

         அந்த விழாவில் தான்  “ எழுத்தாளன் இந்நாட்டின் முதுகெலும்பு  “ எனச்சொன்னதும்,  “ தட்டினான் பாரு  “ என்பார்… உடனே மனைவி,   “ உங்களையா..?  “ எனக்கேட்பார்.

அதற்கு தங்கவேலு,  “அடி பைத்தியமே… தட்டுனான் தட்டுனான்…. கை தட்டிக்கிட்டே  இருந்தான்….    என்பார்.

 “ தானும் பங்கஜமும் விழாவுக்கு வந்திருந்தோம். அந்தக்கண்றாவியை கண்ணால பார்த்தோம்  “ என்று சொல்லும் மனைவி சரோஜா, தங்கவேலுவின் குட்டை அம்பலப்படுத்துவார்.

கணவனின் பொய் பித்தலாட்டங்களை பொறுத்துப்பொறுத்து பார்த்த மனைவி, இறுதியாக,  “ பத்து நாளைக்கு உப்பில்லாத கஞ்சி தந்தால் எல்லாம் சரியாகிப்போய்விடும்  “ என்பாள்.

அவரும் அதன்பின்னர் திருந்தி,  சொந்தமாகவே  தேயிலை தூள் பக்கட் விற்பனையை ஒரு வாகனத்தில் தொடங்குவார். அங்கும் அவருக்கு சோதனை வரும்.  ஒரு இடத்தில் அவர் அந்த வாகனத்தை நிறுத்திவிட்டு விற்பனையை கவனித்தபோது அவ்விடத்தில் மேய்ந்துகொண்டிருந்த ஆடுகள் திறந்திருந்த வாகனத்துள் ஏறி தேயிலை பக்கட்டுக்களை தின்று தீர்த்துவிடும்.

எமது தமிழ் சமூகத்தில் எழுத்தாளனாக வாழ முற்படும் ஒருவர் சந்திக்கும் சிக்கல்களை ஒரு முன்கதைச்சுருக்கமாக இங்கே சொல்ல வந்தேன்.

நானறிந்தவரையில் இலங்கையில் நான் எழுதத் தொடங்கிய காலகட்டத்தில்,  ( 1970 களில் )  முழுநேர எழுத்தாளராக வாழ்ந்த தமிழர்கள் இருவர்தான்.

ஒருவர் சுபைர் இளங்கீரன், மற்றவர் டொமினிக் ஜீவா. இளங்கீரன் மரகதம் என்ற இலக்கிய சிற்றிதலையும் நடத்தி போட்ட முதலுக்கே நட்டமடைந்து சிரமப்பட்டார். இறுதியில் குமார் ரூபசிங்க நடத்திய ஜனவேகம்  வார இதழில் ஆசிரியராக பணியாற்றினார். அவ்விதழும் சிறிது காலத்தில் நின்றுவிட்டது. இத்தனைக்கும் இளங்கீரனுக்கு ஒரு தொழில் நன்கு தெரியும். அவர் சிறந்த தையல்காரர்.  மலேசியாவிலும் முன்னர் வசித்திருப்பவர். அந்தத் தொழிலை உதறிவிட்டு,  முழு நேர எழுத்தாளரானவர்.


டொமினிக் ஜீவாவுக்கும் கைவசம் ஒரு தொழில் தெரிந்திருந்தது.  யாழ். கஸ்தூரியார் வீதியில் தனது தந்தையாரின் ஜோசப் சிகையலங்கார நிலையத்தில் வேலை செய்துகொண்டே  எழுத்துலகத்திற்கு வந்து, மல்லிகை இதழை 1966 ஆம் ஆண்டு ஆரம்பித்து, அதன்பின்னர் முழுநேர எழுத்தாளராகவும், இதழ் ஆசிரியராகவும் மாறியவர்.

இந்த இரண்டு மூத்த எழுத்தாளர்களும்  பின்னாளில் எழுத்தையே தொழிலாக கொண்டிருந்தமையால் பல்வேறு சிரமங்களுக்கும்  பொருளாதர நெருக்கடிகளுக்கும் ஆளானவர்கள்.   இவர்களுக்கும் மனைவி, பிள்ளைகள் என குடும்பம் இருந்தது.

தமிழகத்தில் தமக்குத் தெரிந்த தொழிலை விட்டு விட்டு முழுநேர


எழுத்தாளர்களாக மாறிய  புதுமைப்பித்தன்,  அகிலன், ஜெயகாந்தன்  ஆகியோரின் சரிதைகளை படித்திருக்கின்றோம்.

மகாகவி பாரதி, தனக்குத்  தெரிந்த தொழில்  கவிதை எழுதுவது மாத்திரம்தான் என பகிரங்கமாகச் சொன்னவர்.  அவர் பற்றிய கதைகளை  ஏற்கனவே அறிந்திருக்கின்றோம்.

1970 களில் எனது நண்பர் கவிஞர் ஈழவாணன்.  கொழும்பில் குணசேனா நிறுவனம் வெளியிட்ட தமிழ் பத்திரிகைகளில்                  ( தினபதி – சிந்தாமணி – ராதா -  சுந்தரி – தந்தி )  ஆகியனவற்றில் ஒப்புநோக்காளராக பணியாற்றியவர். 

1972 இற்குப்பின்னர், அன்றைய ஶ்ரீமா பண்டாரநாயக்காவின் கூட்டரசாங்கம், அந்தப்  பத்திரிகை


நிறுவனத்தை ஒரு செய்திப்பிரச்சினையின் காரணத்தினால் சீல் வைத்து மூடியதையடுத்து அங்கு பணியாற்றிய அனைவரும் வேலை இழந்தனர்.

கவிஞர் ஈழவாணன்  தொடர்ந்தும் கவிதை எழுதிக்கொண்டிருந்தார். அவருக்கு வேறு தொழில் தெரியாது. மனைவி ஆங்கில ஆசிரியையாக இருந்தமையால், குடும்ப வண்டி ஓடியது.

ஈழவாணனுக்கு தனது கவிதைகளை தொகுத்து நூலாக வெளியிடவேண்டும் என்ற ஆசை தோன்றியபோது,  அவரது மனைவி தனது தாலிக்கொடியை எடுத்துக்கொடுத்து அவரது அக்கினிப்பூக்கள் நூலை அச்சிட்டு வெளியிடுவதற்கு உதவினார்.  ஈழவாணன் அதனை ஈடுவைத்தாரோ , விற்றாரோ  தெரியவில்லை.  

அதன் வெளியீட்டு விழா  கொள்ளுப்பிட்டி தேயிலை பிரசார சபை  மண்டபத்தில் அமைச்சர் செல்லையா குமாரசூரியர்  தலைமையில் நடந்தது. பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி, எச். எம். பி. மொகிதீன் ஆகியோரும் உரையாற்றினர்.


அந்த நிகழ்ச்சிக்கு நானும் ஒரு பார்வையாளனாகச் சென்றிருந்தேன். அக்கினிப்பூக்கள் புத்தகமும் வாங்கினேன்.  அன்று முதல் கவிஞர் ஈழவாணனும் எனது நண்பரானார்.  அக்காலப்பகுதியில் புதுக்கவிதை வீச்சோடு எழுச்சிகொண்டது.  தமிழ்நாட்டில்  வானம்பாடிகள் புதுக்கவிதை  இயக்கமும் உருவாகி புகழ்பெற்றது.

அந்த இயக்கத்தில்  இணைந்திருந்த தமிழக படைப்பாளிகள் இலக்கிய விமர்சகர் கோவை ஞானி, கவிஞர்கள் வைரமுத்து, அக்கினி புத்திரன், புவியரசு,


இன்குலாப் முதலானோரின் கவிதைகள்  ஈழத்து கவிஞர்களையும் ஆகர்ஷித்தது.

அதன்பிறகு  ஈழவாணனுக்கும்  வானம்பாடி  இதழ்போன்று இலங்கையிலும் ஒரு புதுக்கவிதை சிற்றிதழை ஆரம்பிக்கவேண்டும் என்ற ஆசை தோன்றியது.

அதன் பெயர் அக்னி. அதனை அச்சிடுவதற்கு அச்சகம் தேடிக்கொண்டிருந்த கவிஞர் ஈழவாணனுக்கு எங்கள் நீர்கொழும்பூர் சாந்தி அச்சகத்தை அறிமுகப்படுத்தினேன்.

அதனை எமது மாமா முறையானவரான அ. மயில்வாகனன் என்பவர் நடத்திக்கொண்டிருந்துவிட்டு,  உடல் நலக்குறைவினால் எனது


நண்பர்கள் யோகநாதன் -நவரட்ண ராஜா ஆகியோிடத்தில் குத்தகை அடிப்படையில் ஒப்படைத்திருந்த காலப்பகுதியில்தான் ஈழவாணனின் அக்னி புதுக்கவிதை இதழும் அங்கே அச்சாகியது.

ஏற்கனவே மனைவியின் தாலிக்கொடியை பயன்படுத்தி தனது முதலாவது கவிதைத் தொகுதியை ( அக்கினிப்பூக்கள் ) வெளியிட்ட கவிஞர், அதனை மீட்டுக்கொடுக்காமலே அக்னி என்ற பெயரில் புதுக்கவிதை இதழையும் ஆரம்பித்தார்.


அக்கினி சாட்சியாக மனைவியின் கழுத்தில் தாலியை கட்டியவர்,  அக்னி இதழையும் சிறிது காலம் நடத்தி கையை சுட்டுக்கொண்டார்.

அக்னி  முதல் இதழின் வெளியீட்டு அரங்கு திருமதி பாலம் லக்‌ஷ்மணன்  தலைமையில் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடந்தபோது,  நண்பர்கள் – கவிஞர்கள்  எம். ஏ. நுஃமான், சண்முகம் சிவலிங்கம் ஆகியோருடன் நானும் உரையாற்றினேன்.

" கண்ணகி கால் சிலம்பை கழற்றினாள். சிலப்பதிகாரம் படித்தோம்
என்மனைவி கை வளையல்களை கழற்றினாள்
நீங்கள் கண்ணீர்ப்பூக்கள் படிக்கிறீர்கள்."

இந்தக் கவிதையைப் படித்திருப்பீர்கள். அல்லது அறிந்திருப்பீர்கள்.

கவிஞர் மேத்தா, தனது கண்ணீர்ப்பூக்கள் கவிதைத் தொகுப்பு முன்னுரையில் சேர்த்துக் கொண்ட கவிதை இது. சிறிது காலத்தில் மேத்தா, ஆனந்தவிகடன் பொன்விழா ஆண்டை முன்னிட்டு சோழநிலா நாவல் எழுதி, முப்பதாயிரம் ரூபா பரிசினைப் பெற்றபொழுது , ஈழத்தில் எழுத்தாளர் நந்தினி சேவியர், நண்பர் இளங்கோவன் யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட வாகை இலக்கிய ஏட்டில் இவ்வாறு பதில் கவிதை எழுதினார்,

“ அவர் மனைவி வளையல்களைத்
திருப்பிக்கேட்டாள்,
நீங்கள் 'சோழநிலா' வைப்
படிக்கிறீர்கள்.."


இப்படி ஒரு சுவாரஸ்யம் எங்கள் இலக்கிய உலகில் நிகழ்ந்தது.

மனைவிமாரிடம் ஏச்சும் திட்டும் மாத்திரம் நாம் வாங்க வில்லை. எமக்கு அவசியம் நேர்ந்த சமயங்களில் அவர்களிடமிருந்து நகைகளும் வாங்கியுள்ளோம்.

இது தமிழ் எழுத்தாளர் பரம்பரையின் இலட்சணம். அவ்வாறு தனது அருமை மனைவியின் தாலிக்கொடியை ஈடுவைத்து கவிதைப் புத்தகம் வெளியிட்ட கவிஞர் ஈழவாணனிடம்                        " உமக்கேனய்யா … இந்த வேலை? " என்று நண்பர்கள் சினந்தாலும்,  முகம் சுழிக்காத இலக்கிய உணர்வுமிக்க அருமையான பெண்மணி திருமதி. தர்மபுவனா ஈழவாணன்.

 எனினும் கணவர் கேட்டாரே என்பதற்காக தாலிக்கொடியை அவர் கழற்றியிருக்கக்கூடாது என்று பேசினார்கள் நண்பர்கள். ஏனென்றால் கவிஞர் மேத்தாவுக்கும் மற்றும் பல தமிழக எழுத்தாளர்களுக்கும் கிடைத்தது போன்று பல்லாயிரக்கணக்கான ரூபாய் பரிசில்கள் ஈழத்து எழுத்தாளனுக்கு  அக்காலத்தில்  கிடைக்கவில்லை.ஈழவாணனின் அக்னி இதழ் அச்சிடப்பட்ட அதே சாந்தி அச்சத்தில்தான் எனது  சுமையின் பங்காளிகள் கதைத் தொகுதியும்  எழுத்தாளர் சாந்தனின் ஒரே ஒரு ஊரிலே கதைத் தொகுதியும் கவிஞர் மேமன்கவியின் யுகராகங்கள் கவிதைத் தொகுதியும் அச்சிடப்பட்டன.  அத்துடன் புத்தளம் தில்லையடிச் செல்வனின் விடிவெள்ளி,  திக்குவல்லை செந்தீரன் சத்தாரின்   விடிவு என்ற  கவிதைத் தொகுதி
திக்குவல்லை எழுத்தாளர் சங்கத்தின் “ பூ  “  என்ற ஒரு எழுத்தில் அமைந்த புதுக்கவிதை ஏடு என்பனவும் அங்கிருந்து அச்சாகி வெளியே வந்தன.

எனது முதல் தொகுதியை அச்சிடுவதற்கு தேவைப்பட்ட பணம் என்னிடமிருக்கவில்லை. நானே அச்சுக்கோர்க்கப்பழகி, சில பக்கங்களை அச்சுக்கோர்த்துக் கொடுத்தேன்.

நண்பர் ஈழவாணன்தான் அந்த நூலுக்கு சுமையின் பங்காளிகள் என்ற பெயரைச்  சூட்டினார். குழந்தைகளையும் கொண்டிருக்கும்  குடும்பத்தின் பாரத்தை சுமப்பவர்கள் கணவன் – மனைவிதான் என்பதை சித்திரிக்கும் அச்சிறுகதையின்   ( மல்லிகையில் வெளியானது ) பெயரை நூலின் பெயராக ஈழவாணன் தெரிவுசெய்ததன் சூட்சுமம் எனக்குப்  புரிந்தது.

1975 இல் அச்சாகி வெளிவந்து,  1976 ஆம் ஆண்டு தேசிய சாகித்திய விருது பரிசுப்பணம் இலங்கை நாணயத்தில் அப்போது 500 ரூபா கிடைத்தது. அந்தக் காசோலையை மாற்றித்தான் அச்சகத்தின் கூலியை கொடுத்தேன்.

சமகாலத்தில் இலங்கையில் பல இளம் தலைமுறை எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை வெளியிடுவதற்கு வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வதியும் படைப்பாளிகளிடம் நிதியுதவி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

சிலர் தாங்கள் வெளியிடும் சிற்றிதழுக்கும் உதவி கோருகின்றனர்.

எனது முதல் புத்தகத்தை வெளியிடும்போது நிரந்தர தொழில் ஏதும் இன்றி, சிரமப்பட்டிருக்கும்  நான்,  1987 இல் அவுஸ்திரேலியாவுக்கு வந்தபின்னர், இதுவரையில் 28  புத்தகங்களை எந்தச்சிரமமுமின்றி வெளியிட்டுவிட்டேன்.

அதற்காக நான் வதியும், எனக்கு புகலிடம் தந்த அவுஸ்திரேலியா கண்டத்திற்குத்தான் நான் காலம் பூராவும் நன்றி சொல்வேன்.

கடந்த ஆண்டில் மாத்திரம் நான்கு நூல்களை கிண்டில் அமேசனில் பதிவேற்றியிருக்கின்றேன்.

அவற்றையும் அச்சில் வெளியிடுமாறு அன்பர்கள் சொல்லிவருகின்றனர்.

அவ்வாறு சொல்பவர்கள்  நூல்கள் வெளிவந்தால், படிப்பார்களா..?

தமிழகத்தில் நூல்களை அச்சிடும் எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்குமிடையே ஒரு    டீல்   “ இருப்பதாக அறியப்படுகிறது.  அந்த டீல் பற்றி  எவரும் பகிரங்கமாகச் சொல்வதில்லை.

அவ்வாறு வெளியாகும் நூல்களுக்கு புரமோஷன் தேடுவதற்கும் சிரமப்படுவது தெரிகிறது.  நடிகர் கமல் ஏதாவது ஒரு நூலைப்பற்றி சொல்லிவிட்டால்,  அதுவரையில் தமிழ் இலக்கிய படைப்பு நூல்களைப்படித்திராத  இளம் தலைமுறை சினிமா ரசிகர்களும் அது பற்றி விசாரிக்கிறார்கள்.

எனது எழுத்தும் வாழ்க்கையும் தொடரில் எதற்கு மற்றவர்களின் கதைகள் என்று என்னை நானே கேட்டுக்கொள்கின்றேன்.

அவுஸ்திரேலியாவுக்கு வந்தபின்னர் நான் வெளியிட்ட முதல் இரண்டு நூல்கள் சமாந்தரங்கள் ( கதைத் தொகுதி ) சமதர்மப் பூங்காவில் ( பயண இலக்கியம் ) ஆகியனவே.  மெல்பனில் கதைத் தொகுதி வெளியீடு கண்டபோது, அதில் கிடைத்த நிதியை எமது இலங்கை மாணவர் கல்வி நிதியத்திற்கே வழங்கிவிட்டேன்.

சமதர்மப்பூங்காவில் கொழும்பில் எனது பிரசன்னம் இன்றியே வெளியீடு கண்டது. அதனால் கிடைத்த நிதியும் அச்சுக்கூலியானது.

அதன்பிறகு வெளிவந்த நூல்கள் அனைத்தும் பொது நோக்கத்திற்காக பயன்பட்டது.

நான் ஆரம்பக்கல்வி பயின்ற நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி அதிபர் கணேசலிங்கம்  கல்லூரியின் அபிவிருத்திக்கு   நிதியுதவி தேவை எனக்கேட்டதும்,  வெளிச்சம், சந்திப்பு ஆகிய எனது இரண்டு நூல்களின் பிரதிகளை  தமிழகத்தில் குமரன் பதிப்பகத்திலிருந்து இலங்கைக்கு தருவித்துக்கொடுத்தேன். 

கல்லூரியின் பழைய மாணவர் மன்றம், தனது வளர்ச்சி நிதிக்கு கேட்டதும் எங்கள் தேசம், இலக்கிய மடல் ஆகிய நூல்களை வழங்கினேன்.

அவர்கள் விழா ஏற்பாடு செய்து நூல்களை விமர்சித்தும் விற்றும் நிதிசேகரித்தார்கள்.  எனது அம்மாவே முன்னின்று நிதியுதவியை வழங்கினார்.

மல்லிகை இதழின் வளர்ச்சி நிதிக்காகவும்  கொழும்பில் மேமன்கவி தலைமையில் 1999 ஆம் ஆண்டு இந்நூல்கள் வெளியிடப்பட்டன.

கொழும்பு தமிழ்ச்சங்கமும் உதவி கேட்பதாக அங்கே அங்கம் வகிக்கும்  நண்பர் ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி கேட்டதும் 2002 இல்  தேசிய சாகித்திய விருது பெற்ற எனது பறவைகள் நாவலில் சுமார் நூறு பிரதிகளை வழங்கினேன்.  அப்போது பதவியிலிருந்த  மலையக  மக்கள் முன்னணி கட்சித் தலைவர் அமைச்சர் சந்திரசேகரன் முன்னிலையில் பேராசிரியர் சோ.  சந்திரசேகரம் அவர்களின் தலைமையில் பறவைகள் வெளியிடப்பட்டு, கிடைத்த நிதியனைத்தும் தமிழ்ச்சங்கத்திற்கு வழங்கப்பட்டது.

இலங்கையில் இவ்வாறு நடந்த நிகழ்ச்சிகளில் நான் இருக்கவில்லை. 

நான் எழுதத் தொடங்கிய 1970 காலத்தில்,  “ எழுத்து சோறு போடுமா..?   “ எனக்கேட்ட எனது அம்மாவின் முன்னிலையில்தான் இந்நிகழ்ச்சிகள் நடந்தன. 

எனது எழுத்தின் மூலம் கிடைத்த ஊதியமும் நிதியும் யாருக்கோ உதவியிருப்பதையிட்டு மனநிறைவடைகின்றேன்.

 

( தொடரும் )

---0---

 

 

 

 

 

 


No comments: