யுதிஸ்றா, தனிகா இந்திரகுமாரின் நடன அரங்கேற்றம் - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

 .

சுகந்தி தயாசீலன் சிஷ்யையரான யுதிஸ்றா, தனிகா இந்திரகுமாரின் அரங்கேற்றம் 2 ஏப்ரல் 2023 அன்று NIDA parade அரங்கில் வெகு விமரிசையாக நடந்தேறியது. கலாஷேத்திரா புகழ் லீலா சாம்சன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

சிட்னி மாநகரில் சிறந்த கலைஞர்கள் எனப் போற்றப்படும் அகிலன் சிவானந்தன் குரலிசை வழங்க ஜனகன் சுதந்திரராஜா மிருதங்கம் வாசிக்க, கிராந்தி கிரண் முடிகொண்டா வயலின் இசைக்க, தியாகராஜன் றமணி வேணுகானம் பொழிய இவர்களுடன் சௌமியா ஸ்ரீதரன் வீணை மீட்ட, சுகந்தி தயாசீலன் நட்டுவாங்கத்துடன் நிகழ்ச்சி இனிதே ஆரம்பமானது.

கமல மனோகரி இராகத்திலான புஷ்பாஞ்சலியை ஆடி நர்த்தகிகள் இறைக்கும் குருவிற்கும் இசைக்கலைஞர் மற்றும் சபையோருக்கும் தமது அஞ்சலியுடன், அலாரிப்பை ஆடினார்கள். ஆபோகி இராகத்திலான ஜதீஸ்வரம் மிகவும் கவர்ச்சிகரமாகவும் விறுவிறுப்பாகவும் அமைந்திருந்தது. இருவரும் இணைந்து இரசித்து ஆட பார்வையாளரும் ஆடலுடன் இணைந்து மகிழ்ந்தனர். காளி கௌத்துவத்திலே காளியின் பல்வேறு கோலங்கள் சித்தரிக்கப்பட்டன. காளி மகிஷனைக் கொன்றமை அழகாகக் காட்சிப்படுத்தியமையை இரசித்தேன்.

வர்ணம் பரதக் கச்சேரியில் நடுநாயகமாக விளங்குவது. பரதத்தில் உள்ள அத்தனை அம்சங்களையும் தன்னுள் கொண்டது. அடவு கோர்வையால் ஆன ஜதிகள் பாடலுக்கான அபிநயத்துடன் மாறி மாறித் தோன்ற, அடுத்து நர்த்தகி கால்கள் தாளத்துடன் ஆட, கைகளிலே அபிநயம் காட்டி, உள்ளத்து உணர்வுகளை முகபாவமாக வெளிப்படுத்தி ஆடுவாள். பரதக் கச்சேரியில் வர்ணம் நர்த்தகியின் முழுத் திறமையையும் காட்டும் நீண்ட உருப்படி. அன்று செஞ்சுருட்டி இராகத்திலான ‘புன்னகையில் மயங்கி விழுந்தேன்’ என அழகன் முருகனின் இள நகையில், அவன் அழகிய கோலத்தில் மயில் மேல் பவனி வரும் காட்சியில் தன்னை இழந்த இள நங்கையாக அவர்கள் ஆடினார்கள்.





இடைவேளையை அடுத்து அர்த்த நாரீஸ்வரரின் உடலிலே பாதி சிவனாக மறுபாதி சக்தியான கோலத்தை யுதிஸ்றா, தனிகா ஒன்றாக ஆடி உருவகப்படுத்தினார்கள். சிவ சக்தியின் இணைபிரியாத் தோற்றம் போன்றதே தோற்றமும் அழிவும் பிரிக்க முடியாத ஒன்றே. தோன்றுபவை யாவும் அழியும். யுதிஸ்றா சக்தியாக படைப்பின் தாயாகத் தோன்றி படைப்பென்ற உன்னதச் செயலைக் காட்டினார். உலக ஜீவராசிகள் அத்தனையும் அவள் படைப்பே. யானை, மான், பறவைகள் என மயில், குயில், மரம், செடி, கொடி என பலவற்றையும் அழகாக அபிநயித்தார். அவளை நாம் உலக மாதாவாக, தாயாக வணங்குகிறோம். தனிகா சுடலையிலே சிவன் அத்தனையையும் அழித்து ஆடும் சம்கார தாண்டவத்தை ஆக்ரோஷமாக ஆடினார். பின் இருவரும் இணைந்து ஆடி சிவசக்தி பிணைப்பான உன்னதத்தைக் காட்டி நின்றனர். இந்த ஆடலை ஒரு இரசிகர் என்னிடம் மெச்சிப் புகழ்ந்தார்.



என்றுமே என் உள்ளத்தைக் கவர்ந்த பாடல் ஊத்துக்காடரின் ‘அலைபாயுதே கண்ணா’. கேட்போரின், பார்ப்போரின் உள்ளத்தை அலைபாய வைப்பது. இந்தப் பாடலை நானும் என் மகன் அமிழ்தனும் சேர்ந்து கோபியும் கண்ணனுமாக பல தடவைகள் இரசித்து ஆடியுள்ளோம். இங்கும் இருவருமாகவே ஆடுவார்கள் என எதிர்பார்த்தேன். யுதிஸ்றா மட்டுமே அழகாக ஆடி எம் மனதை அலைபாய வைத்தார்.

கேதார கௌளை இராகத்திலே சிவனாரின் ஆனந்தத் தாண்டவத்தை உருவகப்படுத்தும் ‘ஆனந்த நடமிடும் பாதன்’ என்ற கீர்த்தனம். ஆனந்தத் தாண்டவனின் ஐந்தொழிலையும் நர்த்தகிகள் அழகாக ஆடிக் காட்டினர்.

தில்லானா கச்சேரியை நிறைவிற்குக் கொண்டுவரும் கலகலப்பான உருப்படி. நாம் யாவரும் கலாஷேத்திரா வாரிசுகளே என்பதை முத்திரை இடுவது போல் கலாஷேத்திராவில் தம் கலை வாழ்வை ஆரம்பித்த அடையார் லக்ஷ்மணன் ஆடலை அமைத்திருந்தார். ஆடல் அமைப்பு அவர்கள் பாணியைக் காட்டி நின்றது. இறுதி மங்களமோ குருவான சுகந்தி தயாசீலனுக்காகவே ஆக்கப்பட்டது. கச்சேரி இனிதே நிறைவேறியது. நிகழ்வு ஆரம்பம் முதல் இறுதி வரை அழகாக ஒழுங்கமைக்கப்பட்டு இருந்தது. அன்றைய அறிவிப்பாளர்களான Dr சங்கீதா மனோகரன், றஜீவன் கிருபை ராஜா உணர்ந்து இரசித்து எடுத்துக் கூறினார்கள். நர்த்தகிகளின் ஒப்பனை உடை அலங்காரம் இரசிக்கும்படியாக அமைந்திருந்தது.

சுபம்.













1 comment:

Anonymous said...

Congrats girls