முதல் சந்திப்பு நூல் விற்பனையில் கிடைத்த நிதியை ஏழை மாணவர்க்கு வழங்கிய பெருந்தகை ஞானலட்சுமி ஞானசேகரன் ! முருகபூபதி

மகாகவி பாரதி தொடர்பாக ஒரு வினா விடையை படித்திருக்கின்றோம். அதில் ஒன்று உங்கள் தாய்நாடு எத்தகையது..? எ


ன்ற வினா.

அதற்கு பாரதி இவ்வாறு சொல்வார்:

“ ஞானத்திலே பர மோனத்திலே உயர்
மானத்திலே அன்ன தானத்திலே
கானத்திலே அமுதாக நிறைந்த
கவிதையிலே உயர் நாடு.  “

இலங்கையில் 2001 இற்குப்பின்னர் வெளிவரத்தொடங்கிய ஞானம் இதழின் ஆசிரியரின் பெயர் தி. ஞானசேகரன். அவரது துணைவியார் பெயர் ஞானலட்சுமி.  இவர்கள் இருவரின் பெயர்களில் முதலில் வரும் ஞானம் என்ற சொல்லே அந்த இதழின் தோற்றமோ என்றும் நான் யோசிப்பதுண்டு.

பெரும்பாலான எழுத்தாளர்கள், கலைஞர்களை கூட்டங்களில், மாநாடுகளில், கலை, இலக்கிய சந்திப்புகளில்தான் முதல் முதலில் சந்தித்திருப்பேன்.

ஆனால்,  கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக தங்கு


தடையின்றி வெளிவந்துகொண்டிருக்கும் ஞானம் இதழின் இணையாசிரியர் திருமதி ஞானலட்சுமி ஞானசேகர ஐயர் அவர்களை நான் முதல் முதலில் சந்தித்தது, ஒரு அதிகாலைப்பொழுதில்  அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநிலத்தின்  மெல்பன் நகரில் சிட்னிக்குச்செல்லும் வீதியின் பஸ் தரிப்பு நிலையத்தில்தான் எனச்சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். ஆனால், அதுதான் உண்மை.

இவரது கணவர் மருத்துவர் தி. ஞானசேகர ஐயரையும் நான் அதற்கு முன்னர் 1999 ஆம் ஆண்டு முற்பகுதியில்தான் முதல் முதலில் நான் வதியும் மெல்பனுக்கு அவர் முதல் தடவையாக வந்தபோது சந்தித்தேன்.

  அவர் அந்த ஆண்டு வரும்போது மல்லிகை ஜீவாவிடம் எனது முகவரியை பெற்றுக்கொண்டு புறப்பட்டிருந்தார். ஞானம் தம்பதியரின் மூத்த புதல்வன் இராஜேஸ்வரன்  சிட்னியில் இருந்தார். அவரிடம் வந்திருந்த மருத்துவர் ஞானசேகரன்,  இலங்கையில் அப்போதே  பிரபல எழுத்தாளராக அறிமுகமாகியிருந்தவர்.  அவரது குருதி மலை நாவல் உட்பட வேறு கதைகளையும்  படித்திருந்தாலும்,  நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பு கிட்டவில்லை.

1999 முற்பகுதியில் தனியாக வந்திருந்த மருத்துவர் ஞானசேகரன், அதன்பின்பு வரும்போது தனது பயண அனுபவங்களை எழுதிய  அவுஸ்திரேலிய பயணக்கதை என்ற நூலுடன் வந்தார். அப்போது அவருடன் வருகை தந்திருந்த திருமதி ஞானலட்சுமி ஞானசேகரன் அவர்கள் தான் எழுதியிருந்த இந்து மதம் என்ன சொல்கிறது..? என்ற நூலுடன் வந்திருந்தார்.

இரவிரவாக பயணித்து மெல்பனுக்கு பஸ்ஸில்  வந்திறங்கிய  இந்தத் தம்பதியரை குறிப்பிட்ட சிட்னி வீதியில் அதிகாலையில் சந்தித்து வரவேற்று அழைத்து வந்தேன்.

மெல்பனில் அவர்களின் இரண்டு நூல்களும் கலைஞர் மாவை நித்தியானந்தன் தலைமையில் நடந்த நிகழ்வில் வெளியிடப்பட்டது.  திருமதி ஞானலட்சுமியின் நூல் பற்றி எங்கள் மத்தியில் வதியும் தமிழ் அறிஞர் திருமதி பாலம் லக்‌ஷ்மணன் அம்மையாரும்,  ஞானசேகரனின் அவுஸ்திரேலிய பயணக்கதை நூலைப்பற்றி இலக்கிய ஆர்வலர் திரு. சிவசம்புவும் உரையாற்றினர்.

இறுதியில் தம்பதியர் தங்கள் ஏற்புரையின்போது,  எம்மை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினர். நூல்களின்  விற்பனையில் கிடைத்த நிதியனைத்தையும் நாம் நடத்தி வரும்  தன்னார்வத்  தொண்டு  நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்திற்கே வழங்கவிருப்பதாக சொன்னார்கள். அவர்கள் வழங்கிய உதவி கல்வி நிதியத்தின் நிரந்தர வைப்பு நிதியில் சேர்க்கப்பட்டது.

இவ்வாறு கல்விக்காக உதவிசெய்த திருமதி ஞானலட்சுமி அவர்கள் சிறந்த கல்விப்பின்புலத்திலிருந்து வந்தவர்.      கீரிமலை ராமஐயர் -  காமாட்சி அம்மாள் தம்பதியின் மகளாவார். தந்தை திருவனந்தபுரத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். மகா மகோபாத்தியாய பட்டம்பெற்றவர். பி.ஏ. (லண்டன்) பட்டத்துடன்  இராமநாதன் கல்லூரி சமஸ்கிருத ஆசிரியராகப் பணிபுரிந்தவர்.

தாயார் காமாட்சி அம்மாள் கீரிமலை நகுலேஸ்வர ஆலய பிரதமகுரு குமாரசாமிக் குருக்களின் மகளாவார்.


ஞானலட்சுமி தனது ஆரம்பக் கல்வியை தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் பெற்றவர். திருமணத்தின் பின்னர் 1976ஆம் ஆண்டில் புசல்லாவ சௌலி பெருந்தோட்டப் பாடசாலை ஆசிரியரானார். தோட்டப் பாடசாலைகள் அரசாங்கத்தால் சுவீகரிக்கப் பட்டதன் பேறாக ஆசிரியர் பயிற்சிக்குத் தெரிவு செய்யப்பட்டு,  கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில்  (இந்து சமயம்) பயின்று   புசல்லாவை சரஸ்வதி மகாவித்தியாலயத்திலும் கண்டி இந்து உயர்தர பாடசாலையிலும் பணியாற்றி, பேராதனைப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்பை மேற்கொண்டு B. A  பட்டம் பெற்றார்.  பட்டப்பின் படிப்பையும்  மேற்கொண்டு Dip. in Education பட்டத்துடன்  பதவி உயர்வு பெற்று மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தில் இந்து சமயபாட ஆசிரிய ஆலோசகராகவும் இந்து சமயபாட இணைப்பாளராகவும் கடமையாற்றினார்.

அக்காலகட்டத்தில் தேசிய தொலைக்கல்வி நிறுவனத்தின் சமயபாட


ஆசிரியர்களின் வழிகாட்டி நூல்களின் ஆசிரியராகவும் விரிவுரையாளராகவும் கடமைபுரிந்ததோடு உயர்கல்வி அமைச்சின் சமயபாடத்திட்டக் குழுவிலும் இணைந்தார்.  இந்து கலாசார அமைச்சின் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்டங்களைத் தயாரிக்கும் குழுவின் உறுப்பினராகப் பணியாற்றியவர். பல சஞ்சிகைகளில் பத்திரிகைகளில் சமயக்கட்டுரைகள் எழுதியவர். 2000 ஆம் ஆண்டில் பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும்,  இவருக்கு வீட்டில் ஓய்வில்லை.

குடும்பத்தலைவியாக இருந்தவாறே ஞானம் இதழின் இணை ஆசிரியராகவும் இயங்கிவருகின்றார்.  600 பக்கங்கள் கொண்ட கீரிமலை நகுலேஸ்வர ஆலய மகா கும்பாபிஷேக  மலரின் இணையாசிரியர். சிட்னியில்  நடந்த உலக சைவ மாநாட்டில்  “ சைவசித்தாந்தக் கோட்பாட்டில் ஏனைய தத்துவங்கள்" என்ற தலைப்பிலும்  2001 இல் மெல்பன் எழுத்தாளர் விழாவில்   “ சங்க காலம் முதல் சங்கமருவிய  காலம் வரையில் பெண்களின் நிலைப்பாடு  “ என்ற தலைப்பிலும்,  2013 இல் இலண்டனில் நடந்த  உலகத்தமிழியல் மாநாட்டில்  “ மங்கலப் பொருட்களின் மகத்துவம் "


என்ற தலைப்பிலும்  ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்து உரையாற்றியவர்.

2011 ஆம் ஆண்டு கொழும்பில் நான்கு நாட்கள் நடந்த முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டிலும் எமக்கு பக்கபலமாக விளங்கியிருக்கும் திருமதி ஞானலட்சுமி ஞானசேகரன் இந்து மதம் என்ன சொல்கிறது? என்ற தலைப்பில் இதுவரையில் பதினொரு பாகங்களில் நூல்களை வெளியிட்டிருப்பவர்.

இலங்கை அரசின் கலாபூஷணம் விருதினையும்  பெற்றுள்ள இவருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

---0---

 


No comments: