உலகச் செய்திகள்

ட்ரம்ப் மீது நீதிமன்றத்தில் 34 குற்றச்சாட்டுகள் பதிவு 

இந்திய எல்லையை காக்க அமெரிக்கா உதவ திட்டம்

லெபனான், காசா மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் கடும் தாக்குதல்

சிரியாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

  ‘ஒபெக்’ நாடுகளின் திடீர் எண்ணெய் உற்பத்தி குறைப்பால் விலை உயர்வு

ஹொங்கொங்: 15,000 பேர் நாடுகடத்தப்படும் அச்சம்


ட்ரம்ப் மீது நீதிமன்றத்தில் 34 குற்றச்சாட்டுகள் பதிவு 

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது 34 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றை 76 வயது ட்ரம்ப் மறுத்துள்ளார்.

உறவு இருந்ததாகக் கூறப்படும் தகவலை மறைப்பதற்காக ஆபாசப் பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுக்குப் பணம் கொடுத்ததன் தொடர்பில் ட்ரம்ப் மீது குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டன.

அவர் வர்த்தகப் பதிவுகளில் மோசடி செய்ததாகவும் அவற்றில் சிலவற்றை வரி தொடர்பில் தவறாகச் சித்தரித்ததாகவும் குற்றச்சாட்டு கூறுகிறது.

நியூயோர்க் நகரில் அவை கடுமையான குற்றச்சாட்டுகளாக வகைப்படுத்தப்படுகின்றன. வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பமாகும் என்று நீதிபதி கூறினார். 2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான போட்டிகளும் அப்போதுதான் ஆரம்பமாகவுள்ளது. நியூயோர்க் நகர நீதிமன்றத்திற்கு வந்திருந்த ட்ரம்ப் குற்றச்சாட்டுகளை அமைதியாகக் கேட்டார். அவர் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்த பின்பு எந்த நிபந்தனைகளும் இல்லாமல் விடுவிக்கப்பட்டார்.

டிரம்பின் வழக்கறிஞர்கள் அந்தக் குற்றச்சாட்டுகள் ஏமாற்றம் தருவதாகக் கூறினர். கடுமையான போராட்டத்துக்குத் தயார் என்றும் அவர்கள் அறிவித்தனர்.    நன்றி தினகரன் 






இந்திய எல்லையை காக்க அமெரிக்கா உதவ திட்டம்

இந்தியா தனது எல்லைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்கு தேவையான அதிநவீன தொழில்நுட்பத்தை வழங்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதியின் பிரதி உதவியாளரும் இந்து – பசுபிக் பிராந்திய இணைப்பாளருமான குர்ட் கெம்பெல் தெரிவித்துள்ளார்.

வொஷிங்டனைத் தளமாகக் கொண்டுள்ள சிந்தனை குழுவின் கூட்டமொன்றில் உரையாற்றும் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இந்தியாவின் கடல் சார் மற்றும் கடற்படைத் திறன்களை வலுப்படுத்துவதற்கு உதவும் வகையில் இராணுவ உபகரணங்களின் இணை உற்பத்தி மற்றும் இணை மேம்பாட்டு கருவிகளும் பெற்றுக்கொடுக்கப்படும் என்றார்.

21 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவுக்கு இந்தியாவின் நட்புறவும் இருபக்க உறவும் மிகவும் முக்கியமானது. நாங்கள் மிகவும் நெருக்கமாகவும் ஒன்றிணைந்தும் பணியாற்றக் கடமைப்பட்டுள்ளோம் என நான் நம்புகிறேன் என்றும் அவர் கூறினார்.

இக்கலந்துரையாடலின் போது இந்தியாவுடன் கூட்டு உளவுத்துறை மதிப்பாய்வுகளை அமெரிக்கா மேற்கொள்ள வேண்டும் என்று சிந்தனைக் குழுவினரால் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்தோடு இந்திய–சீன எல்லை விவகாரங்கள் குறித்தும் இங்கு கருத்து பரிமாறப்பட்டுள்ளது.    நன்றி தினகரன் 






லெபனான், காசா மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் கடும் தாக்குதல்

ரொக்கெட் குண்டுகளை அடுத்து பதற்றம்

பலஸ்தீன போராட்டக் குழுவான ஹமாஸ் அமைப்பை இலக்கு வைத்து காசா மற்றும் லெபனானில் இஸ்ரேல் நேற்று (07) அதிகாலை சரமாரி வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இந்த இரு பகுதிகளில் இருந்தும் இஸ்ரேல் மீது ரொக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கு பதில் நடவடிக்கையாகவே இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

தெற்கு லெபனானில் ஹமாஸ் ‘பயங்கரவாதிகளின்’ கட்டமைப்பு ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

ஜெரூசலம் அல் அக்ஸா பள்ளிவாசல் மீது இஸ்ரேலியப் படை இந்த வார ஆரம்பத்தில் தொடர்ச்சியாக இரு தினங்கள் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளை அடுத்தே பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்தப் பள்ளிவாசல் முஸ்லிம்களின் மூன்றாவது புனிதத் தலம் என்பதோடு இந்த சுற்றிவளைப்பு பலஸ்தீனத்திலும் பிராந்தியத்திலும் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது ரொக்கெட் குண்டுகள் வீசப்படும்போது ஹமாஸ் தலைவர் இஸ்மைல் ஹனியே லெபனானில் இருந்தார். “இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு முன்னால் பலஸ்தீனர்கள் தங்கள் கைகளைக் கட்டிக்கொண்டு சும்மா இருக்கமாட்டார்கள்” என்று அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை நேற்று வெள்ளிக்கிழமை காலை வெளியிட்ட அறிவிப்பில், தெற்கு லெபனானில் ஹமாஸுக்கு சொந்தமான பயங்கரவாதக் கட்டமைப்பு உட்பட இலக்குகளை தாக்கியது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

லெபனானில் இருந்து ஹமாஸ் இயங்குவதை அனுமதிக்க முடியாது என்றும் அங்கிருந்து இயக்கப்படும் ஒவ்வொரு தாக்குதல்களுக்கும் லெபனான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

லெபனானில் இருந்து கடந்த வியாழக்கிழமை வீசப்பட்ட ஏவுகணைகள் தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என்று ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலின் வடக்கு அண்டை நாடான லெபனானில் இருந்து கடந்த 17 ஆண்டுகளில் நடத்தப்பட்ட மிகப்பெரிய ஒற்றைத் தாக்குதலாக இது பதிவாகியுள்ளது. அங்கிருந்து 34 ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டதாகக் குறிப்பிட்டிருக்கும் இஸ்ரேல், ஐந்து குண்டுகள் கட்டடங்களுக்கு சேதத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளது.

மறுபுறம் இஸ்ரேலிய போர் விமானங்கள் காசா மீது தாக்குதல் நடத்தியதோடு சுமார் 20 ஏவுகணைகள் கொண்டு 10 நிமிடங்களில் நான்கு புதிய தளங்கள் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. பலஸ்தீன போராளிகள் தெற்கு இஸ்ரேல் மீது புதிய சுற்று ரொக்கெட் குண்டுகளை வீசியதோடு இதனையொட்டி இஸ்ரேலில் சைரன் ஒலி எழுப்பப்பட்டது.

இஸ்ரேலிய ஜெட்கள் நிலத்தடி ஆயுத உற்பத்தி தளம் ஒன்றின் மீதும் நிலத்தின் மேலுள்ள மூன்று தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.கடந்த 2022 ஓகஸ்டில் இஸ்லாமிய ஜிஹாத்துடனான மோதலுக்குப் பின் இஸ்ரேல் நடத்திய தீவிர வான் தாக்குதலாக இது உள்ளது.

இஸ்ரேல் பிரதமர் நடத்திய அவசர அமைச்சரவைக் கூட்டத்தை அடுத்தே இந்த பதில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நெதன்யாகுவின் உரையில் அவர் கூறியதாவது, “நாம் எதிரிகளை தாக்குவோம் என்பதோடு அனைத்து வகையான தாக்குதல்களுக்காகவும் அவர்கள் விலை கொடுப்பார்கள்” என்றார். “வன்முறையை பயன்படுத்தும் கடும்போக்காளர்களுக்கு எதிராக நாம் தீர்க்கமாகச் செயற்படுவோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமது நாட்டுக்குள் இருந்து செயற்பாடும் எந்த ஒரு ஆயுத நடவடிக்கையையும் கண்டிப்பதாகக் குறிப்பிட்ட லெபனான் பிரதமர் நபில் மிகாதி, “அது நிலைமையை ஸ்திரமற்றதாக மாற்றும்” என்று எச்சரித்தார்.

லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் படை, நிலைமை தீவிரமாக உள்ளதாகவும் மேலும் தீவிரம் அடைவதை தவிர்க்கும்படியும் வலியுறுத்தியுள்ளது.

அல் அக்ஸா பள்ளிவாசலில் இடம்பெற்ற மோதல்களை அடுத்து, இஸ்ரேலுக்கு எதிராக செயற்படும் பலஸ்தீன போராளிகளின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு அளிப்பதாக லெபனான் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஹிஸ்புல்லா அமைப்பு ஹமாஸ் மற்றும் காசாவை தளமாகக் கொண்ட மற்றொரு போராட்டக் குழுவான இஸ்லாமிய ஜிஹாத் அமைப்புடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ளது.

லெபனான் மீதான வான் தாக்குதல் ஹிஸ்புல்லா அமைப்பை மோதலுக்குள் இழுக்கும் அச்சுறுத்தலை அதிகரித்துள்ளது. அவ்வாறான ஒரு மோதல் போருக்கு இட்டுச் செல்லும் வாய்ப்பு உள்ளது. ஈரான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா இஸ்ரேலை பெரும் எதிரியாகப் பார்க்கிறது. எனினும் ஹமாஸ் அமைப்பை இலக்கு வைத்தே லெபனானில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கவனமாக அறிவித்துள்ளது.

எனினும் ஹிஸ்புல்லாவின் அனுமதியுடனேயே லெபனானில் இருந்து ஹமாஸ் தாக்குதல் நடத்தி இருக்கக் கூடும் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் -மற்றும் ஹிஸ்புல்லா இடையே 2006ஆம் ஆண்டு வெடித்த போர் ஒரு மாத காலம் நீடித்தமை குறிப்பிடத்தக்கது.

அல் குலைலா மற்றும் மேலும் இரு எல்லை கிராமங்களான டைரே மலியா மற்றும் சிப்கினுக்கு அருகில் இருந்தே ரொக்கெட் குண்டுகள் ஏவப்பட்டிருப்பதாக லெபனான் இராணுவம் தெரிவித்துள்ளது. ஏவு கருவிகள் மற்றும் வீசப்படாத ரொக்கெட் குண்டுகளின் படங்களை வெளியிட்டிருக்கும் லெபனான் இராணுவம் அவை குறித்த பகுதிகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இராணுவ நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்திருப்பதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது. 'இப்போது மோதலை விரிவுபடுத்த யாரும் விரும்பவில்லை' என்று இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

'அமைதி நிலைக்கு அமைதியால் பதிலளிக்கப்படும். தற்போதைய நிலையிலும் எதிர்வரும் மணி நேரங்களிலும் இந்த நிலை நீடிக்கிறது' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   நன்றி தினகரன் 







சிரியாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

சிரியா மீது இஸ்ரேல் நடத்திய புதிய வான் தாக்குதல் ஒன்றில் இரு ஈரானிய ஆதரவு போராளிகள் கொல்லப்பட்டதாக போர் கண்காணிப்புக் குழு ஒன்று தெரிவித்துள்ளது. இதில் ஐந்து சிரிய படையினர் காயமடைந்ததாக சிரிய அரச செய்தி நிறுவனமான சனா தெரிவித்துள்ளது.

சிரிய மேற்கு நகரான ஹோம்ஸில் கடந்த ஞாயிறன்று இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை தொடக்கம் இஸ்ரேல், சிரியா மீது நடத்தும் மூன்றாவது வான் தாக்குதலாக இது உள்ளது.

ஒரு தசாப்தத்திற்கு மேலாக நீடிக்கும் சிரிய உள்நாட்டுப் போரில், அந்நாட்டின் மீது இஸ்ரேல் நூற்றுக்கணக்கான வான் தாக்குதல்களை நடத்தி இருப்பதோடு ஈரான் ஆதரவுப் படைகள் மற்றும் ஹிஸ்புல்லா போராளிகள் மற்றும் சிரிய இராணுவ நிலைகளை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.

தற்போதைய தாக்குதலில் ஹோம்ஸ் நகரில் வெடிப்பு இடம்பெற்றதாகவும் ஆய்வு நிலையம் ஒன்றில் தீ ஏற்பட்டதாகவும் காண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சிரிய வான் பாதுகாப்பு அமைப்பு பல ஏவுணைகளை இடைமறித்தபோதும், ஐந்து படையினர் காயமடைந்து பொருட் சேதமும் ஏற்பட்டிருப்பதாக சனா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.   நன்றி தினகரன் 







  ‘ஒபெக்’ நாடுகளின் திடீர் எண்ணெய் உற்பத்தி குறைப்பால் விலை உயர்வு

அமெரிக்கா கடும் அதிருப்தி

உலகின் பல மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தி நாடுகளும் உற்பத்தியை குறைக்கும் அறிவிப்பை வெளியிட்டதை அடுத்து எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

பிரண்ட் மசகு எண்ணெய் விலை பீப்பாய் ஒன்று 5 டொலருக்கு மேல் அல்லது 7 வீதமாக அதிகரித்து நேற்றைய (03) வர்த்தக ஆரம்பத்தில் 85 டொலர்களுக்கு மேல் உயர்ந்திருந்தது.

சவூதி அரேபியா, ஈராக் மற்றும் பல வளைகுடா நாடுகளும் நாளுக்கு ஒரு மில்லியன் பீப்பாய்களுக்கு மேல் குறைப்பதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்ததை அடுத்தே விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

வரும் மே மாதம் மசகு எண்ணெய் உற்பத்தி குறைப்பு அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் சில நாடுகள் ஏற்கனவே உற்பத்தியை குறைக்க ஆரம்பித்துள்ளன.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததை அடுத்து எண்ணெய் விலை அதிகரித்தபோதும், தற்போது மோதலுக்கு முன்னர் இருந்த நிலைக்கு விலை குறைந்துள்ளது. என்றாலும் எரிசக்தி விலையை குறைக்கும் பொருட்டு உற்பத்தியை அதிகரிக்கும்படி உற்பத்தி நாடுகளை அமெரிக்கா கேட்டிருந்தது.

கடந்த ஆண்டில் வலுசக்தி மற்றும் எண்ணெய் விலை அதிகரித்தது பணவீக்கத்தை உயர்த்தக் காரணமானதோடு அது வீட்டுப் பொருளாதாரத்தில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியது.ஒபெக் பிளஸ் உற்பத்தி அங்கத்துவ நாடுகளே இந்த எண்ணெய் உற்பத்திக் குறைப்பை மேற்கொண்டுள்ளது. இந்த அமைப்பு உலக மசகு எண்ணெய் உற்பத்தியில் சுமார் 40 வீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

இதில் சவூதி அரேபியா நாளுக்கு 500,000 பீப்பாய்களையும், ஈராக் 211,000 பீப்பாய்களையும் குறைக்கவுள்ளன. ஐக்கிய அரபு இராச்சியம், குவைட், அல்ஜீரியா மற்றும் ஓமான் நாடுகளும் உற்பத்திக் குறைப்பை மேற்கொண்டுள்ளன.

“எண்ணெய் சந்தையின் ஸ்திரத்தன்மைக்கு உதவும் நோக்குடனான முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஒன்றாகவே இது மேற்கொள்ளப்பட்டது” என்று சவூதி வலுசக்தி அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் புதிய எண்ணெய் வெட்டு தொடர்பில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபைக்கான ஆலோசகர் ஒருவர் கூறும்போது, “இந்தத் தருணத்தில் உற்பத்திக் குறைப்பு பொருத்தமானதாக நாம் நினைக்கவில்லை. அது சந்தையில் நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தும் என்பதோடு நாம் அது பற்றி தெளிவாக உள்ளோம்” என்றார்.

ஏற்கனவே இந்த ஆண்டு இறுதிவரை நாள்தோறும் 2 மில்லியன் பீப்பாய் எண்ணெயைச் சந்தையிலிருந்து அகற்றும் திட்டம் நடப்பில் உள்ளது. அதனுடன் நாள்தோறும் 1.2 மில்லியன் பீப்பாய் எண்ணெய் உற்பத்தி குறைக்கப்படவுள்ளது.

இதன்படி உலகின் பெட்ரோலிய உற்பத்தியில் மொத்தம் சுமார் 3 வீதமாக குறைவுள்ளது. இது எண்ணெய் விலையை மேலும் அதிகரிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.   நன்றி தினகரன் 






ஹொங்கொங்: 15,000 பேர் நாடுகடத்தப்படும் அச்சம்

புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் இறுக்கமான சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ள ஹொங்கொங் நிர்வாகம் சுமார் 15 ஆயிரம் பேரை நாடு கடத்தக்கூடிய அச்சம் ஏற்பட்டுள்ளது.

கடந்த டிசம்பரில் நிறைவேற்றப்பட்ட இந்த இறுக்கமான சட்ட விதிகளைத் தொடர்ந்து அங்கு தங்கியுள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் மத்தியில் தாம் நாடு கடத்தப்படுவோம் என்ற அச்ச நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.

புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு மேன் முறையீட்டு நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கும் நபர்களை நாடு கடத்தவும் இச்சட்ட விதிகள் சட்டத்தை அமுல்படுத்தும் தரப்பினருக்கு அதிகாரமளித்துள்ளது. இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது முதல் 27 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் 1100 பேர் உடனடியாக நாடு கடத்தப்படும் நிலைக்கு முகம் கொடுத்துள்ளனர்.    நன்றி தினகரன் 



No comments: