இலங்கை வரலாற்றின் சில பக்கங்களின் சாட்சியாகத் திகழும் கலகக் குரல் மு. நித்தியானந்தன் ! ஏப்ரில் 01 இல் பவளவிழா நாயகன் முருகபூபதி


ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர்  கொழும்பு விவேகானந்தா வித்தியாலய மண்டபத்தில் நடந்த பூரணி காலாண்டிதழ் வெளியீட்டு அரங்கில் நான் முதல் முதலில் சந்தித்த                      மு. நித்தியானந்தனுக்கு   அப்போது 25 வயது.  

பேராசிரியர் கா. சிவத்தம்பி தலைமையில் நடந்த அந்த நிகழ்ச்சியில்,  இளமைக்கேயுரிய துடிப்போடு  எழுத்தாளர் – சிந்தனையாளர் மு. தளையசிங்கத்துடன்  இலக்கிய ரீதியாக விவாதித்த நித்தியானந்தனின்  கலகக்குரல் இன்னமும் ஓயவில்லை.

இலங்கை மலையக மக்களின் ஆத்மக்குரல்  நித்தியானந்தனின்


எழுத்திலும் உரைகளிலும் தொடர்ந்து ஒலித்து வந்திருக்கிறது.

அம்மக்களின் வரலாற்றினைப்பற்றி மட்டுமல்லாது,  முழு இலங்கை வரலாற்றின் சில பக்கங்களின் சாட்சியாகவும் விளங்கும் நித்தியானந்தனின் தந்தையார் முத்தையாபிள்ளை பதுளையில் கலைஒளி என்ற இதழையும் நடத்தியிருக்கும் சமூகப்பணியாளர். 

அன்னாரின் ஞாபகார்த்தமாக பின்னாளில் இலங்கையில் இலக்கியப்போட்டிகளும் நடந்திருக்கின்றன.

நித்தி, பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேறியபின்னர் சிறிது காலம் கொழும்பில் தினகரனில் துணை ஆசிரியராக 1970 களில் பணியாற்றினார். அக்காலப்பகுதியில் எங்கள் நீர்கொழும்பூரில் நடந்த பாரதி விழாவுக்கும் தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டின் பிரசார கூட்டத்திற்கும் வருகை தந்து உரையாற்றினார்.

பாரதி விழாவில் நித்தியுடன் வந்து அங்கே உரையாற்றியவர்கள் எழுத்தாளர்கள் நவசோதி, மற்றும் எச். எம். பி. மொகிதீன்.

தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டின் பிரசாரக்கூட்டத்தில் நித்தியுடன் வந்து உரையாற்றியவர்கள் பேராசிரியர் க. கைலாசபதி, மற்றும் சிங்கள எழுத்தாளர் குணசேனவிதான.

அந்தச் சம்பவங்கள் இன்றும் நினைவுகளில் பசுமையாக வாழ்கின்றன.

யாழ்ப்பாணத்தில்  பல்கலைக்கழக வளாகம் தோன்றியதும் அங்கு பொருளியற் துறை விரிவுரையாளராக நித்திய நியமனம் பெற்று பணியாற்றினார். அங்கே நடந்த நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கிலும் நித்தியின் குரல் ஒலித்தது. அதன்பின்னர் அவரது வாழ்விலும் நிறைய மாற்றங்கள் நேர்ந்தன.

1983  வெலிக்கடை சிறையில் நடந்த தாக்குதலில் உயிர்தப்பினார். அவ்வாறு தப்பிய சிலர்  பின்னாளில்  முதலமைச்சராகவும் அமைச்சராகவும் மாறினர் என்பது வேறு கதை. 

ஆனால், நித்தி இலக்கியவாதி.  தொடர்ந்தும்  அவ்வாறே இயங்கினார். தமிழகம் சென்றதும் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியின் பதிப்பிலும் பங்கேற்றவர்.

இலக்கியத் திறனாய்வாளராக,  விமர்சகராக,  பதிப்பாளராக, தொகுப்பாளராக இயங்கிவந்திருக்கும் நித்தி,   கலை, இலக்கிய, கல்வித்துறையில் சமூகத்திற்காக  பயன்மிக்க பணிகளை மேற்கொண்ட பல ஆளுமைகள் குறித்தெல்லாம் தொடர்ந்தும் எழுதியும் பேசியும் வந்திருப்பவர்.  

தனது எழுத்துப்பிரதிகளை நூலுருவாக்குவதில் ஆர்வமோ அக்கறையோ இல்லாதிருந்தவர்.

 நித்தியானந்தன்,  இலங்கையிலிருந்த காலப்பகுதியில் 1983 இற்கு முன்னர் மலையக இலக்கிய முன்னோடிகள் என்.எஸ்.எம். ராமையா ( ஒரு கூடைக்கொழுந்து) தெளிவத்தை ஜோசப் ( நாமிருக்கும் நாடே) சி.வி. வேலுப்பிள்ளை ( வீடற்றவன்) ஆகியோரின் நூல்களை தனது வைகறை பதிப்பகத்தின் மூலம் வெளிக்கொணர்ந்தவர்.

சிறந்தஇலக்கியத்திறனாய்வாளரான நித்தியானந்தன்,  இவ்வாறு பிற எழுத்தாளர்களின் நூல்களை வெளியிடுவதில் காண்பித்த அக்கறை முன்மாதிரியானது.

இங்கிலாந்திற்கு புலம்பெயர்ந்து சென்றபின்னரும் மற்றவர்களின் படைப்புகள், ஆவணங்களை பதிப்பித்து கொடுப்பதில் அக்கறை காண்பித்தவர்.


நித்தியின் உழைப்பினை அமிர்தலிங்கம்: ஒளியில் எழுதுதல், பத்மநாப ஐயரின் பவளவிழாவின்போது வெளியான நூலை ஆராதித்தல் தொகுப்பு ஆகியனவற்றிலும் நாம் காணமுடியும்.

எனினும் நித்தியின் நீண்ட கால தேடலிலும் ஆய்விலும் எழுதப்பட்ட கூலித்தமிழ் என்ற நூல்  2014 ஆம் ஆண்டில்தான் வெளிவந்தது.

கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருதையும் இந்த நூல் பெற்றுள்ளது.

1948 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 01 ஆம் திகதி பதுளையில் பிறந்திருக்கும் நித்தியானந்தனின், பிறந்ததினத்தன்றே இங்கிலாந்தில் Bentley Wood High School  மண்டபத்தில்  காலை முதல் மாலை வரையில்  பவளவிழா நடைபெறுகிறது.

இந்நிகழ்வில் நித்தியின் புதிய நூல்களான ஆடல் எங்கேயோ அங்கே, மலையக இலக்கியம் : சிறுமை கண்டு பொங்குதல், பெருநதியின்பேரோசை, மலையகச்சுடர் மணிகள் என்பனவும்,  நித்தியம் பவளவிழா மலரும் வெளியிடப்படவிருக்கின்றன.

இலங்கைக்கு இந்தியாவிலிருந்து  கூலிகளாக அழைத்து வரப்பட்ட மக்கள் தலைமன்னாரிலிருந்து  கால்நடையாக மாத்தளை நோக்கி சுமார் 150 மைல் தூரத்தை ஒரு வாரத்தில் கடந்து சென்ற துயர் நிறைந்த கதைகளையெல்லாம்  நித்தி தனது பதிவுகளில் சொல்லி வந்திருப்பவர்.  அம்மக்களின்  நெடும் பயணம் மரண யாத்திரை என்றே சொல்லுமளவுக்கு வலிநிரம்பியது.

மலையகத்தில் பசுமையை போர்த்திய அம்மக்கள் இலங்கைக்கு 60 சதவீதமான அந்நிய செலவணியை ஈட்டித்தந்தவர்கள். அத்தகைய கடும் உழைப்பாளிகள் நாடற்றவர்களாக்கப்பட்டனர்.  வெளியேற்றப்பட்டனர்.  இவர்களின் வலிநிரம்பிய கதைகளை ஆவணப்படுத்தி வந்திருப்பவர்தான் நித்தியானந்தன்.

மலையக இலக்கிய முன்னோடிகள் கோ.  நடேசய்யர், அவரது மனைவி மீனாட்சி அம்மையார், மற்றும் கோகிலம் சுப்பையா,  சி.வி. வேலுப்பிள்ளை,  என். எஸ்.எம். ராமையா,  இர. சிவலிங்கம், திருச்செந்தூரன், சாரல்நாடன்,  தெளிவத்தைஜோசப் ஆகியோர் பற்றியெல்லாம்  தொடர்ந்தும் பல செய்திகளை தனது உரைகளின் மூலமும்,  எழுத்துப்பிரதிகளின் வாயிலாகவும் ஆவணப்படுத்தி வந்திருக்கும்,  ஆளுமை மு. நித்தியானந்தனை அவரது பவள விழா காலத்தில் வாழ்த்துகின்றோம்.

நித்தியின் பவளவிழா,  அவரது வாழ்க்கையையும் பணிகளையும் மட்டுமன்றி,  மலையக மக்களின் 200 ஆண்டு கால வரலாற்றையும் பேசும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது மற்றும் ஒரு சிறப்பு.
 

 

 

No comments: