வானம்பாடி - ஸ்வீட் சிக்ஸ்டி - ச சுந்தரதாஸ்

 தமிழ் திரைப் படங்களுக்கு பாடல்களை எழுதித் தள்ளிக்


கொண்டிருந்த கவிஞர் கண்ணதாசன் மறு புறத்தில் படங்களை தொடர்ந்து தயாரித்துக் கொண்டும் இருந்தார். அப்படி அவர் தனது கண்ணதாசன் புரடக்சன்ஸ் சார்பில் தயாரித்த படம்தான் வானம்பாடி. 1963ம் வருடம் திரைக்கு வந்த இந்தப் படத்தில் பல ஜாம்பவான்கள் நடித்திருந்தார்கள் . கதாநாயகியாக தேவிகாவும், நாயகனாக எஸ் எஸ் ராஜேந்திரனும் நடிக்க இவர்களுடன், முத்துராமன்,டி ஆர் ராமச்சந்திரன்,ஷீலா, புஷ்பலதா, ஆர் எஸ் மனோகர் , எஸ் வி சகஸ்ரநாமம், டீ ஆர் ராஜகுமாரி, ஜாவர் சீதாராமன், ஓ ஏ கே தேவர், ஆகியோர் நடித்திருந்தனர். போதாக் குறைக்கு இவர்களுடன் கமலஹாசனும் சிறுவனாக நடித்திருந்தார்.


படத்தின் ஆரம்பம் மிக விறுவிறுப்பாக படமாக்கப்பட்டிருந்தது.

திரைக்கதையும் மர்மம் நிறைந்ததாக அமைக்கப் பட்டிருந்தது. ஆனால் பின்னர் படத்தில் வரும் காட்சிகள் சாதாரண குடும்பப் படமாகவும், அழுகை,சோகம்,வெறுப்பு,சந்தேகம் என்ற வட்டத்துக்குள் சிக்கி விடுகிறது.

காமுகன் ஒருவனிடம் இருந்து தப்பும் மீனா ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்ய முனைகிறாள். ஆனால் தணிகாசலம், பார்வதி தம்பதியினரால் காப்பாற்றப் பட்டு அவர்கள் வீட்டிலேயே அடைக்கலம் பெறுகிறாள். வீட்டில் உள்ள அனைவருமே அவள் மீது பாசத்தைப் பொழிகிறார்கள். தணிகாசலத்தின் மருமகன் கவிஞன் சேகருக்கும் , மீனாவுக்கு திருமணம் நடக்கவிருந்த சமயம் மீனா தன்னுடைய மனைவி என்று கூறிக் கொண்டு திடீர் கணவனாக வருகிறான் கோபால். திருமணம் தடைப்படுகிறது. மீனா யார் , கோபாலின் மனைவி சுமதி யார் என்ற குழப்பம் நீடிக்கிறது. இதே சமயம் மீனாவின் சாயலைக் கொண்ட கவ்ஸல்யா தேவி என்ற பாடகியும் கதைக்குள் நுழைகிறாள். எல்லோருடைய குழப்பமும் எவ்வாறு தீருகிறது என்பதே மீதிக்கு கதை.

கண்ணதாசனுக்கு பிடித்த நடிகைகளான தேவிகா, புஷ்பலதா இருவரும் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். தேவிகாவுக்கு மாறுபட்ட குணாம்சங்களை காட்டி நடிக்கக் கூடிய சந்தர்ப்பம். சாந்தம் நிறைந்த ஒரு வேடம், அகம்பாவம் கொண்ட ஒரு வேடம் என்று தன் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் அவர். புஷ்பலதா துடிப்பாகவும், குறும்பாகவும் நடித்திருந்தார். ஒரு காலத்தில் வைஜயந்திமாலா, சாவித்ரி, அஞ்சலிதேவி , ஜமுனா ஆகியோருடன் ஜோடி சேர்ந்து நடித்த டீ ஆர் ராமசந்திரன் இந்தப் படத்தில் புஷ்பலதாவுக்கு ஜோடியாக நடித்து நகைச்சுவையையும் வழங்கியிருந்தார்.

எஸ் எஸ் ஆரின் பாத்திரம் மட்டமாக அமைக்கப்பட்டிருந்தது. ஒரு வில்லனாகவே படம் முழுதும் சித்தரிக்கப்பட்டிருந்தார். முத்துராமனின் நடிப்பு மென்மையாக அமைந்தது. ஓரிரு காட்சிகளில் வந்தாலும் ஒ ஏ கே தேவர் மிரட்டுகிறார். ஹரிதாஸில் பார்த்தவரா இவர் என்று ஆச்சரியப்படுத்துகிறார் டீ ஆர் ராஜகுமாரி!

கண்ணதாசன் எடுத்த படம் என்றால் பாடல்களை பற்றி சொல்லவா வேண்டும்! கங்கைக் கரை தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம் பாடல் அப்படியே மனதை சுண்டியிழுக்கிறது. ஏட்டில் எழுதி வைத்தேன், கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும் இரண்டு பாடல்களும் விரக்தியின் உச்சத்தை உணர்த்துகிறது. ஊமைப் பெண் ஒரு கனவு கண்டாள் பாடல் அபலையின் குரலால் ஒலித்தது.


பாடல்களுக்கு இசை அமைத்தவர் திரை இசை திலகம் கே வி மகாதேவன். தாய் சொல்லைத்த தட்டாதே படத்துக்கு இவர் இசை அமைத்த யாரடி வந்தார் ராஜாதி அவர் என்னடி சொன்னார் ராஜாத்தி என்ற பாடல் படத்தில் இடம் பெறவில்லை. அந்த பாடலுக்கு போட்ட மெட்டையே பயன் படுத்தி இந்த படத்தில் யாரடி வந்தார் என்னடி சொன்னார் ஏனடி இந்த உல்லாசம் என்ற பாடலை உருவாக்கியிருந்தார். பாடலும் அதற்கு ஆடிய ஜோதிலக்ஷ்மியும் டபுள் ஓகே!

படத்தை கண்ணதாசன் தயாரித்த போதும் கதை வசனத்தை
வலம்புரி சோமநாதன் எழுதியிருந்தார். தரமான வசனங்கள். படத்தொகுப்பு சூரியா.

கவிஞரின் நீண்ட கால நண்பரான ஒளிப்பதிவாளர் ஜி ஆர் நாதன் படத்தை ஒளிப்பதிவு செய்து இயக்கியும் இருந்தார். தேவிகாவின் நடிப்பும், பாடல்களும் படத்தை தூக்கி
நிறுத்தியது .

No comments: