இலங்கைச் செய்திகள்

 சம்பூர் சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி

தந்தை செல்வாவுக்கு மலர் அஞ்சலி

டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நவீன இலங்கையை கட்டியெழுப்ப எனது தலைமையிலான அரசு அர்ப்பணிப்புடன் உள்ளது

வெடுக்குநாறி சிவன் ஆலய சம்பவம்; வவுனியாவில் கண்டன போராட்டம்

இந்திய ரூபாவை பயன்படுத்தி வர்த்தக நடவடிக்ைககள்

நான் ஜனாதிபதி பதவியில் இருக்கும் வரை சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமளியேன்


சம்பூர் சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதிஅதற்கமைய, அதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தும் வகையில் வான்வழிச் சேவைகளை வழங்குவதற்காக சேவை வழங்குநர்களாக தனிநபரொருவர் அல்லது அதற்கு மேலதிகமான எண்ணிக்கையை நியமிப்பதற்கு இயலுமாகும் வகையில்  2010 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க குடியியல் வான்செலவுகள் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. தர உறுதிப்பாடு மற்றும் சான்றுப்படுத்தல் ஆணைக்குழுவை (Quality assurance and Accredit Commission) தாபிப்பதற்கான அனுமதியைப் பெறல்
உயர் கல்வி (தர உறுதிப்பாடு மற்றும் சான்றுப்படுத்தல்) சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிட்டு பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காக 2019.04.02 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பினும், குறித்த சட்டமூலத்தை அச்சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிதற்கு இயலாமல் போயுள்ளது.

அச்சந்தர்ப்பத்தில் குறித்த சட்டமூலத்தை குழுநிலை விவாதத்தின் போது சமர்ப்பிப்பதற்கு சட்டமா அதிபர் அவர்களால் முன்மொழியப்பட்டிருந்த ஒருசில திருத்தங்கள் மற்றும் பல்வேறு தரப்பினர்களால் வழங்கப்பட்டுள்ள அவதானிப்புக்கள் மற்றும் முன்மொழிவுகளை ஆராய்ந்த பின்னர் புதிய ஏற்பாடுகள் உட்சேர்க்கப்பட்டு சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள உயர் கல்வி (தர உறுதிப்பாடு மற்றும் சான்றுப்படுத்தல்) சட்டமூலத்தை மேலும் திருத்தம் செய்வது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, புதிய சட்டமூலத்தை தயாரிப்பதற்காக சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. இலங்கை விவசாய நிறுவனத்தை கூட்டிணைப்பாக மாற்றுதல்
இலங்கையின் விவசாய அபிவிருத்திக்காக உணவுப் பயிர்கள், பெருந்தோட்டப் பயிர்கள், ஏற்றுமதி விவசாயப் பயிர்கள், கால்நடை உற்பத்திகள், பூங்கன்றுகள் மற்றும் அலங்காரத் தாவரங்கள், சுற்றாடல் மற்றும் வனவளப் பாதுகாப்பு மற்றும் கமநல அபிவிருத்தி போன்ற பல்வேறுபட்ட துறைகளுக்கு ஏற்புடைய வகையில் கூட்டு அணுகு முறையை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளமையால், அதற்குப் பல்வேறு நிறுவனங்களின் கீழ் காணப்படும் விடயதானங்கள் தொடர்பாக உயர் நிபுணத்துவத்துவங்களுடன் கூடிய விவசாய தொழில்வாண்மையாளர்களை தொழிநுட்ப ரீதியாக ஒருங்கிணைக்கின்ற கட்டமைப்பை தாபிப்பத பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, விவசாய தொழில்வாண்மையாளர் சேவைகளின் தரப்பண்பு மற்றும் ஒழுக்கநெறிகளை உறுதிப்படுத்தும் வகையில் விவசாய தொழில்வாண்மையாளர்கள் 1,000 பேருக்கும் அதிகமாக அங்கத்தவர்களைக் கொண்டுள்ள இலங்கை விவசாய நிறுவனத்தை கூட்டிணைப்பதற்கும், அதற்காக சட்டமூலத்தை தயாரிப்பதற்காக சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக விவசாய அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரிவுகளை எல்லை நிர்ணயம் செய்தல்
ஜனாதிபதியினால் 09 ஆவது பாராளுமன்றத்தின் 04 ஆவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து சமர்ப்பிக்கப்பட்ட கொள்கைப் பிரகடனத்தில் தற்போது காணப்படுகின்ற பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரிவுகளின் எல்லைகள் சமகாலத்தில் காணப்படுகின்ற மாகாண எல்லைகளுக்கமைய சமமாக அமையாதமையால் ஏற்படுகின்ற நடைமுறை ரீதியான சிரமங்கள் மற்றும் நிர்வாக ரீதியாக ஏற்படுகின்ற பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்காக மாகாண அடிப்படையில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரிவுகளை எல்லை நிர்ணயம் செய்ய வேண்டிய தேவை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய, பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரிவுகளை எல்லை நிர்ணயம் செய்வதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் தலைமையில் அதிகாரிகள் குழுவொன்றை நியமிப்பதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனை தொடர்பாக அமைச்சரவை உடன்பாடு வழங்கியுள்ளது.

13. சர்வதேச பூச்சியக் கழிவுகள் தினத்தைக் (International Zero waste Day) கொண்டாடும் தேசிய நிகழ்ச்சித்திட்டம்
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 30 ஆம் திகதியை சர்வதேச பூச்சிய கழிவுகள் தினமாகப் பிரகடனப்படுத்துகின்ற முன்மொழிவு துருக்கிக் குடியரசின் தலைமையில் 2022.12.14 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் வெளியிடப்பட்டது.

நிலைபெறுதகு அபிவிருத்திக்கான 2030 ஆம் ஆண்டின் நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்துச் செல்வதற்காக சர்வதேச பூச்சியக் கழிவுகள் தொடர்பான அடிப்படைச் செயற்பாடுகளை ஊக்குவிப்பதே இத்தினம் பிரகடனப்படுத்தப்பட்டமைக்கான நோக்கமாகும்.

அதற்கமைய, சுற்றாடல் அமைச்சர் மற்றும் ஏனைய ஏற்புடைய பங்கீடுபாட்டு நிறுவனங்களின் பங்குபற்றலுடன் 2023.03.30 ஆம் திகதி சர்வதேச பூச்சியக் கழிவுகள் தினத்தைக் கொண்டாடுவதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை நடாத்துவதற்காக சுற்றாடல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்
1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் 14 ஆம் பிரிவின் கீழ் ஆக்கப்பட்டுள்ள, 2023.01.01 ஆம் திகதிய 2312/76 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளை, பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. 2023 ஆம் ஆண்டின் அரச வெசாக் உற்சவம் நடாத்துதல்
அதிவணக்கத்திற்குரிய மஹாநாயக்க தேரர்கள் மற்றும் ஒட்டுமொத்த இலங்கை பௌத்த சமாசங்களின் பரிந்துரைகளுக்கமைய 2023 (புனித பௌத்த வருடம் 2567) அரச வெசாக் உற்சவத்தை பொது நிருவாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சு மற்றும் பௌத்த விவகாரங்கள் திணைக்களமும் இணைந்து புத்தளம் மாவட்டத்தின் சிலாபம், மாதம்பே கெபல்லாவெல ஸ்ரீ ரதனசிறி பிரிவெனா விகாரையில் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, 2023.05.02 ஆம் திகதி தொடக்கம் 2023.05.08 ஆம் திகதி வரை வெசாக் வாரமாகப் பிரகடனப்படுத்துவதற்கும், அதற்கு இணையாக பல்வேறு சமய மற்றும் கலாச்சார நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

16. மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்தி துறையின் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
2030 ஆம் ஆண்டு தொடக்கம் ஒட்டுமொத்த மின்சாரத் தேவையின் 70% வீதமானவை மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்தி ஆற்றல் வளங்கள் மூலம் பெற்றுக்கொள்ளல், வலுசக்தி விநியோகத்தில் சுயாதீனமடைதல், மற்றும் 2050 ஆம் ஆண்டாகும் போது காபன் வெளியீட்டை பூச்சியமாக்குதல் போன்றவற்றை அரசு கொள்கைப் பிரகடனமாக வெளியிட்டுள்ளது.

அந்நிலைமையை அடைவதை நோக்கமாகக்  கொண்டு இந்தியா மற்றும் இலங்கை தனியார் மற்றும் அரச துறையின் தொழில்முயற்சியாளர்கள் ஒருங்கிணைந்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளடங்கலாக, பரஸ்பர உடன்பாடுகள் எட்டப்பட்ட ஏனைய பிரதேசங்களிலும் சூரிய மின்னுற்பத்தி, கடலோர காற்றாலை மின்னுற்பத்தி, மற்றும் உயிர்த்திணிவுசார் மின்னுற்பத்தி கருத்திட்டங்கள் மற்றும் தொடர் மின்மாற்றல் உட்கட்டமைப்பு வசதிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்வதற்கு மற்றும்/அல்லது வசதியளித்தல் மூலம் மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்தித் துறையில் ஒத்துழைப்புக்களை அதிகரிப்பதற்கும் மற்றும் வலுப்படுத்துவதற்கும் இந்தியக் குடியரசு உடன்பாடு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இந்திய குடியரசு மற்றும் இலங்கை அரசுக்கும் இடையில் மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்தி துறையின் ஒத்துழைப்பு பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

17. கொரியாவின் செமாவுல் உன்டொங் (Saemaul Undong Movement) வேலைத்திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ளல்
உட்கட்டமைப்பு வசதிகள், வாழ்வாதாரம், நலன்புரி மற்றும் கல்வி போன்றவற்றை மேம்படுத்தி கொரியாவிலுள்ள கிராமிய பிரதேசங்களில் காணப்படுகின்ற மரபுரீதியான கமநலப் பொருளாதாரம், கைத்தொழில்மய ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரமாக மாற்றுவதற்காக 1970 ஆம் ஆண்டு தொடக்கம் கொரிய குடியரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற செமாவுல் உன்டொங் வேலைத்திட்டம் மிகவும் ஏதுவாக அமைந்துள்ளது.

செமாவுல் எண்ணக்கருவை வேறு நாடுகளுக்கும் விரிவுபடுத்தும் நோக்கில் கொரிய குடியரசால் 2013 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டுள்ள செமாவுல் மன்றத்துடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொண்டு இலங்கையிலும் 2015 ஆம் ஆண்டு செமாவுல் வேலைத்திட்டம் சப்ரகமுவ மாகாண சபையால் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் காலப்பகுதி தற்போது முடிவடைந்துள்ளது. செமாவுல் உன்டொங் எண்ணக்கருவின் கீழ் இலங்கையில் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கியதாக கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தக் கூடிய வகையில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் மற்றும் செமாவுல் மன்றத்திற்கும் இடையிலான முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

18. வரையறுக்கப்பட்ட தேசிய வியாபார முகாமைத்துவக் கற்கைகள் நிறுவனத்தை (NSBM) உத்தரவாதத்தால் வரையறுக்கப்பட்ட கம்பனியாக மாற்றம் செய்தல்
1976 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவனச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய தாபிக்கப்பட்டுள்ள தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவனத்திற்கு (NIBM) சொந்தமான நிர்வாகக் கம்பனியாக வரையறுக்கப்பட்ட தேசிய வியாபார முகாமைத்துவ கற்கைகள் நிறுவனம் (NSBM) தாபிக்கப்பட்டுள்ளது.

ஹோமாகம பிரதேசத்தில் நவீன முறையிலான பல்கலைக்கழகமாக தாபிக்கப்பட்டுள்ள குறித்த கற்கைகள் நிறுவனம் தற்போது பட்டப்படிப்பு மற்றும் பட்டப்பின் படிப்பை வழங்குகின்ற நிறுவனமாக நடாத்தப்பட்டு வருகின்றது. தற்போது குறித்த கற்கைகள் நிறுவனத்தில் 11,500 மாணவர்களுக்கும் அதிகமாக 05 பீடங்களில் 50 பட்டப்படிப்புக்களுக்கும் அதிக கற்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

உலகளாவிய தரப்படுத்தலுக்கமைய முன்னணி வகிக்கின்ற கல்வி நிறுவனங்களின் கட்டமைப்புக்களுக்குச் சமமான கட்டமைப்புக்களைப் பின்பற்றுவதன் மூலம் NSBM நிறுவனத்தின் நடவடிக்கைகளை மேலும் பயனுள்ள வகையிலும், சர்வதேச ரீதியான தரநியமங்களுக்கமைவாக நடாத்திச் செல்வதற்கும் இயலுமெனக் கண்டறிப்பட்டுள்ளது.

அதற்கமைய, தேவையான கட்டமைப்பு ரீதியான மாற்றங்களை மேற்கொள்ளக் கூடிய வகையில் 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் 32 ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கமைய NSBM நிறுவனத்தின் அமைப்பு விதிகளை உத்தரவாதத்தால் வரையறுக்கப்பட்ட கம்பனியாக மாற்றுவதற்குத் தேவையான படிமுறைகளை மேற்கொள்வதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

19. சிகிரியாவை நிலைபெறுதகு பயண மையமாக அபிவிருத்தி செய்தல்
உலக மரபுரிமையாகவும், இலங்கையின் முக்கிய தொல்லியல் இடமாகவும், சிகிரியா உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவர்ச்சிமிக்க சுற்றுலா மையமாக அமைவதுடன், அது எமது நாட்டின் சுற்றுலா மையங்களில் அதிகளவான வருமானத்தை ஈட்டுகின்ற இடமாகவும் அமைந்துள்ளது.

ஆனாலும் சுற்றுலா மையமாக அதனை முகாமைத்துவப்படுத்தும் போது மேலெழுகின்ற பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு குறித்த அனைத்துத் தரப்பினர்களின் ஒத்துழைப்புக்களுடன், சிகிரியாவை நிலைபெறுதகு பயண மையமாக அபிவிருத்தி செய்வதற்காக பிரதான திட்டத்தை ((Master Plan) தயாரிப்பதற்காக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் மற்றும் புத்தசாசன, கலாச்சார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சர் அவர்களும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  நன்றி தினகரன் 
தந்தை செல்வாவுக்கு மலர் அஞ்சலி

தந்தை செல்வாவின் 125 ஆவது பிறந்த தின நிகழ்வு தந்தை செல்வா அறங்காவலர் குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

யாழ். துரையப்பா விளையாட்டரங்கின் அருகாமையிலுள்ள தந்தை செல்வா நினைவுச் சதுக்கத்தில் நிகழ்வு நடைபெற்றது.

இதன் போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

நிகழ்வில் தென்னிந்திய திருச்சபையின் முன்னாள் ஆயர் ஜெபநேசன், யாழ். மாநகர முன்னாள் முதல்வர் இ. ஆனோல்ட், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு நினைவுத் தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

யாழ்.விசேட நிருபர்

நன்றி தினகரன் 

டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நவீன இலங்கையை கட்டியெழுப்ப எனது தலைமையிலான அரசு அர்ப்பணிப்புடன் உள்ளது

- டிஜிட்டல் மயமாக்கலை விரைவுபடுத்த விசேட குழு நியமனம்

டிஜிட்டல் மயமாக்கலின் ஊடாக நவீன இலங்கையை கட்டியெழுப்ப தனது தலைமையிலான அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரச துறையை டிஜிட்டல் மயமாக்குவதும், டிஜிட்டல் மயமாக்கலை துரிதப்படுத்துவதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதற்காக அமைச்சரவைக் குழுவொன்று நியமிக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அலரிமாளிகையில் நேற்று (30) பிற்பகல் நடைபெற்ற “DIGIECON 2030” வெளியீட்டு விழாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியை தொழில்நுட்ப அமைச்சு ஏற்பாடு செய்திருந்தது.

தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் வரவேற்புரை நிகழ்த்தியதைத் தொடர்ந்து (Leveraging digital economy toward a sustainable & resilient Sri lanka) “நிலையான மற்றும் மீள்திறன்மிக்க இலங்கையை நோக்கி டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துதல்” என்ற தொனிப்பொருளில், உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்தில் டிஜிட்டல் அபிவிருத்தி தொடர்பான பிராந்திய கூட்டிணைப்பின் பிரதானி சித்தார்த்த ராஜா உரையாற்றினார்.

DIGIECON SRI LANKA 2023-2030 இணையத்தளம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், டிஜிட்டல் மயமாக்கலுக்கான ஜனாதிபதியின் கொள்கைக்கு, தகவல் தொழில்நுட்ப சங்கங்கள் தமது ஆதரவை இதன்போது தெரிவித்தன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்திட்டத்திற்கு அமைய ஆரம்பிக்கப்பட்ட “DIGIECON 2030”, டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கிய இலங்கையின் பயணத்தில் ஒரு தனித்துவமான மைல்கல்லாகும். நிலையான பொருளாதார வளர்ச்சியை உருவாக்கல் மற்றும் உலக சந்தையில் நாட்டின் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கு டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் புத்தாக்கத் தீர்வுகளை ஏற்றுக்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதால், தொழில்நுட்ப அமைச்சு முக்கிய பங்குதாரர்களின் ஆதரவுடன் திட்டத்தை ஒருங்கிணைத்து செயல்படுத்தும்.

DIGIECON 2030”, மூலம் புதிதாக பல்வேறு துறைகளில் ஆரம்பிக்கப்பட்ட புதுமையான, நவீன, சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் 50 பேருக்கு அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு உலகளாவிய முதலீடு மற்றும் சந்தை அணுகலுக்கான தளம் அமைக்கப்படும்.

தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய ஆய்வு நிறுவனங்களை இணைத்து டிஜிட்டல் கொள்கையை திட்டமிடுவதற்காக, இந்த வருடம் 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என்று தெரிவித்தார்.

அதேபோன்று செயற்கை நுண்ணறிவை முதன்மையாகக் கொண்டு ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு அடுத்த வருடம் ஒரு பில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

சர்வதேச நாணய நிதியத்தின் மறுசீரமைப்புகள் எமக்கு அவிருத்திக்கான ஆரம்பத்தை தந்துள்ளன. அவற்றை நாம் பற்றிக்கொள்ள வேண்டும். அதேபோல் நூற்றாண்டுக்கு பொருத்தமான உயர் போட்டித் தன்மை மிகு சந்தைப் பொருளாதாரத்தை நாம் திட்டமிட வேண்டும்.

உயர் போட்டித் தன்மை என்பது சகலதுறைகளுடனுமான போட்டித்தன்மை அல்ல. நம்மால் அவ்வாறு செய்யவும் முடியாது. இருப்பினும் நம்மால் போட்டித்தன்மையை பேணக்கூடிய துறைகள் உள்ளன. உதாரணமாக, வலயத்தின் வளங்கள் மத்தியஸ்தானமாக விவசாயத்தின் சில அங்கங்களை குறிப்பிடலாம். அந்த துறைகளை நாம் அறிந்துக்கொள்ள வேண்டிய அதேநேரம் பசுமை பொருளாதாரத்திற்கான சாத்தியக்கூறுகள் இலங்கையில் அதிகமாக காணப்படுவதால் அதிக போட்டித் தன்மை கொண்ட அந்த பொருளாதாரம், பசுமை பொருளாதாரமாகவும் அமைந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

மூன்றாவதாக அதிக போட்டித் தன்மை கொண்டதாகவும் பசுமை பொருளாதாரமாக மற்றும் டிஜிட்டல் பொருளாதாரமாகவும் அமைந்திருக்க வேண்டியது அவசியமாகும். இந்த பாதையே எமக்கு பொருத்தமானதாகும். மேற்படி இரு துறைகளும் ஒன்றாக இணைவது அவசியம் என்பதோடு பின்னர் அவை இரண்டும் போட்டித் தன்மை மிகுந்த துறைகளாக மாற வேண்டும்.

டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி நகர்வதற்கு இதுவரையில் தயாரிக்கப்படாமல் இருக்கின்ற பொருளாதார கொள்கையையும் நாம் தயாரிக்க வேண்டியது அவசியமாகும். அது தொடர்பிலான பல்வேறு கருத்துக்களும் யோசனைகளும் காணப்பட்ட போதிலும் மேற்படி துறைக்கு சமீபமான விதத்திலேயே அவற்றை செயற்படுத்த வேண்டும். அத்தோடு அரசாங்க நிதியை கொண்டு டிஜிட்டல் பொருளாதாரத்தை செயற்படுத்த முடியாது என்பதால் தனியார் துறையே அதனை மேற்கொள்ள வேண்டும்.

அதற்குத் தடையாக அரசாங்கம் நிற்கப்போவதில்லை என்பதோடு அதற்கான ஊக்குவிப்பையும் வழங்கும். அதுவே எமது கொள்கையாகும். அதற்கமைய செயற்கை நுண்ணறிவு உள்ளடக்கிய டிஜிட்டல் கொள்கையை நடைமுறைப்படுத்துவதே எமது கொள்கையாகும். அதனை செயற்படுத்துவதற்கு அவசியமான மனித வளத்தை முதலில் மேம்படுத்த வேண்டும்.

அரசாங்கம் அதற்கான முதலீடுகளை மேற்கொள்ளும் போது அதற்கான மனித வளமும் மேம்படும். இதனையே தனியார்துறை செய்ய வேண்டியுள்ளதுடன் நாம் தற்போதும் அதற்கான நிதியை வழங்குகின்றோம்.
டிஜிட்டல் துறையை முழுமையாக நோக்கும் போது, அமெரிக்காவும் சீனாவுமே பலவான்களாக உள்ளனர். ஐக்கிய அமெரிக்காவை போன்று சீனாவும் இத்துறையை சந்தை வாயிலாகவே கையாளுகிறது. சீனாவின் சகல அபிவிருத்திகளும் சந்தை வாயிலாகவே இடம்பெற்றிருப்பதால் டிஜிட்டல் கொள்கை அரசாங்கத்தை மையப்படுத்தியதாக அமைந்திருக்க வேண்டும் என நாம் கருத முடியாது.

ஆனால் அரச துறைகளை டிஜிட்டல் மயமாக்கி அதன் பணிகளையும் துரிதப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அரச துறைகளின் டிஜிட்டல் மயமாக்களை துரிதப்படுத்துவதற்காக அமைச்சரவை குழுவொன்றை நியமிக்க நாம் திட்டமிட்டுள்ளோம். அந்த நடவடிக்கைகள் உங்களது டிஜிட்டல் மயமாக்க முயற்சிகளையும் துரிதப்படுத்த உதவும்.

இதற்காக எம்மால் நீண்ட காலத்தை செலவிட முடியாது. இந்த தருணத்தில் எமது அண்டை நாடுகளுடன் நெருங்கிய தொடர்புகளை பேண வேண்டியது அவசியமாகும். இத்துறை மிக வேகமாக வளர்ச்சி கண்டிருக்கும். இந்தியாவுடனும் குறிப்பாக தென் இந்தியாவுடனும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ரீதியில் மிக நெருக்கமாக செயற்பட நான் தயாராக உள்ளேன். இதுவே இலங்கை டிஜிட்டல் மயமாக்கல் கொள்கையாக காணப்படுகிறது.

இத்துறைக்கு அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை தொடர்ச்சியாக வழங்கும் இயலுமை அரசாங்கத்திடம் இல்லை என்பதால் அவற்றை தனியார் துறையே வழங்க வேண்டும். தனியார் துறை உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கும் போது அரசாங்கம் அதனை ஊக்குவிக்கும். இவ்வாறான காரணத்திற்காகவே ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கான நிதி வழங்கும் இயலுமை எம்மிடத்தில் இல்லை.

இது தொடர்பில் எமக்கு அவசியமான வெளிநாட்டு முதலீடுகள் ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் அதனுடன் இணைந்த ஏனைய நிறுவனங்களுக்கு கிடைப்பதற்கு இடமளியுங்கள். இவ்வாறாகவே அரச டிஜிட்டல் கொள்கைக்கான திட்டமிடல்களை நாம் மேற்கொண்டு வருகின்றோம். இது தொடர்பான விடயங்களை உங்களுக்கு தெரியப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை என்பதுடன் இந்த விடயத்தில் நீங்கள் அரசாங்கத்துடனோ அல்லது அரசாங்கம் உங்களுடனோ இணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும்.

அனைத்து தொழில்நுட்பங்களும் இலங்கையில் பரீட்சித்து பார்க்கப்படுவதால் இந்த கொள்கை தயாரிப்பு தகவல் தொழில்நுட்ப துறை மீதே தங்கியுள்ளது. தொழில்நுட்பத்திற்கான தொழிற்சாலைகளை ஆதாரமாக கொண்ட புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டிய அவசியம் எமக்கு உள்ளது.

விவசாயம், மீன்பிடித்துறை, உற்பத்திச் சேவைகள் போன்ற துறைகள் இன்னும் 20 வருடங்களில் நீங்களும் நாங்களும் இன்று காண்கின்ற நிலையை விடவும் பாரிய மாற்றங்களைக் கொண்டதாக இருக்கலாம். இவற்றில் இந்தியா வளர்ச்சி காணும் போது தெற்காசியாவிலும் அவை உள்நுழையும்.

நாம் செய்ய எதிர்பார்கின்றவற்றை நான் கூறுகிறேன். எமக்கு தற்போது அமைச்சரவை குழுவொன்றும் உள்ளது. தற்போது நாம் நம்மால் இலகுவாக அபிவிருத்தி செய்யக்கூடிய துறைகள் பற்றியே அவதானம் செலுத்த வேண்டும். செயற்கை நுண்ணறிவு அவ்வாறதொரு துறையாகும். செயற்கை நுண்ணறிவு என்பது என்ன? அது எவ்வாறு மனதுடன் தொடர்புபடுகிறது. இங்குள்ளவர்கள் பௌத்தர்கள் என்பதால் இது மிகவும் வழக்கமான தலைப்பாகும்.

தம்ம பதத்தின்படி, அனைத்தும் மனத்தால் தீர்மானிக்கப்படுகிறது என்பதை நாம் அறிவோம். அப்படியானால் மனதிற்கும் செயற்கை நுண்ணறிவிற்கும் என்ன தொடர்பு? இது நாம் அவதானம் செலுத்த வேண்டிய ஒரு பகுதி என்று நான் நினைக்கிறேன். இரண்டாவது தேவை ஆராய்ச்சி. இலங்கையில் மிகக் குறைவாகவே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுகின்றன. நான் ஒரு போதும் புதிய ஆராய்ச்சி நிறுவனங்களை தொடங்கும் எண்ணம் எனக்கு இல்லை.

பல்கலைக்கழகங்களையும் தனியார் துறையையும் அரசாங்கம் இணைக்க விரும்புகிறது. பல்கலைக் கழகங்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நாங்கள் நிச்சயமாக உதவுவோம். ஆனால் தனியார் துறைதான் ஆராய்ச்சியை முன்னெடுக்க வேண்டும். அதற்கான பணத்தை தனியார் துறை முதலீடு செய்ய வேண்டும். அவர்கள் அதில் சிலவற்றை இழக்கலாம். ஆனால் ஆராய்ச்சி மூலம் தனியார் துறை இந்தத் தொழிலை இயக்குவதை உறுதி செய்வதால். அவர்கள் மற்ற நன்மைகளைப் பெறுவார்கள்.

இதற்கு உதவக்கூடிய பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் இருந்தால், அவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்படும். இந்தக் கொள்கையைத் தயாரிக்க இராஜாங்க அமைச்சர், உங்கள் அனைவரிடமும் கலந்தாலோசித்து, மீண்டும் அமைச்சரவைக் குழுவிடம் அறிக்கை அளிப்பார். இந்த வருடத்தின் ஆரம்பமாக அதற்காக 100 மில்லியன் ரூபாவை அதற்காக ஒதுக்குகின்றேன்.

அடுத்த வருடம், எங்களுக்கு ஆராய்ச்சிகள் தேவை. நீங்கள் செயற்கை நுண்ணறிவில் முக்கிய கவனம் செலுத்தி ஆராய்ச்சிகளை நடத்த வேண்டும். அதற்கு இந்த ஆண்டு உங்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் அடுத்த ஆண்டு ஒரு பில்லியன் ரூபாயை நான் ஒதுக்குவேன்.அதன் பின்னர் 2025 இல் என்ன செய்யலாம் என்று முடிவு செய்வோம்.

நான், பிரதமர் மற்றும் ஏனைய அமைச்சர்களுடன் இணைந்து, இந்த அரசாங்கம் ஒட்டுமொத்த நாட்டையும் நவீனமயப்படுத்துவதில் உறுதியாக உள்ளோம். அரசாங்கம் தனியார் துறையுடன் இணைந்து, டிஜிட்டல் மயமாக்கலில் இலங்கையை பிராந்தியத்தில் முன்னணி நாடாக மாற்றுவோம்.

இங்கு உரையாற்றிய தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்,

இன்று அறிமுகப்படுத்தப்பட்ட “DIGIECON 2030” ஊடாக டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தில் இலங்கை ஒரு புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கிறது.

மேம்பட்ட தொழில்நுட்பத்தின் மூலம் நிலையான வர்த்தகம் செய்யக்கூடிய பொருட்கள் மற்றும் சேவைகள் ஊடாக பொருளாதாரத்தை விரைவுபடுத்துவது எமது நோக்கமாகும்.

“DIGIECON 2030” மூலம், அனைத்து பங்குதாரர்களுக்கும் டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பை எளிதாக்குவதற்கு அரசாங்கம் முழுமையாக உறுதிபூண்டுள்ளது என்றும், அதற்குத் தேவையான வழிகாட்டுதல்களை முன்னெடுக்கும் என்றும் நான் இச்சந்தர்ப்பத்தில் தெரிவிக்கிறேன். இதன் மூலம், முதலீட்டுக்கு சாதகமான வர்த்தக சூழலை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டிஜிட்டல் மாற்றத்திற்கு வழிவகுக்கும் மற்றும் மனித வளத்தை மையப்படுத்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கூட்டாண்மைகளை ஆராயும் தொடர்ச்சியான திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது என்பதை நான் கூற விரும்புகிறேன்.

இந்நிகழ்வில் அமைச்சரவை அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேம்ஜயந்த், அலி சப்ரி, கஞ்சன விஜேசேகர, ரமேஷ் பத்திரன, நசீர் அஹமட், மனுஷ நாணயக்கார, இராஜாங்க அமைச்சர்களான சுரேன் ராகவன், அரவிந்த குமார் உள்ளிட்ட அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் ருவன் விஜேவர்தன, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் பேராசிரியர் நெரஞ்சன் குணவர்தன, வெளிநாட்டு தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், உலக வங்கிகளின் பிரதிநிதிகள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நன்றி தினகரன் 


வெடுக்குநாறி சிவன் ஆலய சம்பவம்; வவுனியாவில் கண்டன போராட்டம்

பொதுமக்களுடன் எம்.பிக்களும் பங்கேற்பு

வவுனியா, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய விக்கிரகங்கள் உடைத்து அழிக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்தும், நீதி கோரியும் வவுனியாவில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டுள்ளது.

ஆலய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் நேற்று (30) காலை 10 மணிக்கு வவுனியா கந்தசாமி

ஆலயத்தில் தேங்காய் உடைத்து வழிபட்ட பின் ஆரம்பமாகிய பேரணி, மணிக்கூட்டு கோபுர சந்தியை அடைந்து, அங்கிருந்து பசார் வீதியூடாக ஹொரவப்பொத்தானை வீதிக்குச் சென்ற பின்னர், வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியூடாக மாவட்ட செயலகத்தை சென்றடைந்தது.

வவுனியா, நெடுங்கேணி, வெடுக்குநாறி மலையில் பி்ரதிஷ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் உட்பட ஏனைய விக்கிரகங்களும் கடந்தவாரம் உடைத்தழிக்கப்பட்டிருந்தமை பெரும் அதிர்வலைகளை ஏற்ப்படுத்தியிருந்தது. சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிப்பதுடன், இச் செயலை செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி இடம்பெற்றது. ஆர்ப்பாட்ட பேரணியாக சென்ற மக்கள் வைத்தியசாலை சுற்றுவட்ட பகுதியில் அமைந்திருந்த தொல்பொருள் திணைக்கள அலுவலக வளாகத்துக்குள் சென்று, வாயிலை மறித்தவாறு சுமார் 15 நிமிடங்கள் வரை முற்றுகையிட்டனர். பின்னர் அங்கிருந்து வெளியேறி மாவட்ட செயலகம் சென்றிருந்தனர்.

வவுனியா விசேட நிருபர்

நன்றி தினகரன் 


இந்திய ரூபாவை பயன்படுத்தி வர்த்தக நடவடிக்ைககள்

ரிசர்வ் வங்கி தலைவருடன் மிலிந்த ஆராய்வு

இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சியின் முக்கிய தூணாக, இந்திய ரூபாவை பயன்படுத்தி கொடுக்கல் வாங்கல்களை விரிவாக்குவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்திய மத்திய வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் மற்றும் இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட ஆகியோர் இதில்,

பங்கேற்றனர். இச்சந்திப்பு மிகவும் சுமுகமாக நடைபெற்றதுடன் இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பிலான பல விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.

மின்சாரம், எரிசக்தி, துறைமுகங்கள், உட்கட்டமைப்பு, சுற்றுலா மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகளை ஒருங்கிணைத்து, இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் இந்தியா வகிக்கக்கூடிய முக்கிய பங்கு பற்றியும் இவர்கள் கலந்தரையடினர். உயர்ஸ்தானிகர் மொரகொட, இந்திய மத்திய வங்கியின் நேரடித் தலையீட்டுடன்

இலங்கையின் பொருளாதார ஸ்திரப்படுத்தல், நாணய மாற்று ஏற்பாடுகள் மற்றும் கடன் ஒத்திவைப்பு ஆகியவற்றில் இலங்கைக்கு வழங்கிய ஆதரவுக்கு இந்திய மத்திய வங்கியின் ஆளுநர் தாஸுக்கு உயர்ஸ்தானிகர் மொரகொட நன்றி தெரிவித்தார்.   நன்றி தினகரன் 

நான் ஜனாதிபதி பதவியில் இருக்கும் வரை சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமளியேன்

நாட்டின் பொருளாதார யுத்தத்தை வெற்றிகொண்டு பொருளாதார ஸ்திரத் தன்மையை ஏற்படுத்துவேன்
• போதைப் பொருள் பாவனையைத் தடுக்க கடுமையான சட்டங்களைக் கொண்டு வருவேன்
• நாடு வன்முறையை நோக்கிச் செல்வதை தடுத்தமைக்கு பாதுகாப்பு துறையினருக்கு நன்றி

தான் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அதேபோல் தான் ஒருபோதும் பிரச்சித்தமான தீர்மானங்களை மேற்கொள்ளப் போவதில்லை எனவும், மாறாக சரியான தீர்மானங்களையே எடுப்பதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, பிரசித்தமான தீர்மானங்களினால் நாட்டிற்கு சீரழிவு மட்டுமே ஏற்பட்டதாகவும் தெரிவித்தார.

முப்படைகளினதும் தலைவரான ஜனாதிபதி, அநுராதபுரத்திலுள்ள விமானப்படை தளத்தில் நேற்று (01) முப்படையினர் மற்றும் பொலிஸார் முன்னிலையில் சிறப்புரை ஆற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கருத்துச் சுதந்திரத்திற்கமைய தன்னை விமர்சிக்க அனைவருக்கும் சுதந்திரம் உள்ளதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வீதிகளில் வன்முறைகளை மேற்கொள்ள எவருக்கும் உரிமை இல்லை எனவும் வலியுறுத்தினார்.

சரியானதை செய்ய அனைவரும் பழகிக்கொள்ள வேண்டும் என்றும், அதற்கான சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ளதாக என்பதை அறியவே, சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாடுகளை முதலில் பாராளுமன்றத்தில் சமர்பித்ததாகவும் தெரிவித்தார்.

அதனை உதாரணமாக கொண்டு சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்களை நடைமுறைப்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் புதிய சிந்தனைகளுடன் புதிய பயணத்தை தொடர்ந்தால் 25 வருடங்களுக்குள் பெரும் அபிருத்தியை அடைய முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை வெற்றிகொண்டது போன்றே நாட்டின் பொருளாதார யுத்தத்தையும் வெற்றிகொண்டு பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த துரித நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

அதற்காக முப்படைகளினதும் பொலிஸாரினதும் ஒத்துழைப்பு தொடர்ச்சியாக தேவையென வலியுறுத்திய ஜனாதிபதி, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க கடந்த காலங்களில் படையினர் வழங்கிய ஒத்துழைப்புக்களையும் பராட்டினார்.

முப்படையினர் இந்தப் பணியை செய்யத் தவறியிருந்தால் இன்று நாடு வன்முறை நிறைந்த பூமியமாக இருந்திருக்கும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அதேபோல் உலகின் பலம்வாய்ந்த நாடுகளுக்கிடையில் இடையிலான போட்டித் தன்மை, இந்து சமுத்திர வலயத்தை பெரிதும் பாதிக்கும் எனவும் இலங்கையின் ஜனாதிபதி என்ற வகையில் அந்த பாதிப்பிலிருந்து இலங்கையை மீட்க முயற்சிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நடத்து முடிந்த போராட்டங்களை போல் அல்லாது எதிர்காலத்தில் வரவிருக்கும் இந்த போராட்டங்கள் தொழில்நுட்பத்தை மையப்படுத்தியதாக அமையும் என வலியுறுத்திய ஜனாதிபதி, தொழில்நுட்ப தெரிவுடன் கூடிய முப்படையினரை உருவாக்குவதற்காகவே “பாதுகாப்பு – 2023“ (Defense – 2023) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் சட்டம் ஒழுங்கு மற்றும் நீதி அமைச்சர்களுக்கு இது தொடர்பான பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக படையினரின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வு) ஜெனரல் கமல் குணரத்ன, பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, விமானப்படைத் தளபதி எயார் வைஸ் மார்ஷல் சுதர்ஷன பத்திரண, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் பிரியந்த பெரேரா, பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்ரமரட்ன, முப்படை மற்றும் பொலிஸ் திணைக்களத்தைச் சேர்ந்த 1,200 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.    நன்றி தினகரன் No comments: