அஞ்சலிக்குறிப்பு மொழிபெயர்ப்பாளர் தேவாவின் மறைவு ! ஈடு செய்யப்படவேண்டிய இழப்பு ! ! முருகபூபதி


கடந்த நான்காண்டுகாலமாக ( 2019 – 2022 ) தொடர்ந்தும் அஞ்சலிக் குறிப்புகளை எழுதிக்கொண்டிருந்தேன்.  மீண்டும் இந்த ஆண்டு ( 2023 ) முதல் இந்தவேலையை தொடக்கிவைத்துவிட்டுச் சென்றுவிட்டார் மொழிபெயர்ப்பாளர் தேவா.

இவரது இயற்பெயர் திருச்செல்வம் தேவதாஸ்.

சந்திப்பதற்கு நான்  பெரிதும் விரும்பியிருந்த ஒருவர்தான் தேவா. இவருடன் உரையாடுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காமல்போய்விட்டதே என்ற  சோகம் மனதை வாட்டுகிறது.

இவரது  சிறந்த மொழிபெயர்ப்பில் வெளியான இரண்டு நூல்களை படித்து,  எனது வாசிப்பு அனுபவத்தை ஏற்கனவே எழுதியிருக்கின்றேன்.

முதலாவது  உகண்டாவைச் சேர்ந்த சைனா கெய்ரெற்சி எழுதிய


தன்வரலாற்றுச் சித்திரிப்பான   குழந்தைப்போராளி என்ற நாவல்.  மற்றது  இலங்கையைச் சேர்ந்த கடற்படைத் தளபதி அஜித்போயாகொட எழுதிய  சிறை அனுபவங்களான  நீண்ட காத்திருப்பு.

இரண்டு நூல்களுமே போரின் அனுபவங்களை பேசியவை.

தேவா , இவற்றை ஆங்கில மூலத்திலிருந்து அவற்றின் உயிர் சிதையாமல் தமிழுக்கு வரவாக்கியிருந்தார். இவை தவிர,  அம்பரயா, அனோனிமா, என்பெயர் விக்டோரியா முதலானவற்றையும் தமிழுக்குத்  தந்தவர்.

தேவாவின் மொழி ஆளுமை விதந்து பேசப்படவேண்டியது. பெரும்பாலான மொழிபெயர்ப்பு நூல்கள்,  படிக்கும்போது அயர்ச்சியை தந்துவிடும். ஆனால், தேவாவின் மொழிபெயர்ப்புகள்  தொடர்ந்தும் வாசிக்கும் ஆர்வத்தை தூண்டிக்கொண்டிருக்கும்.

அவர் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்திருப்பவர். அதனால் அவருக்கு பிரெஞ், டொச் மொழிகளும் நன்கு தெரிந்திருக்கிறது.

அம்மொழிகளிலிருந்தே நேரடியாக தமிழுக்கு மொழிபெயர்க்கும் ஆற்றலும் பெற்றிருந்ததாக அறிய முடிகிறது.

மன்னார் விடத்தல்தீவை பிறப்பிடமாகவும் தலைமன்னாரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தேவா, சுவிட்சர்லாந்திலும்  சிறிது காலம் வாழ்ந்திருக்கிறார்.  மீண்டும் தாயகம் திரும்பிய பின்னரும் இலக்கிய மொழிபெயர்ப்புகளில் ஈடுபட்டவர். இம்மாதம் 26 ஆம் திகதி தேவாவின் இறுதி நிகழ்வுகள் தலைமன்னாரில் நடந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தேவா மொழிபெயர்த்த  நூல்களை கருப்பு பிரதிகள், வடலி, பூபாளம் முதலான பதிப்பகங்கள் வெளியிட்டன.  

தேவாவின் மொழிபெயர்ப்பில் நான் படித்த குழந்தைப்போராளி நூல் பற்றிய எனது வாசிப்பு அனுபவ பதிவுக்கு, 

சாவின்  வாசலில்  நிறுத்தப்பட்டிருந்த  குழந்தைப் போராளிகளின்   மௌனத்தை  உடைக்கும்   புதினம் !

வழி தவறிச்சென்ற  ஒரு  ஆட்டுக்குட்டியின்  கதை !  எனத்தலைப்பிட்டிருந்தேன்.

 


கெய்ரெற்சியின்   தாய்மொழி  கினியான்கோலே.   ஆனால்,           சிகண்டா, சுவாஹிலி  முதலான  இதரமொழிகளும்                         தெரிந்திருக்கிறார். கொடுமைகள்   நிரம்பிய  அந்த                           வாழ்விலிருந்து விடுதலைபெறுவதற்காக   எத்தனையோ            வழிகளை  தேடும் கெய்ரெற்சி,   தனது  வாக்கு  வசீகரத்தால்  பொய்களும்  உரைக்கிறார். பசித்தவேளைகளில்  திருடுகிறார்.    அயல் நாட்டுக்குத் தப்பிச்செல்ல விசா பெறுவதற்காக  பலரிடம்  கையேந்துகிறார்.   சிறு  வர்த்தக               முயற்சிகளில்   ஈடுபட்டு  ஏமாற்றத்தையும்  தோல்வியையும்    சுமக்கிறார்.    இட்ட  முதலுக்கே  மோசம்  வருகிறது.

விரக்தியும்   சோர்வும்  அவருடன்  இணைந்து


வருகின்றன. நிம்மதியான   உறக்கத்துக்காக  வேண்டுகிறார்.  அவ்வப்போது  தனது பெண்மையையும்  பறிகொடுக்கிறார்.     ஓ.. என்னகொடுமை....!!!???  இந்த   வாழ்க்கை  அவரை   ஓட  ஓட  விரட்டி  வஞ்சித்துக்கொண்டே இருக்கிறது.

அவற்றிலிருந்தெல்லாம்   அவர்  எவ்வாறு  மீண்டார்...?                              என்பதையும்  இந்நாவல்  பதிவுசெய்கிறது.

 

அதனால்   ஒரு  சுயவரலாறு  என்ற  எல்லையையும்  கடந்து           


முழுமையான   நாவலாக  விரிகிறது.   நாங்கள்  கற்பூரத்தால்       வளர்க்கப்பட்ட  பறவைகள்  என்று  தன்னை                                              அடையாளப்படுத்தும் கெய்ரெற்சி   எவ்வாறு  விடுதலைப் பறவையானார்...?

உகண்டாவின்   உளவுப்படையினால்  தொடர்ச்சியாகத் தேடப்பட்டு அதன்   கழுகுப்பார்வையிலிருந்து  எவ்வாறு                    தப்பினார்...?

தனது  வாழ்வை  தானே   சுயவிமர்சனம்  செய்துகொண்டு               எதிர்காலத்தில்  எந்தக் குழந்தையும்  தன்னைப்போன்று மாறிவிடக்கூடாது    என்ற           எண்ணத்தில்,  பாதிக்கப்பட்ட குழந்தைகளின்    மறுவாழ்வுக்காக    தன்னை  எவ்வாறு அர்ப்பணித்துக்கொண்டு                           ஒரு ஃபிணிக்ஸ்   பறவையைப்போன்று உயிர்த்தெழுந்தார்              என்பதை   எந்தப்போலித்தனமும்  பம்மாத்தும் இன்றி    பதிவுசெய்துள்ளார்  சைனா  கெய்ரெற்சி.

 

தமிழில்  இந்த  நாவலின்  வெற்றி  அதன்  தமிழ்                            மொழிபெயர்ப்பு என்றும்  சொல்லலாம்.

 

அதற்காக   இதனை   மிகுந்த  பொறுப்புணர்வுடனும்  நிதானமாகவும்


 மொழிபெயர்த்த    தேவா   அவர்களை  மனம்திறந்து  பாராட்டலாம்.

 

இதனை  வெளியிட்டுள்ள  கருப்புப்பிரதிகள்             பதிப்பகம்   தொடர்ந்தும் சிறந்த  நூல்களை                                                     வெளியிட்டுவருகிறது.   காலத்தின்  தேவை உணர்ந்து                               குழந்தைப்போராளியை   பதிப்பித்திருக்கும் கருப்புப்பிரதிகள்   பதிப்பகத்திற்கும்   வாழ்த்துக்கள்.  “ என்று எழுதியிருந்தேன்.

 

எனது பதிவை கருப்புப்பிரதிகள் பதிப்பகத்திற்கும், இலக்கியத் தோழர் ஷோபா சக்திக்கும் அனுப்பியிருந்தேன். அவர்களிடமிருந்து பதிலும் வந்தது.

 


மொழிபெயர்ப்பாளர் தேவா, இலங்கையில் நீடித்தபோர் 2009 இல் முடிவுக்கு வந்தபின்னர், அவர்  சுவிஸிலிருந்து தாயகம் திரும்பிவிட்டதாகவும் தகவல் கிடைத்தது.

எனினும் அவருடன்  என்னால் தொடர்புகொள்ள முடியாமல்போய்விட்டது.

 

தேவாவின் அருமையான மொழிபெயர்ப்பில் நான் படித்த மற்றும் ஒரு புத்தகம்  கொமடோர் அஜித்போயாகொட எழுதிய நீண்ட காத்திருப்பு.

 

“ சிறை – நாங்கள் எல்லோருமே ஏதோ ஒரு சிறையினுள்தான் எப்பொழுதும் வாழ்ந்தபடி உள்ளோம். என்று நாம் சிறிய அளவுகொண்ட இடப்பரப்பினுள் அடைபடுகின்றோமோ அன்றுதான் சிறையை உணர்கிறோம்.
கொமடோர் போயாகொடவின் A Long Watch பிரதியின் வாசிப்பனுபவமும் இவ்வாறானதாகத்தான் அமையப்போகின்றது. நீண்ட காத்திருப்பு நூலை மொழிபெயர்க்கும் பணியில் தேவாவுடன் இணைந்திருந்தவர்களும் எழுதியிருக்கும் மொழிபெயர்ப்பாளரின் பதிவு, இவ்வாறு தொடங்குகிறது.
அறுபதுகளில் யுத்த எதிர்ப்புப் பாடலொன்றில் சர்வதேச இராணுவ சிப்பாய்கள் குறித்து பூர்விகக்குடி பாடகி பஃபி செயின்ற் மேரி (Buffy Sainte-Marie) இவ்வாறு பாடுவார்:     

                     

  “தனதுடலை ஆயுதமாய் யுத்தத்துக்கு தருகிறவன் எவனோ, அவனில்லையேல் எவராலும் எங்கும் எந்தப்போரையும் நடத்திட இயலாது. “ போரில் ‘ இது இப்படித்தான் ‘ ‘போராட்டங்களில் இவை சகஜம் ‘ என்றெல்லாம் குற்றங்களுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் மத்தியில்                             ( Apologists of War Crimes) தனிநபரது பொறுப்பினைத்தான்                      ( Individual Responsibility ) அப்பாடலில் அவர் அழுத்தமாகக் குறிப்பிட்டிருப்பார். அரசாங்கங்களின் திட்டங்களைக் கொண்டு செல்வதில் அதன் ஊழியருக்குப் பெரும் பங்குண்டு. அதிகாரங்களுக்குச் சிப்பாய்கள் வெறும் கருவிகளே என்கிறபோதும் எல்லாக் கருவிகளும் கட்டளையை அப்படியே பின்பற்றுபவை அல்ல. சிப்பாய்களதும் அரசாங்கத்தின் கருத்தியலும் அதன் பெரும்பான்மை சமூகங்களின் கருத்தியலுடன் ஒத்துப்போவதாலேயே சிறுபான்மைச் சமூகங்கள் மீதான வன்முறை உலகமெங்கிலும் என்றும் தொடருதல் சாத்தியப்படுகிறது. 

 

தமிழ் சமூகம் தேவா என்ற ஒரு சிறந்த மொழிபெயர்ப்பாளரை இழந்திருக்கிறது.  இலக்கிய உலகம் சிறந்த மொழிபெயர்ப்பாளர்களை தேடிக்கொண்டிருக்கும் சமகாலத்தில் தேவாவின் திடீர் மறைவு ஆழ்ந்த துயரத்தை தருகின்றது.

 

தேவாவின் இழப்பு ஈடுசெய்யப்படவேண்டியது.

 

நான்  சந்திக்க விரும்பிய எழுத்தாளரை இழந்துவிட்டேன்.  அஞ்சலிக்குறிப்பு எழுதி அமைதிபெறவேண்டியதுதான்.

 

---0---

letchumananm@gmail.com

No comments: