அதிகாரம் 14 – அவளின் விலை
ஒரு காலத்தில் பெரிய
‘ஹீரோயினாக’ தொழிற்சாலையை வலம்
வந்த புங், கடந்த இரண்டு வாரங்களாகப் பேச்சு
மூச்சற்று இருக்கின்றாள். முகத்தில் பூச்சற்று, நறுமணமற்று யாருடனும்
பேசமுடியாதவாறு ஏங்கித் தவிக்கின்றாள். இப்பொழுதெல்லாம் அவளை நிமிர்ந்து
பார்க்கும் ஒருவன் நந்தன் தான்.
இப்படியெல்லாம் நடக்கும்
என்று தெரிந்திருந்தால் அவள் எல்லாவற்றையும் தவிர்த்தே இருந்திருப்பாள். அவள் யார்
மனதையும் புண்படுத்தியதாக இதுவரை காலமும் தொழிற்சாலையில் ஒருவரும் சொல்லவில்லை.
இத்தனை காலமும் நந்தனுக்கு அவள் செய்த உதவிகளுக்கு நன்றிக் கடனாக வாய் மூடி
மெளனமாக இருந்தான் அவன்.
“எனக்கு ஸ்ரோரில் வேலை
கிடைத்திருக்கின்றது. பகல் வேலை. நிறைய ஓவர்டைம் இருக்கும். குடும்பத்தையும்
பார்க்கலாம்” மகிழ்வுடன் எல்லாருக்கும் சொல்லித் திரிந்தாள்.
உண்மையில் இதுதான் நடந்தது.
ஜோசுவாவை வேலை நீக்கம் செய்தபின்னர், புங்கை காரின் உதிரிப்பாகங்கள்
வைத்திருக்கும் தொழிற்சாலயின் ஸ்ரோர் பகுதிக்கு இடம் மாற்றிவிட்டார்கள்.
“பார்த்தியா தண்டனையை எப்படி
மாற்றிச் சொல்கின்றாள் என்று. உவள் திருந்தவே மாட்டாள்” மாய் சத்தமிட்டான்.
புங் புதிய பகுதிக்குப்
போகும் முன்னர் பார்ட்டி வைத்தாள். தனக்கு புறமோஷன் கிடைத்துள்ளது என்று
பார்ட்டியில் சொன்னாள். எல்லோரும் கை தட்டினார்கள். விருந்துண்டு மகிழ்ந்தார்கள்.
புங் வேலையைவிட்டு மாறிப்
போகும்போது நந்தனுக்கு ஒரு பெர்வியூம் தந்துவிட்டுப் போனாள்.
“எனது அனுபவங்களை நான்
உனக்குச் சொன்னால் நீ என்னை வெறுத்துவிடுவாய்” நந்தனின் காதிற்குள் சொன்னாள்.
ஜோசுவாவை வேலையிலிருந்து
நிர்வாகம் நீக்கியதை மகிழ்வாக வரவேற்ற நந்தன், புங்கின் இடமாற்றத்தைத் தாங்கிக்
கொள்ளாமல் தவித்தான். மனதிற்குள் அழுதான்.
புங்கின் இடமாற்றத்தின்
பின்னர், வேலை செய்பவர்கள் தமது வாய்க்கு வந்தபடி புங்கைப் பற்றிச் சொல்லிக்
கொண்டார்கள்.
“புங் செய்த இந்தச் செயலானது
அவளை என்றும் நிம்மதியாக உறங்கவிடாது துரத்தியபடி இருக்கும். மனதை அரித்தபடி
இருக்கும்.” என்றாள் ஆச்சிமா.
”புங்கின் கணவனைச் சந்தித்தேன்.
புங்கின் புதிய வேலை எப்படிப் போகின்றது? அவளுக்கு அந்த வேலை பிடித்துக் கொண்டதா
என அவனிடம் கேட்டேன். அவன் புங்கைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக்
கொண்டு போய்விட்டான். புங்கிற்கு ஏற்பட்ட அந்த அவமானம், அவளின் குடும்பத்திற்கும்
சேர்ந்து கொண்டது.
கணவன்கூட அவளை முழுமனதுடன்
ஏற்றுக் கொள்ளவில்லை.” என்றான் ரான்.
”புங்கிடம் தொடர்பு
வைத்திருந்தால் ‘வில்லங்கம்’ வீடு தேடி வந்து கதவு தட்டும். அவளின் நட்பு
ஆபத்தானது. அவளின் விலை இப்போது முன்னூறு ஆயிரம் டொலர்கள்.” இது மாய்.
’முன்னூறு ஆயிரம் டொலர்கள்’ என
மாய் குறிப்பிட்டது ஜோசுவா சுயமாக வேலையிலிருந்து நீங்கியிருந்தால் அவன் அந்தத்
தொகையையே பெற்றிருந்திருப்பான் என்பதாகும்.
“புங்கின் மகன் கூடாத
மாணவர்களின் சேர்க்கையால் போதை வஸ்துக்கு அடிமையாகிவிட்டான்” ஒரு பெரிய குண்டைத்
தூக்கிப் போடான் நூஜ்ஜின்,
எல்லோருமே புங்கைப் பற்றிப்
புறம் சொல்லியபடி இருந்தார்கள். கடைசியாகப் பார்த்தால் ‘இங்குள்ளவர்கள் எவருமே
நண்பர்கள் அல்ல!’ என்ற முடிவுக்கே வரல் வேண்டும் என நினைத்தான் நந்தன். ரயில்
பயணம் போலவே இதுவும் என நினைத்துக் கொண்டான்.
அவர்கள் எல்லோரினதும்
வாழ்க்கை நகருகின்றது.
‘நான் எனது நாட்டில்
இருந்திருந்தால் இப்படியான ஒன்று நடப்பதற்கு சாத்தியங்கள் குறைவாகவே
இருந்திருக்கும். எனது குடும்பம், பெற்றோர், உற்றார், எமது வாழ்க்கை முறை, பண்பாடு
இவை எல்லாம் இதற்கெல்லாம் இடம் தந்திருக்குமா?’ புங் கணவனை அணைத்தபடி தினமும்
உறக்கத்திற்குச் செல்கின்றாள். இப்போது அவர்கள் ஒரு அறையில் குடித்தனம்
செய்கின்றார்கள்.
புங் தனது அறையை மகளுக்கும்
மருமகனிற்குமாகக் குடுத்துவிட்டாள். அவர்களுக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை.
லிவிங்ருகெதர் ஆக இருக்கின்ரார்கள். மகள் இப்பொழுது நான்குமாதம் பிறக்னென்ற். தாய்
பத்தடி பாய்ந்தாள் என்றால் மகள் பதினாறடி. விரைவில் அவர்களின் திருமணத்தை
முடித்துவிடல் வேண்டும். தனது வாழ்க்கையின் ஒரு கெட்ட அத்தியாயத்தை
முடித்துவிட்டாள் புங். அவள் கண்களில் நீர் துளிர்க்கின்றது. அழுங்கு மனம்,
அழுக்கு மனம் அதில் மெல்லக் கரைகின்றது.
நந்தன் எவரையும் சீக்கிரம்
நம்பிவிடுபவன் அல்ல. அதனால்தான் இவ்வளவு காலமும் இங்கு அவன் தப்பிப் பிழைத்து
வந்திருக்கின்றான். அவனுக்கு பாலர்வகுப்பில் படித்த பாடமொன்று ஞாபகத்திற்கு
வந்தது, வரும் முன் காப்போன், வந்தபின்
காப்போன், வரும்போது காப்போன். இதில் தான் எந்த ரகம்?
இப்போது இரவெல்லாம் நந்தனால்
உறங்க முடிவதில்லை. திடீர் திடீரென எழுந்து கட்டிலில் அமர்ந்து கொள்கின்றான். அவன்
மனதில் ஒரு கேள்வி பூதாகரமாக எழுகின்றது. ’புங்கின் மீது தான் கொண்ட நட்புக்கு
என்ன பெயர்?’ கேள்வி அதுவாகவே அமிழ்ந்து மடிகின்றது.
“என்னப்பா… நித்திரை
கொள்ளாமல் சாமத்திலை எழும்பிக் கூத்தடிக்கிறியள்” நந்தனின் மனைவி அவனைப் பரிகாசம்
செய்தாள்.
“ஒண்டுமில்லை…”
“எனக்குத் தெரியாதா உங்களைப்
பற்றி! சிலதுகளை விட்டுத்தான் பிடிக்க வேணும்!”
“இல்லை… உவள் புங் எப்படிப்
பட்டவள் எண்டதை இறுதி வரையும் என்னாலை கண்டுபிடிக்கேலாமல் போச்சு. அதுதான்
ஜோசிக்கிறன்.”
“ஆரம்பத்திலேயே சொன்னனான்
தானே! எப்ப அவளை முதன் முதலா நான் கண்டேனோ, அப்பவே சொல்லிட்டன். உவளை நம்ப
வேண்டாம் எண்டு!” சொல்லிவிட்டு திரும்பி முதுகைக் காட்டிக் கொண்டு படுத்தாள் நந்தனின்
மனைவி.
றெசிங் ரேபிலில் புங்
கடைசியாகப் பிரியும்போது குடுத்த பெர்வியூம் போத்தல் இருந்தது. உடைக்கப்படாமல்
பெட்டியுடன் இருந்த அந்த விலைகூடிய பெர்வியூம் போத்தல், இரவு விளக்கில்
மினுமினுத்தது. தூக்கிப் பார்த்தான் நந்தன். அதை தன் வாழ்நாள் வரைக்கும்
வைத்திருந்து பாவிக்கலாம். ஆனாலும் நந்தன் அதை ஒருபோதும் திறந்து பார்க்கவில்லை. போத்தலிற்குள்
இருக்கும் மட்டும் அது ஒரு திரவம். திறந்துவிட்டால் அது நறுமணம். வேண்டாம் அந்த
நறுமணம்.
பூனை போல் பதுங்கிச் சென்று
மீண்டும் படுத்துக் கொள்கின்றான். மனைவி விழித்துக் கொண்டுதான் இருக்கின்றாள் என்பது
அவனுக்கு நன்றாகத் தெரியும்
முற்றும்.
No comments:
Post a Comment