முதல் சந்திப்பு பள்ளி ஆசிரியராகவிருந்து படைப்பாளியாக உருவான மெல்பன் மணி முருகபூபதி


அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளர் விழா இயக்கத்தை 2001 ஆம் ஆண்டு ஆரம்பித்தபோதே, நூல்கள் தொடர்பான வாசிப்பு அனுபவப் பகிர்வு நிகழ்ச்சியையும் அதில் இணைத்துக்கொண்டோம்.  கடந்த 22 வருடகாலமாக இந்நிகழ்வு நடந்துவருகிறது.

எழுத்தாளர்கள் எவ்வளவுதான் எழுதினாலும் அவற்றை படிப்பதற்கு வாசகர்கள் இல்லையேல் எழுத்தாளர்கள் காணாமல் போய்விடுவார்கள். கலைஞர்களுக்கு ரசிகர்கள் எவ்வளவு முக்கியமோ, அவ்வாறே எழுத்தாளர்களுக்கும் வாசகர்கள் மிக மிக முக்கியம்.

2003 ஆம் ஆண்டு தமிழ் எழுத்தாளர் விழாவை நான் வதியும்


மெல்பனில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தபோது, எனது கண்ணில் கலியுகத்தின் சில பக்கங்கள்  என்ற சமூக நாவல் தென்பட்டது.  அதனை எழுதியிருந்தவர் மெல்பன் மணி.  எனக்கு இந்த எழுத்தாளரின் பெயர் அப்போதுதான் முதல் முதலில் அறிமுகமானது.

எழுதியவர் பெண்தான் என்பதை அக்கதையின் படைப்பு மொழியிலிருந்து புரிந்துகொண்டேன்.  பின்னர் விசாரித்துப்பார்த்தேன். அவ்வாறுதான் அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநிலத்தில் மெல்பன் நகரில் கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் வதியும்  திருமதி கனகமணி அம்பலவாணபிள்ளை அவர்கள் எனக்கு முதலில் அறிமுகமானார்.

குறிப்பிட்ட  நூலைப்பற்றி விழாவில் பேசவேண்டும். யாரைப் பிடிக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தபோது எவரும் உடனடியாகக் கிடைக்கவில்லை.  கையிலே வெண்ணெயை வைத்துக்கொண்டு,  நெய்க்காக வெளியே அலைவானேன் என்ற முடிவுக்கு வந்தேன்.

 இலங்கையில் ஆசிரியையாக பணியாற்றிவிட்டு வந்திருந்த எனது மனைவி மாலதியிடம் குறிப்பிட்ட கலியுகத்தின் சில பக்கங்கள்  நூலைக்கொடுத்து படிக்கச்செய்து, பேசவைத்தேன்.  அதுவே  அவுஸ்திரேலியாவில் மாலதியின் முதலாவது மேடைப்பேச்சு. 2003 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 04 ஆம் திகதி மெல்பனில் பிரஸ்டன் நகர மண்டபத்தில்  அந்த விழா நடந்தது.

அன்றைய தினம் கவிஞர் அம்பியின் தலைமையில் நடந்த கருத்தரங்கில் மெல்பன் மணி,  “ முதியோரும் புலம்பெயர் வாழ்வும்   என்ற தலைப்பில் உரையாற்றினார்.  

இந்த வருடம் ( 2023 )  ஜனவரி மாதம் 22 ஆம் திகதி தனது 84 வயது பிறந்த தினத்தை, தனது மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் சகிதம் வீட்டில் அமைதியாக கொண்டாடியிருக்கும் மெல்பன்மணி,  சிறுகதை, கவிதை, நாவல் , கட்டுரை முதலான துறைகளில் எழுதிவருகிறார்.

இதுவரையில் 13 நூல்களையும் வரவாக்கியிருப்பவர்.  இவரது பூர்வீகம், வடக்கில் கொடிகாமத்திற்கு சமீபமான கரம்பகம் என்ற கிராமம். குடும்பத்தில் கனிஷ்ட புத்திரியான இவர், தனது ஆரம்பக்கல்வியை ஒட்டுவளி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையிலும், சிரேஷ்ட கல்வியை உசன் இராமநாதன் வித்தியாலயத்திலும் தொடர்ந்து, பால பண்டிதர் பரீட்சையிலும் சித்தி பெற்றிருக்கிறார். தனது 19 வயதில் ஆசிரிய நியமனம் பெற்றவர். கோப்பாய் ஆசிரிய பயிற்சிக்கலாசாலையில் கற்றவர்.


கொடிகாமம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய மகா வித்தியாலயம் ஆகியனவற்றில் பணியாற்றி,  1989 இல் ஓய்வுபெற்றவர்.  மாணவர்களுக்காக நாடகங்கள், வில்லுப்பாட்டு எழுதி பயிற்சி அளித்தவர்.  இவரது கணவர் அம்பலவாணபிள்ளை ஊரில் கிராம சேவகர் அலுவலராக பணியாற்றியவர்.  கணவரின் வாழ்வு பெரும்பாலும் பொது மக்களுடன் கடந்திருக்கிறது. மனைவியின் வாழ்வு பெரும்பாலும் மாணவர் சமுதாயத்துடன் கடந்திருக்கிறது.

கணவர், 60 வயது மணிவிழாக்காலத்தில் திடீரென மறைந்துவிட்டார். அந்தத்துயரத்தையும் கடந்து வந்திருக்கும் மெல்பன் மணி, கலை, இலக்கிய, இசை, நடனம், நாடகம்  முதலான துறைகளில்  சிறுவயது முதலே ஆர்வம் காண்பித்து வந்திருப்பவர். தனது  பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் கலை, இலக்கியத்துறையில்  ஈடுபடச்செய்து வளர்த்துவிட்டிருப்பவர்.

மெல்பன் மணியின் ஒரு மகளான திருமதி ரமா சிவராஜா,


மெல்பனில் பிரபல இசை ஆசிரியராக விளங்குகிறார்.  ஒரு மகன்  அகணி சுரேஷ் கனடாவில் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவராக இயங்குகிறார்.

மெல்பன் மணியின் பேரப்பிள்ளைகள் இசைத்துறையில் அரங்கேற்றமும் கண்டுவிட்டனர்.

இவ்வாறு தனது சந்ததியினரை கலை, இலக்கியத்துறையில் ஈடுபடச்செய்திருக்கும் மெல்பன் மணி, தமது முதிய வயதிலும்  கலை, இலக்கிய நிகழ்வுகளை தவறவிடுவதில்லை.

ஈழத்து இலக்கியம்,  பலதரப்பட்ட பரிமாணங்களுடன் வளர்ந்து வருகிறது.  ஒரு காலத்தில், தமிழக இதழ்களில் வெளியான கதைகளைப் படித்துவிட்டு, நம்மவர்களும் மெரீனா பீச்சையும், மவுண்ட் ரோட்டையும் பகைப்புலமாக வைத்து எழுதிக்கொண்டிருந்தனர். பின்னர் மண்வாசனை, தமிழ்த்தேசியம், மறுமலர்ச்சி, தலித் இலக்கியம், முற்போக்கு, போர்க்கால இலக்கியம் என்பன பேசுபொருளாகி, எம்மவரின் அந்நியப் புலப்பெயர்வுடன் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் வரவாகியது.


தற்காலத்தில் புகலிட இலக்கியம் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றோம்.  எனினும் புலம்பெயர்ந்து வாழும் பல எழுத்தாளர்கள் தொடர்ந்தும் தங்கள் தாயக மண்ணின் நினைவுகளுடன், நனவிடைதோயும்  கதைகளையே எழுதிவருகின்றனர்.

இந்தப்பின்னணிகளுடன்தான் மெல்பன் மணி அவர்களின் கதைகளையும் அவதானிக்க முடிகிறது.

புகலிட வாழ்க்கை இயந்திரமயமானது.  இரண்டகத்தன்மையும் கொண்டது.  மூத்த தலைமுறையினர் தங்கள் வேரின் சால்பை தொடர்ந்தும் உச்சரித்துக்கொண்டிருக்கையில், புகலிடத்தில் பிறந்த புதிய தலைமுறையினர்,  பிறிதோர் திசையில் பயணிக்கின்றனர்.

இதனால், தலைமுறை இடைவெளியில் நேரும் சிக்கல்களையும் மெல்பன் மணி, தனது படைப்புகளில் சித்திரிக்க முனைகிறார்.

மெல்பன் மணி, வடபுலத்தின்  தமிழ்க்கிராமத்திலிருந்து கடல் சூழ்ந்த


கண்டமான அவுஸ்திரேலியாவிற்கு புலம்பெயர்ந்து வந்திருந்தாலும், தான் எழுதும்  புகலிட இலக்கிய படைப்புகளில்  தொடர்ந்தும் பிறந்த மண் குறித்த ஏக்கங்களையே பதிவுசெய்து வருபவர்.

புகலிட இலக்கியத்தில் இவர் கடக்கவேண்டிய தூரம் அதிகம்.  முதுமையிலும் கடப்பதற்கு முயற்சி செய்கிறார்.

தமிழ்ச்சமூகத்தில் பெண்கள் தொழில்புரிந்தவாறு, குடும்பத்தலைவியாகி, பிள்ளைகளையும் பராமரித்து,  ஆக்க இலக்கிய மற்றும் கலைத்துறையில் ஈடுபடுவதென்பது,  சிரமசாத்தியம்தான்.

எனினும், மெல்பன் மணி, தனது பாடசாலைப்பருவத்திலிருந்து – ஆசிரியப் பணி காலம் முதல், கலை, இலக்கிய தாகத்துடன் பயணித்தவர்.  அண்மையில் தனது  84 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடிய இவரை வாழ்த்துகின்றோம்.






















---0---

 

No comments: