ஈழத்தமிழர் அரசியல் எப்போதுமே இடியப்பச் சிக்கலாகவே காட்சியளிக்கிறது. அத்துடன் ஊர்ப்பாஷையில் சொன்னால் சில்லெடுப்பே நிரந்தர அடையாளமாகியிருக்கிறது.
தந்தை செல்வநாயகமும், தலைவர்
ஜி. ஜி. பொன்னம்பலமும் முதலில் ஒன்றாகவிருந்து வளர்த்த கட்சி தமிழ்க்காங்கிரஸ். அதிலிருந்து
தந்தையார் பிரிந்து தமிழரசுக்கட்சியை உருவாக்கி கட்டி வளர்த்தார்.
இன்று அதே தமிழரசுக்கட்சி,
எத்தனையோ வருடங்களின் பின்னர் சந்தி சிரிக்கும் கட்சியாகியிருக்கிறது.
முன்னைய தலைவர்கள் மேடைகளில் ஆளையாள் விமர்சித்தாலும்
அதில் ஒரு நாகரீகம் இருந்தது. ஜனநாயக அரசியல் தமிழர் தரப்பில் 1970 வரையில்தான் நீடித்தது. அதன்பின்னர் படிப்படியாக வன்முறைகள் தலைதூக்கின.
ஈழத்தமிழர் அரசியலில் மிதவாதமும் தீவிரவாதமும் உருவானதும் இக்காலப்பகுதியில்தான். யாழ். மேயர்
அல்ஃபிரட் துரையப்பாவின் படுகொலையுடன் தமிழ்த்தலைவர்கள் பலர் மீதான படுகொலைகள் தொடர்ந்தன.
வி. தருமலிங்கம், ஆலாலசுந்தரம்,
அமிர்தலிங்கம், தங்கத்துரை, வேல்முருகு, யோகேஸ்வரன், சரோஜினி யோகேஸ்வரன், ஜோசப் பரராஜசிங்கம்,
குமார் பொன்னம்பலம், ஶ்ரீசபாரத்தினம், பத்மநாபா, உமா மகேஸ்வரன், மாத்தையா மகேந்திரராஜா…
என இந்தப் பட்டியல் நீளும். தவிர, சகோதரப் படுகொலைகளும் தொடர்ந்தன.
இக்கொலைகளைச் செய்தவர்கள் சிங்களவர்களோ அல்லது ஆயுதம் ஏந்திய
சிங்களப்படையினரோ அல்ல என்பது தெளிவு.
இந்திய தேச பிதா மகாத்மா
காந்தி , நாதுராம் கோட்சே என்ற இந்தியப்பிரஜையால்
சுட்டுக்கொல்லப்பட்டு, கடந்த 30 ஆம் திகதியுடன் 75 வருடங்களாகின்றன.
காந்தி கொல்லப்பட்டபோது
இந்தியாவில் வைஸ்ராயாக இருந்த மவுண்ட் பேர்ட்டன்
இவ்வாறு சொன்னார்:
“ காந்தி தொடர்ந்தும் வெள்ளையனே வெளியேறு என்று,
பிரிட்டிஷாருக்கு எதிராகத்தான் குரல் கொடுத்து வந்தார். ஆனால், அவருடைய உயிரை பிரிட்டிஷ் வெள்ளைக்காரர் பறிக்கவில்லை. எந்தத் தேசத்தின் சுதந்திரத்திற்காக காந்தி போராடினாரோ,
அதே இந்தியாவின் குடிமகன் ஒருவன்தான் அவரது உயிரை எடுத்தான். “
2001 ஆம் ஆண்டு வேலுப்பிள்ளை பிரபாகரன் உருவாக்கிய தமிழ்த்தேசியக்
கூட்டமைப்பு தனது 22 வயது பூர்த்தியை அடையுமுன்பே சிதறி சின்னாபின்னமாகியிருக்கிறது.
இக்கூட்டமைப்பில் இணைந்திருந்தவர்கள்
மிதவாதிகளும் ஆயுதம் ஏந்திய தீவிரவாத இயக்கத்தினரும்தான் என்பது வெளிப்படை. இந்திய சுதந்திர போராட்ட காலத்திலும் மிதவாதிகளும்
தீவிரவாதிகளும் கருத்து ரீதியில்தான் மோதிக்கொண்டனர்.
ஆனால், எமது ஈழத்தமிழர்
அரசியல் பொது எதிரியை இனம்காணாமல், ஆளையாள்
விமர்சித்துக்கொண்டு முச்சந்திக்கு வந்திருக்கின்றனர். தற்போது அந்த முச்சந்தி சிரிக்கிறது.
தனித்தமிழ் ஈழம்கேட்டு, அடக்கு முறை அரசுகளுக்கு எதிராக சாத்வீக ரீதியிலும் ஆயுதம் ஏந்தியும் போராடிக்கொண்டிருந்தவர்கள் சாதாரண உள்ளுராட்சி சபைக்காக கன்னை பிரிந்து, கிளித்தட்டு விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.
அன்று ஆயுதம் ஏந்திய அரசியல் ஆளையாள் போட்டுத்தள்ளியது. இன்று ஜனநாயகம் பேசும் அரசியலுக்கு திரும்பியவர்களும், ஏற்கனவே மிதவாத அரசியல் பேசி வந்தவர்களும் வாய்ச்சவடாலில்
ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில்
இதுவரை காலமும் இருந்தவர்கள் யார்… ? யார்…?
அவர்கள் கடந்து வந்த பாதை என்ன? என்பது
பற்றி ஏதும் அறியாதவரா சிரேஷ்ட சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் !
அதேபோன்று , சுமந்திரன்
எப்படிப்பட்டவர் என்பதை இதுவரை காலமும் அறியாமல்
இருந்தவரா டெலோ இயக்கத் தலைவர் செல்வம் அடைக்கலநாதன்.
சுமந்திரன் வீட்டுக்குள்
புகுந்த ஆமை என்பது செல்வம் அடைக்கலநாதனின் கண்டுபிடிப்பு !
கூட்டமைப்பினை விட்டு வெளியேறிய
இயக்கத்தவர்கள் தூள் கடத்தினார்கள், சாக்கு கோணிப்பைகளுக்குள் தலையை நுழைத்து ஆட்களை காட்டிக்கொடுத்தார்கள் என்றெல்லாம்
பேசத் தொடங்கியிருக்கிறார் சுமந்திரன்.
இது இவ்விதமிருக்க தமிழரசுக்கட்சியின்
கொழும்புக் கிளை அமைப்பாளர் சட்டத்தரணி தவராஜா, “ சுமந்திரன் தனது நிகழ்ச்சி நிரலை கச்சிதமாக ஒப்பேற்றிவிட்டார். “ என்று
மற்றும் ஒரு விமர்சனத்தை முன்வைக்கிறார்.
ஈழத்தமிழர் அரசியல் எங்கிருந்து
எங்கே செல்கிறது ! ? என்பதைப் பார்த்து மக்கள் மனம் வெதும்பியிருக்கின்றனர்.
சில வருடங்களுக்கு முன்னர், ஈழத்தமிழர் அரசியல் குறித்து கருத்துச் சொன்ன எம்.
ஏ. சுமந்திரன் “ முன்னர் ஜனநாயக அரசியல் பேசினோம். பலன் இல்லை.
பின்னர் ஆயுத அரசியல் பேசினோம். பலன் இல்லை. தற்போது இராஜதந்திர அரசியல் பேசுகிறோம்..
விரைவில் பலன் கிடைக்கும். “ என்றார்.
அவர் குறிப்பிட்ட இராஜதந்திர
அரசியல்தானா தற்போது தமிழர் தரப்பில் நடக்கிறது.?
அன்று அவ்வாறு சொன்ன சுமந்திரன்,
வெளிநாடுகள் சிலவற்றுக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளராகச் சென்று அவமானப்பட்டு
திரும்பினார். தற்போது தமது அமைப்பிலிருந்த முன்னைய சகாக்களை அவமானப்படுத்துவதற்கு
தொடங்கியிருக்கிறார்.
புதிய ஜனநாயக தமிழ்த்தேசியக்
கூட்டமைப்பும் சரி, பழைய தமிழரசுக் கட்சியும் சரி, தமிழ் மக்களுக்கு இனி என்ன செய்யப்போகின்றோம்? என்பதைப்பற்றி
ஏதும் சொல்லாமல், தத்தம் பற்களை குத்திப்பார்த்து
மணந்துகொண்டிருக்கிறார்கள்.
ஈழத் தமிழ் மக்களின் தலைவிதியை
தீர்மானிக்கவேண்டிய எமது தலைவர்கள், தற்போது தமக்குத்தாமே சூனியம் செய்துகொண்டிருக்கிறார்கள்.
அதனால் ஒளிமயமான எதிர்காலம்
தமிழ் மக்களுக்கு எட்டாத தொலைவிலேயே இருக்கிறது.
இந்நிலையில் சிவில் சமூக
அமைப்பினர்தான் மாற்றுவழியை கண்டுபிடிக்கவேண்டும்.
---0---
No comments:
Post a Comment